Recent Posts

திருவிளையாடல் புராணம் - மேருவிலிருந்து பொன் பறித்தல்

திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள் 

மேருவிலிருந்து பொன் பறித்தல்




நோன்புகளில் சிறந்தது சோமவார விரதம் என்பதைப் பார்த்தோம்.  அதை முறைப்படி செய்த உக்கிர பாண்டியருக்கு இறை வனருளால் ஒரு வீர மைந்தன் பிறந்தான்.  அவன் பெயர் வீர பாண்டியன்.

எதிரிகளை வென்று, இரப்போர்க்கு குபேரன் போல் அள்ளி வழங்கி அரசாண்ட உக்கிர பாண்டியன் காலத்தில் மறுபடி பஞ்சம் ஏற்பட்டது.  கொடிய  பஞ்சம்.  மணிதானியமும் கிடையாது! அறம் வளர்த்த அந்தணர்களெல்லாம் வேற்று நகரம் சென்றுவிட்டனர்.  ஊரே வெறிச்சோடிக் கிடந்தது.

இறைவனையும், இறைவியையும் எண்ணிப் பலவாறு நொந்து பரிகாரமாக ஹோமங்கள் செய்யலாமென்றால் அந்தணரும் நாட்டிலில்லையே, நீயே தஞ்சம்" எனப் புலம்பிய படியே வெறுந்தரையில் படுத்து உறங்கிவிட்டார் மாமன்னர்.

சோமசுந்தரப் பெருமான் மன்னன் கனவில் தோன்றி, உன் படைகளையும், உன்னையும் காக்க ஒரு வழி சொல்லுகிறேன்.  மேருமலைக்குச் சென்று அதைச் சண்டாயுதத்தால் அடித்து, வேண்டிய பொருளை எடுத்துக் கொண்டு மறுபடியும் முத்திரையிட்டு வந்துவிடு. ஒராண்டில் இந்த வறட்சி நீங்கிவிடும். ஒரு அந்தணனை அழைத்து வந்து தினந்தோறும் என்னைப்போல் எண்ணி வணங்கிவா" எனக்கூறி மறைந்தார்.



அரசன் உடனே எழுந்து, யாருக்கும் சொல்லாமல் படை நடத்திச் சென்று, ஆறுகளைத் தாண்டி, காடுதாண்டி மேருவின் அருகிலுள்ள ஒரு நகரில் படையை விட்டுவிட்டு தானொருவனாக சண்டாயுதத்துடன் மலையை வலம் வந்து கிழக்குப் பக்கமாக நின்றான்.  முழுவேகத்துடன் அதைச் சண்டாயுதத்தால் அடித்தான்.  உடனே பந்துபோல் சற்றிய மேரு உருவம் கொண்டு மன்னன் முன் நின்றது.  அரசன் இறைவன் கனவில் உரைத்ததைக் கூறினான்.

அதைச் செவிமடுத்த மேரு மன்னா, எனக்கு அசையும் உருவம், அசையா உருவம்  இரண்டும் உண்டு.  அசையும் வடிவத்தில் நான் தினந் தோறும் ஆலவாய் சென்று அம்மையப்பனை வழிபட்டு வந்தேன்.  அறிவு மயக்கத்தில் சில நாட்களாக அச்செயலை மறந்திருந்தேன். அதற்காக இறைவன் கொடுத்த பாடமே இந்த அடி.

என் தாவர உடலில் மாசுள்ள இடம், மாசற்ற இடம் என இரண்டு பகுதி உள்ளது.  மாசற்ற இடத்தில் சூரிய ஒளிபோல் மிகத் தூயதான ஒரு பாகம் உண்டு.  அதைக் கண்டுபிடித்து அதன்மேல் மூடிக் கொண்டிருக்கும் பாறையைக் கற்கொல்லரைக் கொண்டு தகர்த்து, வேண்டிய பொன்னை எடுத்துக் கொள்" என்று கூறி மறைந்தான்.

அதைக் கேட்ட மன்னன் மகிழ்ந்து மேரு சொன்னதுபோல் பாறையை உடைத்து, கீழிருந்த பொன்னை வெட்டி கட்டி கட்டியாக எடுத்து, போதுமான அளவு வெளியேற்றி, வலிமையுள்ள மனிதர்களைச் சுமக்கச்செய்து, அறையின் வாயில் மறுபடியும் பாறை கொண்டு அடைத்து, சண்டாயுதம், இரண்டு மீன்கள் இவை கொண்ட முத்திரையால் அடையாளம் வைத்து, பொற்குவியல்களோடு படைகள் இருக்குமிடம் வந்து அடைந்தான். 

பொன்மூட்டை களைக் கண்டு அனைவரும் ஆச்சரியமுற்றனர்.  அனைவருக்கும் ஓராண்டு உணவுக்கான பணத்தைக் கொடுத்தான் உக்கிர பாண்டியன். பிராம்மணரையும் மகிழ்வித்தான்.

சோம சுந்தரமூர்த்தியின் திருக்கோயிலுக்கு விமானம், கோபுரம் எல்லாம் கட்டினான்.  கிரகநிலைமாறி ஓராண்டில் மழைபெய்யவே பஞ்சம் தீர்ந்தது.  குடிகள் மகிழ்ச்சி கொண்டனர்.
வீரபாண்டியனிடம் ராஜ்ஜியத்தை ஒப்படைத்த உக்கிர பாண்டியன் தந்தையுடன் ஐக்கியமானார்.  மேருவிலிருந்து ஈசன் தந்த சண்டாயுதத்தால் பொன்வெட்டி எடுத்த இந்தப் 15-ஆம் திருவிளையாடலை பயபக்தியுடன் தினமும் படிப்பவர் இல்லத்தில் செல்வம் கொழிக்க, எல்லா நலன்களும் பெற்று சுகமாக வாழ்வார்கள். 




இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



giri facebook
 giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை