Recent Posts

சிவ புராணம் - சிவ தத்துவம்

சிவ புராணம்

சிவ தத்துவம்




ஜோதிர் லிங்கத்தினின்று வெளிப்பட்டுக் காட்சி தந்த சிவபெருமானைக் கண்டதும் நான்முகனும் விஷ்ணுவும் கை கூப்பி அவரை வணங்கினர்.

பிரபோ, தாங்கள் யார்? எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லையே. கருணை கூர்ந்து எங்களுக்கு விளக்க வேண்டும்" என்று பணிவோடு வேண்டினர்.

அவர்களைப் பார்த்துப் புன்னகை செய்த ஈசன் சொல்லலுற்றார்.

உங்கள் இருவருக்கும் மூலகாரணம் நான். சிவம் என்றும் பிரம்மம் என்றும் நான் அழைக்கப்படுவேன். அனைத்துமே என் வடிவம்தான். என் சம்பந்தமின்றி எதுவும் உண்டாவதில்லை, அண்ட சராசரங்களும் என்னால் தோற்றுவிக்கப் பட்டனவையே."

இவ்வாறு தெரிவித்த ஈசன், கை கூப்பியபடி  நிற்கும் நான்முகனைப் பார்த்து, பிரம்மதேவா உலக சிருஷ்டிக்காக என் ஆக்ஞையால் விஷ்ணு உன்னைத் தோற்றுவித்தார்" என்றார். பின்னர், விஷ்ணுவைப் பார்த்து, நாராயணா, சிருஷ்டிகளின் பாதுகாப்புக்காக நீ என்னால் உண்டாக்கப் பட்டாய் என்பதை அறிந்துகொள். என்னுடைய இன்னொரு அம்சமே ருத்திரன். அவன், அழிவுக்குக் காரணமானவன். பிரகிருதியிடமிருந்து பிரம்மாணி என்னும் சக்தி தோன்றிப் பிரம்மனை அடைவாள். அவ்வாறே லக்ஷ்மி தோன்றி உன்னைச் சேர்வாள். காளி ருத்திரனை அடைவாள். நீங்கள் மூவரும் உங்கள் சக்தியரோடு சேர்ந்து சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம் எனப்படும் மூவகைக் காரியங்களையும் கவனித்து வருவதற் காவே என்னால் தோற்றுவிக்கப்பட்டவர்கள்" என்றார்.

அப்போது விஷ்ணு மறுபடியும் ஈசனை வணங்கி, பிரபோ! எங்களைத் தோற்றுவித்ததற்கான காரணங்களை விளக்கிக் கூறினீர்கள். இருப்பினும் நாங்கள் என்ன செய்யவேண்டும், எப்படிச் செய்யவேண்டும், அதற்கான சக்தியை நாங்கள் எவ்வாறு அடைவோம்? போன்றவற்றை விவரிக்க வேண்டுகிறோம்" என்று பிரார்த்தித்தார்.

அவர் வார்த்தைகளால் மகிழ்ச்சியுற்ற ஈசனும் ஓம் தத்வமசி" எனப்படும் மகா வாக்கியத்தையும், மிருத்தியுஞ் ஜயம், பஞ்சாக்ஷரம், சிந்தாமணி, தக்ஷிணாமூர்த்தி மந்திரம் ஆகிய மகாமந்திரங்களையும், விஷ்ணுவுக்கு உபதேசித்தார். பின்னர், சுவாசமார்க்கமாக வேதத்தையும் அவருக்கு உபதேசித்தார். அவற்றைக் கிரகித்து விஷ்ணுவும் சுவாச மார்க்கமாகவே நான்முகனுக்கு உபதேசம் செய்தார்.

பிறகு மறுபடியும் எதிரிலிருக்கும் ஈசனைப் பணிந்து, பிரபோ, தங்களுடைய தரிசன பாக்கியத்தால் கிருதார்த்தர்களான நாங்கள், எக்காலத்தும் தங்களிடம் இடைவிடாத பக்தி கொண்டிருக்குமாறு அருள வேண்டும். தங்களை எந்த விதமாகத் தியானித்தால் தாங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்" என்று கேட்டார் விஷ்ணு.

நாராயணா! இப்போது நான் உங்களுக்கு எவ்வாறு காட்சி தருகின்றேனோ, அதே தோற்றத்தில் லிங்கத்தில் இருப்பதாக எண்ணித் தியானம் செய்தால் போதும். என்னைத் தியானிப்பவர்களுக்கு நான் சகல காரிய சித்தியையும் அளிப்பேன். பிரம்மன் என் வலது பக்கத்திலும், விஷ்ணுவாகிய நீங்கள் என் இடது பக்கத்திலும், ருத்திரன்  இதயத்திலுமாக இருப்பீர்கள். மூவரும் என் வடிவமேயன்றி வேறு அல்ல. சிருஷ்டி, ஸ்திதி, சம்காரம் ஆகிய முத்தொழில்களும் நடைபெறவே, நான் மூவராக பிரிந்திருக்கிறேன். 

நீங்கள் சிவ ரூபத்திலிருந்து உண்டானவர்கள். சத்தியமாயும், ஞானரூபமாயும், அழிவு என்பதே இல்லாததுமான என்னுடைய சிவரூபமே ஆதி காரணம் ஆகும். உங்களால் உண்டாக்கப்படும் உலகங்களுக்கு சுகம் ஏற்படவும், உங்களைப் பார்த்து உலகத்தார் பூஜிக்கவும் நீங்கள் இந்த லிங்க ரூபத்தை என்றும் குன்றாத பக்தியோடு பூஜித்து வாருங்கள். என் அருளால் உங்களுக்குச் சர்வ வல்லமைகளும் உண்டாகும்."

இவ்வாறு கூறிய ஈசன், அவர்களுக்கு அனேக வரங்களைக் கொடுத்து அனுக்கிரகம் செய்துவிட்டு மறைந்தார்.



இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை