Recent Posts

திருவிளையாடல் புராணம் - ஆலவாயின் எல்லை வகுத்தல்

திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

ஆலவாயின் எல்லை வகுத்தல்



சுகுண பாண்டியனுக்குப் பின் சித்திநாதன், சித்தி பூஷணன், சித்திரத்வஜன், சித்திரவர்மன், சித்திரசேனன், சித்திரவிக்ரமன், ராஜமார்த்தாண்டன், ராஜசூடாமணி, ராஜ சார்த்தூலன், ராஜ குஞ்சரன், சத்ருஞ்சரன், பீமரதன், பீமபராக்கிரமன், பிரதாப மார்த் தாண்டன், விக்கிரம கஞ்சுகன், யுத்த கோலகன், அதுல விக்கிரமன், அதுல கீர்த்தி, கீர்த்தி விபூஷணன் முதலானோர் வம்ச வழியாக வெகுகாலம் நீதி நெறி தவறாமல் அரசாண்டனர். இவர்கள் பெயரை வரிசையாகச் சொன்னாலே புண்ணியமுண்டு.  இந்த இருபத்தோரு மன்னர்கள் வெகு காலம் நெறிதவறாது அரசுபுரிந்ததும் ஒரு மனுவினது காலம் முடிந்துவிட்டது.

பேரலைகளுடன் கடல் பொங்கி நாடு முழுவதும் அழிந்து விட்டது.  ஆயினும் ஈசனும், அம்மையும் இருக்கும் ஆலயமும், பொற்றா மரையும் அழியவில்லை.

இதற்கு வெகு காலத்திற்குப் பின் காற்றும், மழையும் தணிந்தன. கடல் நிதானப்பட்டது. பூமி முன்போல் காடு மண்டிக் கிடந்தது.  பிரமன் ஈ, எறும்பு, புழு, பூச்சி, விலங்கு, மனிதர் அனைவரையும் படைத்தார். சூரியனிடமிருந்தும், சந்திரனிடமிருந்தும் மன்னர்கள் தோன்றினர். சேர, சோழ, பாண்டிய நாடுகள் பிரிந்தன.

பாண்டிய நாட்டை வமிச சேகர பாண்டியன் அரசாண்டான்.  இந்திர விமானத்தைச் சுற்றி சிறுநகர் அமைத்து இருந்தான். நாளடைவில் மக்கள் பெருகவே குடியிருப்பு இடம் போதவில்லை.

சோமசுந்தர மூர்த்தியிடம் வந்து முறையிட்டான். ஆலால சுந்தரமே, அங்கயற்கண்ணி மணாளனே! மதுரைக்கு இறைவனே! பிரம்மனாலும், விஷ்ணுவாலும் அடிமுடி காணப் பெறாதவனே! நாரைக்கும், கரிச்சானுக்கும், பன்றிக்குட்டிகளுக்கும் கருணை காட்டிய வள்ளலே! மாமனாய் வந்து வழக்குரைத்தவனே! முன் இருந்த நகர அமைப்பைக் காட்டலாகாதா?" என விண்ணப்பித்துக் கொண்டான்.



உடனே ஈசன் மேனி முழுவதும் அரவமாக சித்தர் வடிவில் மன்னன் முன்தோன்றி, தோளிலிருந்த வாசுகியை நோக்கி நகர எல்லைகளை மன்னனுக்கு காட்டி வா" எனப் பணித்தார்.

வாசுகி மன்னா, நான் வளைந்து நெளிந்து செல்வதால் எல்லை கோணல் மாணலால் இருக்கும்.  வளைவுகளோடு கட்டப்பெறும் கோட்டை என் பெயரால் விளங்கவேண்டும்" எனக் கேட்டுக் கொண்டு கிழக்கே திருப்பூவணம், தெற்கே திருப்பரங்குன்றம், மேற்கே திருவேடகம், வடக்கே இடபமலை என எல்லை காட்டிவிட்டு சிவபெருமான் தோளை வந்து அடைந்தது.

பாண்டியனை ஆசீர்வதித்து சித்தர் மறையவே, சர்ப்பம் காட்டிய எல்லைப்படி நகரை அமைத்து ’ஆலவாய் எனப் பெயரிட்டான் வமிசசேகரன். நான்கு பக்கமும் எல்லை வகுத்ததால் ’நான்மாடக் கூடல் என்ற சிறப்புப் பெயரும் ஏற்பட்டது.

சுருங்கக்கூறின் ஊழிக்கு முன் மதுரை நகர் எப்படி இருந்ததோ அப்படியே ஆகிவிட்டது.  ஆகாயத்தைத் தொடுகிறதோ என சம்சயிக்கும் வண்ணம், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், அதோடு கோயிலிலும் சிறப்பு வழிபாடுகள், அலங்காரங்கள் என மதுரை பூலோக கைலாசமென விளங்கியது.

இறைவனது இந்த 49-ஆம் திருவிளையாடலை தினமும் பக்தியுடன் படிப்பவரும் கேட்பவரும் எல்லா நன்மைகளையும் பெற்று இன்பமாக வாழ்வார்.


இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...



கருத்துகள் இல்லை