Recent Posts

திருவிளையாடல் புராணம் - நக்கீரரைக் காத்தருளல்

திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

நக்கீரரைக் காத்தருளல்



நக்கீரர் இல்லாததால் சங்கமண்டபத்தில் கபிலர், பாணர் முதலான புலவர்கள் கூடுவதில்லை. தமிழ் நூற்கள் இயற்றவில்லை. சொற்போர் நடத்தவில்லை. நிலவில்லாத வானம் போலிருந்தது சங்கமண்டபம்.

நக்கீரர் வெம்மை பொறுக்காமல் நீரில் மூழ்குவார். வெளியே வந்ததும் மீண்டும் எரிச்சல் தாளாமல் மறுபடி குளத்தில் மூழ்குவார்.  இப்படியாக அவர்படும் துன்பம் கண்டு புலவர்கள் ஆலயம் சென்று ஆலவாயன் சன்னிதியில் நின்று, சோமசுந்தரப் பெருமானே! சிவபெருமானே! எல்லோர்க்குமிறைவனே! எல்லாமறிந்தவனே! மதிசூடியே! சூரியன், சந்திரன், அக்னி, இவற்றைக் கண்களாயு டையவனே! உமைநாதனே! தேவர், அசுரர், கந்தர்வர், யட்சர்கள், முனிவர்கள், வித்தியாதரர்கள், மானிடர்கள், மற்றும் ஐந்தறிவுள்ள நாரை, கரிக்குருவி, பன்றிக்கும் அருள் செய்பவனே! காமனை எரித்தவனே! ஆலகால நஞ்சை உண்டு மீண்டும் பாற்கடலைக் கடைய அருள் செய்தவனே! பழிகளைத் தீர்ப்பவனே! ஆலவாய் அழகனே! ஈரேழு பதினான்கு உலகத்திற்கும் படியளப்பவனே! கருணைக் கடலே! கால்மாறி ஆடி பாண்டியன் உயிர்காத்தவனே! தோலாடை அணிந்தவனே! எங்களோடு விளையாட்டாய் வாது புரிந்து சங்கப் பலகையில் அமர்ந்தவனே! அறியாமையாலும், முன்வினைப் பயனாலும் நக்கீரர் ஏதோ பிதற்றி விட்டார்! தாயே! மீனாட்சி, அங்கயற்கண்ணி! மலையத்வஜனின் மாதவமே! தடாதகைப் பிராட்டியே! எங்கும் நிறைந்தவளே! எல்லாமாக இருப்பவளே! சுகந்தம் வீசும் செண்பக, அசோக, புன்னாக, சௌகந்திக புஷ்பங்களின் நறுமணத்தையெல்லாம் இயற்கையிலேயே தன்னகத்தே கொண்ட கூந்தலை உடையவளே! எங்கெங்கு அழகு, பெருமை, திறமை, அறிவு, ஆனந்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் நீ இருக்கிறாய்! பக்தர்களின் காமதேனுவாய், கற்பகத்தருவாய் இருப்பவனே! யார் யார் எந்நெந்த வழியில் எப்படியெப்படி பூஜித்தாலும் அவரவர்க்குத் தகுந்தபடி அனுக்ரஹம் செய்பவளே! கஸ்தூரி திலகமணிந்தவளே! பாண்டிய நாட்டுச் சிறந்த முத்துக்களைக் கோர்த்தாற் போன்ற பல்வரிசை உடையவளே! அன்றலர்ந்த செண்பகம் போன்ற நாசியுடையவளே! ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, ஜாதிக்காய், ஜாதிபத்திரி முதலியவை கலந்த தாம்பூலம் தரித்த சிவந்த இதழ்களை உடையவளே! பவழமோ, கோவைப்பழமோ என சுந்தரேசப் பெருமான் மயங்கும் உதடுகளை உடையவளே! சிவனாரிடம் நக்கீரர் படும் வேதனைகளை உன் சங்கீதம் போன்ற வார்த்தை களால் எடுத்தச் சொல்லக் கூடாதா? சொற்சுவையும், பொருட்சுவையும், கொண்டு உன்னைப் பாடிய நக்கீரர் அதேவாயால் கர்வம் கொண்டு உன்னை இகழ்ந்தது பெரும் குற்றமே! பால் குடிக்கும் மதலை முலை கடித்தாற்போல் அதை எடுத்துக் கொண்டு நக்கீரரை வெப்பு நோயினின்று காப்பாற்ற வேண்டும்.  விநாடி நேரம் மூடினாலும் எந்த பக்தனையாவது காப்பாற்ற விட்டுவிடுமோ என நினைத்து, மூடாத இமைகளோடு பக்தர்களைக் காப்பவளே! காதளவோடிய உனது கண்களில் கருணையுடன் நக்கீரரைக் காத்தருள்வாய்! பொற்றாமரைக்கு ஈசரோடு வரவேண்டும். அண்ணலே! நக்கீரரின் துன்பத்தைப் போக்கியருள வேண்டும்" எனப் பலவாறு வணங்கி, பலபாக்கள் இயற்றி வேண்டி நின்றனர். நக்கீரரும் வெம்மை தாளாமல் செய்த குற்றத்தை உணர்ந்து, வருந்தி இறைவன் மீது நீருள் இருந்தபடியே ஒரு அந்தாதி பாடினார்.



இறைவன் ஏழை பங்காளன் ஆயிற்றே! பொறுப்பாரா? உடனே தேவியுடன் பொற்றாமரை சென்று ’கீரா என அன்புடன் அழைத்துக் கைகொடுத்தார்.  இறைவன் கைபிடித்து எழுந்த நக்கீரருக்கு வெம்மை நோய் போனஇடம் தெரியவில்லை.

நக்கீரரும், புலவர்களும் சிவசக்தி கருணையைப் புகழ்ந்து பாடித் தாள் பணிந்தனர்.  நக்கீரரின் வெப்பு நோய் தீர்த்தருளிய ஈசனின் இந்த 53-வது திருவிளையாடலை தினமும் பக்தியுடன் படிப்பவரும், கேட்பவரும் நோய்கள் நீங்கி, திடகாத்திரமான உடலுடன், தீர்க்காயுளுடன், எல்லாச் செல்வங்களுடன் சுகமாக வாழ்வார்கள் என்பது திண்ணம்.



இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை