Recent Posts

சிவ புராணம் - பீமனை சம்கரித்த சங்கரர்

சிவ புராணம்

பீமனை சம்கரித்த சங்கரர்



பீமன் என்ற பெயரை உடைய அசுரன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு நாள், தன் தாய் கற்கடியைப் பார்த்து, அம்மா, என் தந்தை யார்? அவர் எங்கிருக்கிறார்? அவரை நான் பார்த்தது கூடக் கிடையாதே. நீ மட்டும் தனித்து இருக்கக் காரணம் என்ன?" என்று கேட்டான்.

அவளும், குழந்தாய், என் முதல் கணவர் விராடன். அவர் இராமனால் கொல்லப்பட்டார். என் தந்தை கற்கடனும், தாய் புஷ்கனி இருவரும், தவம் செய்து கொண்டிருந்த மகரிஷி ஒருவரை சாப்பிட எண்ணம் கொண்டு நெருங்குகையில், யோகாக்னியில் தகிக்கப்பட்டு இறந்து போனார்கள். அதன்பிறகு நான் மட்டும் தனித்து திரிந்து வந்தேன்.

அப்போது தான் உன் தந்தை என்னைக் கண்டு மோகித்தார். அவர் பெயர் கும்பகர்ணன். இலங்காதிபதி இராவணேசுவரனுக்குச் சகோதரனாவார். என்னை இங்கு விட்டுச் சென்ற பிறகு உன் தந்தை திரும்ப வரவேயில்லை. அயோத்தியைச் சேர்ந்த இராமன் என்னும் அரசன் உன் தகப்பனையும், இராவணேசுவரனையும் போரிலே கொன்று விட்டார் என்றாள்.

தாயின் மூலம் விஷயங்களை அறிந்த போது பீமன் கடுமையான கோபம் கொண்டான். ‘தன் தந்தையைக் கொன்ற இராமனைத் தேடிக் கொல்லாது விடுவதில்லை’ என்ற சங்கல்பத்துடன் பிரம்மதேவனைக் குறித்துத் தவம் மேற் கொண்டான். ஒற்றைக் காலில் நின்று அன்னபானாதிகளை ஒழித்து ஏகாக்கிர சிந்தையுடன் அவன் மேற்கொண்ட தவத்தைக் கண்டு தேவர்கள் நடுங்கினர். அவனிடமிருந்து கிளம்பிய யோகாக்கினியால் தேவலோகமே தகிக்க ஆரம்பித்தது. அவன் கோரும் வரத்தை அளித்துத் தங்கள் கஷ்டத்தை நிவர்த்தி செய்யுமாறு தேவர்கள் பிரம்மதேவனை வேண்டினர்.

பிரம்மதேவன், அசுரன் முன்பு தோன்றி அவன் விரும்பும் வரம் யாதெனக் கேட்டார்.

பிரபோ, எனக்கு அளவிட முடியாத பலத்தை அளிக்க வேண்டும்" என்று கோரினான் பீமன்.

பிரம்மதேவன் அவன் கோரியதைக் கொடுத்து மறைந்தார்.

வரத்தின் காரணமாக அபரிமிதமான பலத்தை அடைந்த பீமன் தாயிடம் வந்தான்.

அம்மா! இனி என்னை எவராலும், ஜெயிக்க முடியாது. நம் குலத்தின் அழிவுக்குக் காரணமாக இருந்த தேவர்கள் எல்லோரையும் என்ன செய்கிறேன் பார்" என்று சூளுரைத்துப் புறப்பட்டான்.

காலரூபத்தை அடைந்த பீமன், அந்நாட்டு அரசன் பிரிய தர்மனைப் பிடித்து சிறையிலடைத்து அவன் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். ஒவ்வொரு நாடாகச் சென்று அரசர்களை வதைத்தும் துன்புறுத்தியும் தனக்குப் பணியுமாறு செய்த அவன் கவனம் தேவர்கள் பக்கம் திரும்பியது.

அசுரனின் பராக்கிரமத்தின் முன்பு தேவர்களால் நிற்க முடியவில்லை. ஓடி ஒளிந்தார்கள். பீமன் சகல லோகங்களுக்கும் தானே அரசனாகத் திகழ்ந்தான்.

அசுரனால் விரட்டப்பட்ட தேவர்கள் மகாகோச நதி தீரத்தில் ஒன்று கூடினார்கள். அசுரனின் கொடுமைகளில் இருந்து தப்ப, சிவபெருமானைச் சரண் அடைவதே வழி என்பதை உணர்ந்து சிவபூஜை செய்யத் தொடங்கினர். அவர்கள் பூஜையால் உள்ளம் களிப்புற்று கைலாசநாதன் தரிசனம் கொடுத்தார்.

மகேச்வரா! பீமனால் நாங்கள் அளவில்லா துயரங்களை அனுபவிக்கிறோம். அவனிடமிருந்து எங்களை ரக்ஷிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள்.

தேவர்களே,  கவலை வேண்டாம். அவன் அழிவு நெருங்கி கொண்டிருக்கிறது. விரைவில் அவன் சம்ஹரிக்கப்படுவான்" என்று அனுக்கிரகித்து மறைந்தார்.

இது இப்படியிருக்க, பீமனால் சிறையிலடைக்கப்பட்டிருந் தாலும் பரமேசுவரனிடம் கொண்டிருந்த பக்தியிலிருந்து சிறிதும் மாறவில்லை பிரியதர்மன். சிறையிலேயே மண்ணால் சிவலிங்கம் அமைத்துத் தன் மனைவி தக்ஷிணையுடன் பூஜை செய்து வந்தான். தான் நம்பியிருக்கும் ஈசன், எப்படியும் தன்னைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையை அவன் இழக்கவில்லை.

பிரியதர்மன் சிவபூஜை செய்து வருவதைப் பார்த்த காவலர் சிலர், ஓடிச் சென்று பீமனிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தனர். பீமனின் கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்துவிட்டன. உடைவாளை உருவிக் கொண்டு சிறைச் சாலைக்கு ஓடிவந்தான்.

பிரியதர்மனும் அவன் மனைவியும் பக்தியோடு சிவபூஜையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டதும் அவன் ஆத்திரம் பன்மடங்காகி விட்டது.

அடே! என்ன காரியம் செய்கிறாய்?" என்று சீறியபடி அரசனை நெருங்கினான்.

பிரியதர்மன் கொஞ்சமும் தைரியத்தை இழக்காமல் சர்வலோக சரண்யனான பரமேச்வரனை ஆராதித்து வருகிறேன்" என்றான்.

அதைக் கேட்டுக் ‘கலகல’ வென்று நகைத்த அசுரன் அடே, என்னை விட பலசாலியா அவன்?" என்று ஏளனம் செய்தான்.

அதில் என்ன சந்தேகம் இருக்கிறது? ஈசுவரனை விட மேலான தெய்வம் இல்லை. உன் செருக்கை விட்டு அவரைப் பணிந்து அவருடைய பக்தர்களுக்கு இடர் செய்வதை நிறுத்து. இல்லையேல் உன்னையே அழித்துவிடுவார்" என்றான் பிரியதர்மன்.

என்னையும் விட மேலானவன் யாரும் இல்லை அற்பப் பதரே, அந்த லிங்கத்தைத் தூர எறிந்து  விடு" என்றான்  பீமன்.

அரசனோ அவன் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாது பகவத் தியானத்தில் இருந்தான்.

அடே, நான் சொல்லுவதைக் கேட்காது அலட்சியம் செய்கிறாயா?" என்று கத்தினான் அசுரன்.
அப்போதும் பிரியதர்மன் அசையவில்லை. பிரபோ, உன்னையே நான் நம்பியிருக்கிறேன். நீதான் என்னை ரக்ஷிக்க வேண்டும்" என்று கண்மூடிப் பிரார்த்தித்தான்.

உன் தெய்வம் என்ன செய்கிறது என்பதைத்தான் பார்ப்போமே!" என்று எள்ளி நகையாடிய அசுரன், உடைவாளை ஓங்கி அரசனை வெட்டப்  போனான்.

அப்போது கிடுகிடுக்கும் பயங்கர சப்தத்தோடு பரமேச்வரன், அரசன் பூஜித்து வந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டுத் தமது நாகபாசத்தை ஏவினார். இமைக்கும் நேரத்தில் அது அசுரனின் உடைவாளைத் தாக்கித் தவிடுபொடியாகும்படி செய்து விட்டது.

அடே! என் பக்தனுக்குத் துன்பம் விளைவிக்க எண்ணினால் அழிந்து போவாய். ஓடிவிடு" என்றார் ஈசன்.

பீமனோ அண்டம் கிடுகிடுக்கக் கோரமாகச் சிரித்தபடி தன்னிடமிருந்த சூலாயுதத்தை ஏவினான். அதையும் பகவான் பொடிப் பொடியாக்கினார்.

உடனே அசுரன் மாயையால் அனேக அரக்கர்களைத் தோற்றுவித்து, பலவித அஸ்திரங்களால் பகவானைத் தாக்கினான். ஈசனும் கணங்களை வரவழைத்து அரக்கர்களை எரித்தார். அவர்கள் இருவரும் புரியும் யுத்தத்தைக் கண்டு அண்ட சராசரங்களும் கிடுகிடுத்தன.

பார்த்தார் நாரதர். மெல்ல ஈசனை நெருங்கி, பிரபோ, இதென்ன விளையாட்டு? அரக்கனை அழிக்க இத்தனை பெரிய யுத்தம் வேண்டுமா? உலகமே நடுங்குகிறது. விரைவில் அரக்கனை அழிக்க வேண்டும்" என்று வேண்டினார்.

ஈசன் பெரும் கோபத்தோடு ஹூங்காரம் செய்தார். அந்த க்ஷணமே அசுரனும் அவனால் தோற்றுவிக்கப்பட்ட வீரர்களும் நெருப்பில் மடியும் பூச்சிகளைப் போன்று அழிந்தனர். தேவர்கள் பூமாரி பெய்தனர். பகவானைப் பலவிதங்களிலும் தோத்தரித்தனர்.

கைலாசநாதன் அரசனையும் அவன் மனைவியையும் சிறையிலிருந்து விடுவித்து, மீண்டும் ராஜ்ஜியாபிஷேகம் செய்வித்து அனேக வரங்களை அருளி மறைந்தார். அவன்  பூஜை செய்த சிவலிங்கத்திலேயே பகவான், பீமசங்கரர் என்னும் திருநாமத்தோடு என்றும் எழுந்தளியிருக்கிறார்.


இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை