Recent Posts

சிவ புராணம் - உலகச் சிருஷ்டி

சிவ புராணம்

உலகச் சிருஷ்டி



சிவபெருமானுடைய அனுக்கிரகத்தால் சர்வ சக்தி களையும் பெற்ற பிரம்மதேவன், தம்முடைய  பணியைச் செய்ய, பிரளயமாக எங்கும் வியாபித்து நிற்கும் ஜலத்தை அடைந்தார். முதலில் தம்மைத் தோற்றுவித்த விஷ்ணுவைத் தியானித்துப் பின்னர் ஈசனை மனத்தால் அஞ்சலி செய்து தமது சக்தியை நீரிலே விட்டார். அந்த க்ஷணமே அது இருபத்து நான்கு தத்துவங்களோடு கூடிய அண்டமாகத் தோன்றியது. அசைவு ஏதுமின்றி ஜடமாக இருந்த  அதைக் கண்டதும் பிரம்ம தேவன் பெரிதும் வருத்தம் கொண்டு நாராயணனைக் குறித்துப் பன்னிரண்டு வருடங்கள் கடுமையாகத் தவம் செய்தார்.

நான்முகனின் தவத்தால் மகிழ்ச்சியுற்ற விஷ்ணு, அவர் முன்பு தோன்றி, நான்முகா! உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று கேட்டார்.

நாராயணனைப் பல விதங்களிலும் தோத்தரித்த பிரம்ம தேவன், பிரபோ ! ஈசன் ஆக்ஞைப்படி உலக சிருஷ்டியைத் தொடங்கிய நான், என் சக்தியைக் கொண்டு இந்த அண்டத்தைத் தோற்றுவித்தேன். ஆனால் இதுவோ உயிரற்ற ஜடமாக இருக்கிறது. தாங்கள்தான் இதற்கு உயிரூட்ட வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார்.

பிரம்மதேவனின் பிரார்த்தனைக்கு இணங்கி நாராயணனும் அந்த அண்டத்துள் பிராணவாயுவாகப் பிரவேசித்தார். உடனே அண்டம், பாதாள லோகம் முதல் சத்திய லோகம் வரை வியாபித்துப் பிராணனை உடையதாக ஆயிற்று. பெரு மகிழ்ச்சியுற்றவராய் நான்முகன் சிருஷ்டியைத் தொடங்கினார்.

மனத்தால் சிலரைத் தோற்றுவித்தார் பிரம்மதேவன். மானஸப் புத்திரர்களான அவர்களோ ஊர்த்துவரேதஸாக விளங்கினார்கள். அதாவது தங்கள் சக்தியை வீணடிக்காமல் மனத்தைக் கட்டுப்படுத்தி ஞான மார்க்கத்தில் ஈடுபட்டவர்களாய் அவர்கள் விளங்கினார்கள். அதைக் கண்ட நான்முகனும் மறுபடியும் சிலரை உண்டாக்கினார். அவர்களும் இச்சையற்றவர்களாய், முன்னால் தோன்றியவர்களைப்போல் பகவத் தியானத்தில் லயித்து விட்டார்கள்.

பிரம்ம தேவனுக்கு பெரும் குழப்பமாகிவிட்டது. உலக சிருஷ்டி காரணமாகத் தம்மால் தோற்றுவிக்கப்பட்டவர்கள், அப்பணியில் ஈடுபடாது, ஞானமார்க்கத்தில் இறங்கி  விட்டனரே என மிகவும் துக்கித்தார். அப்போது சிவனுடைய அம்சமாகிய ருத்திரன் அவர் முன்பு தோன்றினார்.

நான்முகா, விசனம் ஏன்? நான் உனக்குத் துணை இருக்கிறேன்!" என்றார் ருத்திரன்.

பிரம்மதேவன் அவரை நோக்கிக் கரம் கூப்பி, பிரபோ ! எனக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும். முதலில்  உண்டாக்கப் பட்டவர்கள் ஞான மார்க்கத்தில் சென்று விட்டனரே என்று மீண்டும் சிலரைத் தோற்றுவித்தேன். அவர்களும் எனக்குப் கட்டுப்பட மறுத்து, ‘பகவானைத் தியானிக்கவே தங்களுக்கு விருப்பம்’ எனக் கூறிவிட்டனர். சிருஷ்டியில் இடையூறு நேராது அனுக்கிரகிக்க வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

கவலையை விடுத்துச் சிருஷ்டியைத் தொடங்கலாம். இனி இடையூறு ஏதும் நேராது" என்று அருளிய ருத்திரன் கைலாசம் திரும்பினார்.

பின்னர், நான்முகன் மறுபடியும் ஈசனைத் தியானித்து சிருஷ்டியைத் தொடங்கினார். சப்த ரிஷிகளையும் தோற்று வித்தார். தமது மடியிலிருந்து நாரதரை உண்டாக்கினார். தமது நிழலிலிருந்து கர்த்தம ரிஷியை தோன்றச் செய்தார். பிரம்மனின் பெருவிரலிருந்து தக்ஷப் பிரஜாபதி தோன்றினார்.

சப்தரிஷிகளில் ஒருவரான பிருகு முனிவரிடத்தில் மரீசி உண்டானார். மரீசி, காசியபரைத் தோற்றுவித்தார். காசியபர் மூலம் தான் உலகம் விருத்தி அடைந்தது.

தக்ஷப் பிரஜாபதிக்கு அறுபது பெண்கள் பிறந்தனர். அவர்களுள் பதின் மூன்று பேரைக் காசியபருக்கு மணம் செய்து கொடுத்தார். அவர்களுக்குத் தேவர்கள், அசுரர்கள் முதலானோர் பிறந்தனர். இன்னும் விருக்ஷங்களும், பக்ஷிகளும், சர்ப்பங்களும், பர்வதங்களும் அவர்களிடத்தில் உண்டாகி உலகெங்கும் வியாபித்தன.


இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை