Recent Posts

திருவிளையாடல் புராணம் - சங்கப் பலகையளித்தல்

திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

சங்கப் பலகையளித்தல்



பிரும்மதேவன் தன் மனைவியரான காயத்ரி, சாவித்திரி, சரஸ்வதியுடன் காசிக்கு யாகம் செய்ய வந்தார். லிங்கப் பிரதிஷ்டை செய்து குளமொன்றை வெட்டினார். பிதாமகேஸ்வர லிங்கம் எனப் பெயரிட்டார். அக்குளத்திற்கு தசாச்வமேத தீர்த்தம் என்று பெயர். ஒன்பது அசுவமேத யாகம் முடித்தார்.  ஒவ்வொரு யாகமுடிவிலும் மூன்று தேவியருடன் நீராடினார். பத்தாவது யாக முடிவில் கந்தர்வப் பெண்களின் பாடலில் லயித்திருந்த சரஸ்வதி நீராட வரவில்லை. பிரும்மா மற்ற இருவருடன் நீராடினார். பாடல் முடிந்து வந்த வாணி, நான்முகன் தானில்லாமல் நீராடியது கண்டு நானில்லாமல் நீராடி விட்டீரோ? பழைய மனைவி ஆகி விட்டேன் என்று உதாசீனப் படுத்தினீரோ? என்னைப் படைத்துவிட்டு மகளாக நினைக்க வேண்டிய நீங்கள், என் விருப்பமில்லாமலே வற்புறுத்தி மனைவி யாக்கிக் கொண்டு சாபம் பெற்ற கதை மறந்து விட்டதா?" என்று வெகுண்டு பேச, பிரம்மன் சரஸ்வதி! கந்தர்வ மங்கையரின் பாடலில் லயித்து காலத்தில் வராதது உன் தவறு; அதை உணராமல் என்மேல் கோபம் கொண்டு ஏதேதோ பிதற்றுகின்றாய்! நீயாக வராமலிருந்துவிட்டு என்னைத் தீட்டியதால் நாற்பத்தெட்டு முறை பூமியில் பிறப்பாயாக"  என சபித்து விட்டார்.

தேவி தவறை உணர்ந்து பிரம்மன் தாள் பணிந்து வணங்கி மன்னிப்புக் கேட்க,  ‘அ முதல் ‘ஸ வரை சம்ஸ்கிருத எழுத்துக்கள் 48-ம் புவியில் நாற்பத்தெட்டு புலவர்களாகப் பிறப்பர். சிவபெருமான் ‘ஹ வடிவில் 49-வது புலவராக அவர்கள் மத்தியில் இருப்பார். மதுரையம்பதியில் அவர்கள் ஏட்டுச் சுவடிகளாக எழுதிக் குவிக்கையில் உன் சாபம் நீங்கி என் நாவில் உறைவாய்" என சாப விமோசனமளித்தார்.

அவர்கள் தான் கபிலர், நக்கீரர், பாணர் போன்றோர். அவர்கள் பொதிகையினின்றும் புறப்பட்டு மதுரை வந்த சமயம், எம்பெருமானே புலவர் வடிவில் அவர்களை எதிர் கொண்டார்.  அப்புலவர் நாற்பத்தெண்பதின்மரும் மணிக்கு நூறு பாட்டு இயற்றும் வல்லமை உடையவர்.

அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு பேற்றையும் அடைய ஆலவாய் வந்தோம். மூலலிங்கத்தை காண்பிக்க வேண்டும்" என ஈசனிடம் விண்ணப்பித்துக் கொண்டு தம் புலமைத் திறமையால் ஈசனை மகிழ்வித்து அறிவுச் சர்ச்சை செய்து ஆனந்தித்தனர்.  ஈசனும், கோயிலையும், லிங்கத்தையும் சுட்டிக் காட்டிவிட்டு மறைந்தார்.

புலவர்களை ஈயைக் கவரும் இனிப்புப் போல மதுரை ஈர்த்ததால் அவர்கள் அங்கேயே நிரந்தரமாய் தங்கி, ஈசனைப் பாக்களால் போற்றி, ஜனங்களை மகிழ்வித்தனர்.

வமிச சேகர பாண்டியன் நவரசங்களிலும் கவிதை இயற்றுவதில் வல்லவன். பின் கேட்க வேண்டுமா? பாலோடு தேன் சேர்ந்தாற் போலாயிற்று. இது கண்டு பல போலிப் புலவர்கள் பொறாமை கொண்டவர். புலவர்கள் ஆலயம் சென்று ஆண்டவனிடம் தங்கள் சிறப்பை வெளிப்படுத்த பலகை ஒன்று தந்தருளப் பிரார்த்தித்தனர்.

எழுத்துக்கள் நிறைந்த, சதுரவடிவான, வெண்மையும், ஒளி வீசக் கூடியதுமான, ஒரு பலகையுடன் லிங்கத்திலிருந்து புலவர் வடிவில் தோன்றிய ஈசன் ’இதில் உட்காருங்கள் எனக் கூறி பலகையைப் புலவர்களிடம் கொடுத்து மறைந்தார். அப்பலகையை வித்யாபீடம், சரஸ்வதிபீடம், ஞானபீடம், மாத்ருகாபீடம், வியாக்யான பீடம் எனப் பலபெயர்கள் சூட்டி மகிழ்ந்தனர்.  சங்கப்பலகை என அதற்குப் பெயர் ஏற்பட்டது.

கோயிலின் மத்தியில் மன்னன் கட்டித்தந்த சங்க மண்டபத்திற்கு அப்பலகையை எடுத்துப் போய் பூஜித்து அர்ச்சனை செய்தபின் நக்கீரர் அதன்மேல் அமர்ந்தார். ஒரு முழத்திற்கும் குறைவான அப்பலகை இன்னொருவர் அமரும் அளவு நீண்டது. பின்பு கபிலர் அமர மறுபடியும் இடமளித்தது. இவ்வாறே எட்டு பேரும் அமர பலகை இடமளித்தது. இதில் என்ன விந்தை என்றால் போலிப் புலவர் அமர்ந்தால் பலகை சுருங்கிவிடும். மறுபடி அவர் எழுந்தாலே இடம் விடும்.

அதன்மேல் அமர்ந்த புலவர்கள் எழுதிப் போட்ட ஏடுகளால் சங்கமண்டபம் நிரம்பி வழிந்தது.  யாருடையது எங்கே என்று பகுத்து எடுக்க முடியாத அளவு கலந்து கிடந்தது.

ஒரு சமயம் அவர்களுக்குள் நானே பெரியவன்; எனது நூலே மேலானது" என்ற சர்ச்சை கிளம்பியது.  நல்லனவற்றை வைத்துக் கொண்டு அல்லனவற்றைத் தள்ளலாம் என்றாலோ பிரிக்கும் வேலைப் பளு அயர வைத்தது.

அச்சமயம் புலவர் வடிவில் வந்த ஈசன் அவர்கள் பளு நீங்க சுவடிகளை நிமிடத்தில் பிரித்துத் தர வாரியாக அடுக்கினார். குற்றங்குறைகளைக் கூறினார். அவர்கள் வேண்டுகோளுக் கிணங்க சங்கப் பலகையில் அமர்ந்து ’அதிகாரம் ஒன்றும் இயற்றினார்.  நக்கீரர் மட்டும் அதில் குற்றம் சொன்னார். சொல்லழகும், பொருளழகும், பண்ணழகும் மிக்கப் பாக்களை இயற்றினார் ஈசன். இதற்கு ஈடாக உன்னால் இயற்ற முடி யுமா" என ஈசன் வினவ அதற்கும் குற்றம் சொன்னார் நக்கீரன்.

அப்போது ஆகாயத்தில் உங்கள் பிணக்கைத் தீர்க்கப் புலவர் வடிவில் வந்திருப்பது சோமசுந்தர மூர்த்தி.  பொறாமையால் வாது செய்யாதே நக்கீரா" எனக் குரல் கேட்டது.  அனைவரும் எம்பெருமானை வணங்க, அனைவருக்கும் ஆசிகூறி மறைந்தார் சிவபெருமான். புலமையோடு விளையாடிய ஈசனது இந்த 51-ஆம் திருவிளையாடலைத் தினமும் பக்தியுடன் படிப்பவரும், கேட்பவரும் கல்வியில் ஈடில்லா கீர்த்தி பெற்று, அதனால் பெரும் செல்வம் சேர்த்து அச்சம், பழி நீங்கி பெரும்புகழோடு வாழ்வார்கள்.




இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை