Recent Posts

சிவ புராணம் - கணேசன் திரு அவதாரம்

சிவ புராணம்
கணேசன் திரு அவதாரம்



ஒரு சமயம் பார்வதி தன் தோழியர் ஜயை, விஜயை இருவருடன் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது விஜயை தேவியைப் பார்த்து, அம்மா, தங்களுக்கென ஒரு வேலையாள் தனியாக இருக்க வேண்டும். ஈசனுக்கு எத்தனையோ கணங்கள் இருக்கின்றன. அவர்களில் சிலரே தங்களுக்கும் சேவை செய்ய நியமிக்கப்பட்டிருக் கின்றனர்; அவர்கள் ஈசனின் கட்டளைக்கு அடிபணியக் கூடியவர்கள் அன்றோ? நம்  கட்டளையை மட்டும் ஏற்றுப் பணி செய்யக் கூடிய ஒருவன் நமக்கென இருக்க வேண்டாமா?" என்றாள்.

அந்தச் சமயத்தில் தேவி தோழியின் வார்த்தைகளைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் அதைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய அவசியம் விரைவிலேயே ஏற்பட்டது.

அன்றையதினம் தேவி, அந்தப்புரத்தில் நீராடிக் கொண் டிருந்தாள். அச்சமயம் பார்வதியைக் காணவேண்டுமென்று வந்த ஈசனை வாசலிலிருந்த நந்திதேவர், தேவி நீராடுகிறார், தற்போது செல்ல வேண்டாம்" என்று சொல்லியும் கேளாமல், உள்ளே சென்றார். எதிர்பாராத நிலையில் நாதனைச் சந்திக்க நேர்ந்ததால், தேவி பெரிதும் பரபரப்பு அடைந்து விட்டாள். அதற்கேற்ப அவள் தோழியரும், அம்மா, இம்மாதிரி நேரக் கூடாதே என்றுதான் அன்று நாங்கள் சொன்னது. நம்முடைய ஆளாக இருந்திருப்பானாகில் ஈசனை உள்ளே விட்டிருக்க மாட்டான் அன்றோ. நந்திதேவர் எவ்வாறு கைலாசநாதனைத் தடுத்து நிறுத்துவார்?" என்று அவள் குழம்பிய உள்ளத்துக்குத் தூபமிட்டனர்.

அவர்கள் சொல்வதுபோல் பார்வதிக்கும் தன் கட்டுப்பாட்டில் இயங்கும் பணியாள் ஒருவன் தேவை என்பது விளங்கியது. கையிலே ஜலத்தை எடுத்துத் தன் உடலில் தேய்த்து உருட்டி எடுத்தாள். சிவபெருமானைத் தியானித்து அவரைப் போலவே பிரணவ ஸ்வரூபியான ஒரு புத்திரனைத் தோற்றுவித்தாள். மங்கள ரூபத்தோடு தேஜோமயமாய் விளங்கும் அவனுக்குக் கணண் என்று பெயர் கொடுத்து, குமாரா, நீ என்னால் தோற்றுவிக்கப்பட்ட பிரிய மைந்தன். உன் சேவை எனக்கு இருக்க வேண்டுமென்றே உன்னைத் தோற்றுவித்தேன். என் அனுமதியின்றி நீ எவரையும் அந்தப்புரத்தில் நுழைய விடாது காத்து வரவேண்டும்" என்றாள்.

கணனும் தேவியை வணங்கி, அம்மா, தாங்கள் இட்ட பணியை மகிழ்ச்சியோடு ஏற்று, அவ்வாறே நடந்து வருவேன்" என்றான்.

பார்வதி பெருமகிழ்ச்சியோடு புத்திரனை அணைத்து முத்தமிட்டு, அவன் வேலைக்கு உதவியாகத் தண்டம் ஒன்றும் கொடுத்தாள். அன்றிலிருந்து கணன், தாயின் அந்தப்புரத்தைக் கண்ணும் கருத்துமாகக் காத்து வந்தான்.

இப்படியிருக்கையில் ஒருநாள் சிவபெருமான் தேவியின் அந்தப்புரத்துக்கு  வந்தபோது நிலைமை சரியில்லாதிருந்தது. வாயிலில் இருந்த கணன் முன்வந்து ஈசனைத் தடுத்து நிறுத்தினான்.

சுவாமி, தேவியார் நீராடச் சென்றிருக்கிறார்கள். இப்போது உள்ளே போகக் கூடாது" என்றான்.

என்றைக்குமில்லாது அன்றையத் தினம் தம்மை யாரோ  அன்னியன் தடுத்து நிறுத்தியதைக் கண்டதும் ஈசன் ஆச்சரியமுற்றார்.

அடே! நான் யார் தெரியுமா? சங்கரன்!" என்றார் சிவன்.

அவனோ அதைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.

இப்போது யாரும் உள்ளே செல்ல முடியாது" என்றான் உறுதியோடு.

அடே , நீ யார் என்னைத் தடுத்து நிறுத்த? உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? உன்னை வேலைக்கு அமர்த்தியிருக்கிறாளே அவளுடைய கணவன் நான்" என்று சொன்ன சிவன், அவனை ஒதுக்கிவிட்டு உள்ளே செல்ல முற்பட்டார்.

சிவனானாலும் அனுமதிக்க மாட்டேன்" என்று தன் தண்டத்தினால் சிவனை தடுத்தார், கணன்.
இப்போது யாரையும் உள்ளேவிடக் கூடாது என்பது தேவியாரின் கண்டிப்பான உத்தரவு. சற்றுப் பொறுத்தால் நீராடித் திரும்பி விடுவார்கள்" என்றான்.

சிவபெருமானுக்குக் கோபம் வந்துவிட்டது. தம்மோடு வந்திருந்த கணங்களைப் பார்த்தார்.
இந்த மூர்க்கனுக்கு நாம் யாரென்று தெரியவில்லை. நம்மிடமே வாதாடுகின்றான். இவனுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பியுங்கள்" என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்று விட்டார்.

சிவகணங்கள் கையில் தண்டத்தோடு நிற்கும் கணனைப் பார்த்து நையாண்டி செய்தனர். அடே, நாங்கள் யார் தெரியுமா? சிவகணங்கள். எங்கள் பராக்கிரமம் தெரியாது விளையாடுகின்றாய் !" என்றனர்.

அதிகப் பேச்சு வேண்டாம். நீராடித் திரும்பும் வரை யாரையும் உள்ளே விடவேண்டாம் என்பது தேவியின் உத்தரவு. நானோ காவல்காரன். உத்தரவுப்படி நடக்கக் கடமைப்பட்டவன். இங்கே யாரும் நிற்காதீர்கள். ஓடிப் போய் விடுங்கள்" என்றான்.

அவன் வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் ஏளனமாகச் சிரித்தனர்.

அற்பப் பதரே! உனக்கு அத்தனை ஆணவமா? சரியான பாடம் கற்பிக்காது நாங்கள் இங்கிருந்து நகர மாட்டோம்" என்று கொக்கரித்தபடி அவனை நெருங்கி நாற்புறமும் தாக்கத் தொடங்கினர்.

தேவியால் தமக்களிக்கப்பட்ட தண்டத்தை கைகளில் மாற்றி மாற்றிச் சுழற்றிக் கொண்டு கணன் சிவகணங்களிடையே புகுந்து அவர்களை அடித்து விரட்டினான். அவன் தாக்குதலைச் சமாளிக்க முடியாது அவர்கள் திரும்பி ஈசனை அடைந்தனர்.

பிரபோ, பார்ப்பதற்கு அவன் சாதாரணமாகத் தோன்றினாலும் மிகுந்த பராக்கிரமம் உடையவனாக  இருக்கிறான். ஒருவனாகவே இருந்து கொண்டு எங்கள் அனைவரையும் பக்கத்தில் நெருங்க விடாது சுழன்று சுழன்று விரட்டி அடித்து விட்டான்" என்றனர்.

அவர்கள் வார்த்தையைக் கேட்ட நந்திதேவர் அவர்கள் மீது சீறி விழுந்தார்.

உங்களுக்கு வெட்கமாக இல்லை? அவன் அடித்து விரட்டினான் என்று சொல்லிக் கொண்டு திரும்பி வந்திருக்கிறீர்களே!" என்று கடிந்து பேசியவராய் அவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்.

நந்தி தேவர் தலைமையில் சிவகணங்கள் மறுபடியும் சண்டைக்கு வருவதைக் கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டான் கணன். அவர்களை எதிர்ப்பது எங்ஙனம்? தன்னைத் தோற்றுவித்த தேவியை மனத்தில் தியானித்தான்.

தேவி! தங்கள் கட்டளைப்படி நான் என் பணியை நிறைவேற்றி வருகிறேன். சிவகணங்கள் அத்துமீறி என்னோடு சண்டைக்கு வருகிறார்கள். தாங்கள் தான் அவர்களை எதிர்க்கும் சக்தியை எனக்கு அளிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.

கணனை நெருங்கிய சிவகணங்கள் ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே அவனை அடிக்கத் தொடங்கினர். கணன் தேவியை மறுபடியும் தியானித்துப் பிரார்த்தித்தபடி தண்டத்தை சுழற்றி அவர்களைத் தாக்கினான். அவனால் கொடுக்கப்படும் அடிகள் ஒவ்வொன்றும் கணங்களைக் கிறுகிறுத்து விழச் செய்தன. அவன் உடலில் விழும் ஒவ்வொரு அடிக்கும் பதிலாக பத்துப் பதினைந்து கணங்கள் தரையில் சாய்ந்தன.

நந்திதேவர் பிரமித்து விட்டார். கணன் சாதாரணமானவன் அல்லன் என்பதை உணர்ந்தார். அவன் ஒருவனாகவே அத்தனை பேரையும் எதிர்ப்பதைக் கண்ட போது அவனை வெல்வது சுலபமான காரியம் அல்ல என்பதை அறிந்தார். விரைவில் சிவகணங்கள் அனைவரையும் அடித்து வீழ்த்தி விடுவான் என்று தோன்றியது. சிவபெருமானிடம் திரும்பிச் சென்று அங்குள்ள நிலவரத்தைத் தெரிவித்தார்.

இதற்குள் செய்தி தேவலோகமெங்கும் பரவிவிட்டது. யாரோ ஒருவன் சிவகணங்களை எதிர்த்துத் தாக்கி விரட்டி அடிப்பதாக கேள்விப்பட்டு விஷ்ணு, பிரம்மன் முதலானோர் கைலாசத்துக்கு ஓடிவந்தனர். அந்தச் சமயத்தில்தான் நந்தி தேவர் அங்கே வந்து கணனின் பிரதாபத்தை விவரித்தார்.

சிவனுக்கு அளவுக்கதிகமாகக் கோபம் வந்து விட்டது. தாமே நேரில் வருவதாகக் கூறி புறப்பட்டார். அவரோடு விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியோரும் புறப்பட்டனர்.

அந்தப்புர வாயிலில் ஏதோ குழப்பம் நிலவுவதாகத் தோன்றவே, பார்வதி, தோழியர் இருவரையும் அழைத்து என்ன விஷயமென்று பார்த்து வருமாறு அனுப்பினாள். அவர்கள் இருவரும் வாயிலுக்கு வந்து பார்த்துவிட்டுத் திரும்பினர்.

தேவி, நம் கணன் தனக்கிடப்பட்ட வேலையைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வருகிறான். ஈசன் வந்த போது தாங்கள் நீராடச் சென்றிருப்பதாகவும், சிறிது பொறுத்து வருமாறு தெரிவித்தானாம். அவருக்குக் கோபம் வந்து விட்டதாம். தம்மோடு  வந்திருந்த சிவகணங்களை அழைத்து அவனுக்குத் தாம் யார் என்பதை விளக்குமாறு சொல்லி விட்டுப் போய்விட்டாராம். சிவகணங்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு அடிக்க ஆரம்பிக்கவே, தாங்கள் அளித்த தண்டத்தைக் கொண்டே அவர்களை விரட்டி அடித்தானாம். அடிபட்டு ஓடிய சிவகணங்கள் நந்திதேவரை அழைத்து வந்தனராம். அவராலும் கணனை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது விஷ்ணு, பிரம்மா முதலானோர் சண்டைக்கு வருகிறார்களாம். உடலெங்கும் அடிபட்டிருந்தும் கணன், யார் வேண்டுமானாலும் வரட்டும்!" என்று வீரத்தோடு சவால் விடுகிறான்" என்றனர்.

தோழியர் வார்த்தையைக் கேட்ட பார்வதி பெருமிதம் அடைந்தாள். அதே சமயம் சிவகணங்களின் அடாத செய்கை பற்றிக் கோபமும் உண்டாயிற்று. மனத்தால் இரண்டு சக்திகளைத் தோற்றுவித்தாள்.

வாயிலில் கணன் சிவகணங்களை எதிர்த்து நிற்கிறான். நீங்கள் இருவரும் இப்போதே சென்று அவனுக்கு ஆபத்து ஏதும் வராமல் காப்பாற்றுங்கள்" என்று கட்டளையிட்டாள்.

அப்படியே, தேவி!" என்று இரு சக்திகளும் பார்வதியைப் பணிந்து புறப்பட்டனர்.

விஷ்ணு, பிரம்மன் முதலானோரோடு சிவபெருமான் புறப்பட்டதும் ஆறுமுகனும் தந்தையை நெருங்கிப் பணிந்தான். 

தந்தையே! நான் சென்று வருகிறேன்" என்று அனுமதி கேட்டான், ஆறுமுகன்.

சிவகணங்களை விரட்டி விட்ட மமதையில் நிற்கும் அந்த அற்பனுக்குத் தகுந்த பாடம் கற்பித்து வா, குமரா!" என்று ஈசன் ஆசீர்வதித்தார்.

மயூர வாகனத்திலேறி வந்த சுப்பிரமணியனைக் கண்டதும் கணன் சற்று தயங்கினான். தேவியின் மைந்தனல்லவா வந்திருப்பது!

அதே சமயம் கணனுக்கு உதவியாகப் பார்வதி தோற்றுவித்த சக்திகள் இருவரும் பக்கத்தில் வந்து நின்றனர். இமைக்கும் நேரத்தில் அவர்கள் இருவரும் பூதாகாரமான உடலைக் பெற்று ஹுங்காரம் செய்தனர். அவர்களைக் கண்ட மாத்திரத்திலேயே சிவகணங்கள் நடுநடுங்கினர். கணன் ஒருவனாக இருக்கும் போதே அவனை வெற்றி காண முடியவில்லை. அப்படியிருக்க, அவனுக்கு உதவியாக பயங்கர சக்திகள்  இருவர் வந்திருக்கின்றனரே !

மனம் குழம்பும் சிவகணங்களைத் தைரிய வார்த்தைகள் சொல்லித் தேற்றியவாறு ஆறுமுகன் அஸ்திரங்களைப் பொழிந்தான். அவற்றுள் ஒன்று கூட கணனை நெருங்கவில்லை. அவனை நெருங்குவதற்கு முன்னரே  சக்திகள் இருவரும் பாய்ந்து அந்த அஸ்திரங்களை விழுங்கினர். அந்த வேடிக்கையைக் கண்டு சிரித்துக் கொண்டு நின்றான் கணன்.

ஆறுமுகனுக்கு வியப்புத் தாங்கவில்லை. எப்படியெல்லா மோ அஸ்திரங்களை மாற்றி மாற்றி எய்தார். ஒன்றுகூடக் கணனை நெருங்கவில்லை. கை களைத்து விட்டது.

தூரத்தே நின்று கொண்டு அவர்கள் யுத்தம் செய்வதைக் கவனித்துக் கொண்டிருந்த விஷ்ணு ஈசனிடம், பரமேச்வரா! அவனை அற்பமாக எண்ணக்கூடாது. மாயாஜாலத்தில் சிறந்தவனாக இருப்பான் போல் தோன்றுகிறது. இரு சக்திகளைத் தோற்றுவித்து நாம் எய்யும் பாணங்களை விழுங்கச் செய்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனை நாம் வஞ்சகமாகத்தான் வீழ்த்த வேண்டும். நான் அவனோடு போரிட்டு அவன் கவனம் பூராவும் என்னிடம் இருக்குமாறு செய்து கொள்ளுகிறேன். தாங்கள் அந்தச் சமயத்தில் அவனை வீழ்த்தி விடலாம்" என்றார்.

ஈசன் அதற்குச் சம்மதிக்கவே, விஷ்ணு சக்கராயுதத்தை எடுத்துக் கொண்டு ஆறுமுகனுக்கு உதவியாக யுத்தத்தில் இறங்கினார். விரைவிலேயே சக்திகள் இருவரும் விஷ்ணுவின் அஸ்திரங்களுக்குப் பலியாயினர். தன்னந்தனியாகத் தண்டத்தைக் கையில் பிடித்துக்கொண்டு நிற்கும் கணனைக் கண்டதும் ஆக்ரோஷமாகத் தமது சக்கராயுதத்தை ஏவினார்.

தீ ஜ்வாலையுடன் உக்கிரமாக நெருங்கி வரும் சக்கரத்தைக் கண்டதும் கணன், தேவியை மனத்தில் தியானித்தான்.

தாயே ! நீதான் இத்தருணத்தில் என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று பிரார்த்தித்தபடி தன் கையிலிருந்த தண்டத்தை ஓங்கி வீசினான்.

கணன் வீசிய தண்டம் சீறிவரும்  சக்கரத்தை  வழியிலேயே தடுத்துப் பொடி பொடியாக்கி விட்டது.

விஷ்ணுவுக்கு அபரிமிதமாகக் கோபம் வந்து விட்டது. அடுத்த கணமே மற்றொரு சக்கரத்தை ஏந்திக்கொண்டு கணனை நெருங்கினார். அதற்குள் சிவகணங்கள் அனைவருமாக சூழ்ந்து கணனை தாக்க, சிவபெருமான் கணன் மீது தனது திரிசூலத்தை வீசி வீழ்த்தினார். கணனது தலை துண்டிக்கப்பட்டது.

எங்கும் ஒரே ஆரவாரம், தங்களுக்கு இதுவரை எதிர்ப்புக் காட்டி வந்தவன் வீழ்ந்து விட்டான் என்றதும் சிவகணங்கள் மகிழ்ச்சியால் குதித்தனர். தேவர்கள் சிவகோஷம் எழுப்பினர்.

வெளியே கேட்கும் ஆரவாரம் அந்தப்புரத்தின் உள்ளே இருந்த தோழிகளைத் திடுக்கிட வைத்து. வாசலுக்கு ஒடி வந்தனர். கணன் உயிரிழந்து கிடப்பதையும் சிவகணங்கள் வெற்றிக் களிப்பில் இருப்பதையும் கண்டு பரபரப்போடு உள்ளே ஓடினர்.

அம்மா ! நம் கணன் இறந்து விட்டானம்மா! தேவர்கள் அவனை அழித்து விட்டனர்!" என்று நெஞ்சம் பதைபதைக்கக் கூறினார்கள்.

என்ன?... கணன் இறந்து விட்டானா?..." என்று திடுக்கிட்டுக் கேட்டாள், பார்வதி.

ஆம்... தேவி!... கணன் வஞ்சகத்தால் கொல்லப்பட்டான்" என்றொரு குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினர் மூவரும்.

அங்கே நாரதர் நின்று கொண்டிருந்தார்.

பிரம்மபுத்திரா, என்ன சொன்னாய்?..." என்று கேட்டாள் பார்வதி.

ஆம் தேவி! கணனைத் தேவர்கள் வஞ்சகமாகக் கொன்று விட்டனர். விஷ்ணு தாங்கள் தோற்றுவித்த சக்திகளை அழித்து விட்டுக் கணனுடன் போருக்குச் சென்றார். கணனுடைய முழுக்கவனமும் விஷ்ணுவிடம் இருக்கும்போது கைலாசநாதன் சூலத்தை ஏவி அவனை அடித்து வீழ்த்தி விட்டார்."

நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட பார்வதி ரௌத்திரா காரமாகி விட்டாள்.

வஞ்சகத்தால் என் குமாரனை அழித்த தேவர்களை என்ன செய்கிறேன் பார்!" என்று சீறினாள்.
தேவியின் கோபத்திலிருந்து ஆயிரக்கணக்கான சக்திகள் தோன்றினர்.

இப்போதே சென்று தேவர்களை அழித்து நிர்மூலமாக் குங்கள்!" என்று உத்தரவிட்டாள்.

தேவியின் கோபத்தைக் கிளறிவிட்டு விட்டு நாரதர் தேவர்களிடம் வந்தார். அவர்களோ நின்று பேசக்கூட நேரமின்றி ஓடினர். தேவியால் அனுப்பப்பட்ட சக்திகள், தேவர்களிடையே புகுந்து அவர்களை அடித்தும் உதைத்தும் துரத்தின. சக்திகளின் பிடிகளில் சிக்கிக்கொண்ட தேவர்களும், சிவ கணங்களும் கொசுவைப் போன்று நசுக்கி எறியப்பட்டனர்.

சற்று முன்பு வரை மகிழ்ச்சி மட்டுமே நிரம்பியிருந்த அந்த இடத்தில் இப்போது கூச்சலும் குழப்பமுமே நிறைந்திருந்தன. சக்திகளின் பிடியில் அகப்படாத சிவகணங்களும் தேவர்களும் ஓடிவந்து சிவபெருமானைச் சரண் அடைந்தனர்.

பிரபோ, சர்வேசா ! தேவி பெரும் கோபத்தில் இருக்கிறாள். கணன் இறந்த செய்தி கேட்டவுடன், அவர்களின் கோபம் எல்லை மீறிப்போய் விட்டது..." என்றார் நாரதர்.

நாரதரின் வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் மேலும் நடுங்கினர்.

கைலாசபதே ! எங்களைக் காப்பாற்ற வேண்டும் " என்று அனைவரும் ஒரு முகமாகச் சிவனை வேண்டினர். ஈசனும் பிரம்மனை அழைத்துத் தேவியைச் சமாதானம் செய்யுமாறு அனுப்பினார்.

விஷ்ணு, இந்திரன் மற்றும் முக்கியமான தேவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு பிரம்மதேவன் தேவியிடம் வந்தார். பலவித ஸ்தோத்திரங்களால் தேவியைப் போற்றிப் புகழ்ந்து வணங்கினர்.

தேவி, சாந்தம் கொண்டு எங்களைக் காப்பாற்ற வேண்டும். தேவர்களும் சிவகணங்களும் தங்களால் அனுப்பப்பட்ட சக்திகளால் அழிக்கப் படுகின்றனர். அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்" என்று வேண்டினர்.

தேவியோ அவர்கள் கோரிக்கைக்கு இணங்க மறுத்து விட்டாள்.

இப்போது எல்லோரும் ஓடி வருகிறீர்களே, யுத்தம் நடப்பதற்கு முன்பு நீங்கள் தலையிட்டு அதைத் தவிர்த்திருக்கலாமே. என் குமாரனை வஞ்சகத்தால் அழித்து விட்டு, இப்போது சமரசத்துக்கு வருவது எவ்விதம் ஏற்கக் கூடியதாகும் ? என் குமாரனை உயிர்ப்பிக்க வழி  காணுங்கள். அதன் பிறகே மற்றவை பற்றி யோசிக்கலாம்" என்று உறுதியாகச் சொல்லி விட்டாள்.

அதன் பிறகு பிரம்மதேவன், தேவர்களுடன் ஈசனிடமே திரும்பி வந்தார்.

பிரபோ! குமாரன் உயிர் பிழைத்தால்தான் தேவி சாந்தமடைவார்கள் போல் தோன்றுகிறது. தங்களையே எதிர்த்த குற்றத்தை மன்னித்துக் கணனை எழுப்பித் தரவேண்டும். கணனை உயிருடன் கண்டால் தேவியின் கோபம் பஞ்சாக பறந்து விடும்" என்றார் பிரம்மதேவன்.

பிரம்மதேவனின் கோரிக்கையை விஷ்ணு மற்றும் தேவர்களும் ஆமோதித்தனர். குமாரன் பிழைத்து எழுந்தால் தான் தேவர்கள் அழிவிலிருந்து மீள முடியும் என்ற நிலைமை ஆகி விட்டது.

அனைவருடைய வேண்டுகோளை ஏற்று ஈசன், வடக்கு திசையில் காணப்படும் முதல் விலங்கின் தலையைக் கொய்து வரும்படி பணித்தார். அவ்விதமே கொண்டு வரப்பட்ட யானை ஒன்றின் சிரசை கணனுக்குப் பொருத்தினர்.

தூக்கத்திலிருந்து எழுந்திருப்பதுபோல் தரையிலிருந்து எழுந்திருந்த கணனை ஓடிப் போய் இரு கைளாலும் வாரித் தூக்கிக் கொண்டார் பிரம்மதேவர்.

மற்றும் சக்திகளால் உயிர் இழந்த தேவர்களும் சிவகணங்களும் உயிர்பெற்று எழும்படியும் செய்தார்.

குமாரா! உன் பராக்கிரமம் கண்டு நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தோம். உன்னைக் காண வேண்டுமென்று தேவி துடித்துக் கொண்டிருக்கிறாள். வா, இப்போதே நாம் அங்குச் சென்று உன் அன்னையைத் தரிசிப்போம்" என்று சொல்லி அவனைப் பார்வதியிடம் அழைத்துச் சென்றார். அவர் பின்னால் தேவர்களும் தேவியின் புகழ் பாடிச் சென்றனர்.

ஈசனால் கொல்லப்பட்ட குமாரன் உயிர் பெற்று வருவதைக் கண்டதும் பார்வதியின் கோபம் மறைந்துவிட்டது.

குமாரா!..." என்று ஆவலோடு ஓடி வந்து அவனைத் தூக்கி அணைத்து முத்தமிட்டாள்.

தேவி, தங்கள் கருணை பொழியும் முகத்தைக் காணும் போது, நாங்கள் விவரிக்க இயலாத ஆனந்தம் அடைகிறோம்!" என்று போற்றினர் தேவர்கள்.

குமாரா ! வெளியே உன் தந்தை காத்திருக்கிறார். அவரைத் தரிசித்து அவர் அனுக்கிரகத்தைப் பெறுவோம்!" என்று சொல்லி, பார்வதி குமாரனை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்.

தேவர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர். விரோதம் நீங்கி பாசம் பிணைக்கப் போகும் அந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் காண சிவ நாமங்களைப் பூஜித்துக் கொண்டே, தேவியோடு புறப்பட்டனர்.

சிவனை நெருங்கிய பார்வதி, குமாரனோடு அவரை மும்முறை வலம் வந்து வணங்கினாள்.
பிரபோ! சந்தர்ப்ப வசத்தால் நடக்கக் கூடாதது நடந்து விட்டது. அதைத் தாங்கள் மறந்துவிட வேண்டும். இதோ தங்கள் குமாரன் கணன். எங்களை மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று பணிவோடு பிரார்த்தித்தாள்.

கணன் ஈசனை மீண்டும் வணங்கி தந்தையே! என் செய்கையை மன்னிக்கும்படி பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்" என்றான்.

சிவபெருமானின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. மகனை வாரி எடுத்துத் தம் மடி மீது அமர்த்திக் கொண்டார்.

குமாரா ! உன் பராக்கிரமம் வெளிப்படவே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது" என்று சொன்ன சங்கரன், தேவர்களைப் பார்த்து, இவன் என் குமாரன்!" என்றார்.

தேவர்களின் ஆரவாரம் விண்ணை எட்டியது. அந்த ஆரவாரம் ஓய்ந்ததும் ஈசன் மீண்டும் தேவர்களைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினார்.

தேவர்களே! என் குமாரனாகிய கணன் இன்று முதல் என் கணங்களுக்குத் தலைவன். கணங்களின் தலைவனாகிய இவன், கணபதி என்ற நாமத்தோடு விளங்குவான். இவனே எல்லோருக்கும் முதல்வன், அனைவரும் கணனை வணங்க வேண்டும். எந்தக் காரியத்துக்கும் முன்னதாகக் கணபதியை வணங்க வேண்டும். இவ்விநாயகனை முதலில் பூஜித்து நம்மை பின்னால் பூஜித்தால்தான் நாமே மகிழ்வோம். இவனைப் பூஜிக்காதவர்களுக்கு காரியங்கள் சித்தியாகாது!" என்றார்.

சிவபெருமானின் வார்த்தைகளைக் கேட்ட சிவகணங்கள் மகிழ்ச்சிப் பெருக்கில் ஆரவாரம் செய்தனர். கணனை வணங்கி அவனைத் தங்களுடைய தலைவனாக ஏற்றுக் கொண்டனர். விஷ்ணு, பிரம்மன், இந்திரன் முதலான தேவர்களும் கணனை வலம் வந்து வணங்கித் தங்கள் மகிழ்ச்சியைத்  தெரிவித்துக் கொண்டனர்.

குமாரா, உன்னை வணங்கும் சகலமான பேருக்கும் அவர்கள் கஷ்டங்களை நிவர்த்தி செய்து அனுக்கிரகம் செய்து வர வேண்டும். உனக்குச் சகல சக்திகளும் கிடைக்குமாறு அருளுகிறேன். கணபதி, கணேசன், என்ற நாமங்களோடு விக்கினங்களை நிவர்த்தி செய்வதன் காரணமாக விக்கினஹந்தா என்ற பெயரையும் பெற்று விளங்கி வருவாயாக!" என்று அருளினார் சங்கரன்.

தேவி மகிழ்ச்சி மிகுதியால், கண்களில் ஆனந்த பாஷ்யம் பெருக குமாரனை அணைத்து முத்தமிட்டாள்.

குமாரா! உன்னைச் சிவப்பு நிற மலர்களால் பூஜிப்பவர்களுக்குச் சகல காரிய சித்தியும் அளிப்பாயாக!" என்று அனுக்கிரகம் செய்தாள் பார்வதி. பின்னர், தான் தோற்றுவித்த சக்திகள் அனைத்தையும் தன்னோடு ஐக்கியமாகும்படி செய்தாள்.

பாத்திரபத மாதம் சுக்கிலபக்ஷம் சதுர்த்தி அன்று சந்திரோதய சமயத்தில், முதல் ஜாமத்தில், உச்சஸ்த கிரக  பஞ்சக யோகத்தில், பார்வதி கணனைத் தோற்றுவித்ததால் அந்தச் சமயத்தில் அன்று முதல் விரதம் இருந்து, மறு வருஷம் அந்த தினம் வரை பிரதி சதுர்த்திகளிலும் விரதத்தை நியமமாகக் கடைப்பிடித்து, கணபதியைப் பூஜித்து வருபவர்களுக்குச் சகல சௌக்கியங்களும் கிடைக்குமாறு சிவபெருமான் அனுக்கிரகம் செய்தார்.


இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை