Recent Posts

திருவிளையாடல் புராணம் - வேதப் பொருளுரைத்தல்

திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

வேதப் பொருளுரைத்தல்



கிருதயுகத் தொடக்கத்தில் காட்டில் முனிவர்கள் ஒன்று கூடி இலக்கணத்தோடு வேதத்தைக் கற்றிருக்கிறோமே அன்றி அவற்றின் பொருளை விளக்க குரு கிடைக்க வில்லையே!" என வருந்தினர்.

அப்போது அங்கு வந்த அரபத்தர் என்ற ரிஷி அவர்களின் முகவாட்டத்தின் காரணத்தை அறிந்து நீங்கள் ஆலவாய் சென்று தக்ஷிணாமூர்த்தியைக் குறித்து தவம் செய்தால் உங்கள் விருப்பம்.  நிறைவேறும்" என்று கூறினார்.

அவர்களும் அப்படியே ஆலவாய் சென்று அரபத்தர் கூறியபடி கடுந்தவம் செய்தனர். தவம் என்றால் எப்படி? சும்மா கண்ணை மூடிக்கொண்டு சிவசிவ என்று ஜபிப்பதா? அல்ல.. முக்காலமும் ஜபம், பூஜை, தர்ப்பணம், ஹோமம், அன்னதானம் இப்படி, ஒருநாளா, ஒருமாதமா.... ஒருவருஷம் நடந்தது, இதை உணவின்றி, நித்திரையின்றி ஒரே மனதாகச் செய்தனர்.  மெய்வருத்தம் பாராமல், பசி கருதாமல் கண் துஞ்சாமல் கார்த்திகைப் பௌர்ணமி முதல் அடுத்த கார்த்திகைப் பௌர்ணமிவரை தவமிருந்தனர்.

தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான் பதினாறு வயது அந்தண வாலிபன் கோலத்தில் உடலெல்லாம் திருநீறு பூசி, உருத்தி ராட்சங்கள் அணிந்து, காதிலே குண்டலம், தலைப் பாகை, உயர்ந்த குரலில் சுரம் தவறாமல் வேதமந்திரங்களைச் சொல்லிக் கொண்டு முகத்தில் இளநகையுடன் முனிவர்களுக்குக் காட்சி அளித்தார்.  முனிவர்கள் இறைவன் திருவடியில் விழுந்து வணங்கினர்.  ’இறைவன் நீங்கள் வேண்டுவது என்ன?  என்று கேட்க, ஈசனே, எங்களுக்கும், உலகத்திற்கும் நன்மை ஏற்பட எல்லா வேதங்களின் பொருளையும் எங்களுக்கு விளங்கச் சொல்லவேண்டும்" எனப் பணிவுடன் வேண்டி நின்றனர் ரிஷிகள். சிவபெருமான் ஆலவாய் தலத்துக்குள் செல்ல, முனிவர்கள் பின் தொடர்ந்தனர்.  சுந்தரேச லிங்கம் இருக்கும் இடத்திற்கு நேர், எதிரே சிவபெருமான் அமர, முனிவர்கள் சூழ அமர்ந்தனர். வேதப் பொருளை கேட்பவர்க்கு துயர் யாவும் நீங்கும்.  

ஆதியில் வேதம் ஒன்றே; அதன் பொருளும் ஒன்றே; பின்னால் கிளைகளின் பிரிவினால் வேதங்களும், அவற்றின் பொருள்களும் வேறுபட்டன.  ஈசானன் பிரம்மனைப் படைத்து தன்னிடமிருந்து தோன்றிய எல்லா வேதங்களையும் அவரிடம் ஒப்படைத்தார்.  

ஜோதிர்மயமான இந்த லிங்கத்திற்கு முதலும் முடிவும் கிடையாது. அதற்கு பிரம்மம் என்று பெயர்.  படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலுக்காக பிரம்மம் மூன்றாகப் பிரிந்து பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் எனப் பெயர் பெற்றது. ஆத்ம தத்துவத்திலிருந்து ’அ என்ற எழுத்தும், வித்தியா தத்துவத்திலிருந்து ’உ என்ற எழுத்தும், சிவதத்துவத்திலிருந்து ’ம் என்னும் எழுத்தும், ஸர்வ தத்துவத்தி லிருந்து பிந்துவுடன்  கூடிய நாதமும் எழுந்து பிரணவம் என்னும் ’ஓம் என்ற ஒலி அமைந்திருக்கிறது.  பிரிந்த பிரணவத்திலிருந்து பூ; புவ; ஸ்வ என்ற பிரிந்த வியாகிக்ருதிகளும் சேர்ந்த பிரணவத்தி லிருந்து பூர்புவஸ்சுவ என்ற சேர்ந்த வியாக்ருதிகளும் சிவனது ஆணையால் தோன்றின.  மறுபடியும் அவற்றினின்று நினைத்ததை தரக் கூடியதும் வேதங்களை ஈன்ற தாயுமான காயத்ரி, சேர்ந்த உருவிலும், பிரிந்த உருவிலும் தோன்றிற்று.  காயத்ரியிலிருந்து ருக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் உண்டாயின. அவற்றி னின்றும் பல பிரிவுகளாய் வேதங்கள் விரிந்தன.

பிரணவம் முதலான மகாமந்திரங்களும், அகரம் முதலிய எழுத்துக்களும், காமிகம் முதலான ஆகமங்களும் பிநாக பாணி யுடைய உச்ச முகத்திலிருந்தும், இருபத்தோரு சாகைகளுடைய ருக்வேதம், தத்புருஷ முகத்தினின்றும், நூற்று ஒரு பிரிவுகளுடைய யஜுர்வேதம், அகோர முகத்தினின்றும், ஆயிரம் பிரிவுகளுடைய சாமவேதம், வாமதேவ முகத்தின்றும், ஒன்பது பிரிவுகளுடைய அதர்வண வேதம் சத்தியோஜாத முகத்தினின்றும் வந்தன. நான்கு வேதங்களுடன் வருணங்களும், தர்மங்களும், வேள்வி விதிகளும் இறைவனிடமிருந்து தோன்றின.



வேதங்களைக் கருமகாண்டம், ஞானகாண்டம் என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஞானகாண்டம் உண்மை, அறிவு, பகவானின் அருள் வடிவத்தை விவரிக்கின்றன.  கருமகாண்டம் பூஜை வகைகள், ஆசிரம விதிகளை விவரிக்கின்றன. அக்கினி ஹோத்திரம் முதல் அசுவமேதம் வரை எல்லா யாகங்கள், நித்திய, நைமித்திக, காமிய கர்மாக்கள் எல்லாம் ஈசுவரனையே சேரும்.

சிவபூஜை செய்வதால் வேதங்களில் கூறப்பட்ட கருமங்கள் எல்லாம் செய்த பலன் கிடைக்கும். வேதாந்த அறிவால் பெறப்படும் பயனை, ஆலவாய் லிங்கத்தை வணங்கி வழிபடுதலால் அடையலாம்.

கருமங்களை ஒழுங்காக அனுஷ்டித்தால் உள்ளத் தூய்மை உண்டாகும். மனம் தூய்மையானால் அமைதி, ஒழுக்கம், அழுக் காறின்மை, வைராக்கியம் முதலிய  நற்குணங்கள் ஏற்படும்.  மனம் கட்டுப்பட்டு நிற்கும்.  திருநீறும், உருத்திராட்சமும் கெட்ட சக்திகளிலிருந்து மானிடரைக் காப்பாற்றும் வல்லமை கொண்டது. குருவைப் பேணுதல் சிறந்த கவசமாகும்.

அறங்களில் ஸ்மிருதிகளில் கூறப்பட்டவை சிறந்தவை.  அதிலும் சுருதிகளில் கூறப்பட்டவை மேலானவை.  சுருதி, தர்மம், அதர்மம் என்று பாகுபாடு செய்கிறது.

சுகம் அனைத்தும் சிவனே என்ற அறிவு இன்பத்தையும், மோட்சத்தையும் அளிக்கும் என்று கூறிய தக்ஷிணாமூர்த்தி கண்வர், சாண்டில்யர், கர்க்கர் போன்ற ரிஷிகளின் நெஞ்சைத் தொட்டு ’வேதத்தின் பொருள் தெளிவாக விளங்கட்டும் என்ற கூறி லிங்கத்தில் மறைந்தார்.

உடனே ரிஷிகளுக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் வேதத் தின் பொருள் புரிபடவும் மகிழ்ந்து சோமசுந்தர மூர்த்தியை பல விதத்திலும் போற்றிப் புகழ்ந்தனர். லிங்கங்களில் தானே தோன்றிய சுயம்புலிங்கம் சிறந்தது. அதுவே வேதங்களின் காரணம், பொருள்" என்று தொடங்கி பிரணவத்தின் பொருளுரைத்த இந்தப் 16-ஆம் திருவிளையாடலைப் பக்தியுடன் படிப்பவரும், கேட்பவரும் நன்னெ றியில் ஒழுகுவர்.  பிதுர்க்கள் மோட்சமடைவர்.  எல்லாச் செல்வங்களும், அஷ்டபோக பாக்கியங்களும், பதினாறு பேறுகளும் அடை வார்கள்.  அறுபத்துநான்கு கலைகளும் கைவரும்.






இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



giri facebook
 giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...



கருத்துகள் இல்லை