Recent Posts

திருவிளையாடல் புராணம் - சோழனது படையை முறியடித்தல்

திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

சோழனது படையை முறியடித்தல்


பாண்டிய நாடு, அதிலும் மதுரை புதிதாய் ஏற்பட்ட வளர்ந்து வரும் நகரம். போதிய படைபலம் சேரவில்லை.  ஆயுதங்கள் போதாது.

விக்கிரம சோழன், நரேசன், கஜேசன், சூரன் போன்ற பல கூட்டாளிகளைச் சேர்த்துக் கொண்டு வைகைக் கரையில் கூடாரமடித்துத் தங்கினான். எதற்கு? வலுச்சண்டைக்குத் தான்! குளக்கரைகளை உடைத்தான். வயல்களில் அறுவடை செய்து கொண்டுவரும் நெல்லைப் பறித்தான்.  ஆவினங்களைப் பிடித்துக் கொண்டு போனான்.

பலமற்ற பாண்டியன், எதிர்த்தால் தோற்றுவிடுவோமென அஞ்சினான்.  தன் மக்கள் படும்தொல்லை அவன் மனதை ரணப்படுத்தியது.

கோவிலில் சென்று முறையிட்டான். அட்டாள சுந்தர மூர்த்தியே! மேருவை வில்லாகவும் வாசுகியை நாணாகவும் மகாவிஷ்ணுவை அம்பாகவும், சூரிய சந்திரர்களைத் தேர் சக்கரமாகவும், உதயகிரி, அஸ்தகிரியை கடையாணியாகவும், மந்தரகிரியைத் தேர் தட்டா கவும், ஆகாயமே கொடுமுடியாகவும், விந்தியமலை குடையாகவும், வேதங்கள் நான்கும் குதிரைகளாகவும், பிரணவமந்திரமே சாட்டையாகவும், சதுர்முகன் ரத சாரதியாகவும், நட்சத்திரங்கள், தீரைச்சீலையாகவும், தேவர்கள் அலங்காரப் பொருள்களாகவும், சரஸ்வதி ஒலிக்கும் மணிகளாகவும் கொண்டு முப்புரத்தை எரிக்கப் புறப்பட்டவரே! கஜாசுரனை அடக்கி, அவனது உடலைப் போர்வையாய்க் கொண்டவரே! அந்தகாசுரனை சம்கரித்தவரே! ஜலந்திரனை மாய்த்தவரே! விக்கிரம பாண்டியனுக்காக அட்டாள வீரமூர்த்தியாய் தோன்றி, சமணரேவிய யானையை வதைத்தவரே! உமையொரு பாகனே! கருணைக் கடலே! என்னை ஆதரியும்" எனப் பலவாறு அழுது தொழுது வேண்டினான். உடனே லிங்கத்திலிருந்து அஞ்சாமல் பகைவரை எதிர்த்து நில்; நான் துணை செய்கிறேன்" என்ற மறுமொழி வரவே, மகிழ்ந்து வணங்கி, வேண்டிக் கொண்டு, படைகொண்டு சென்று பகைவரைத் தாக்கினான்.

சோழனும், பாண்டியனும் இடபகிரிக்கு வடக்கே நேருக்கு நேர் போர் தொடுத்தனர். பாண்டியன் படையில் பெரும் பாகம் அழியவே, சோமசுந்தரர் அட்டாள மூர்த்தியாய் குதிரையில் பாய்ந்து வந்தார்.  ஒரு அம்பு விட்டால் எதிரிகள் நூறுபேர் மாண்டனர்.


கூர்மதி படைத்த சோழன் அந்த அம்பை எடுத்துப் பார்த்தான். ஈசனின் பெயர் பொறித்திருந்தது.  உடனே சோழன் மற்றவர்களை அழைத்து, இந்த அம்பை எறிந்தவர் முன்னம் பாண்டியனாய் ஆட்சிபுரிந்த ராஜசுந்தர பாண்டியன். அவர் போர் முனைக்கு வந்திருக்கிறார்.  தெய்வபலத்தை மனித சக்தி வென்றதாகச் சரித்திரமே இல்லை. அதனால் யுத்தத்தை நிறுத்தி ஊருக்குப் போகலாம்" என்றான். சிலர் சம்மதித்தனர்.  சிலர் சண்டை யிட்டனர்.  சம்மதித்தவர்களோடு ஊர்போய்  சேர்ந்தான் விக்கிரம சோழன்.

எஞ்சியவர் போரிட்டு வீர சொர்க்கமடைந்தனர். பாண்டியனை வாழ்த்திவிட்டு அட்டாள மண்டபத்தில் மறைந்தார் ஈசன்.

பாண்டியன் கண்களில் நீர் மல்க ஈசன் பெருமையைப் புகழ்ந்து பாடி, பொன்னும், முத்துக்களும், இரத்தினங்களும், ஆடைகளும் அட்டாள சுந்தரமூர்த்தியை அலங்கரித்து, அரசர்கரசனாய் ஆட்சி புரிந்து வந்தான்.

சோழனது படையை முறியடித்த ஈசனது இந்த 50-ஆம் திருவிளையாடலைத் தினமும் பக்தியுடன் படிப்பவரும், கேட்பவரும், பகை நீங்கி, கடன் நீங்கி, தொல்லைகள், துன்பங்கள் நீங்கி கீர்த்தி மேலோங்க எல்லா நன்மைகளும் பெற்று இன்பமாக வாழ்வார்கள் என்பது சத்தியம்.




இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை