Recent Posts

சிவ புராணம் - உயிர்த் தியாகம் செய்த வேடுவன்

சிவ புராணம்

உயிர்த் தியாகம் செய்த வேடுவன்



அற்புதம் என்னும் ஒரு மலை இருக்கிறது. அதில் ஆகுகன் என்னும் வேடன் தன் மனைவி ஆகுதி என்பவளுடன் வசித்து வந்தான். பக்கத்திலே சிவாலயம் ஒன்றிருந்தது. நாள்தோறும் வேடனும் அவன் மனைவியும் சிவாலயம் சென்று பகவானைத் தரிசித்து அவரை வழிபட்டு வருவது வழக்கம். ஆகுகன்  ஆலயத்தினுள் உள்ள சிவலிங்கத்துக்கு அர்ச்சனை முதலியன செய்கையில் அவன் மனைவியோ ஆலயத்தின் வெளியில் இருந்த ஒரு லிங்கத்தை அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தாள்.

ஒருநாள் மாலைப் பொழுதில் அந்தப் பக்கமாக ஜடாதரர் என்ற சிவயோகி வந்தார். அங்கே சிவாலயம் ஒன்றிருப்பதைக் கண்டு சற்று நின்றார். அவரைக் கண்ட ஆகுதி அருகில் வந்து வணங்கி, சுவாமி, தாங்கள் எங்கு போக வேண்டும்? இரவு நெருங்கிவிட்டது. தாங்கள் இன்றிரவு இங்கே தங்கிச் செல்லலாம்" என்றாள்.

அவள் பெண்ணாகையால் அவளோடு பேசுவது கூடாது எனப் பேசாமலிருந்தார். அப்போது சிவாலயத்தினுள்ளிருந்து ஆகுகன் வெளிப்பட்டான். யோகியைப் பார்த்ததும் அவரை நெருங்கி, சுவாமி, தாங்கள் யார்? தங்களுக்கு என்ன வேண்டும்? தெரிவித்தால் நான் ஏற்பாடு செய்கிறேன். தங்களைப் பார்த்தால் தெய்வம் போலத் தோன்றுகிறீர்கள்" என்றான்.

அப்பனே, நானோர் யோகி. பிரயாணப்பட்டு வரும்போது இங்கே வந்து சேர்ந்தேன். வனாந்திரமாயிருக்கும் இவ்விடத்தில் இரவை எப்படிக் கழிப்பது என்று யோசிக்கிறேன். இரவு தங்க இடம் கொடுத்தால், அதுவே போதும்" என்றார் யோகி.

சுவாமி, எனக்குப் பரம சந்தோஷம். என்னுடைய குடிலுக்கு வாருங்கள்" என்று மகிழ்ச்சியோடு அவரைத் தன் குடிசைக்கு அழைத்துச் சென்றான் ஆகுகன்.

இரவு யோகியார் குடிசையினுள் இருக்கட்டுமென்றும், அவர்கள் இருவரும் வெளியே இருக்கலாமென்றும் ஆகுகன் மனைவியிடம் தெரிவித்தபோது யோகி அதை ஆக்ஷேபித்தார். பெண்ணை வெளியே விட்டுவிட்டுத் தான் உள்ளிருக்க அவர் மறுத்துவிட்டார். அதன்மீது யோகியும், ஆகுகியும் குடிசையினுள் இருக்க வெளியே ஆகுகன் வில்லுடன் காவல் இருந்தான். நடு இரவில் அந்த வழியாக வந்த புலி ஒன்று வேடனை அடித்துக் கொன்று விட்டது.

விடிந்ததும் வெளியே வந்த யோகியும் வேடனின் மனைவியும் ஆகுகனுக்கு நேர்ந்திருந்த கதியைக் கண்டு திடுக்கிட்டனர். யோகி பெரிதும் விசனமுற்றார். தன் பொருட்டு வெளியே இருக்க நேர்ந்ததால்தான் வேடன் உயிர் இழந்தான் என்று துக்கித்தார்.

ஆகுகி அவரை நமஸ்கரித்து சுவாமி, தாங்கள் துக்கப்பட வேண்டாம். அந்தண யோகி ஒருவருக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்து நற்கதியை அடைந்திருக்கிறார் என் கணவர்.  அதைக் குறித்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். என் கணவரின் உடலோடு உடன்கட்டை ஏற அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினாள்.

யோகி வருத்தத்தோடு தீமுட்டி வேடுவச்சி உடன்கட்டை ஏறுவதற்கு வேண்டிய காரியங்களைக் கவனித்தார். ‘திகு திகு’ வென்று எரியும் தீயிலே கணவனின் உடலைக் கிடத்தி அக்கினியை மும்முறை வலம் வந்து பகவானை மனத்தில் தியானித்து தீயினிடைப் புக எத்தனித்தாள். அப்போது சிவபெருமான் அங்கே பிரத்தியக்ஷமாகி ஆகுகியின் கையைப் பிடித்து நிறுத்தினார்.

ஆகுதி, நீ விதர்ப்ப தேசத்தரசன் வீரராஜனுக்குப் புத்திரியாக தமயந்தி என்ற பெயரில் பிறப்பாய். உன் கணவன் நிஷத ராஜன் வீரசேன மகாராஜன் குமாரனாக நளன் என்ற பெயரோடு பிறப்பான். இந்த ஜன்மத்தில் உங்கள் பிரிவுக்குக் காரணமான இந்த யோகி, அன்னப் பறவையாகப் பிறந்து உங்கள் இருவரிடையே திருமணம் நிறைவேறத் தூது செல்வார்" என்று அருளி மறைந்தார் சிவபெருமான்.

பின்னர், ஆகுதி அளவில்லா ஆனந்தத்துடன் உடன்கட்டை ஏறினாள். சிவபெருமான் அவர்களுக்கு அருளிய கோலத்தோடு அசலேசுவரர் என்ற பெயரோடு அங்கே விளங்கி வருகிறார்.


இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை