Recent Posts

திருவிளையாடல் புராணம் - இந்திரன் முடி தகர்த்தல்

திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள் 


இந்திரன் முடி தகர்த்தல்



தோல்வியை சந்தித்த இந்திரன் பழி வாங்க சமயத்தை எதிர்பார்த்திருந்தான்.  கிரகக் கோளாறுகளும் சேரவே பாண்டிய நாட்டில் கடும் பஞ்சம் உண்டாயிற்று! முன்னிருந்த நிலைக்கு நேர் எதிரிடை.  மழையில்லை. எங்கும் பஞ்சம்.  நீரில்லாமல் தாவரங்கள் வாடிக்கருகின. கால்நடைகள் அகால மரணமடைந்தன. மனிதர்கள் நிலை சொல்லவும் வேண்டுமோ?

உக்கிர பாண்டியன், சேர, சோழ மன்னர்களுடன் சேர்ந்து பொதிகையில் அகத்தியப் பெருமானை வணங்கி வேண்டி இதற் கொரு  வழி சொல்லும்படி பணிவுடன் கேட்டான்.

அவர் சோமவார விரதம் இருந்து நஞ்சுண்டவன் நெஞ்சைக் குளிர்வித்தால் விமோசனமுண்டு" எனக் கூறினார். ’சிவ பெருமானை குளிர்விக்கும் விதம் எவ்வண்ணம்? என்று கேட்டார் உக்கிரபாண்டியன்.

சோமவார நோன்பு அனுஷ்டிப்பது சிவனுக்குப் பிரியம்" என்று கூறி சோமவார விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறைகளையும் கூறினார்.



முனிவரை வணங்கி விடைபெற்று அவர் கூறிய ஆகம விதிப்படி சோம வார நோன்பு முடித்து மழைபெய்ய வேண்டுமென இறை வனை வணங்கினர் மூவேந்தரும்.

மழைக்கு அதிபதி இந்திரன்.  வானில் செல்ல உங்களுக்கு ஆற்றல் அளிக்கிறேன். விண்ணுலகில் அவனிடம் சென்று முறையிடுக" என அசரீரிக் குரல் கேட்டது. அசரீரிப்படியே பறக்கும் ஆற்றல் ஏற்படவும் மூவேந்தரும் அமராவதி சென்றனர்.  இவர்கள் வருகையை அறிந்த தேவராஜன் மூன்று தாழ்ந்த இருக்கைகளை ஏற்படுத்தினான்.  சேரனும், சோழனும் அதில் அமர்ந்துவிட்டனர்.  முருகவேளின் அம்சமான உக்கிர பாண்டியனோ இந்திரனது ஆசனத்திலேயே போய் அமர்ந்துவிட்டான்.

சேர, சோழ மன்னர்கள் மழை வேண்டும் என வணங்கி விண்ணப்பித்துக் கொண்டனர்.  அவனை அனுசரித்து அவனோடு வேடிக்கையாகப் பேசிப் பழகினர்.  அவர்களுக்குப் பல ஆபரணங் கள், வெகுமதிகள் அளித்து அனுப்பி வைத்தான் இந்திரன். உக்கிரனின் தன்மானம் இந்திரனை வேண்ட, வணங்க மனம் இடம் தரவில்லை.  அதனால் இந்திரன் பாண்டியனுக்கு கனமான தூக்கமுடியாத ஆபரணங்களை அளித்தான். அதையும் உக்கிரன் மலர் மாலையெனச் சுமந்து மதுரை வந்தான். பாண்டிய நாட்டில் சொட்டு கூட மழை பெய்யாததோடு சேர, சோழ நாடுகளில் நல்ல மழைபெய்தது.

இதனால் பாண்டியனுக்கும், இந்திரனுக்கும் கசப்பு மிகுந்தது.  படைதிரட்டிக் கொண்டு பாண்டியன் இந்திரனுடன் போருக்குப் போனான். அனல் அஸ்திரத்துக்கு எதிரி நீர் அஸ்திரம்! ஒரு  அஸ்திரத்தால் மழையாகப் பெய்யும்.  அதை காற்று அஸ்திரம் தடுக்கும். காற்றுக்கு நாகம், நாகத்துக்கு கருடன், கருடனுக்கு மகாபாசம், மகாபாசத்துக்கு யானை, யானைக்கு சிங்கம், சிங்கத்துக்கு சரபம் இப்படி யுத்தம் பயங்கரமாய் நடந்தது!

அதுமட்டுமா? குத்துச் சண்டை, கத்திச் சண்டை, விற்போர் கடைசியாக இந்திரன் வஜ்ஜிராயுதத்தை வீசினான்.  பாண்டியனும் தந்தை கொடுத்த வளையாயுதத்தை எறிந்தான்.  வஜ்ஜிராயுதத்தை மட்டுமல்ல தேவராஜனின் முடியையும் தகர்த்தது வளையாயுதம்.

தேவேந்திரன் முடி இழந்து கைதியாக மதுரை நகரடைந்தான். ஈசன் மகனிடம், மன்னிப்புக் கேட்டுக் கொண்டு தன் நகரடைந்தான்.  அதுமுதல் பாண்டிய நாட்டில் மாதம் மும்மாரி பெய்தது.  பாண்டியநாடு முன்போல் செழிப்புற்றது.  வளையா யுதத்தின் மூலம் ஈசன் நிகழ்த்திய திருவிளையாடல் இது.

இந்திரன் முடிதகர்த்த இந்த 14-ஆம் திருவிளையாடலைப் பக்தியுடன் தினமும் படிப்பவர்களும், கேட்பவர்களும் எக்காலத்திலும் துன்பம் இல்லாமல் இன்பமே பெறுவர்.  நவரத்தினங்களை வாங்கும் அதிர்ஷ்டமும், நல்ல உத்யோகமும் கிடைக்கும்.  நாட்டில் மும்மாரி பொழியும்.  நாடு சுபீட்சமடைய, மாரி பொய்க்காமலிருக்க இந்தப் படலத்தைப் படித்தால் உடனே பலன் கிடைக்கும் என்பது சர்வ நிச்சயம்.

சோமவார விரத மகிமை

விரதங்களுள் சிறந்தது சோமவார விரதம்.  திங்கட்கிழமை அமாவாசையுடன் கூடிய சோமவாரநோன்பு அதிக பயனைத் தரும்.  பாடல் பெற்ற சிவஸ்தலங்களிலே செய்யும் சோமவார விரதம் கோடிபங்கு பலன்களைத் தரும்.  கார்த்திகை மாத முதல் சோம வாரம், விரதம் தொடங்க ஏற்றநாள்.  (வீட்டில் வைத்தும் நோன்பு தொடங்கலாம்.)

வில்வ மரத்தடி  மண், பசுஞ்சாணம், எள், தர்ப்பை இவற்றைத் தலையில் வைத்துக் கொண்டு கையில் பவித்திரத்தோடு சங்கல்பம் செய்து கொண்டு குளித்தல் நலம்.  ஆறு, குளம், கடல் என்றால் ’ஓம் நமசிவாய  எனச் சொல்லியபடி மூழ்க வேண்டும்.  குளித்தபின் மனதில் அமைதியுடன் தீயகுணங்களை ஒழித்து வெள்ளை ஆடை அணிவதுதான் சிறப்பு.

வில்வம், அட்சதை, எள், புதியமலர்கள் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.  முழுப்பட்டினி கிடக்க முடியாதவர் இரவில் சாப்பிடலாம்.  பகலில் பால், பழங்கள் உண்ணலாம்.  இரவில் மட்டும் சாப்பிடு பவர்கள் எப்போது வேண்டுமானாலும் பூஜை செய்யலாம்.  சிவ கவசம், சிவ அஷ்டோத்திரம் இப்படி சிவபெருமானைக் குறிக்கும் ஸ்தோத்திரங்களை நிறையச் சொல்லவேண்டும்.

வில்வத்தில் பூச்சியரித்தவை, வண்டு துளைத்தவை, சிலந்தி நூல் படிந்தவை, தானே உதிர்ந்தவைகள் பூஜைக்கு ஆகாது.  கழுத்தில் ருத்ராட்சமும், நெற்றியில் விபூதியும் இருப்பது சிலாக்கியம்.

பஞ்சாமிர்த அபிஷேகம் செய்பவன் முன் ஏழு, பின் ஏழு பிறப்பில் செய்த பாபங்களிலிருந்து விடுபடுகின்றான்.  பஞ்சாமிருதத்தில் முந்திரி, வாழை, மா, பலா கலப்பவனுக்கு ஊரை ஆளும் தலைமைப் பதவி கிடைக்கும்.  எண்ணெய் காப்பு சாத்துபவன் செல்வக்குடியில் பிறப்பான்.  நெய்காப்பு சாத்துபவன் கல்வியும், செல்வமும் சேர்ந்தி ருக்கும் குடியில் பிறப்பான்.  பால் அபிஷேகம் செய்பவனுக்கு எதிரி களே இருக்கமாட்டார்கள். தயிர் அபிஷேகம் செய்பவர்களுக்கு நற் குண, நற்செய்கைகள் பொருந்திய பிறவி கிடைக்கும்.  சர்க்கரை அபிஷேகம் செய்பவன் இனிமையான சங்கீதத்தினால் கீர்த்தியும், செல்வமும் அடைவான்.  இளநீர் அபிஷேகம் செய்பவன் எண்ணி யது ஈடேறும். கரும்புச் சாற்றில் அபிஷேகம் செய்பவர் தைரியமும், தன்னம்பிக்கையும், ஆரோக்கியமும் பெறுவார். பன்னீரால் அபிஷேகம் செய்பவன் சந்தோஷமான வாழ்க்கை அடைவான்.  சந்தனக்காப்பு சாத்துபவனுக்கு நல்ல துணைவி கிடைப்பாள்.  கங்காஜலத்தினாலோ, மற்ற புண்ணிய தீர்த்தங்களினாலோ அபிஷேகம் செய்பவனுக்கு சர்வாபீஷ்டங்களும் உண்டாகும்.

சோமவாரத்தன்று சிவபெருமானுக்கு ஆடை சார்த்து பவனுக்கு மறுபிறவியில் ஆடை பஞ்சமிராது. ஆபரணம் சாத்துபவன் செல்வம் கொழிக்கும் குடும்பத்தில் அருந்தவப் புதல்வனாய் பிறப்பான். வாசனையுள்ள, நல்ல மலர்களால் அர்ச்சிப்பவனுக்கு ஐம்புலன் களாலும் மகிழ்ச்சி கிட்டும்.  குங்கிலியமும், சாம்பிராணியும் கலந்து தூபம் காட்டினால், அதிர்ஷ்டசாலியாய் பிறப்பான். கனகாபிஷேகம் செய்விப்பவருக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.

நெய்விளக்கேற்றுபவருக்கு நிலையான செல்வம் கிடைக்கும்.  எருக்கம் பூ மாலை அணிவிப்பவருக்கு பதினாறு பேறுகளும் கிடைக்கும்.  சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்ற இனிப்புகள் நிவேதிப்பவருக்கு நற்குண, நற்செய்கைகளுடைய சத்புத்திரர்கள் பிறப்பார்கள்.  சித்திரான்னங்கள் நிவேதிப்பவருக்கு செல்வம் கொழிக்கும்.  சங்கடங்கள் தீரும்.  அதிரசம், வடை நிவேதனம் செய்பவர்க்கு  தீராத நோயும் தீரும்.

சிவனையும், தேவியையும் சேர்த்து பதினாறு முறை வலம் வந்தால் பதினாறு பேறுகளும் கிட்டும்.  சகஸ்ரநாம அர்ச்சனை செய்வோர் பேரும், புகழும், அறிவும், ஆற்றலும், கல்வியும், செல்வமும் பெறுவர்.  சோமயாகம் செய்த பலன் கிடைக்கும்.

கார்த்திகை சோமவாரத்தில் சிவாலய தீர்த்தங்களில் நீராடு வோருக்கு மஹாரோகங்கள் நீங்கும்.  உடல் வலிமை பெறும்.  பேச்சு, செயல், மனம் இவற்றால் செய்த பாவங்கள் நீங்கும். அதிலும் பொற்றாமரையில் நீராடுவோருக்குக் கிட்டாததே இல்லை.

ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து, பன்னிரண்டு, ஆயுள் பரியந்தம் என்று வருஷங்களை விரதம் தொடங்கும் போது சங்கல்பித்துக் கொள்ளவேண்டும்.  சங்கல்பம் செய்த பின் காலத்தை அதிகப்படுத் தலாம்.  குறைக்கக்கூடாது.  ஆயுள் விரதத்துக்கு நோன்பை முடிக்க வேண்டாம்.
நோன்பை முடிப்பவர்கள் கார்த்திகை சோம வாரத்திலேயே முடித்தல் நல்லது.

ஒரு வெள்ளித் தகட்டில் உமாதேவியோடு கூடிய சிவபெரு மானை வரையவேண்டும்.  (நகைக்கடையில் அச்சு வைத்திருப் பார்கள்) சிவனது உருவத்தில் மூன்று கண்கள், மான், கோடரி, அபயம், வரம் நான்கு கைகளில், சடாமுடி, பிறை நிச்சயம் இருக்க வேண்டும்.  இடது புறத்தில் உமாதேவிக்கு ஒரு கையில் கல்லால மலரும், மற்றொரு கை விரித்தும் இருக்கவேண்டும்.

சாஸ்திரிகளைக் கொண்டு நூல் கட்டிய பூர்ண கும்பம் வைத்து, வெள்ளிப் பிரதிமைக்கு எல்லா அபிஷேகங்களும் செய்து அர்ச்சனை, தூப, தீப, நைவேத்ய, கற்பூர, ஷோடச உபசாரங்கள் பண்ணவேண்டும்.

வேண்டுதல் கடினமாயிருப்பின் நான்கு ஜாமங்களிலும் ஹோமம் செய்வது நல்லது.  முதல் ஜாமம் நெய்; இரண்டாம் ஜாமம் வெல்லம்; மூன்றாம் ஜாமம் நெய்யில் நனைத்த எள், நான்காம் ஜாமம் பாயசம்.

திரியம்பக மந்திரத்தால் நூற்றெட்டு முறையும், ’கௌரி மிமாய என்ற ருக்வேத மந்திரத்தால் நூற்றெட்டு முறையும், ஹோமம் செய்யவேண்டும்.  குரு மூலமாகத்தான் ஹோமம் நடக்கவேண்டும். பதின்மூன்று செம்புகளில் (வசதி இருப்பவர் குடங்களிலும்) பால் நிறைத்து, ஒவ்வொன்றிலும் இரண்டு வெள்ளை வஸ்திரம் சார்த்தவேண்டும். பதின்மூன்று முறங்களில் அன்னம், நெய், கறிவகைகள், வெல்லம், பட்சணங்கள் வைத்து அந்த முறங்களால் பால் நிறைந்த குடம் அல்லது செம்புகளை மூடவேண்டும்.  நல்ல பிராம்மணர்களாக பதின்மூன்று பேருக்கு சந்தனம், வஸ்திரம் கொடுத்து குரு மந்திரம் சொல்லித்தர, அதன்படி சொல்லி அவற்றைத் தானம் செய்யவேண்டும்.

பதின்மூன்று செருப்பு, விளக்கு, இவைகளையும் அவரவர் வசதிக்கேற்ப தானம் செய்யலாம்.
குருவிற்கும், அவர் மனைவிக்கும் (மனைவியுள்ளவரையே குருவாக வரிக்கவேண்டும் வேஷ்டி, துண்டு, புடவை, ரவிக்கை, தட்சிணை, சந்தனம், தாம்பூலத்தோடு பிரதிமையை வைத்து தானம் செய்துவிட்டு நமஸ்கரிக்கவேண்டும்.  தானம் தரும்போது சோம சுந்தரப்பெருமான் மகிழ்ந்து என் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று சொல்ல வேண்டும்.  நவதானியங்கள், பசு, விளக்கு எதையும் அவரவர் வசதிக்கேற்ப தானமாகக் கொடுக் கலாம்.  விரதம் முடிந்தபின் அந்தணர்களோடும், குரு, குருபத்தினி யோடும் உண வருந்தலாம்.

கிருஷ்ணர், பிரம்மன், தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், சாரணர், முனிவர்கள், மனுக்கள் இப்படி எராளமானவர்கள் சோமவார நோன்பு இருந்து முடித்து ஏராளமான பாக்கியங் களைப் பெற்றிருக்கின்றனர்.

நோன்பை தொடங்கியவர், பாதியில் நிறுத்தக்கூடாது.  குருவை வைத்தக் கொண்டே விரதம் ஆரம்பிக்கப்பட வேண்டும். இந்த சோமவார விரதத்தை பயபக்தியுடன் படிப்பவருக்கும், கேட்பவருக்கும் வறுமை, பிணி, துயரம் ஏற்படாது.  சத்புத்திரர் கள் பிறப்பார்கள்.  கலைமகளும், அலைமகளும், மலைமகளும், இல்லத் தில் வாசம் செய்வர்.  முன்னோர்கள் மோட்சமடை வார்கள். மற்ற மாதங்களில் தொடங்கியவர்களும் கார்த்திகை சோம வாரத்தில் முடிப்பது நல்லது.

சோமவார விரதம் ஆண், பெண் எவர் வேண்டுமானாலும் இருக்கலாம்.  படம் வைத்தும் பூஜை செய்யலாம்.  நோன்பு என்று சங்கல்பித்துக் கொண்டவர்கள் முடிப்பதற்குத்தான் சாஸ்திரிகள் வைத்து, வெள்ளிப்பிரதிமை செய்து தானம் செய்யும் ஆகமங்கள் எல்லாம் கடைப்பிடிக்கவேண்டும்.








இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



giri facebook
 giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை