திருவிளையாடல் புராணம் - அங்கம் வெட்டுதல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
அங்கம் வெட்டுதல்
மதுரை நகரில் ஆயுதங்களில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்த நேரம் போக மீதிநேரம். ஆலயம் சென்று இறைவழிபாட்டிலேயே காலம் கழித்து வந்தார்.
அவரிடம் கற்றுத் தேர்ந்த மாணக்கர் அனேகர் நல்ல பதவிகளைப் பல இடங்களில் வகித்து வந்தனர். சித்தன் எனும் தீய மாணவன் ஒருவன். அவருக்கு எதிராகப் பயிற்சிப் பள்ளி அமைத்தான். அத்தோடு விட்டானா? ஆசிரியரின் பள்ளியிலிருக்கும் பல மாண வரை ஆசை காட்டி தன் பக்கம் இழுத்தான். ஆனால் ஆசிரியரோ இதொன்றையும் பொருட்படுத்தவில்லை!
ஒருநாள் ஆசிரியரின் மனைவியிடம் வந்து வம்புகள் செய்தான். அந்த அம்மையார் மனம் நொந்து இறைவனிடம் முறையிட்டாள். இப்படிப் பல நாட்கள் நடந்தது. கணவன் மனதை நோகவைக்க லாகாது என்ற கருத்தால் ஆசிரியரிடம் அம்மையார் இது பற்றிக் கூறவில்லை. ஒரு நாள் சித்தன் போக்கு அத்து மீறிவிட்டது. ஆலவாயன் பொறுப்பானா?
ஆசிரியரைப் போன்று உருமாறி சித்தனிடம் வந்து, சித்தா நான் வயோதிகன்; நீ வாலிபன்... ஆயினும் ஒரு சவால்; என்னைக் கத்திச் சண்டையில் நீ வென்று விட்டால் உனக்கு நான் அடிமை" என்றார்.
சித்தன் இதைக் கேட்டு சினம் கொண்டு ஆசிரியரைக் கொன்று விடும் எண்ணத்துடன் வாள் எடுத்து வந்தான். ஈசன் நினைத்தி ருந்தால் அரை நாழிகையில் அவனைக் கொன்றிருப்பார். ஆனால் லோக பாவனையாக வெகுநேரம் இடசாரி, வலசாரியாக சண்டை செய்தார். பின் கோபம் கொண்டு தீயவை பேசிய சித்தன் நாக்கைத் துண்டித்தார். நெஞ்சிலே ஒரு குத்து; அடுத்து கைகள், செருக்குக் கொண்ட சிரத்தையும் அறுத்தார். கூடியிருந்தோர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அனைவரும் பார்க்கையில் ஆசிரியரைக் காணவில்லை. எல்லோரும் திகைத்து ஆசிரியரின் இல்லம் வந்தனர்.
ஆசிரியர் எங்கே?" எனக் கேட்டனர். அவர் கோவிலிலிருந்து இன்னும் வரவில்லை" என்றார் ஆசிரியர் மனைவி. சித்தனோடு சண்டையிட்டு அவனை வெட்டிய கதையை அவர்கள் கூற அம்மையார் திகைத்தார். அதே சமயம் ஆசிரியரும் ஆலயத்திலிருந்து வந்துவிட்டார்.
என்ன கூட்டம் இங்கே" என அவர் வினவ, அம்மையாரும், அவர்களுமாய் நடந்ததைக் கூறினர் மீண்டும் கோவிலுக்கே ஓடி இறைவன் பாதங்களில் பணிந்து, என் பொருட்டு நீர் பாவம் செய்தீரா? என் குடும்பக் கவலையை நீர் ஏற்றீரோ? எனக்காகப் போர் செய்த உம்மேல் காயங்கள் பட்டனவா?" எனப் பலவாறு புலம்பினார். ஊரெல்லாம் இதே பேச்சு. அரசனுக்கும் இச்செய்தி எட்டியது.
உடனே குலோத்துங்கன் ஆசிரியரை யானைமேல் ஏற்றி வரச் செய்து ஆடை, ஆபரணங்களும், பலவித இரத்தினங்களும் அளித்து கௌரவித்தான்.
இந்த 27-ஆம் திருவிளையாடலை தினமும் பயபக்தியுடன் படிப்பவர்க்கும், கேட்பவருக்கும் எதிரிகளே இருக்கமாட்டார்கள். விளையாட்டுக்களில் வெற்றி காண்பார்கள்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



கருத்துகள் இல்லை