Recent Posts

திருவிளையாடல் புராணம் - நவரத்தினங்கள் விற்றல்


திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்


நவரத்தினங்கள் விற்றல்



உக்கிர  பாண்டியனின் புதல்வனான வீரபாண்டியனுக்கு போக மங்கையரிடம் பல  தீய புதல்வர்கள் இருந்தனர்.  முறைப்படி பட்டமகிஷியான ராணிக்குப் பிள்ளைச் செல்வமே இல்லை.  அதனால் அரசன் அஷ்டமி நோன்பு, சோமவார விரதம், சதுர்த்தி விரதம் இப்படிப் பல விரதங்கள், பூஜைகள் செய்ததின் பலனாக பட்டத்து ராணிக்கு ஒரு நல்லமகன் பிறந்தான்.
அவனுக்கு ஐந்து வயதாகும்போது வேட்டையாடச் சென்ற வீரபாண்டியனை புலி அடித்துக் கொன்றது.  தீய புதல்வர்கள் பொக்கிஷசாலைக்குள் சென்று வீரபாண்டியனின் திருமுடியுடன் விலையுயர்ந்த பொருள்களையும் கவர்ந்து கொண்டு ஓடிவிட்டனர்.  நல்ல அமைச்சர்கள் ’ஐந்து வயதுக் குழந்தைக்கு முடி சூட்டி விட்டு அவனுக்கு தக்கவயது வரும்வரை நாம் அரசாளலாம் என முடிவெடுத்தனர்.  ஆனால் முடியோ, முடிசெய்ய இரத்தினங்களோ ஏதும் இல்லை.

தோஷமில்லாத இரத்தினங்களுக்கு எங்கே போவது" எனக் கவலையுற்று குழந்தையுடன் கோவில் வாசல் சென்று இறைவனிடம் முறையிட்டுத் தொழுதனர். அணுவிலும் இருப்பவனல்லவா அவன்! இரத்தின வியாபாரி போல முதுகில் இரத்தினப் பையோடு அவர்கள் முன் இறைவன் தோன்றினார்.

என்ன வாட்டமாயிருக்கின்றீர்கள்" என ஒன்றுமறியாத வரைப் போல் வினவினார் வியாபாரி வடிவிலிருந்த ஈசன்.  குழந்தையான அரசனுக்கு முடிசெய்ய குற்றமற்ற இரத்தினங்கள் தேவை" என்றார் அமைச்சர். உடனே முதுகுப்பையை இறக்கி அங்கேயே கடைவிரிக்க ஆரம்பித்தார் வியாபாரி.

அமைச்சர்கள் இவன் புதியவனாயிருக்கிறானே, இவனை இதுவரை நாம் கண்டதில்லையே" என்று நினைத்து அவனைப் பரிட்சிக்க இரத்தினத்தைப் பற்றி நீ அறிந்திருப்பதென்ன?" என வினவினர்.



ஈசன் புன்சிரிப்புடன் இரத்தினங்களைப் புனிதமான இடத்தில், மணைபோட்டு, அதன்மேல் துணி விரித்து முறைப்படி (அதாவது சூரியனுக்கு மாணிக்கம், சந்திரனுக்கு முத்து, செவ்வாய்க்குப் பவளம், புதனுக்கு மரகதம், வியாழனுக்கு புஷ்பராகம், சுக்கிரனுக்கு வைரம், சனிக்கு நீலம், ராகுவுக்கு கோமேதகம், கேதுவுக்கு வைடூரியம்) கோவிலில் நவக்கிரகங்கள் குடி கொண்டிருப்பது போல் வைத்து பூஜை செய்து பார்க்கவேண்டும்" என்றார்.

இரத்தினங்களில் வரலாறு அறிவாயா?" என்றார் வேறொரு அமைச்சர். வலன் என்ற ஒரு அரக்கன்.  ஆனால் சிறந்த சிவபக்தன்.  சிவனை நினைத்துக் கடுந்தவம் புரிந்தான்.  தவத்துக்கு மகிழ்ந்த சிவன் பிரத்யட்சமாகி உனக்கு என்ன வரம் வேண்டும்?" எனக் கேட்க, வலன், யுத்தத்தில் என்னை யாரும் வெல்லக்கூடாது.

எனது அங்கங்கள் விலைமதிக்க முடியாத பொருளாகி யாவரும் விரும்பும் வண்ணம் ஆகவேண்டும்" எனப் பிரார்த்தித்தான்.  ஈசனும் அவ்வண்ணமே வரமீந்தார். இந்திரனாலும் வலனை வெல்லமுடியவில்லை. உனக்கு வேண்டும் வரம் தருகிறேன்" என இந்திரன் கூற, வலன் போரிலேயே வீரம் காட்ட முடியாத நீ என்ன வரம் தந்துவிடப் போகிறாய்! நான் தருகிறேன்; வேண்டியதைக் கேள்" என, வஞ்சகமாக இந்திரன் எங்கள் யாகத்துக்கு நீரே சிறந்த பலிப்பசுவாக வேண்டும்" என்றான்.  வலன் மகிழ்ச்சியோடு தன் மகனுக்கு முடிசூட்டி விட்டு இந்திரனைப்பின் தொடர்ந்தான்.  இந்திரனைக் கர்த்தவாகாகக் கொண்டு சப்தரிஷிகளும் யாகம் தொடங்கினர்.  வேள்வியின் எதிரே தர்ப்பையால்  வலாசுரன் கட்டப்பட்ட கோலம், சிங்கத்தை சிலந்தி நூலால் கட்டியது போலிருந்தது.  இந்திரன் வஜ்ஜிரா யுதத்தால் அவனைக் கொன்று, யாகத்துக்கு வேண்டிய தசைகளை எடுத்து அக்கினியில் போட்டான்.  வலனின் உடலிலிருந்து ஒரு ஒளி ஆகாயத்தை நோக்கிச் சென்றது.

ஏகலைவனிடம் துரோணர் கட்டை  விரலைக் குரு தட்சணை யாகக் கேட்கவில்லையா, அந்த மாதிரி வலன் பலிகொடுக்கப்பட்ட போதிலும் அவன் அங்கங்கள் அழியவில்லை! சிவன் வரமளித்தபடி வலனது அங்கங்கள் இரத்தினங்களின் விதைகளாயிற்று அவன் எலும்பு வைரமாயிற்று! பற்கள் முத்து; உதிரம் மாணிக்கம்; ரோமம் வைடூரியம், மாமிசம் பவளம், கண் நீலம், கபம் புஷ்பராகம், பித்தநீர் மரகதம், கொழுப்பு கோமேதகம்!

நாங்கள் இதுவரை இத்தனை விரிவாய் கேட்டதில்லை.  கற்களின் குணதோஷங்கள் அறிவீரோ?" என்று கேட்டார் மற்றொரு அமைச்சர். எல்லாமறிந்த முக்கண்ணர் புன்முறுவலுடன் ஏதோ தெரிந்த வரை கூறுகிறேன்; கேளுங்கள்.  வைரம் எதையும் அறுக்கக் கூடியது.  ஆனால் வைரத்தை யாரும் பிளக்க முடியாது.  நிறக்குறைவு, கோடு, நடுக்கம், காக்கைக்கால், சொட்டு அற்ற வைரத்தை அணிபவருக்கு ஆரோக்கியம், வெற்றி, மங்களம் இவை கிட்டும். ததீசி முனிவர், வலாசுரன் இவர்களுடைய எலும்புகள் விழுந்த இடமெல்லாம் வைரம் விளைகின்றது.

கோசல வைரம் வாகைப்பூ போலவும், கலிங்க வைரம் மஞ்சள் நீரோட்டத்தோடும், மதங்க நாட்டு வைரம் மல்லிகைப் பூ நிறமாகவும், இமயத்து வைரம் தூய வெண்மையாகவும், மகாராஷ்டிர வைரம் சிவப்பு நீரோட்டத்தோடும், பௌண்டிர நாட்டு வைரம் நீல நீரோட்டத் தோடும், சௌவீர நாட்டு வைரம் கருப்பு நீரோட்டத்தோடும், மகத நாட்டு வைரம் பொன் நிறமாயும் இருக்கும்.

வாகைப்பூ, வாழை, மூங்கில் இலை போன்றது விஷ்ணு வைரம்; தூய வெண்மையாய் ஆறுபட்டையோடு கூடியது இந்திரவைரம்; நில நீரோட்டம், வண்டுநிற வைரங்கள் யமவைரம்; கனமில்லாமல் இருப்பது வாயு வைரம்; கர்ணிக்காரப்பூப் போன்றது வருணவைரம்; தண்ணீர் இருப்பது போன்ற தோற்றமுள்ளது சந்திரவைரம்; வண்ணத்துப்பூச்சி போல் பலநிறம் காட்டுவது சூரிய வைரம்; அனல் நிறமுடையது அக்கினி வைரம்.

திருமாங்கல்யத்தில் வைரம் பதிக்கக்கூடாது.  பலநிறம் காட்டும் வைரம் அரசர்க்குரியது.  இரத்தினங்களுக்குரிய கிழமைகளில் அவைகளை வாங்குவது, வாங்கியவர்க்கு செல்வமும், கீர்த்தியும் தேடித்தரும். இனி முத்துக்களது இலக்கணம் முத்துக்கள் நீரிலுண்டானவை,  தரையிலுண்டானவை என இருவகைப்படும்.

வலாசுரனது பற்கள் பதின்மூன்று இடங்களில் சிதறுண்டு விழுந்தன. அவை சங்கு, மீனின் தலைப்பாகம், மேகம், மூங்கில், பன்றியின்பல், பாம்பின்படம், யானைத் தந்தம், கொக்கின் கழுத்து, நாமக் கரும்பின் கணுக்கள், நெற்கதிர், முத்துச்சிப்பி, கோவேறு கழுதையின் புஜம், கற்புடைய மங்கையரின் கழுத்து.

மாடப்புறா முட்டைபோல் வெளுத்த சங்கிலிருந்து உண்டான முத்து மேன்மை பெற்றது.  மீன் தலையினின்று உண்டான முத்து பாடலிப்பூ போல இருக்கும்.  மேகமுத்து இளம் சூரிய ஒளி போலிருக்கும்.  ஆலங்கட்டி நிறமுள்ள மூங்கில் முத்தை அணிந்தவர் கீர்த்தியும், செல்வமும்  பெறுவார்கள்.  பன்றிப்பல் முத்து லேசான சிவப்பாயிருக்கும்.  பாம்பு முத்து நீல ஒளிவீசும்.  நெல்முத்து, நாமக் கரும்பு முத்து, யானை முத்து, மூன்றும் லேசான மஞ்சள் நிறமாயிருக்கும்.  சிப்பி முத்து நிலாவைப் போன்ற நிறம்.  சிப்பி முத்து பல சிறப்புக்களை அணிபவருக்குக்  கொடுக்கும்.  உயிருள்ள மங்கை யர், கோவேறு கழுதை, கொக்கு இவற்றை முத்துக்காக எவரும் கொல்வதில்லை.  கொல்வது தவறு.

விஷ்ணு முத்து நீலநிறம்.  இந்திர முத்து மஞ்சள் நிறம்.  யமமுத்து மேகநிறம், வாயுமுத்து இரத்த சிவப்பு நிறம்; வருணமுத்து வெண்மை நிறம், அக்கினி முத்து செந்நிறம். உருண்டையான கனமும், வழுவழுப்பும், ஒளியும் கூடிய முத்தை அணிவதால் கெடுதல்கள் நீங்கும்.  செல்வமும், ஆயுளும் பெருகும். 

இனி மாணிக்கத்தின் இலக்கணம்:-

கிருதயுகத்தில் மக்கத்திலும், திரேதாயுகத்தில் காளபுரத்திலும், துவாபரயுகத்தில் தும்புரு என்னுமிடத்திலும், கலியுகத்தில் சிங்க ளத்திலும், மாணிக்கச் சுரங்கங்கள் இருக்கும். 

செந்தாமரை, செங்கழனிப்பூ, மின்மினிப்பூச்சி, நட்சத்திரம், அனல், தீபஒளி, மாதுளை, முத்துக்கள், சூரியன், மாதுளம்பூ, பட்டுப்பூச்சி இவைபோன்ற நிறமுள்ள மாணிக்கங்கள் சிறந்தவை.  மாணிக்கத்தில் சாதரங்கம், குருவிந்தம் சௌகந்திகம், கவாங்கம் அல்லது நீலகந்தி என நான்கு வகையுண்டு.  குருவிந்தம் அரசர்கள், அரசியலில் சம்பந்தப்பட்டவர்கள் அணிந்தால் சாதுரியத்தையும், வெற்றியையும் தேடித்தரும். எதிரிகளை சுலபமாக ஜெயிக்கலாம்.  வணிகர்கள் சௌகந்திகம் அணிந்தால் வியாபாரம் செழிக்கும், நீண்ட ஆயுளுடன் செல்வமும்பெருகும்.  கட்டிட வேலை, பொன் வேலை, மர, சிற்ப வேலை செய்வோர் நீலகந்தி அணிந்தால் மேன்மேலும் புகழ்பெறுவர்.

சாதரங்கம் செந்தாமரை, செங்கழனிப்பூ, மின்மினிப் பூச்சி, நெருப்பு, தீபச்சுடர், குயில்கண்கள், மாதுளை முத்து, கதிரவன், மாதுளம்பூ, பட்டுப்பூச்சி என்ற பத்து சாயைகளைக் கொண்டிருக்கும். 

குருவிந்தம் செம்பருத்திப்பூ, கிம்சு மலர், உலோத்திர புஷ்பம், பந்தூகப்பூ, குன்றிமணி, சிந்தூரம், முயல் ரத்தம் என்ற எட்டு சாயைகள் உடையவை. 

செம்பஞ்சுக் குழம்பு, குயில்கண், இலவுப்பூ, ஐந்திலைப்பூ, பழுக்கக்காய்ச்சிய உலோகம் இவை சௌகந்திகத்தின் சாயைகள்.

குசும்பப்பூ, கோவைப்பழம், மருதோன்றிப்பூ, மனோரஞ்சிதம் போன்றிருப்பது நீலகந்தி.  மாணிக்கத்தில் மேல்நோக்கி ஒளி வீசுவது உத்தமம்; கீழ்நோக்கி ஒளிவீசுவது மத்திமம்.  பக்கத்தில் ஒளிவீசுவது மட்டம். புண்ணியம் செய்தவர்களுக்கே குற்றமற்ற மாணிக்கத்தை அணியும் பாக்கியம் கிடைக்கும்.  

வலாசுரனது பித்தநீரைப் இனி பச்சையின் இலக்கணம். பறவைகள் கொத்திக் கொண்டு போகையில் டில்லி அருகில் சிந்தியது.  அங்கே பச்சைக்கல்  சுரங்கங்கள் அதிகம்.  கருடனது தாயான வினதை தன் மூத்த பிள்ளை அருணனது உடைந்த முட்டை ஓட்டை பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.  திருஷ்டி தோஷம் தாக்காதிருக்க, அந்தக் கருநிற ஓட்டை கருடன் இடுப்பில் கட்டினாள்.  அந்த முட்டை ஓட்டின் துகள்கள் விழுந்த இடமெல்லாம் மரகதச் சுரங்கங்கள் உண்டாயின.  பத்மாசுரனைக் கொல்ல மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார்.

பத்மாசுரன் தன் தலையில் தானே கைவைத்து சாம்பலான பிறகு ஒளிந்திருந்த  சிவன் மோகினியின் அழகில் மயங்கினார்.  அப்போது சிவனாரின் விந்துக்கள் விழுந்த இடங்களிலெல்லாம் பச்சைச் சுரங்கங்கள் காணப்படுகின்றன.  கருடன் அந்த வீர்யத்தை உண்ட பின் பறந்தான்.  கடல்தாண்டி அவன் எச்சமிட்ட இடங்களிலெல்லாம் பச்சைச் சுரங்கங்கள் ஏற் பட்டன.  அதற்குக் கருடப்பச்சை அல்லது காருத்துமதம் என்று பெயர்.

தோஷமற்ற பச்சைக்கற்கள்; அறுகம்புல் நிறமுடையது காடம்; பேசலம், தினை  இலையின் நுனி போலுள்ளது.  கிளி இறகு போலுள்ளது பித்தகம்; துளசிப்பச்சை நிறமுள்ளது முத்தம்; தாமரை இலைப் பச்சை பிருதுகம்; உல்லசிதம் பச்சைப் பயிர் போலிருக்கும். 

தோஷமுள்ள மரகதக்கற்கள்.

தோஷலே சாந்து வீத மரகதம் எலுமிச்சை இலைப் பச்சையாய் இருக்கும்.  அரளி இலைப் பச்சை துஷ்டம்; செந்தாமரை இலைநிறம் தோஷமூர்ச்சிதம். தோஷலேசம் என்பது பனிதோய்ந்த தாமரை இலைநிறம்; மயில்தோகை நிறத்திற்கு மந்ததோஷம் என்று பெயர்.

குணமுள்ள மரகதக்கல் அணிபவன் எதிரிகளை வென்று சீரும் சிறப்புமாய் வாழ்வான்.

நீலம் வலாசுரனின் கண்ணிலிருந்து தோன்றியது.  சிவ பெருமான் நஞ்சுண்டபோது ஓடிவந்த உமாதேவி நெஞ்சுக்குள் விஷம் இறங்கி விடக்கூடாதே என சிவனின் கழுத்தை இறுக்கிப் பிடித்தாள்.  அவளது நகக்கண்கள் பட்டு சிவனாரின் நஞ்சுகலந்த உதிரம் சொட்டிய இடமெல்லாம் நீலக்கல் கனிமங்கள் உண்டாயின.  இதற்கு மகாநீலம் என்று பெயர்.  இதைப் பாலில் போட்டால் முன்னிலும் அதிகமாகப் பிரகாசிக்கும்.

விசுவரூபனைக் கொன்ற பழி நீங்க இந்திரன் அஸ்வமேத யாகம் செய்தான்.  யாகத்திற்காக குதிரை இரவு பகல் பாராமல் அலைந்தது.  அப்போது அதன் கண்ணிலிருந்து நீர் பல இடங்களில் விழுந்தது.  யாகம் நல்லபடியாக முடிந்ததும் குதிரையின் கண்ணீர் விழுந்த இடமெல்லாம் நீலக்கல் சுரங்கங்கள் உண்டாயின.  அதற்கு இந்திர நீலம் என்று பெயர்.  வானவில்லைப் போல் பலநிறம் காட்டும் இந்திர நீலம் கிடைப்பது வெகு அரிது.  அரசரது முடியில் வைரம், முத்து, மாணிக்கம், பச்சை, இந்திரநீலம் கட்டாயம் இருக்கவேண்டும்.  துவஷ்டாவின் மகள் சமிக்ஞை சூரியனின் மனைவி.  சூரியனுடைய வெப்பத்தைத் தாளாமல் தன்னைப்போன்ற நிழலை (’சாயா பெயர் சூட்டி) வைத்து விட்டுச் சென்றுவிட்டாள்.  சூரியன் மோக வேகத்தில் குதிரை உருவெடுத்து சமிக்ஞையைத் தேடிக் கொண்டு ஓடினான்.  அவன் விந்து விழுந்த இடங்களெல்லாம் நீலக்கல் கனி மங்கள் தோன்றின.  அந்த நீலக்கற்கள் ஆயுளைக் கூட்டும்; வித்தை சுலபமாக வரும்.  செல்வம் சேர்க்கும்.  தரித்திரன் கையில் அந்த நீலக்கல் இருந்தால் புதையல் கிடைக்கும்.  கொஞ்சம் வெளிரிய நீலம் அந்தணஜாதி; சிவப்பும் நீலமுமாக ஜாலம் காட்டுவது அரசரும், அமைச்சர்களும், அரசியலில் பங்கு கொள்வோரும் அணியும் க்ஷத்திரிய ஜாதி; பெரும் கீர்த்தியையும், சொல் சாதுரியத்தையும் அளிக்கக்கூடியது; வெளுப்பும், கருப்புமாய் ஒளிவிடுவது வியாபாரிகள் அணியக் கூடியது. புகழும், செல்வமும் சேர்க்கும்.  மிகக் கருத்த நீலக்கல் கட்டிட வேலை, விவசாயிகள், பொன், மர இரும்பு வேலை செய்வோர் அணிந்தால் திறமை வளர்ந்து செல்வமும், புகழும் கூடும்.

இனி கோமேதகத்தின் இலக்கணங்கள்;

வலாசுரனது கொழுப்பு விழுந்த இடங்களிலெல்லாம் கோமேதகக் கனிமங்கள் தோன்றின.  கோமேதகம் தேன் சொட்டு,  கோமயம், உறைந்த நெய் இவை போன்றோ, தெளிவாகவோ இருப்பது சிறந்தது.  கோமேதகம் பாவங்களை நீக்கி மனத்தூய்மை கொடுக்கும். அது கிரஹங்களில் ராகுவுக்குரியது.  ராகுதசை, ராகு புக்திகளில் அணிந்தால் கிரகபீடை நீங்கும்.  அரசர்களுக்கு வெற்றியையும், புகழையும் கொடுக்கும்.  

இனி புஷ்பராகத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

இரண்யாட்சனைக் கொல்லவும், கடலுக்கடியில் ஒளித்து வைத்திருந்த பூமியை மீட்கவும் மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தார்.  வராகம் கோபம் கொண்டு உறுமிக் கொண்டே ஓடும் சமயம் அதன் மூக்கிலிருந்து கபம் விழுந்த இடங்களிலெல்லாம் புஷ்பராகக் கனிகள் தோன்றின. அசுர குலத்தில் பிறந்தாலும் வலன் சிவபக்தி உள்ளவன்.  நற்குண நற்செய்கைகள் உடைய வலனின் கபமும் புஷ்பராகக் கற்களாகி அரசரும் அணியும் பெருமை பெற்றது.

மேற்பாகம் உருண்டு மனதை ஈர்க்கக்கூடிய புஷ்பராகம் உயர்ந்தது.  இதற்கு பதுமராகம் என்று ஒரு பெயருமுண்டு.  பாரியாத்திர மலை உச்சி, மந்தரமலை ஓரங்கள், இங்கெல்லாம் புஷ்பராகங்கள் கிடைக்கின்றன. பிரகஸ்பதியை வசீகரிக்கக் கூடிய ரத்தினமாதலால் அமராவதியில் ஏராளமாய்க் காணலாம்.  இந்திரனும் புஷ்பராக நகைகள் நிறைய அணிவான்.  குருதசை, குருபுக்திகளில் புஷ்பராகம் அணிந்தால் கிரகதோஷங்கள் விலகி மேன்மை பெறலாம். 

 இனி வைடூரியத்தைப் பற்றிச் சொல்கிறேன்.  வலாசுரனது உதிர்ந்த ரோமங்களே வைடூரியக் கற்கள். இடி பூமியில் விழுந்தாலும் வைடூரியம் உண்டாகிறது. வலதுபுறம் ஒளி வீசுவது உயர்ந்தது.  இதை அனைவரும் அணியலாம். இடது புறம் ஒளி வீசுவதை அரசரும், அமைச்சர்களும், அரசியலில் ஈடுபட்டவர்களும் அணிந்தால் தீராத பிரச்சினைகளும் தீரும்.  ஜயமும், கீர்த்தியும் கிடைக்கும். பகைவர் கள் தலையெடுக்க மாட்டார்கள். பின்புறம் ஒளிவீசுவது வணிகர் களுக்கு; முன்புறம் ஒளிவீசுவது துன்பப்படுபவர்களுக்கு; கேதுவின் இரத்தினமான இதை அணிந்தவரை தசையோ, கேதுபுக்திகளோ, ஏழ்மையோ அவஸ்தைப்படுத்தாது.

மகதநாட்டிலும், கோரக்கத்திலும், பாரசீகத்திலும், சிங்களத் தீவிலும், மலயம், திரிகூட மலைகளிலும் வைடூரியக் கனிமங்கள் இருக்கின்றன.

மூங்கில் இலை, பூனைக்கண், மயில் கழுத்து இவை போன்றவை சிறந்தவை.  வழுவழுப்பான, பிரகாசிக்கும் மூளியில்லாத வைடூரி யங்களைப் பார்த்து வாங்கவேண்டும்.

இனி பவளத்தின் இலக்கணம் சொல்கிறேன்.

வலாசுரனது உடல் மாமிசம் பவளமாயிற்று.  செவ்வாய் தசை, செவ்வாய் புக்திகளில் அணிபவர் அங்கார பீடைகளிலிருந்து விடுபடுவர். பவளம் தேயும் இயல்புடையது.  கன்னிப் பெண்கள்  அணிந்தால் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி விரைவில் திருமணம் நடைபெறும்.  பவளம் அணிவதால் அரசர் போரில் எதிரியை சுலபமாய் வெற்றி கொள்வர்.

முன்னம் மலைகளுக்கெல்லாம் இறக்கைகள் இருந்தன.  அவை நினைத்த போது பறந்தன.  பறந்தமலைகள் திடீரென்று இறங்கிய தால் மக்கள் பெரும் இன்னலுக்குள்ளானார்கள்.  தேவர்கள் இந்திரனிடம் முறையிடவே, அவன் மலைகளின் இறக்கைகளை வெட்டிவிட்டான்.  வெட்டிய இடத்திலிருந்து பெருகிய உதிரமும் பவளக் கனியாயிற்று.  அந்தப் பவளங்கள் மலர்ந்த கிம்சுகப் பூப்போல் இருக்கும்.  மகாவிஷ்ணு மதுகைடபர்களைக் கொன்ற சமயம் சிந்திய மாமிசங்கள் பவளமாயின.  சூரியனது சாரதியான அருணனை அவன் தாயான வினதையானவள் பூரண வளர்ச்சி அடையுமுன் ஜாடியிலிருந்து எடுத்துவிட்டாள்.  அப்போது சிந்திய இரத்தமும் பவளமாயிற்று.  கோவைப்பழம், செம்பருத்தி, கிளிமூக்கு நிறங்களில் இருக்கும் பவளங்கள் சிறந்தவை.  பூச்சியரித்தல், ஓட்டை, மண் ஒட்டி இருத்தல் பவளத்தின் குற்றங்கள். தோஷமற்ற பவளத்தை அணிவதால் ஆயுள், நன்மக்கள், நோயின்மை, சிறந்த இல்லறம் கிடைக்கும்.  வைரமும், முத்தும் பிராம்மண வர்ணம்; மாணிக்கமும் பவளமும் க்ஷத்திரிய வர்ணம்; புஷ்பராகம், கோமேதகம், வைடூரியம் இம்மூன்றும் வைசிய வர்ணம்; நீலமும் பச்சையும் நான்காம் வர்ணம்.

சூரியனது கதிர்கள் பட்டதும் நெருப்பைப் போல் ஜ்வலிக்கும் சூரிய காந்தக்கல் உடல் பலத்தையும், ஆத்ம பலத்தையும் ஏற்படுத்தும்.  கண்கள் பிரகாசமாகத் தெரியும்.

சந்திரனது ஒளிப்பட்டதும், பலமடங்கு ஒளிவீசி உடலை குளிர்ச்சியாக்கும் கல்லிற்கு சந்திரகாந்தக்கல் என்று பெயர்.  இதை அணிபவருக்குப் புலமை அதிகரிக்கும்.  நோய் வாய்ப்பட்டிருந்த தாயானாலும் நோய் நீங்கி தீர்க்காயுளோடு வாழ்வாள்.  அரசனானால் கடல் கடந்தும் வெற்றி பெறுவான்.  அறிவு, ஆனந்தம், கலை, புகழ், ஆற்றல், அழகு, நடுநிலைமை, நறுமணம், சுகபோகம் எல்லாம் கிட்டும்.

கலியுகத்தில் இவ்விரண்டு கற்களும் கிடைப்பது அரிது.

ஞாயிறு மாணிக்கத்தையும், திங்கட்கிழமை முத்தையும் செவ்வாயன்று கோமேதகம், பவளத்தையும், புதன் மரகதத்தையும், வியாழன் புஷ்பராகத்தையும், வெள்ளி வைரத்தையும், சனி நீலத்தையும், வைடூரியத்தையும் வாங்குவது நன்று.

"அடேயப்பா இரத்தினம் பார்ப்பதில் இவ்வளவு விஷயமா இருக்கிறது!" என அதிசயித்தனர் பாண்டிய அமைச்சர்கள்.

வியாபாரியின் இரத்தின ஞானத்தை  நன்று, நன்று எனப் பாராட்டினர்.

பின்னர் பீடம் ஒன்று வரவழைத்து வைசியர் வடக்கு முகமாய் அமர,  பீடத்தின்மேல் புதுத் துணி விரித்து நடுவில் மாணிக்கத் தையும், கிழக்குமுதல் எட்டுத்திசைகளிலும் முத்து முதல் எட்டு இரத்தினங்களையும் வைத்து, நவக்கிரக பூஜை செய்து சிறுவனுக்கு எல்லா மங்களங்களும் உண்டாகும்" என்று ஆசீர்வதித்து, அதிக விலையுள்ளவையும், குற்றமற்ற எல்லாப் பெரிய ரத்தினக் கற்களையும் எடுத்துக் கொடுத்தார்.  அமைச்சர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!

சாத்திரப்படி அழகான முடிசெய்து ஓமங்கள், தானங்கள் செய்தபின் சிறுவனுக்கு பட்டாபிஷேகம் செய்தனர்.  அதுவரை வைசியப் பெருமானை இருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.  முடிசூட்டு விழா நடந்தபின் வைசியருக்கு மரியாதை  செய்ய பொன்,  ஆடைகள் இவற்றோடு அருகில் சென்றால் அவர் புன்சிரிப்புடன் ஒளி வடிவமாகி லிங்கத்தில் கலந்துவிட்டார்.  அமைச்சர்கள் திகைத்தனர்.  இரத்தினங்கள் விற்றவர் இறைவனே" என அறிந்து கொண்டு மகிழ்ந்தனர்.

இனி இளவரசன் நீண்ட ஆயுளும், கீர்த்தியும் பெறுவான்" என திடமுற்றனர்.  இறைவனே முடிசூட்டு விழாவில் கலந்து கொண்ட தால் ’அபிஷேக பாண்டியன் எனச் சிறப்புப் பெயர் பெற்றான் சிறுவன்.  உரிய வயது வந்ததும் கொள்ளையிட்டவர்களிடமிருந்து பொருள்களை மீட்டான்.

பிறகு இறக்கை வெட்டப்படாத மலை ஒன்று உண்டு. ஆஞ்சநேயர் சீதையைத் தேடி இலங்கை நோக்கிக் கடல்தாண்டிப் போனாரே, அப்போது அவருக்கு உபசாரம் பண்ணவென்று கடல் நடுவே எழுந்ததே மைநாக பர்வதம் அதுதான்!

நாற்படையுடன் மனுச்சக்கரவர்த்தி போல நீண்ட காலம் அரசாண்டான் அபிஷேக பாண்டியன்.  இந்த பதினேழாம் திருவிளையாடலை நினைத்தாலே போதும்.  இரத்தினங்கள் பெற்று க்ஷேமமாய் வாழலாம்.

இந்தத் 17-ஆம் திருவிளையாடலை தினமும் பக்தியுடன் படிப்பவரும், கேட்பவரும், படிப்பதற்குக் காரணமானவரும் ரத்தினங்கள் அனைத்தும் பெறுவர். வாழ்க்கையில் அவர்கட்குத் துன்பமே யில்லை! ரத்தினங்களை அணிந்த பயனையும் பெறுவார்.




இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



giri facebook
 giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...








கருத்துகள் இல்லை