Recent Posts

சிவ புராணம் - ஜோதிர் லிங்கம் தோன்றுதல்

சிவ புராணம்

ஜோதிர் லிங்கம் தோன்றுதல்



ஒரு சமயம் நைமிசாரண்ணியத்திலிருந்த முனிவர்கள் சூதமுனிவரைப் பணிந்து, பரமபாகவத சிகாமணியே, தங்களிடம் ஒரு கோரிக்கை. தங்கள் திருவாக்கிலிருந்து அமுதமாகிற பகவத் விஷயங்களை எத்தனை எத்தனையோ கேட்டுப் பருகி நாங்கள் கிருதார்த்தர்களாகியுள்ளோம். புராணக் கடலாகிய தங்கள் பிரவசனங்களைக் கேட்கக் கேட்க, மேலும் அவற்றைக் கேட்டு ஆனந்திக்க வேண்டுமென்ற ஆவலே எழுகின்றது. கைலாசநாதனான சிவபெருமானுடைய தத்துவத்தையும், அவருடைய அனேக திரு அவதாரங்கள் பற்றிய அற்புத விருத்தாந்தங்களையும் அறிய விருப்பமுடையவர்களாயிருக்கிறோம். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூவகைத் தொழில்களுள் அழித்தலுக்குக் காரணகர்த்தாவாயிருக்கிற ஈசன், சிருஷ்டிக்கு முன்பு எவ்வாறு இருந்தார்; சிருஷ்டியின்போது  எவ்வாறு இருந்தார்; பிரளயத்தின் போது எவ்வாறு இருந்தார் என்பது போன்ற விஷயங்களை எங்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவரை வழிபட்டு அருட்கடாக்ஷம் பெறும் வழிமுறைகளையும் விளக்க வேண்டும்", என்று வேண்டினர்.

முனிவர்களின் இந்தக் கோரிக்கையைக் கேட்டு சூதமுனிவர் ஆனந்தப் பரவசமாகிச் சொல்லத் தொடங்கினார்.

முனி சிரேஷ்டர்களே! உங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய நான் எப்போதும் காத்திருக்கிறேன். நீங்கள் இப்போது என்னைக் கேட்டதுபோல, முன்பு ஒரு  சமயம் நாரதர் தம் பிதாவான பிரம்மதேவனிடம் கேட்டார். நான்முகனும் அவருக்கு அந்த விருத்தாந்தங்களைச் சொன்னார்.

சகல லோகங்களிலும் சஞ்சரித்து வந்தபோது நாரதர், சிவபெருமானின் அனேகவித திருஉருவங்களைத் தரிசிக்க நேர்ந்தது. அந்த அந்தக் காலங்களில் ஈசன் அவ்வாறு  அவதாரம் செய்ய நேர்ந்ததன் ரகசியங்களை அறிய எண்ணம் கொண்டு தம் பிதாவான பிரம்மதேவனிடம் வந்தார். அவரைப் பணிந்து வணங்கி, தந்தையே ! பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனின் மகிமை அனைத்தும், தங்களால் சொல்லக் கேட்டிருக்கிறேன். லோக சஞ்சாரம் செய்துவரும் போது, சிவபெருமானின் அனேக வித திரு உருவங்களைத் தரிசித்தேன். அவருடைய அவதார ரகசியங்களை அறிய ஆவலாயிருக்கிறது. தாங்கள் தான் எனக்கு அவற்றை விவரித்துக் கூறவேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

நான்முகனும் பெருமகிழ்ச்சி அடைந்தவராய், நாரதா! சிவபெருமானின் மகிமைகளைக் கேட்ட மாத்திரத்திலேயே சகல பாபங்களும் நசித்துப் போய்விடும் எனச் சொல்லப் பட்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட ஈசனது தத்துவத்தை விஷ்ணுவினாலும் என்னாலும்கூட பூரணமாக அறிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் எனக்குத் தெரிந்தவரை உனக்குக் கூறுகிறேன்" என்று சொல்லி அந்த விருத்தாந்தங்களை எடுத்துச் சொன்னார், நான்முகன். அவற்றை இப்போது நானும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கேட்டு ஆனந்தமடையுங்கள்" என்று சூதர், சிவபெருமானது அற்புத அவதார காரணங்களைக் கூறத் தொடங்கினார்.

ஞானிகள் ஞானக் கண்கொண்டு பார்த்து மகிழும் பிரம்மம் என்பது அழிவற்றதாகும். அது ஸ்தூலமும் அல்ல; சூக்க்ஷமமும் அல்ல; சத்தியத்தையும் அறிவையும் உடையது அது. எல்லாம் அது; அதுவே எல்லாம்.

அப்பிரம்மத்திற்கு ஒரு இச்சை உண்டாயிற்று. அப்போது பிரம்மத்தினிடமிருந்து பிரகிருதி எனப்படும் மாயாதேவி தோன்றினாள். எட்டுக் கைகளும் பூரண சந்திரனின் பொலிவு கொண்ட முகவிலாசமும் உடைய அவள், நிகரற்ற அழகோடு அனேகவித ஆபரணங்களை அணிந்திருந்தாள். அவள் தோன்றிய அதே நேரத்தில் பிரம்மத்தினிடமிருந்து அழகிய புருஷனும் தோன்றினான்.

மாயாதேவியும், புருஷனும் ஒன்று சேர்ந்து தாங்கள் இருவரும் தோற்றுவிக்கப்பட்டதன் காரணமென்னவென்று ஆலோசித்து கொண்டிருக்கையில் ஓர் அசரீரி கேட்டது.

உங்கள் சந்தேகத்துக்கான விளக்கம் தெரிய வேண்டு மானால் தவம் செய்யுங்கள்."

அசரீரி வாக்குப்படி இருவரும் கடுமையான தவம் மேற்கொண்டார்கள்.

வெகு காலம் சென்றது. ஒரு நாள் மாயாதேவியும் மாய புருஷனும் தங்கள் யோக நிஷ்டையிலிருந்து விழித்துக் கொண்டனர்.

கணக்கற்ற வருடங்கள் தவம் செய்திருப்பதைக் கண்டபோது அவர்களுக்கே ஆச்சரியமாயிருந்தது. அப்போது அவர்கள் தேகத்திலிருந்து ஜலப்பிரவாகமெடுத்தது. அப்பிரவாகம் சகல லோகங்களிலும் வியாபித்து எங்கும் ஒரே ஜலமயமாக நின்றது. மிகவும் களைப்பு அடைந்த அம்மகா புருஷன், பிரகிருதியோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு அனேக காலம் ஜலத்திலே நித்திரை செய்தான். அது முதல் அவனுக்கு நாராயணன் என்ற பெயர் விளங்கலாயிற்று. பிரகிருதி, நாராயணி என்ற பெயரோடு விளங்கினாள்.

பின்னர், பிரகிருதியிடமிருந்து மாறத் என்பது உண்டாயிற்று. மாறத்தினிடத்தில் ஸத்வம், தாமஸம், ராஜஸம் என்னும் முக்குணங்களும் உண்டாயின. அவற்றிலிருந்து சப்தம், ஸ்பரிஸம், ரூபம், ரஸம், கந்தம் ஆகிய பஞ்சதன் மாத்திரைகள் உருவாயின. இதிலிருந்து ஆகாசம், வாயு, தேயு, அப்பு, பிருதிவி எனப்படும் பஞ்ச பூதங்களும் உண்டாயின. பஞ்ச பூதங்களிடமிருந்து கர்மேந்திரியங்களான வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபஸ்தம் ஆகிய ஐந்தும் ஞானேந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவையும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக் கரணங்கள் நான்கும் உண்டாயின.

இந்த இருபத்து நான்கு தத்துவங்களையும் தன் சுவாதீனம் செய்து கொண்டு நாராயணன் ஜலத்திலே தூங்கும் போது, அவரது நாபியிலிருந்து அழகிய தாமரை மலர் ஒன்று தோன்றியது. எண்ணற்ற இதழ்களோடு கூடியதும் அனேக யோசனை அகலமும், உயரமும் உடையதாயும் நறுமணத்தோடு கூடியதுமான அம்மலரிலிருந்து ஹிரண்ய கர்ப்பரான நான்முகன் அவதரித்தார்.

மாயை காரணமாகப் பிரம்மதேவனுக்குத் தாம் யார் என்பதும், எங்கிருந்து வந்தோம் என்பதும், என்ன காரியத்துக்காகத் தாம் தோன்றியுள்ளோம் என்பதும் விளங்க வில்லை. எப்படியும் தம்மைத் தோற்றுவித்தவர் யார் என்பதைக் கண்டு கொள்ளவேண்டுமென்ற ஆவலில் அவர் தாமரை மலரின் அடிப்பாகத்திற்குக் காம்பின் வழியாக இறங்கத் தொடங்கினார்.

கீழே இறங்கிச் செல்லச் செல்ல, முடிவே இல்லாது பயணம் நீண்டது. எத்தனையோ வருட காலம் சென்றது. பிரம்மதேவன் இன்னமும் கீழே இறங்கிச் சென்று கொண்டிருந்தார். அவருக்குக் களைப்பு மேலிட்டது. கீழே செல்வதை நிறுத்தி விட்டு மேற்புறமாக ஏறத் தொடங்கினார். அங்கும் அவர் நாடிய காரியம் நிறைவேறவில்லை. இதழ்களுக்கிடையில் சுற்றிச் சுற்றி வந்தது தான் மிச்சம். யாரையும் காணவில்லை. அவர் மிகவும் சோர்வடைந்து மூர்ச்சையாகி விழுந்தார். அப்போது, தவம் செய்தாயானால் நீ விரும்பும் காரியம் பூர்த்தியாகும்" என்று ஓர் அசரீரி எழுந்தது.

பிரம்மதேவன் பன்னிரண்டு வருடங்கள் தவம் செய்தார். அதன் முடிவில் சங்கு சக்ர பீதாம்பரதாரியாய் கோடி சூரியப் பிரகாசத்தோடு நாராயணன் அவருக்குக் காட்சி தந்தார்.

அவரைப் பார்த்ததும் நான்முகனுக்கு ஒன்றும் விளங்க வில்லை. நாராயணனைப் பார்த்து, நீ யார்?" என்று கேட்டார்.

வத்ஸ! உன்னைத் தோற்றுவித்தவன் நானே. ஸர்வ வியாபியான என்னை விஷ்ணு என்பர். உலக சிருஷ்டியின் நிமித்தம் உன்னைத் தோற்றுவித்தேன்" என்றார் நாராயணன்.

நான்முகன் ‘கலகல’ வென்று சிரித்தார்.

நன்றாயிருக்கிறது உன் பேச்சு. சிருஷ்டித் தொழில் காரணமாக நான் உண்டாயிருக்க, என்னுடைய சம்பந்தம் இல்லாது நீ தோன்றியிருக்க முடியாது. அப்படியிருக்க என்னைப் பார்த்துக் ‘குழந்தாய்’ என்று கூப்பிட்டாயே, உனக்கு எவ்வளவு துணிவு இருக்க வேண்டும்?" என்றார், நான்முகன்.

நான்முகனின் வார்த்தைகளைக் கேட்டு, மோகனப் புன்னகை செய்தபடி, நான்முகா, மாயையால் அலைப்புண்டிருக்கும் நீ, உண்மையை உணராது பேசுகின்றாய். உன்னை உண்டாக்கியவன் நானே. இருபத்து நான்கு தத்துவங்களும் என்னுள் அடக்கம் என்பதை அறிந்து கொள். நான் இன்றி நீ இல்லை" என்றார் விஷ்ணு.

விஷ்ணுவின் வார்த்தைகளை பிரம்மதேவன் ஏற்கவில்லை. தம் காரியத்துக்கு இடையூறு விளைவிக்க வந்திருப்பதாகவே அவரை எண்ணினார். அதனால் கடுமையான கோபம் அவரிடம் எழுந்தது. விஷ்ணுவிடம் சண்டைக்குப் போய் விட்டார். அப்போது இருவருக்குமிடையே கண்ணைப் பறிக்கும் ஜோதி ஒன்று தோன்றியது.

திடுக்கிட்ட இருவரும் விலகி நாற்புறமும் பார்த்தனர். அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. கோடி சூரியப் பிரகாசத்தோடு பிரம்மாண்டமான லிங்கம் ஒன்று அவர்களுக் கிடையே நிற்பது தெரிந்தது.

அப்போது விஷ்ணு பிரம்மதேவனைப் பார்த்து, "நான்முகா, நமது பூசலை சிறிதுநேரம் நிறுத்திக் கொள்வோம். இப்போது நம்மிடையே மூன்றாவது ஆசாமி ஒருவன் தோன்றியிருக்கிறான். அவன் யார் என்பதை நாம் முதலில் கவனிப்போம்" என்றார்.

இருவரும் அந்த ஜோதி லிங்கத்தைச் சுற்றிச் சுற்றி வந்தார்கள். அவர்களுக்குக் குழப்பமாகி விட்டது. அடி நுனி தெரியாது, பிரம்மாண்டமாக நிற்கும் அந்த லிங்கம் யார் என்பதை அறிய  முடியாமல் விழித்தார்கள்.

நான்முகா!" என்று அழைத்தார் விஷ்ணு. நீ ஹம்ஸமாக மாறி உயரே பறந்து சென்று இதன் நுனி எங்கிருக்கிறது என்பதை அறிந்து வா. நான் பாதாளலோகம் வரை சென்று இதன் அடிப்பாகத்தைத் தெரிந்து வருகிறேன்" என்றார்.

அந்த க்ஷணமே விஷ்ணு, வெள்ளைப் பன்றியாக உருவெடுத்தார். மிகவும் பயங்கரத் தோற்றமுடைய அவ்வராகம் பூமியைக் குடைந்து கொண்டு கீழே சென்றது. அது முதல் அவருக்கு சுவேத வராகர் என்றும், அந்தக் கல்பத்துக்குச் சுவேத வராகக் கல்பம் என்றும் பெயர் விளங்கலாயிற்று.

விஷ்ணு பன்றியாகி பூமியினுள் சென்றதும் பிரம்மதேவன் ஹம்ஸமாகி உயரே செல்லத் தொடங்கினார்.

ஆயிரம் வருடங்கள் சென்றன. விண்ணுலகம் நோக்கிச் சென்ற பிரம்மதேவனும், பாதாள லோகம் சென்ற விஷ்ணுவும் இன்னமும் லிங்கத்தின் நுனியையும் அடியையும் காண முடியாது சென்று கொண்டிருந்தனர். அதற்குமேல் அவர்களால் செல்ல முடியவில்லை. தங்கள் முயற்சியைக் கைவிட்டு மிகவும் களைத்துப் போய்த் திரும்பினர். தங்கள் சக்தியைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொண்டிருந்த இருவரும் தங்களுக்கும் மேலாக ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து, மமதையை விட்டுப் பிரார்த்திக்கத் தொடங்கினர்.

ஸ்வாமி, தாங்கள் யார் என்பதை நாங்கள் அறியோம். தாங்கள் எக்காரணம் பற்றி இந்த ரூபம் கொண்டீர்கள் ? தாங்கள் எங்களுக்குத் தோற்றம் அளித்து அருட்கடாக்ஷம் புரிய வேண்டும்" எனப் பிராத்தித்தனர்.

அப்போது ‘ஓம்’ என்ற சப்தம் தோன்றியது. எங்கிருந்து அந்தச் சத்தம் வருகின்றது என்பதை அறிய முடியாது திகைத்து நிற்கும்போது, எதிரில் பிரம்மாண்டமாக நிற்கும் அந்த லிங்கத்தின் தென்பாகத்தில் முதலாவதும் அழிவில்லாத துமான அக்ஷரத்தையும், அதன் வடபாகத்தில் உகாரத்தையும், அவ் விரண்டிற்கும் இடையில் மகாரத்தையும், உயரத்தில் ‘ஓம்’ என்ற சப்த விசேஷத்தையும் கண்டனர். முதலெழுத்தாகிய அகாரம் சூரியமண்டலம் போலவும், இரண்டாவது எழுத்தாகிய உகாரம் அக்கினியின் பிரகாசம் போலவும், நடுவிலிருக்கும் மூன்றாவது எழுத்தாகிய மகாரம் சந்திரமண்டலம் போலவும் விளங்க அதன்மேல் ஸ்படிகம் போல் ஒளியோடு கூடிய பரம்பொருளைக் கண்டனர். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதியாச்சரியமான அழகோடும் ஐந்து முகங்களோடும், பத்துக் கரங்களோடும் அனேகவித ஆபரணங்களை அணிந்துகொண்டு கம்பீரமாகப் பரம்பொருளாகிய சிவபெருமான் ஸர்வ லக்ஷணங்களோடு அவர்கள் முன்பு தோன்றினார்.




இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...




கருத்துகள் இல்லை