Recent Posts

திருவிளையாடல் புராணம் - சுந்தரநாதனுக்கு பொற்கிழி கிடைக்கச் செய்தல்

திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

சுந்தரநாதனுக்கு பொற்கிழி கிடைக்கச் செய்தல்



கீர்த்தியோடு வாழ்ந்த வமிச சேகரனுக்குப் பின் அவன் புதல்வன் வமிச சூடாமணி ஆட்சிப் பொறுப்பேற்றான். முந்தைய மன்னர்களுக்கு அவன் சற்றும் சளைத்தவனல்ல. அவன் தினந்தோறும்  செண்பக மலர்களால் இறைவனை பூஜித்ததால் செண்பகப் பாண்டியன் என்ற சிறப்புப் பெயரும் பெற்றான்.

ஓரிரவு பால் போன்ற நிலா. மன்னன் தேவியுடன் பேசி கொண்டிருக்கையில் தேவியின் கூந்தலிலிருந்து அபூர்வமான வாசனையொன்று வந்தது. அது ’இயற்கையான வாசனையா, அல்லது மலர்களைச் சூடிக் கொள்வதாலும், வாசனைத் தைலங்களைப் பூசிக் கொள்வதாலும் உண்டான மணமா என அரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

’தன் மனதிலுள்ள சந்தேகத்தைச் செய்யுள் மூலம் தீர்ப்போருக்கு ஆயிரம் பொன் பரிசு என அறிவித்து ஆயிரம் பொன் கொண்ட முடிப்பொன்றை சங்கமண்டபத்தில் கட்டு வித்தான் அரசன்.

சங்கப்புலவர்கள், வெளியூர் புலவர்கள் தனித்தனியே பாட்டு எழுதிப் படித்தனர். ஊஹும். ஒருவர் செய்யுளும் மன்னனது மனப்பாங்கை பிரதிபலிக்கவில்லை.  கிழிகட்டிய துணி தூசி படிந்து தொங்கியது.  புலவர்கள் அதைப் பார்த்து ஏங்கினர்.

சுந்தரநாதன் என்ற வாலிபனொருவன் ஆலவாய்நாதனை அணுகி  எம்பெருமானே, எனக்கு பெற்றோர், உற்றாரில்லை; பொருளுமில்லை. எனக்கு யாவும் நீரே. மணமுடித்தால் தான் ஆலயபூஜை செய்ய தீட்சை பெற முடியும். மணமுடிக்கப் பணம் நீர் மனது வைத்தால் கிடைக்கும். மன்னன் மனதிலிருப்பதை நீர் நன்கு அறிவீர். மன்னன் திருப்திப்படும் மடலொன்று எழுதிக் கொடுத்தால் அதைக் காட்டி ஆயிரம் பொன் பெறுவேன். அருள் செய்ய வேண்டும்" என வேண்டிக் கொண்டான்.

உடனே புலவர் வேடத்தில் தோன்றிய ஈசன் பாடல் புனைந்து சுந்தரநாதனிடம் கொடுத்து சங்கப் புலவர்கள் மூலம் பாண்டியனிடம் காண்பித்து பொற்கிழியைப் பெற்றுக் கொள்" எனக் கூறி மறைந்தார்.



சுந்தரநாதன் ஓலையைச் சங்கப் புலவர்களிடம் காண்பித்தான். அவர்கள் பாட்டைப் படித்து வியந்து பாண்டியனிடம் அழைத்துச் சென்றனர். பாண்டியன் பாட்டைக் கேட்டு மகிழ்ந்து பொற்கிழியை எடுத்துக் கொடுக்க உத்தரவிட்டான்.

அப்போது நக்கீரர் எழுந்து பாட்டில் குற்றமிருப்பதாகக் கூறினார். சுந்தரநாதன் மீண்டும், ஆலயம் சென்று ’நக்கீரர் பாட்டில் குறையிருப்பதாகக் கூறுவதாகத் தெரிவித்தான். விரைந்து வந்தார் சிவபெருமான் புலவர் வேடத்தில் அரசவைக்கு. பாட்டில் குற்றம் கண்ட புலவன் யார்?" எனக் கேட்டார்.

’நானே எனக்கூறி எழுந்தார் நக்கீரர். ’என்ன குற்றம்? என ஈசன் கேட்க, ’உமது பாடலின் பொருளை ஒருமுறை சொல் கின்றேன்; வண்டே! மலர்களின் மணத்தை நீ நன்கு அறிவாய்; தேவியின் கூந்தலில் உண்டாகும் நறுமணத்திற்கு ஒப்பான மணம் ஏதென்று கூறுவாயா?" இதில் பொருட் குற்றமுள்ளது. பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் வாசம் கிடையாது" என ஆணித்தரமாக பதில் கூறினார் நக்கீரர். பத்மினி இனப் பெண்களின் கூந்தலுக்கு தாமரை, செங்கழனி மலர்களில் மணம் உண்டென்பது உலகறிந்தது.  நக்கீரா! ஆசுகவியான உனக்கு இது தெரியாதா?" என்று ஈசன் எடுத்துரைக்க, வாசனைத் தைலங்களைப் பூசிக் கொள்வதாலும், மணமுள்ள மலர்களைச் சூடிக் கொள்வதாலும், வாசனைப் பொடி தேய்த்துக் குளிப்பதாலும், சாம்பிராணி, அகில் புகை போட்டுக் காயவைப்பதாலும் உண்டான கதம்பமான வாசனை தான் வருமே தவிர, இயற்கையான மணம் எவ்வகைப் பெண்களுக்கும் கிடையாது" என மறுத்துப் பேசினார் நக்கீரர்.  தேவமகளிருக்கு?" என ஈசன் கேட்க, பாரிஜாதம் போன்ற மலர்களாலும், கஸ்தூரி போன்ற வாசனைப் பொருள் களாலுமே மணம்" என நக்கீரர் பதிலுரைக்க, நீ வணங்கும்  சிவனின் இடப்பாகத்தில் உறையும் உமாதேவிக்கு?" என சிவன் கேட்க, அதுவும் அப்படியே" என நக்கீரர் உரைக்க தான் யாரென அடையாளம் காட்ட நெற்றிக்கண்ணைத் திறந்தார் சிவன்.  மற்றையோர் பயந்து தொலைவில் சென்றனர்.

நக்கீரர் அஞ்சாமல் நீர் ஆயிரம் கண்காட்டினும் நான் அஞ்சேன். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என ஆணித்தரமாகக் கூறினார்.

நக்கீரா, தேவியின் கூந்தலின் வாசத்தை நானே அறிவேன். நீ எல்லாமறிந்தவன் போல எதிலும் குற்றம் காண்பது உன் செருக்கையே குறிக்கின்றது" பூங்குழலி எனப் பெயர்பெற்ற சக்தியின் கூந்தல் வாசனையை அடைய விரும்பி, அமராவதியிலுள்ள நந்தவனத்தில் உள்ள தருக்களின் புஷ்பங்கள் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டு உமையின் கேசத்தில் குடி இருக் கின்றன. தேவி சூடிக் கொள்வதால் புஷ்பங்களுக்குத் தான் பெருமை கூடுகிறது. துவாதச ஆதித்தர்களும் அம்பிகையின் கூந்தலுக்கருகில் இருந்து சேவிக்க ஆசை கொண்டு அம்பிகையின் கிரீடத்தில் உள்ள ரத்தினங்களாக  இருக்கிறார்கள்.  ஈஸ்வரியின் கரிய கேசம் அதை தியானிக்கும் அடியார்களின் மன இருளைப் போக்குகின்றது. மலிவான வாசனைகளை நீக்கி ஸத் வாசனை அளிக்கிறது. அப்பேற்பட்ட தேவியின் கூந்தலின் மணத்தை வீம்புக்காக புறக்கணித்து வாதம் செய்கின்றாய். அதனால் சக்தி உன்னை விட்டு விலகுகின்றாள்" எனக்கூறி மறைந்தார். மற்றையப் புலவர்களும், பாண்டியனும் அதை ஆமோதித்துப் பொற்கிழியை இறைவன் அருள் பெற்ற சுந்தரநாதனுக்குக் கொடுத்தனர்.  சுந்தரநாதன் நல்ல குலத்தில் பிறந்த மங்கையை மணமுடித்து, நற்புதல்வனை அடைந்து தெய்வத் தொண்டு புரிந்து வாழ்ந்தான்.

பொறாமையுற்ற நக்கீரர் ஈசனின் நெற்றிக்கண் வெப்பம் தாங்காமல் தண்ணீருக்கு அலைந்து பொற்றாமரையில் வீழ்ந்தார்.  பொறாமையும், கர்வமும் வீழ்ச்சியையே அளிக்கும்.

சுந்தரநாதனுக்குப் பொற்கிழி அருளிய ஈசனது இந்த 52-ஆம் திருவிளையாடலை தினமும் பக்தியுடன் படிப்பவரும், கேட்பவரும் வீண்வாது, வம்புகள் விடுத்து ஈசனின் அருள் பெற்று, ஏராளமான செல்வத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.




இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை