Recent Posts

சிவ புராணம் - சும்ப நிசும்பர் வதம்

சிவ புராணம்

சும்ப நிசும்பர் வதம்



சிவபெருமான் அனுக்கிரகித்தபடி மன்மதன் பிரத்தியும்னன் என்ற பெயரில் கிருஷ்ணனின் மகனாகத் துவாரகையில் பிறந்து வளர்ந்து வந்தான். அதே சமயம் ரதிதேவி மயனுக்கு மகளாக பிறந்தாள். மாயாவதி என்னும் பெயரில் அவளை அன்புடன் அழைத்தனர். கண்டோரை மயக்கும் அழகை உடைய மாயாவதியைக் கண்ட சம்பரன் என்னும் அசுரன் அவளைத் தானே அடைய வேண்டுமென்று தூக்கி வந்து தன்னுடைய அரண்மனையில் வளர்த்து வந்தான். இரதியை அடைய பிரத்தியும்னன் வளர்ந்து வரும்போது, அரக்கனின் எண்ணம் நிறைவேறுமா? விதி அவனிடம் விளையாடியது. துவாரகையிலிருந்த பிரத்தியும்னனை அவன் யார் என்பதை உணராது தூக்கி வந்து தன் அரண்மனையிலேயே மாயாவதியுடன் வளர்த்து வந்தான்.

அசுரனின் அரண்மனையில் தன்னோடு வளர்ந்து வரும் மாயாதேவியே இரதிதேவி என்பதை அறிந்தபோது  பிரத்தியும்னன் திடுக்கிட்டான். அவளை மணப்பதற்காக அல்லவா சம்பரன் வளர்த்து வருகிறான்! அதை எவ்விதம் அனுமதிப்பது? பிரதியும்னன் சம்பரனுடன் யுத்தத்துக்கு  வந்து அவனைப் போரிலே கொன்று சம்பராரி என்ற பெயரை அடைந்து மாயாவதியை மீட்டுத் துவாரகைக்கு அழைத்துச் சென்றான்.

ஒரு நாள் பிரத்தியும்னன் உத்தியான வனம் ஒன்றில் உல்லாசமாக இருந்து வரும்போது, அவ்வழியே வந்த சும்பன் என்னும் அசுரன் அவனைக் கண்டான். கட்டிளம் காளையான அவனைக் கண்டதும் அப்படியே விழுங்கிவிட வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. இருப்பினும் சகோதரன் நிசும்பனுக்குக் கொடுக்கலாம் என்று பிரதியும்னனைத் தூக்கிச் சென்றான்.

அவனைக் கொண்டுபோய் நிசும்பனின் எதிரில்  விட்டு, அண்ணா, இதோ உன் ஆகாரத்துக்காக நல்ல இரையைக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றான்.

நிசும்பன் அலட்சியமாகப் பிரத்தியும்னனை ஆகாயத்தில்  தூக்கிப் பந்து போல எறிந்தான். உயரே சென்ற பிரத்தியும்னன் பக்கத்திலுள்ள அரக்கனின் உத்தியான வனத்திலே வந்து விழுந்தான். 

அந்த நேரத்தில் சும்பனின் குமாரத்தி லக்ஷ்மி உத்தியான வனத்தில் மகிழ்ச்சியோடு உலாவிக் கொண்டிருந்தாள். அவள் வரும் வழியிலேதான் பிரத்தியும்னன் மூர்ச்சித்து விழுந்து கிடந்தான். அவனைக் கண்டதும் லக்ஷ்மி பரபரப்போடு ஓடி வந்து தூக்கி அருகிலிருந்த மேடையில் படுக்க வைத்தாள். பக்கத்திலிருந்த தாமரைத்தடாகத்திலிருந்து நீர் மொண்டு வந்து அவன் முகத்திலே தெளித்து மூர்ச்சை தெளிய வைத்தாள்.

கண்விழித்து எழுந்த பிரத்தியும்னன் எதிரே  அமர்ந்திருந்த மங்கையைக் கண்டதும் ஒன்றும் புரியாது விழித்தான். அம்மணி, தாங்கள் யார்?..." என்று வினவினான் பிரத்தியும்னன்.

 ஐயா, என் பெயர் லக்ஷ்மி என்பது. என் தந்தையாகிய சும்பன் அரக்க குலத் தலைவனாவார். இது எங்கள் நந்தவனம். உலாவிக் கொண்டு வருகையில் பாதையில் மயங்கிக் கிடந்த தங்களைக் காண நேர்ந்தது. தடாகத்திலிருந்து நீரைக் கொண்டு வந்து உங்கள் மயக்கத்தைத் தெளிய வைத்தேன்" என்ற அவள் தலையைத் தாழ்த்தியவாறு, தாங்கள் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? தெரிவிக்கலாமா?" என்று கேட்டாள்.

பிரத்தியும்னனின் மனத்திலே அவள் அழியா ஓவியமாகப் பதிந்துவிட்டாள்.

லக்ஷ்மி, நான் துவாரகையைச் சேர்ந்தவன். என் பெயர் பிரத்தியும்னன் என்பது. பாண்டவர்களின் ஸஹ்யனான கிருஷ்ணனின் குமாரன். உத்தியான வனத்திலிருந்த என்னை உன் தந்தை தூக்கி வந்து தம் சகோதரரிடம் விட்டார். அவரோ என்னைப் பந்து போல் தூக்கி எறியவே இங்கு வந்து விழுந்திருக்கிறேன்" என்றான் அவன்.

லக்ஷ்மியின் கண்கள் கலங்கின.

என் தந்தையின் அடாத செய்கைக்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தங்களுக்கு அவர் செய்த கொடுமைமையை மன்னித்து விடுங்கள். உங்களைத் துவாரகைக்குக் கொண்டு போய் சேர்ப்பிக்க ஆவன செய்கிறேன்" என்றாள் லக்ஷ்மி.

உன்னை விட்டு விட்டுப் போகச் சொல்கிறாயா?" என்று கேட்ட பிரத்தியும்னன் எழுந்து நின்றவளின் கரத்தைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தான்.

லக்ஷ்மியின் முகம் நாணத்தால் கவிழ்ந்தது. அவளை இழுத்துத் தன்னோடு அணைத்துக் கொண்டு, லக்ஷ்மி உன் தந்தையல்லவோ நம் இருவரையும் ஒன்று சேர்த்தார்" என்றான் பிரத்தியும்னன்.

இருவரும் அங்கேயே காந்தர்வ முறைப்படி மணந்து கொண்டனர். அந்தச் சமயத்தில் சும்பன் அங்கே வந்து  சேர்ந்தான். புதுமணத் தம்பதிகளாக நிற்கும் அவர்களைக் கண்டதும் அவன் உடல் கோபத்தால் துடித்தது.

அடே, என்ன காரியம் செய்தாய்?" என்று கர்ஜித்தபடி அவர்களை நெருங்கினான். பிரத்தியும்னன் சரமாரியாக அம்புகளை விடுத்துச் சும்பனை நெருங்க முடியாது செய்தான். அசுரனின் உள்ளம்  ஆத்திரத்தால் குமுறியது. நாகாஸ்திரத்தை விட்டு அவர்கள்  இருவரையும் ஒன்றாகப் பிணைத்துக் கட்டினான்.

அடே, சிங்கத்தின் குகையிலே சுண்டெலிக்கு அவ்வளவு  துணிவா? உன்னை என்ன செய்கிறேன் பார்!" என்று  பல்லைக் கடித்தபடி அவர்களைக் கொண்டு போய் விந்திய மலையில் ஓரிடத்தில் காவலில் வைத்தான். பின்னர் சில நாட்களுக்கெல்லாம் இமயமலைச் சாரலில் விதஸ்தா நதி  தீரத்தில் வஜ்ர பஞ்சரம் கட்டி அதில் காவலில் வைத்தான்.

பிரத்தியும்னன் பார்வதியைக் குறித்துப் பலவிதமாக வேண்டினான். அவள் உள்ளம் மகிழக் கண்ணீர் விட்டுக் கதறினான். 

தேவி அவனைக் கைவிடவில்லை. நாகணவாய்ப் பறவையாக மாறி பறந்து சென்று அவர்களை அடைந்தாள். அவர்களைப் பிணைத்திருந்த நாகாஸ்திரத்திலிருந்து விடுவித்தாள்.

காதலர் இருவரும் தங்களைப் பிணைத்திருந்த நாகாஸ்திரத்தின் கட்டுகளிலிருந்து விடுபட்டதும் தேவியைப் பணிந்து வணங்கினர். பார்வதி அவர்களுக்குத் தமது  சௌந்தர்ய ரூபத்தைக் காட்டி அருளினாள்.

இதற்குள் விஷயம் அறிந்து சும்பர், நிசும்பர் இருவரும் அசுரப்படைகளுடன் ஓடி வந்தனர். சௌந்தர்ய தேவதையாகப் பார்வதியைக் கண்டபோது அவர்கள் தாங்கள் வந்த காரியத்தை மறந்தனர். தேவியைத் தாங்களே அடைய எண்ணம் கொண்டு தங்களை மணக்குமாறு வேண்டினர்.
அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபட பார்வதி ஓர் உபாயம் செய்தாள்.

உங்கள் இருவருடைய கோரிக்கையையும் எப்படி நிறைவேற்ற முடியும்? நீங்களே உங்களுக்குள் ஒரு முடிவுக்கு வாருங்கள். உங்கள் இருவரில் யார் பலவானோ அவனுடைய கோரிக்கையை நிறைவேற்றலாம். நீங்களே உங்களில் பலவான் யார் என்பதைக் கண்டு சொல்லுங்கள்" என்றாள்.

சும்பன் சகோதரனைப் பார்த்து, அடே உன்னைவிடப் பலவான் நான். பேசாமல் இங்கிருந்து போய்விடு. எனக்குப் போட்டியாக வராதே" என்றான்.

நிசும்பனோ தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு ஆத்திரம் கொண்டவனாய், உன்னைவிட நான் எத்தனையோ மடங்கு பலசாலி,தெரியுமா? "என்றான்.

 இல்லை...! " என்று கர்ஜித்தான் சும்பன்.

பார்த்து விடுவோம்?" என்று அவன்மீது பாய்ந்தான் நிசும்பன்.

அடுத்த க்ஷணம் இருவரும் ஒருவரையொருவர் மூர்க்கத்தோடு தாக்கிக் கொண்டனர். மலைச்சிகரங்களைப் பெயர்த்து எடுத்து அதனால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். முடிவில் இருவருமே அழிந்தனர்.

பார்வதி காதலர்களுக்கு அனுக்கிரகம் செய்து அவர்களைத் துவாரகையில் கொண்டு போய்ச் சேர்த்தாள்.


இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை