Recent Posts

சிவ புராணம் - கோதாவரி பிரபாவம்



சிவ புராணம்
கோதாவரி பிரபாவம்




ஒரு சமயம் கௌதம முனிவர், தம் பத்தினி அகல்யையுடன் பிரம்மகிரியில் அகண்ட தவம் ஒன்று செய்தார். அப்போது பயங்கர வறட்சி ஏற்பட்டு உலக மக்கள் மிகவும் கஷ்டப் பட்டனர். குடிக்க நீர் கிடைக்காது அவர்கள் வருந்தினர்.

மக்கள் படும் துன்பத்தைக் கண்ட கௌதமர் அவர்களுக்கு உதவ வேண்டுமென்று வருண தேவனை ஜபித்தார். அவர் ஜபத்தால் மகிழ்ச்சி அடைந்த வருணன், அவர் முன்பு தோன்றி, அவர் கோரும் வரம் என்ன"வென கேட்டான். முனிவர், மக்களுக்கு நன்மை உண்டாக மழை பொழிய வேண்டுமென்று வேண்டினார்.

முனிசிரேஷ்டரே! பகவானின் ஆக்ஞைக்குட்பட்டே நான் நடந்து வருகிறேன். அவர் மழை பெய்யாதிருக்கும்படி சொல்லி யிருக்க, அவர் வார்த்தையை மீறி நடப்பது என்னால் முடியாத காரியம். வேறு ஏதாகிலும் கேளுங்கள்" என்றான்.

வருணதேவா, உலக மக்களுக்கு நன்மை ஏற்படும் பொருட்டே பகவான் என் போன்ற முனிவர்களுக்கும் ஞானி களுக்கும் தவம் முதலான கர்மங்களை நியமித்திருக்கிறார். பிறர் படும் துன்பத்தைக் கண்டு நாங்கள் எவ்வாறு பொறுத்திருக்க முடியும்? கற்பக விருக்ஷமும் சத்ஜனங்களும் ஒன்றாகக் கருதக் கூடியவர்கள். பிறருக்கு ஏற்படும் துக்கத்தை நீக்க முயற்சிக்க வேண்டியது சத்ஜனங்கள் கடமையாகும். இப்பூவுலகம் முழுமையும் ஆதிசேஷன் ஒருவனால் மட்டுமே தாங்கப்பட்டு வருவதாக நினைக்க வேண்டாம். பிறர் துயரைத் துடைக்க முயற்சிக்கும் எத்தனையோ புண்ணியாத்மாக்களும் சேர்ந்தே தாங்குகின்றனர். ஆகவே, எனக்கு வேறு எதுவும் வேண்டாம். மக்களுக்குக் குடிக்க நீர் வேண்டும். என் பேரில் கருணை கொண்டால் எனக்கு அந்த உதவி செய்யலாம்" என்றார் முனிவர்.

கௌதமரின் வார்த்தைகளால் சந்தோஷமடைந்த வருணன், முனிவரே, உங்கள் விருப்பப்படியே நடக்கும். ஒரு குளம் வெட்டுங்கள். அதில் நீர் நிறைந்திருக்கும், எடுக்க எடுக்க நீர் வற்றாதிருக்கும். அக்குளம் சிறந்த புண்ணிய தீர்த்தமாக உங்கள் பெயரால் கௌதம தீர்த்தம் என்றே விளங்கி வரட்டும். அதன் கரையில் செய்யப்படும் சத்காரியங்களின் பலன் அனந்தமாகப் பெருகும்" என்று அருளி மறைந்தான்.

கௌதம முனிவருக்கு வருணதேவன் அனுக்கிரகம் செய்த விஷயம் நாலா பக்கங்களிலும் பரவியது. அதைக் கேட்ட முனிவர்கள் மிகுந்த களிப்போடு கௌதம முனிவரின் ஆசிரமத்துக்கு வந்து கூடினர். அந்த ஆசிரமத்தில் செய்யப் படும் தவம் சிறந்த பலனை அளிக்கக்கூடும் என்றிருக்கும் போது அவர்கள் அந்த இடத்தைவிட்டு வேறு இடம் செல்வார்களா?

இது இப்படியிருக்க, ஒரு சமயம் கௌதமரின் சிஷ்யர்கள்  நீர் கொண்டுவரத் தடாகத்துக்கு வந்தனர். அங்கே ரிஷி பத்தினிகள் பலர் கூடியிருந்தனர். அவர்கள் கௌதமரின் சிஷ்யர்களை நீர் எடுக்கவிடவில்லை. ‘தங்கள் காரியங்கள் அனைத்தும் முடிந்து கரையேறிய பிறகே அவர்கள் நீர் எடுக்கலாம்’ என்று தடுத்தனர். ஸ்திரீகளை எதிர்த்து நீர் எடுக்க விரும்பாத சிஷ்யர்கள், ஆசிரமம் திரும்பி அகல்யையிடம் நடந்ததைத் தெரிவித்தனர். அகல்யை, சிஷ்யர்களுடன் தடாகத்துக்கு வந்து, அந்த பெண்கள் செய்தது சரியல்ல என்று கடிந்து பேசி, சிஷ்யர்களை நீர் எடுத்துச் செல்லுமாறு செய்தாள்.

சிஷயர்களுக்கு அகல்யை பரிந்து கொண்டு பேசியது ரிஷி பத்தினிகளுக்கு பொறுக்கவில்லை. தங்கள் கணவன்மார்களிடம் அகல்யை வேண்டுமென்றே தங்களை நிந்தித்துப் பேசினாள் என்றும், குளத்து நீரை அவள் எடுத்த பின்னரே மற்றவர் உபயோகிக்கலாமென்று கண்டித்தாள் என்றும் சொன்னார்கள்.

மகாயோகீஸ்வரரான கௌதமரின் பத்தினியான அகல்யை ஒருபோதும் அவ்வாறு நடந்து கொள்ளமாட்டாள் என்று முனிவர்கள் எண்ணினர். மேலும் அனைவரின் உபயோகத்துக் காகத்தானே கௌதமர் வருணனை தியானித்து  நீர் கிடைக்கப் பெற்றார்? ஆகவே, அவர்கள் அந்தக் குற்றச்சாட்டைக் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை.

இது முனி பத்தினிகளுக்கு மேலும் ஆத்திரத்தை மூட்டி விட்டது. எப்படியாவது ஒரு விரோதத்தை உண்டாக்கி விடுவது என்று சங்கல்பித்துக் கொண்டார்கள். தினமும் கௌதமரின் சிஷ்யர்கள் வந்ததும் அவர்களைப் பரிகாசப் படுத்தி நீரை எடுக்க விடாது அனுப்பி வந்தனர். சிஷ்யர்களும் ஒவ்வொரு நாளும் ஆசிரமம் திரும்பி அகல்யையை அழைத்து வந்தே நீர் கொண்டு சென்றனர். அவர்கள் செய்கை பெண்களின் குண நலன்களுக்கு ஏற்றதல்ல என்பதை எடுத்துச் சொல்லி அகல்யை கடிந்து கொள்வாள். முனி பத்தினிகளும் அன்றாடம் தங்கள் கணவர்களிடம் அகல்யையைப் பற்றி ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லி வந்தனர்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். அதே போல முனி பத்தினிகளின் குற்றச்சாட்டைக் கேட்டுக் கேட்டு, ஒருவேளை அப்படியிருக்குமோ என்று சந்தேகிக்கத் தொடங்கினர். அதற்கேற்ப கௌதமரிடம் விரோத மனப்பான்மை கொண்டிருந்த ஓரிருவர் அந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தூபம் போட்டனர்.

ஒருநாள் முனிவர்கள் அனைவரும் ஒன்று கூடி இப்பிரச்சினையைப் பற்றி விவாதித்தனர். ‘தன்னால் ஏற்பட்ட குளத்தில் வேறு எவரும் நீரெடுக்கக் கூடாது என்று அகலிகை மூலம் மறைமுகமாக எதிர்ப்பு காட்டுகிறார் போலிருக்கிறது’ என்ற முடிவுக்கு வந்தனர், முனிவர்கள். கௌதமரை அந்த ஆசிரமத்திலிருந்து எப்படியாவது விரட்டி விடுவதென்றும், அப்போதுதான் அவர்களால் நிம்மதியாக வாழ்க்கை நடத்த முடியுமென்றும் தீர்மானித்தனர்.
கௌதமரை விரட்டுவதென்றால் சாமானியமா? அவர்கள் விநாயகரை ஆராதித்தனர். அருகம்புற்களால் அவரை அர்ச்சித்து வழிபட்டனர். அவர்கள் பூஜைக்கு மகிழ்ந்து விநாயகரும் தரிசனம் கொடுத்தார்.

விக்கினராஜா! கௌதமர் ஆசிரமத்தில் இருப்பது எங்களுக்குப் பலவிதங்களிலும் தடையாயிருக்கிறது. ஆகவே அவரை ஆசிரமத்திலிருந்து வெளியேற்ற வகை செய்ய வேண்டும்" என்று வேண்டினர் முனிவர்கள்.

முனி சிரேஷ்டர்களே,  என்ன காரியம் செய்தீர்கள்? உங்கள் கோரிக்கை நியாயமானது அல்ல. இதனால் உங்களுக்குத்தான் துன்பங்கள் நேரிடும். மகானுபாவரான கௌதமருக்கு இடையூறு செய்ய எண்ணினால் நீங்கள்தான் அபசாரம் செய்தவர்களாவீர்கள். வேறு ஏதாவது கேளுங்கள், தருகிறேன்" என்றார் விநாயகர்.

முனிவர்களோ பிடிவாதமாகத் தாங்கள் கேட்ட வரத்தைத் தான் கொடுக்க வேண்டுமென்றனர்.
முனிவர்களே, நீங்கள் பெண்கள் வார்த்தையை உண்மை யென்று எடுத்து கொண்டதால் இம்மாதிரி வரம் கேட்கிறீர்கள். கௌதமர் பிறருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றே அத்தடாகத்தை உண்டாக்கினார்" என்றார் விநாயகர்.

அப்போதும் முனிவர்கள் தங்கள் பிடிவாதத்தை விட வில்லை. விநாயகர் யோசித்தார். நூறு சாதுக்களுக்கு நடுவே ஒரு துஷ்டன் இருந்தால் அவனும் சாதுவாகிவிடுவான். அதே போன்று நூறு துஷ்டர்களுக்கிடையே ஒரு சாது இருப்பானாகில், சங்கதோஷத்தால் அவனும் துஷ்டனாகி விடுவான். அந்த  நிலையில்தான் கௌதமர் இருக்கிறார். துஷ்டர்களாகிய முனிவர்களின் மத்தியில் அவர் இருந்தால் அவருடைய மகிமைக்கும் களங்கமேற்பட்டுவிடும். ஆகவே அவரை அங்கிருந்து வெளியேற்றுவது என்று எண்ணினார் விநாயகர்.

முனிவர்களே! என்னைப் பூஜித்த பலனால் நீங்கள் கோரிய வரத்தை உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆனால்  இதனால் கௌதமருக்கே கீர்த்தி பெருகும். விரைவிலேயே அவரை இங்கிருந்து வெளியேற்ற வகை செய்கிறேன்" என்று சொல்லி  மறைந்தார் விநாயகர்.

அங்கிருந்து புறப்பட்ட விநாயகர் கௌதமரின் ஆசிரமத்தை அடைந்தார். ஒரு கிழப் பசுவைப் போல் உருவெடுத்து ஆசிரமத்தில் வளர்ந்திருந்த பயிர்களிடையே புகுந்து மேயத் தொடங்கினார். 

பயிர்களின் நடுவே பசு மேய்வதைக் கண்ட கௌதமர் அதை விரட்டியபடி ஒரு பிடி புல்லைப் பிடுங்கி அதன் மீது ஏறிந்தார். புல் உடலின் மீது பட்டதுதான் தாமதம். பசு கீழே விழுந்து கால்களை உதைத்துக் கொண்டு உயிரை விட்டு விட்டது.

பதறிப் போய் விட்டார் கௌதமர். கோஹத்தி தோஷம் சம்பவித்து விட்டதே என்று துடித்தார்.
அதைக் கண்ட முனிவர்களும் முனிபத்தினிகளும் அவரைச் சூழ்ந்து கொண்டு பலவாறாகக் குறை கூறத் தொடங்கினர். பெரும் பாவத்தை சம்பாதித்துவிட்டீர்கள். இனி இங்கு தங்கும் தகுதியை நீங்கள் இழந்துவிட்டீர்கள். அவர் அங்கே தங்கும் வரை எந்த நற்காரியத்தையும் செய்யக் கூடாதென்றும் அப்படிச் செய்யப் புகுந்தால் பாவியிருக்கும் அந்த இடத்துக்கு பகவான் வரமாட்டார் என்றும் கூறினார்கள்.

முனிவர்களின் தூஷணைகளைக் கேட்டுக் கௌதமர் மிகவும் மனம் நொந்தார். அவர்கள் கூறுவதுபோல் தான் அங்கிருக்கக் கூடாதென்று எண்ணி அங்கிருந்து புறப்பட்டு ஒரு குரோச தூரம் சென்று அப்பால் தங்கினார்.

பதினைந்து நாட்கள் சென்றன. எந்த முனிவரும் முனி பத்தினியும் அவர்களைப் பார்ப்பது இல்லை; அவர்களோடு பேசுவதும் இல்லை. எதிர்ப்பட நேர்ந்தால் பெரும் பாவியைப் பார்ப்பது போல் முகத்தைத் துணியால் மூடிக் கொண்டு சென்றனர்.

கௌதமரின் உள்ளம் வேதனையால் துடித்தது. அம்முனிவர்களை அழைத்துத் தூரத்திலிருந்தபடியே வணங்கி, பெரியோர்களே, நான் பாபி என்பதை மறுக்கவில்லை. ஆயினும் அதற்காக  நீங்கள் எனக்கு அனுக்கிரகம் செய்யாது இருப்பது  சரியா ? பெரியவர்கள் மூலமாகப் பிராயச்சித்தம் தெரிந்து கொண்டு செய்தால் தான் அதன் பலன் சித்திக்கும். ஆதலால் என் பாபத்தைப் போக்க ஏதேனும் மார்க்கம் தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டார்.

அவர்கள் கௌதமரின் நிலையைக் கண்டு மகிழ்ச்சி கொண்டவர்களாய்,  கௌதமரே! உமது பாபத்துக்குத் தகுந்த பிராயச்சித்தம் இருக்கிறது. இந்த உலகம் முழுமையும் நீர் செய்த பாபத்தைச் சொல்லிக் கொண்டு வலம் வரவேண்டும். பசிக்கும் போது பயிரில் மேய்ந்த பசுவைக் கொன்று கோஹத்தி தோஷம் சம்பாதித்துக் கொண்ட பாவி, பிக்ஷைக்கு வந்திருக்கிறேன்" என்று சொல்லி ஏழு வீடுகளில் ஏழு கவளம் அன்னம் வாங்கி உண்ண வேண்டும். பின்னர் இங்கு வந்து ஒரு மாசகாலம் சாந்திராயண விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அதாவது சந்திரனின் கலைகள் உயரும்போது தினமும் ஒரு கவளமாக ஆகாரத்தை அதிகமாக்கிக் கொண்டும் பின்னர் கலைகள் குறையும்போது குறைத்துக் கொண்டும் விரதம் இருக்க வேண்டும். அதன் பிறகு பிரம்மகிரியை நூற்றொரு முறை வலம் வரவேண்டும். அப்போது தான் நீங்கள் புனிதத் தன்மை பெறுவீர்கள். இல்லையேல் இன்னொரு முறை இருக்கிறது. பிரம்மகிரியைப் பதினொரு முறை வலம் வந்து சத்கும்பாபிஷேகம் செய்து கொண்டால் உங்கள் உடல் புனிதமாகும். பிறகு கங்கையை வரவழைத்துக் கோடி லிங்க அர்ச்சனை செய்தால் உங்கள் தோஷம் நீங்கும்" என்றனர்.

கௌதமர் அவர்கள் வார்த்தைகளை விநயத்தோடு ஏற்று கிரிவலம் வந்து சத்கும்பாபிஷேகம் செய்து கொண்டார். அதன் பிறகு கோடி லிங்கார்ச்சனை செய்யத் தொடங்கினார். அகல்யையும் கணவரோடு சிவபூஜை செய்து வந்தாள். ஈசன் அவர்கள் பூஜையில் திருப்தி கொண்டவராய் பார்வதியோடு ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.

பிரபோ, கைலாசபதே ! என்னைச் சூழ்ந்துள்ள கோஹத்தி தோஷத்திலிருந்து விடுபட கங்கையைத் தருவிக்க வேண்டும்" என்று வேண்டினார் கௌதமர்.

மகரிஷே, கங்கை வரவேண்டிய அவசியமே இல்லை, என்னை தரிசித்த மாத்திரத்திலேயே உம்மைப் பீடித்திருந்த தோஷங்கள் அனைத்தும் நீங்கிவிட்டன. இத்தோஷம் மற்ற முனிவர்களால் வஞ்சகமாக உம்மீது திணிக்கப்பட்டதாகும்" என்று கூறிய ஈசன், முனிபத்தினிகள் அவதூறு சொன்னதி லிருந்து  நடந்ததைத் தெரிவித்தார்.

பிரபோ, அவர்களைக் குறைகூற வேண்டாம். அவர்கள் அவ்விதம் எனக்கொரு இடையூறு உண்டாக்கியதனால் அன்றோ தங்கள் தரிசனம் கிட்டப் பெற்றேன். ஒரு வழியில் அவர்கள் எனக்கு நன்மை செய்தவர்களே ஆவார்கள்" என்றார் கௌதமர்.

கௌதமரின் நல்லெண்ணத்தைப் போற்றிய சிவபெருமான் கங்கையை அழைத்தார். கங்கை ஒரு பெண்ணுரு எடுத்து அவர்கள் முன் வந்து நின்றாள்.

முனிவர் கங்கையை வலம் வந்து நமஸ்கரித்து, தாயே, என் பாபங்களைப் போக்கி என்னைக் கிருதார்த்தராகச் செய்" என்று பிரார்த்தித்தார்.

முனிவரின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஈசன் கங்கைக்குச் கூற, கங்காதேவியும் அவ்வாறே முனிவரைப் பரிசுத்தமாக்கித் திரும்பிச் செல்ல முற்பட்டாள். சிவபெருமான் அவளை அழைத்து, வைவசுத மன்வந்தரத்தில் வரும் கலிகாலம் முடியும் வரை அங்கே இருந்து பக்தர்களின் மனோபீஷ்டத்தை நிறைவேற்றி வருமாறு தெரிவித்தார்.

பிரபோ, நான் காசியில் இருக்க வேண்டியவளல்லவா? எவ்வாறு இங்கு தங்குவது?" என்று கேட்டாள் கங்கை.

தேவி, நீ இங்கும் அங்கும் இரு இடங்களிலும் இருப்பாயாக. இங்கு நீராடுபவர்களுக்குக் கங்கையில் நீராடும் பலனை அளிப்பாயாக" என்று அருளினார் சிவபெருமான்.

 பிரபோ, தாங்களும் பார்வதி தேவியாருடன் இங்கு தங்குவதானால் நானும் இங்கிருக்கிறேன்" எனறாள் கங்கை.

சிவபெருமான் அதற்கு இணக்கம் தெரிவிக்கவே, கங்கா தேவி, கௌதமரின் விருப்பத்தை ஏற்று அங்கே எழுந்தருளிய தால் கோதாவரி என்ற பெயரோடு சாந்நித்தியம் கொண்டாள். பகவானும் பார்வதியோடு அந்தத் தீரத்தில் திரியம்பகேஸ்வர லிங்கம் என்ற பெயரோடு இருப்பிடம் கொண்டு தம்மைப் பூஜிக்கும் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார்.

பிரம்மகிரியிலிருக்கும் அத்தி மரத்திலிருந்து புறப்பட்ட கோதாவரி பிரவாகமெடுத்து ஓடினாள். அவளுக்குக் கௌதமி என்றொரு பெயரும் உண்டு. கௌதமருக்குப் பகவான் அருளிய செய்தி கேட்டு சகல புண்ணிய தீர்த்தங்களும் கோதாவரியில் வந்து நீராடி மேண்மை பெற்றன.

கோதாவரி தோன்றிய இடத்துக்குக் கங்காத்துவாரம் என்று பெயர். கௌதமர் தம் மனைவியோடு நீராடி கிருதார்த்தரானார்.

இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட ஆசிரமத்து முனிவர்களும் தாங்களும் கிருதார்த்தர்களாக விரும்பி மனைவியரோடு வந்தனர். அந்தத் துராத்மாக்கள் வருவதை அறிந்ததும் கோதாவரி கோபமுற்றாள். கௌதமருக்கு இடர் விளைவித்த அவர்கள் நீராடினால் தனக்குத்தான் தோஷம் சம்பவிக்குமென்று எண்ணி அவள் மறையத் தொடங்கினாள்.

அதைப் பார்த்த கௌதமர் பெரிதும் துக்கித்து, தாயே, கோபமுற வேண்டாம். எனக்கு அளித்த பலனை அவர்களுக்கும் அளிக்க வேண்டும்" என்று வேண்டினார்.

அவர்கள் துஷ்டர்கள். ஒரு தவறும் செய்யாத உம்மைத் துன்புறுத்திய துராத்மாக்கள்" என்றாள் கோதாவரி.

தாயே, உன்னை மறுபடியும் வேண்டிக் கேட்கிறேன். அவர்கள் செய்த காரியத்தினால் அல்லவா உன்னையும் சர்வேச்வரனையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது. அவர்கள்  அயோக்கியர்களாவே இருப்பினும் என் ஆசிரமத்தில் இருப்பவர்களாததால் என் பொருட்டு அவர்களை மன்னித்து அருள வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

மகிரிஷி! உங்கள் வேண்டுகோளை ஏற்பதானால் ஒரு நிபந்தனைக்கு அவர்கள் உட்பட வேண்டும். உங்களைப் பரிகாரம் செய்ய பிரம்மகிரியைப் பதினோரு முறை வலம் வரச் செய்தார்களல்லவா? அவர்களும் பதினோரு  முறை பிரம்மகிரியை வலம் வந்த பின்னரே நீராடலாம்" என்றாள் கோதாவரி.

முனிவர்களும் முனிபத்தினிகளும் தங்கள் அபசாரத்தை நன்கு உணர்ந்து வருந்தி, பிரம்மகிரியைப் பதினோரு முறை வலம் வந்து கோதாவரியில் நீராடிப் புனிதமானார்கள். முனிவர்கள் நியமப்படி தர்ப்பையால் பவித்திரமணிந்து நீராடிய இடம் குசாவர்த்தம் எனப்படும்.

ஸ்ரீராமன் கோதாவரி நதியின் பெருமையை உணர்ந்து அதன் தீரத்தில் உள்ள பஞ்சவடியில் ஒரு மாத காலம் தங்கியிருந்தார்.


இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை