Recent Posts

திருவிளையாடல் புராணம் - சமணர் ஏவிய சர்ப்பம் துணித்தல்

திருவிளையாடல் புராணம்


மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

சமணர் ஏவிய சர்ப்பம் துணித்தல்






குலோத்துங்கன் சிவ சாயுஜ்ஜியமடைந்ததும் அவன் மகன் அனந்த  குண பாண்டியன் பட்டத்துக்கு வந்தான். அவன் தீவிர சிவபக்தன். எப்போதும் ருத்ராட்சமும், திருநீரும், பஞ்சாட்சரமும் தான் அவன் ஆவணங்கள். ’மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பதற்கிணங்க பாண்டிய மக்கள் அனைவரும் சிவனன்பர் ஆயினர்.

அதைக் கண்டு சமணர்கள் சமணமதம் நசித்துவிடுமோ என்றஞ்சி பாண்டியனை ஒழித்து விட விக்கிரம பாண்டியன் காலத்தில் செய்தது போல் ஆபிசார ஹோமம் நடத்தினர்.  அதிலிருந்து  மிக உயரத்தோடு, அனல் கக்கும் கண்களோடு, குகை போன்ற வாயமைப்பு, முறம் போன்ற பற்கள், பருத்த தொந்தி, விரல் பருமன் ஒருமுடி இப்படியாக ஒரு  அரக்கன் தோன்றினான்.
நான் செய்யவேண்டியதென்ன?" என்று உறுமினான்.

நீசர்ப்பமாகமாறி நஞ்சைக் கக்கி சைவர்களான பாண்டியனையும், அவன் குடிகளையும் அழிக்கவேண்டும்" என  உத்தர விட்டனர் சமணர்கள்.

உடனே அரக்கன் பருத்த உடலுடன், விரித்த படத்துடன், அனல் போல் ஒளி வீசிக் கொண்டு பயங்கரமாய் சீறிக் கொண்டு, வெளியே நீட்டிய இரு நாக்குகளுடன் மதுரை நகர்நோக்கி விரைந் தான்.  மதுரை மக்கள் நடுநடுங்கி மன்னனிடம் முறையிட்டனர்.

மன்னன் விரைந்து வந்து சொக்கநாதரை வேண்டியபடி சர்ப்பத்தின் மேல்  கோலைவிட்டு எறிந்தான்.  மலைபோன்ற நாகத்திற்கு கம்பு ஒரு பிரமாதமா? கடித்துத் தின்று விட்டது.  வேந்தன் மீண்டும் மீண்டும் குத்துக் கம்புகளை வீசினான்.  உடனே அரவம் நஞ்சை ஆறாகப் பெருகும் அளவு கக்கியது. நஞ்சின் வேகம் தாங்காமல் மக்களும், மன்னனும் அன்று பாற்கடலில் தோன்றிய நஞ்சையுண்டு தேவர்களைக் காத்தவரே! நாகங்களையே ஆபரணங்களாக பூண்டவரே! இன்றொரு நாகம் தன் நச்சுப்புகையால் எங்களை எரிக்கின்றது! கல்யானையைக் கரும்பு தின்னச் செய்தவரே! ஊழிக்காலமோ என்னும்படி மதுரையை துவம்சம் செய்ய வந்த யானையை அழித்து என் பாட்டனாரைக் காத்தவரே! திரிபுரம் எரித்தவரே! காலனுக்குக் காலனே! மாரனை எரித்தவரே! தட்சனை வதைத்தவரே! திசைகளை ஆடையாய் தரிப்பவரே! செத்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு உயிர் கொடும்" என இறைவனைக் கூவி அழைத்து முறையிட்டனர்.

உடனே சொக்கநாதர் சித்தர் வடிவில் தோன்றி, சடை முடியிலிருக்கும் நிலவின் அமுத கிரணங்களால் நஞ்சைக் குளிர் வித்தார். அவர் நெற்றிக் கண்ணிற்கு முன் நாகம் எம்மாத்திரம்? நஞ்சற்ற நாகம் உயிர் துறந்து மலையாகி விட்டது.  அதுவே நாகமலை!

நகரில் எல்லைப் புறத்தில் நஞ்சு ஆறாக ஓடியதால் ஆல-வாய் எனப் பெயர் பெற்றது. (ஆலம்-நஞ்சு) நச்சையே  சந்திர ஒளியால் மதுரமான அமுதமாக்கி விட்டதால் மதுரை என்று பெயர் வந்தது.  பாண்டியனையும், ஜனங்களையும் ஆசீர்வதித்து விட்டு சித்தர் மறைந்தார்.  இடர் நீங்கிய மன்னனும், மக்களும் ஈசனின் அற்புதக் கருணையை பாடிப் போற்றினர்.

இந்த 28-ஆம் திருவிளையாடலை பயபக்தியுடன் படிப்பவருக்கும், கேட்பவருக்கும் விஷத்தினாலோ, விஷப் பிராணி களாலோ எந்தத் துன்பமும் ஏற்படாது.  சொக்கநாதர் அருள் பெற்று சுபீட்சமாய் வாழ்வர்.  வைரிகள் அழிவார்கள்.


இன்றும் சித்தருக்கு பூப்பந்தலிட்டு பலன் அடைந்தவர்கள் ஏராளம்.


இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.





giri facebook
 giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...



கருத்துகள் இல்லை