Recent Posts

திருவிளையாடல் புராணம் - உக்கிர பாண்டியனுக்கு வளையம், வேல், சண்டாயுதம் கொடுத்தல்


திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள் 

உக்கிர பாண்டியனுக்கு வளையம், வேல், சண்டாயுதம் கொடுத்தல்

 


சிவபெருமான் கனவில் கூறிய ஆணையின் பேரில் சோம சேகரன் வாயு வேகமாக புதல்வியுடன் மணம் பேச மதுரை புறப்பட்டார்.

ஈசனான சுந்தரப்பாண்டியன் மந்திரியிடம் அமைச்சரே! மணவூர் அரசர் சோமசேகரர் தன் அருந்தவப் புதல்வி காந்திமதியை அழைத்துக் கொண்டு மணம்பேச மதுரை வந்து கொண்டிருக்கிறார். எல்லையில் சென்று எதிர் கொண்டு அழைத்து வாருங்கள். அதோடு காந்திமதி, உக்கிரனுக்குப் பொருத்தமானவள்தானா என முப்பத்திரண்டு சாமுத்திரிகா லக்ஷணமும் அறிந்து வாருங்கள் என்றார்.

முப்பத்திரண்டு லக்ஷணங்கள் எவை எவை? என அமைச்சர் வினவ தலைமுடி, சிரசு, நெற்றி, கண்கள், மூக்கு, செவி, கன்னம், உதடு, பற்கள், நாக்கு, மோவாய், கழுத்து, மார்பு, புஜங்கள், உள்ளங்கை, விரல்கள், நகங்கள், தனங்கள், வயிறு, தொப்புள், புட்டம், தொடை, முழங்கால், கணைக்கால், கணுக்கால், பாதம், கால் விரல்கள், கால்நகங்கள், உள்ளங்கால், வாசனை, குரல், நிறம்.

’இவற்றை நான் எப்படிப் பார்க்கமுடியும், என்று அமைச்சர் திணற, ’சரி நீங்கள் அரசனை அழைத்து வந்து நல்ல இடத்தில் தங்கவையுங்கள் என அமைச்சரை அனுப்பிவிட்டு, பிரகஸ்பதியை நினைத்தார் ஈசன்.

பிரகஸ்பதி உடனே அங்கு வர அவரிடம் பெண்ணாக மாறி காந்திமதியின் இலக்கணங்களை அறிந்து வாருங்கள்" என்றார் ஈசன். அதற்குள் அமைச்சர் மணவூர் அரசனையும், அவர் மகளையும், வசதியான இடத்தில் தங்க வைத்து விட்டு வந்தார்.

காந்திமதி அரண்மனைக்குள் இருந்த பொய்கையில் நீராடச் சென்றாள்.  அங்கே பிரகஸ்பதி உருமாறி ஒரு பெண் வடிவில் காத்திருந்தார்.

 காந்திமதி ஆடை உடுத்திக்கொண்டு உணவு உண்டு, தூங்கிய பிறகு ஈசனைக் காண வந்தார் பிரகஸ்பதி.

எல்லாமறிந்தவனே! எங்கும் நிறைந்தவனே! உமது ஆணைப்படி வைத்தியன் உடலைப் பரிசோதிப்பது போல் நங்கையை எந்த விகல்பமுமின்றி அறிந்து வந்தேன்.

காந்திமதியின் குழல்கள் நீண்ட கருமேகம்போல் கறுத்து, ஆனால் மிருதுவாய், நுனியில் இரண்டாய் பிளக்காமல் மெல்லி யதாய் கொஞ்சம் வளைவுகளோடு இருக்கின்றன.  (நுனிப் பிரிவு கணவனை அடிக்கடி பிரிந்திருக்கும் இயல்பைக் குறிக்கும்) இப்படித் தலைமுடி இருப்பவள் எங்கு சென்றாலும் செல்வவதியாய் புருஷனுக்கு பாக்கியம் சேர்ப்பவளாய் இருப்பாள்.

யானையின் மத்தகம் போல் தலை உருண்டும், உயர்ந்தும் சீராகவும் இருக்கின்றது.  அது கணவனுக்கு நீண்ட ஆயுளையும், அதிகாரம், செல்வாக்கு, புகழ் பெருமையை சேர்க்கக் கூடியது. 

பாதி சந்திரன் போல், மேரு பள்ளமற்று மூன்று அங்குல அகலத்தில் நரம்புகள் புடைத்தலில்லாமல், ரோமம் இல்லாமல் இருக்கும் நெற்றி பூரண ஆரோக்கியத்தையும், பாக்கியத்தையும் தரக்கூடியதாய் இருக்கின்றன.

பசுவின் பால் போன்ற வெண்மை, குந்துமணியின் கருப்பைப் போன்ற கருவிழிகள், கடைசியில் துளி சிவப்பு அடர்த்தியான கரு இமைமுடிகள், தீர்க்கமான பார்வை, கணவனை அன்பால் வசியப்படுத்திவிடும் கண்கள்.

மூக்குத்தியால் மூக்குக்கு அழகா, எள்ளுப்பூ நாசியில் அமர்ந்தி ருப்பதால் மூக்குத்தி பெருமையுறுகிறதா என்பது தீர்க்கமுடியாத சர்ச்சை. நதியின் சுழல்போல் சுழன்று, நீண்டிருக்கும் செவிகள்.  உருண்டு, வட்டமான லேசாகச் சிவந்த கன்னங்கள்.

 கீழ் உதடு சிவந்து, நடுவில் ஒரு ரேகையுடன் காணப்படு வதால் இவள் கணவனக்குப் பிரியமானவள்.

மேல்வரிசையும், கீழ்வரிசையும் ஒரே சீராக உள்ள கொஞ்சம் நிமிர்ந்த பால்போன்ற பற்கள்.  மிருதுவான சிவந்த நாக்கையும், மரத்திலிருக்கும் மந்திக்கு அழகு காட்டும் போது கண்டேன். இரண்டு அங்குல நீளத்தில் உருண்டு பருத் திருக்கும் மோவாய், திரண்ட, வட்டமான நான்கு அங்குலமுள்ள கழுத்து. அதிலே யுள்ள மூன்று ரேகைகள் அவள் கணவன் பேரரசனாவான் என்று சொல்கிறது.

மார்பு  பதினெட்டு அங்குலமுடையதாய் நிமிர்ந்து சதைப் பற்றுடன் நரம்புகள் தெரியாமல், ரோமமின்றி விளங்குகின்றது.  எலும்புக் கட்டுகள் தோன்றாத குற்றமற்ற, திரண்ட புஜங்கள், மிருதுவானதாக, நடுவில் உயர்ந்து, சிவப்பாக சிறந்த ரேகைகளுடன், ஆனால் குழப்பமான ரேகைகளற்ற உள்ளங்கை.  நல்ல கணுக் களுடன் கூடிய உருண்டு, நீண்டு ஆனால் போகப்போக மெலிந்த கைவிரல்கள்.  ஒத்த, உயர்ந்த, சிவந்த, வட்டமான நகங்கள், வட்டமான கட்டுக் குலையாக திரண்ட ஸ்தனங்கள், நரம்புகள் தெரியாத, தழும்புகளற்ற மெல்லிய சிற்றிடை, ஆழமான வலமாகச் சுழிந்த தொப்புள், ஆமை முதுகு, யானை மத்தகம் போன்ற பின்தட்டுக்கள், அடிவாழை, யானைத்துதிக்கை போன்ற ரோமங்களற்ற, நரம்புகள் தெரியாத தொடைகள், உருண்டு சதைக்குள் மறைந்த முழங்கால்கள், ரோமமில்லாததும், ஒத்ததும், வரவர வட்டமானதும், நரம்புகள் தெரியாததுமான கணைக்கால்கள்.

இந்த இலக்கணங்கள் அரசனுக்கு மனைவியாவாள் என்று சொல்கிறது. அழகான, மறைந்த, நரம்பு வெளிப்படாத வட்டமான கணுக்கால்கள், மேற்பாகம் சதைப்பற்றுடன், நரம்பு தெரியாமல் நிமிர்ந்து ஆமையோடு போல் இருக்கிறது.  தடித்து, உருண்டு நிமிர்ந்திருக்கும் கால்விரல்களில் மாசற்ற, அழகான நகங்கள், உள்ளங்கால் இரண்டும் வியர்வையின்றி சிவந்து மென்மை யாயிருக்கிறது.

தாமரை, செண்பகம், மகிழம்பூ, வாசனை அவள் மேனியில் வீசுகின்றது.  பேசினால் வீணையின் நாதமும், குயிலின் கீதமும் தோற்றுவிடும்.  நிறமோ பொன்னை உருக்கி விட்டாற் போல் இருக்கிறது. ஆடையும், ஆபரணங்களும் அவள் தேர்ந்தெடுத்து அணிந்தமுறை அவளது கூர்மதியை எடுத்துக்காட்டுகின்றது.  நிலம் அதிராமல் அவள் நடந்த நடை அவள் நிதானத்தை எடுத்துக் காட்டுகின்றது. அவள் சிரிப்பும், பேச்சும், சாப்பிட்ட முறையும்  நளினமானவள் என்று உணர்த்துகிறது.  கொட்டாவியைக் கூட அழகாய் விடுகிறாள்.  தூங்கும்போதும் இவள் கற்புள்ள மங்கை என்று ஆடை பறைசாற்றுகிறது.  அவளது இரக்க மனதை பூனை துரத்தி வந்த அணிலைக் காப்பாற்றியதிலிருந்து அறிந்தேன்.  தந்தையிடம் பாசமுள்ளவள்.  கணவனிடமும், பெற்ற குழந்தை களிடமும் பாசமாக இருப்பாள். சந்திரனைப் போன்ற குளிர்ந்த பிரகாசமுடையவள் என்பதாலேயே சோமசேகர மன்னன் அவளுக்கு காந்திமதி எனப்பெயரிட்டிருக்கிறான்.  பொல்லாத அவலட்சணங்கள் ஏதுமில்லை அப்பெண்ணிற்கு தாராளமாய் உக்கிரனுக்கு மணமுடிக்கலாம்" என்று கூறி வணங்கி நின்றார் பிரகஸ்பதி.

அந்த நேரம் சோமசேகரன் ஏராளமான பரிசுகளுடன் அங்கு வந்தான். சோமசுந்தர மூர்த்தியையும், பிரகஸ்பதி யையும் வணங்கி, தன் கனவைக் கூறி, தன் புதல்வி காந்தி மதியை மருமகளாக ஏற்றுக் கொள்ளவேண்டும் எனப் பணிவுடன் விண்ணப்பித்தான்.

ஈசன் குறும்பாக பிரகஸ்பதியைப் பார்க்க, ஈசனாரின் குறிப்பறிந்த குரு சோமசேகர மன்னா, முதலில் ஆசனத்தில் உட்காரும்.  உக்கிர பாண்டியன் முருகனின் அவதாரம்.  அவனுக்குப் பெயர் சூட்டும்போது நான் வந்தேன். முப்பத்திரண்டு லக்ஷணங்கள் பொருந்திய இந்தக் குழந்தை வளர்ந்து வாலிபனானால் எப்படி இருப்பான் என அதிசயித்தேன்.  உக்கிரன் அப்படியே வளர்ந்தி ருக்கிறான்.  உமது அதிர்ஷ்டம் ஈசனார் உமக்குக் கனவில் வந்து வரமளித்திருக்கிறார்.  ராஜாதி ராஜர்களெல்லாம் நமக்கு மருமகனா கக்கிடைக்க மாட்டாரா என்று தவம் கிடக்கிறார்கள்" என்று சொல்ல சூரியவமிசத்தரசன் சோம சேகரன் முப்பத்திரண்டு லக்ஷணங்கள் என்னென்ன?" எனக்கேட்டான்.

பிரகஸ்பதி நீண்டவை ஐந்து; குறுகியவை நான்கு, மெல்லியவை ஐந்து, உயர்ந்தவை ஆறு, சிவந்தவை ஏழு, ஆழமானவை மூன்று, பரந்தவை இரண்டு" என்று கூற, சோமசேகரன் சற்று விரிவாகச் சொல்லவேண்டும்" என்று கேட்க, பிரகஸ்பதி இரண்டு புஜங்களும், விழிகளின் பரப்பும், நாடியும், தனங்களுக்கு மத்தியிலிருக்கும் இடமும் ஆக ஐந்து இடங்கள் நீண்டிருக்க வேண்டும்.  நா, குறி, புட்டம், கணைக்கால் இவை நான்கும் குறுகி இருந்தால் கபடமில்லாத நெஞ்சும், கூரிய புத்தி படைத்தவனாகவும் இருப்பான்.  விரல்களின் கணுக்கள், தலைமுடி, பல், நகம், தோல் இவை ஐந்தும் மெல்லியதாய் இருந்தால் தீர்க்காயுள் உண்டு.  பெரும் பாக்கியவான்.  கட்கம், வயிறு, விரல்கள், புஜம், மூக்கு, மார்பு இவை ஆறும் நீண்டிருந்தால் பெரும் செல்வந்தனாயிருப்பான்.  உள்ளங்கால், உள்ளங்கை, கடைக் கண், நகம், கன்னம், நாக்கு, கீழுதடு இவை ஏழும் சிவந்திருந்தால் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும்.

குரல், பலம், தொப்புள் இவை ஆழமானதாய் இருந்தால் வீரனாய்த் திகழ்வான்.  வெற்றிகள் அவனை வந்தடையும்.  அதிகார மும், கீர்த்தியும், செல்வமும் பெருகும்.  சிரமும், நெற்றியும் பரந்திருந் தால் சாஸ்திர வல்லவனாக, இரக்கமும், பெருந்தன்மையும், தாராள குணமும் படைத்தவனாக விளங்கு வான்.  இந்த முப்பத் திரண்டு லக்ஷணங்களும் பொருந்தியவன் உக்கிர பாண்டியன்.  அவன் உங்களது மருமகனாவது உங்களில் பூர்வ ஜன்ம புண்ணி யம்" என்றார்.

பின்னர் சுந்தரபாண்டியனும், சூரிய வமிசத்தரசரான சோமசேகரும் மணம் பேசி நிச்சயித்தனர்.  சிற்றரசருக் கெல்லாம் அழைப்பு அனுப்பப்பட்டு அனைவரும் வந்து குழுமினர்.  மீனாக்ஷி கல்யாணம் போன்ற மதுரை மீண்டும் நெருக்கடியாயிருந்தது.

நன்னாளில், நல்ல முகூர்த்தத்தில் உக்கிர பாண்டியன், காந்திமதியின் கழுத்தில் மங்கல நாண் பூட்டி பிரம்மனும், திருமாலும், இந்திரனும், தேவாதி தேவர்களும் பார்த்திருக்க, முனிவர்களையும், பிரகஸ்பதியையும் கொண்டு விரதமனைத்தையும் முடித்துவிட்டு யானை மேல் ஊர்வலம் வந்தான்.

பின் கங்கை நீரால் உக்கிரனுக்கு அபிஷேகம் செய்த சோம சுந்தரப் பெருமான் வெண்குடையும், சாமரங்களும், அரசடையாளங் களும் கொடுத்தார்.  பின் வளையம், வேல் சண்டாயுதமெனும் மூன்று ஆயுதங்களைக் கொடுத்தார்.  இம்மூன்றும் உனக்கு சமயத்தில் பயன்படும்" என்று சொல்லி மகனை வாழ்த்தி பிராட்டியுடன் லிங்கத்தில் மறைந்து விட்டார்.

இந்தப் 12-ஆம் திருவிளையாடலைக் கேட்பவருக்கும், படிப்பவ ருக்கும் சத்துருக்கள் அழிவார்கள்.  திருமணம் கைகூடும்.  கடல் தொல்லை நீங்கும்.  கல்வியில் மேன்மை அடைவார்கள்.  நிலம், வீடு சொத்துக்கள் சேரும்.




    இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.




   ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை