Recent Posts

சிவ புராணம் - சிவன் சந்திரசேகரராதல்

சிவ புராணம்

சிவன் சந்திரசேகரராதல்



தக்ஷனின் யாக குண்டத்தில் தேவி தன் உடலை விட்டு விட்டுப் பர்வதராஜனின் குமாரியாக அவதரித்தாள் என்பதைக் கேட்டதும் ஈசன் பெரும் சீற்றம் கொண்டார். தம்மை அவமதித்த தக்ஷனைக் கொன்று அவன் யாகத்தை அழிக்க வீரபத்திரரைத் தோற்றுவித்து அனுப்பி வைத்த பின்னர் அவர், பித்துப் பிடித்தாற் போல் வனாந்திரங்களிலும் மலைச்சாரல்களிலுமாகத் திரிந்து கொண்டிருந்தார். ஸதி தேவியைப் பிரிய நேர்ந்த வருத்தம் அவர் உள்ளத்தைத் தகித்தது. அவரிடமிருந்து வெளிப்பட்ட அந்த உஷ்ணம், சகல லோகங்களையும் தகிக்கச் செய்தது. அதன் காரணத்தை அறியாத தேவர்கள் வெப்பம் தாங்கமாட்டாதவர்களாய்த் தவித்தனர். அனைவரும் பிரம்ம தேவனைச் சரண் அடைந்தனர்.

பிரபோ, எங்கும் ஒரே வெப்பமாக இருக்கிறதே. காரணம் என்னவென்று தெரியவில்லை. எங்களால் அதன் உஷ்ணத்தைத் தாங்க முடியவில்லை. தாங்கள் தான் வெப்பத்தைத் தணித்து எங்களை ரக்ஷிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தனர்.

தேவர்களே, இந்தத் தாங்க முடியாத வெப்பத்துக்குக் காரணம் கைலாசநாதனே. தாக்ஷாயணியைப் பிரிந்த வேதனையால் மனம் போனபடித் திரிந்து வருகிறார். அவர் உள்ளம் பிரிவாற்றாமையால் இப்படி உஷ்ணத்தைக் கொட்டுகிறது. 

என்னால் செய்யக்கூடியது ஏதுமில்லை. நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்திரனை வேண்டி அவர் சிரசிலே என்றும் தங்கச் செய்தால், அதன் குளிர்ச்சியால் அவர் உள்ளம் சாந்தமடையும்; நம்மைத் தகித்து வரும் உஷ்ணமும் குறையும்" என்றார் பிரம்மதேவன்.

நான்முகனின் வார்த்தைப்படி தேவர்கள் சந்திரனைப் பிரார்த்தித்தனர். பகவானின் சிரசிலே தங்கி அவர் உஷ்ணத்தை மட்டுப்படுத்திக் குளிர்ச்சியுறச் செய்யுமாறு வேண்டினர். சந்திரன் அவர்கள் கோரிக்கைக்குச் சம்மதித்தான்.

பின்னர் எல்லோருமாகப் பகவானை தேடிச் சென்றார். அவரைக் கண்டதும் பலவித ஸ்தோத்திரங்களால் அவரைத் துதித்தனர். பிறகு அவரைப் பணிந்து,

பிரபோ, சர்வேச்வரா, தாங்கள் எங்கள் கோரிக்கைக்கு மனம் களித்து சந்திரனைத் தங்கள் சிரசிலே தரித்துக் கொள்ள வேண்டும். லோக க்ஷேமார்த்தம், எங்கள் கோரிக்கையை மறுக்கக் கூடாது" என்று கோரினர்.

ஈசனும் அவர்கள் வார்த்தைகளால் மகிழ்ச்சி அடைந்து, சந்திரனைத் தமது சிரசிலே தரித்துக் கொண்டார். அப்போதே அவரை வாட்டி வந்த வேதனையின் உஷ்ணம் மட்டுப்பட்டது. தேவர்கள் திருப்தி அடைந்தவர்களாய்ப் பகவானை, ’சந்திரசேகரன் என்று கொண்டாடினர்.


இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை