Recent Posts

சிவ புராணம் - இராவணன் பெற்ற சாபம்

சிவ புராணம்

இராவணன் பெற்ற சாபம்



ஒரு சமயம் இராவணன் சிவபெருமானைக் குறித்துத் தவம் செய்யத் தொடங்கினான். கைலாசநாதன் அவனுக்குப் பிரத்தியக்ஷமாகவில்லை. ஆகவே ஹிமாலயத்தின் தென் பக்கத்தில் ஒரு காட்டில் குண்டம் தோண்டி அக்கினி வளர்த்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து  ஹோமம் செய்தான். அப்போதும் பகவான் அவனுக்கு தரிசனம் தரவில்லை.

இராவணன் தன்னுடைய தலைகளில் ஒவ்வொன்றாக அறுத்து ஹோம குண்டத்தில் இட்டு ஹோமம் செய்தான். ஒன்பது தலைகளும் அறுக்கப்பட்டு ஹோமாக்கினியில் இடப்பட்டு விட்டது. எஞ்சியிருந்த பத்தாவது தலையை அறுப்பதற்காக உடை வாளை ஓங்கிய போது சிவபெருமான் அங்கே தோன்றி அவன் கையைத் தடுத்தார்.

இராவணா, என்ன வரம் வேண்டும் கேள்" என்றார்.

சர்வேசுவரா, தாங்கள் என் மீது கருணை உள்ளவரா யிருப்பீராகில் சத்ருக்களால் கொல்ல முடியாத பலத்தைக் கொடுப்பதோடு, வெட்டுண்ட தான் ஒன்பது சிரங்களும் மீண்டும் தோன்ற அருள வேண்டும்" என்று  வேண்டினான்.

சிவபெருமானும் அவ்வாறே அருளி மறைந்தார். இராவணன்  மகிழ்ச்சியோடு தன் பட்டணம் திரும்பினான்.

இராவணன் சிவபெருமானைத் திருப்தி செய்து வரம் பெற்றதைக் கேள்விப்பட்ட முனிவர்கள் மிகவும் துக்கித்தார்கள். அவனால் தங்களுக்கு என்னென்ன துன்பங்கள் நேருமோ என வருந்தினர்.

அவர்கள் துக்கித்துக் கொண்டிருக்கையில் அந்த வழியாக நாரதர் வந்தார். முனிவர்கள் மனக் கஷ்டத்திலிருப்பதைக் கண்டு, அவர்களை விசாரித்தார். முனிவர்கள் நடந்ததைத் தெரிவித்துத் தங்களுக்கு இனி போறாத காலம்தான் என்று வருந்தினர்.

முனிவர்களே வருத்தப்படாதீர்கள். உங்கள் பயம் நீங்க நான் ஒரு வழி செய்கிறேன்" என்று ஆறுதல்கள்  பலசொல்லி அவர்களைத் தேற்றிவிட்டு நாரதர் புறப்பட்டார்.

இராவணன் செல்லும் வழியில் ஓரிடத்தில்  வீணையை மீட்டி இசைத்துக் கொண்டிருந்தார் நாரதர். இராவணன் வருவதைக் கண்டதும் அவனை நெருங்கி, இலங்கேசா! எங்கே போய்விட்டு வருகிறாய்! மிகவும் குதூகலத்தோடு காணப்படுகிறாயே" என்று கேட்டார்.

இராவணன் தான் சிவனைக் குறித்துத் தவம் செய்து வரம் பெற்றுச் செல்வதைத் தெரிவித்தான்.

இராவணா, பகவானை எவ்வாறு மகிழ்வித்தாய்? எனக்குச் சொல்லேன்’’ என்று கேட்டார் நாரதர்.

மகிரிஷி, இமயமலையில் கைலாசநாதனைக் குறித்துக் கடும் தவம் செய்தேன். ஈசன் பிரசன்னமாகவில்லை. அதன் பிறகு ஹோமகுண்டம் வளர்த்து அதில் என் சிரங்களை ஒவ்வொன்றாக அறுத்து அக்கினியிலிட்டு ஹோமம் செய்தேன்.  பகவான் சந்தோஷமடைந்து பிரத்தியக்ஷமானார்" என்றான் இராவணன்.

ஓ, அப்படியா ?... என்றார் நாரதர்.

ஆம், மகரிஷி ஒன்பது தலைகளை அறுத்து அக்கினியிலிடும் வரை அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பத்தாவது தலையை அறுக்கும் போது அவர் தோன்றி என் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்தினார். கைலாசநாதனைக் கண்களால் தரிசித்து ஆனந்தம் கொண்டேன். சத்ருக்களால் ஜெயிக்க முடியாத பலத்தையும், வெட்டுண்ட சிரங்கள் மீண்டும் முளைக்கவும் வரம் பெற்றேன். எனக்குக் காட்சி தந்த கோலத்திலே என்றும் விளங்கவேண்டும் என்று வேண்டினேன். அவரும் வைத்தியநாதேசுவரர் என்ற பெயரோடு விளங்குவ தாக அருளினார்" என்றான் இராவணன் பெருமையோடு.

நாரதரின் முகம்  வாடியது இராவணா, கைலாசநாதனை நம்புவது சரியல்ல, அவர் உனக்கு மனப்பூர்வமாக வரங்களைக் கொடுத்திருக்கிறாரா என்று பரீக்ஷை செய்து பார்க்க வேண்டாமா? நான் ஒன்று சொல்கிறேன். சிவபெருமான் இடம் கொண்டிருக்கும் கையிலயங்கிரியை உன் இருபது கைகளாலும் பெயர்த்து  எடு. எவ்வித சிரமமுமின்றி நீ அதைப் பெயர்த்துத் தூக்கிவிட்டாயானால் கைலாசநாதனின் அருள்படி அபரிமிதமான பலத்தை நீ அடைந்திருக்கிறாய் என்பது விளங்கும்" என்றார்.

நாரதருடைய வார்த்தைகளில் பொதிந்து கிடக்கும் வஞ்சகத்தை உணராத இராவணன், வேகமாகக் கைலயங் கிரியை அடைந்தான். தன் பலம் முழுமையும் உபயோகித்து இருபது கரங்களால் மலையை அசைத்துப் பெயர்த்தான்.

அப்போது சிவபெருமான் கணங்களோடு கொலுவில் அமர்ந்திருந்தார். தேவர்கள் பகவானை தரிசிக்க வந்து கூடியிருந்தனர். இராவணன் மலையை அசைத்தபோது எங்கும் கிடுகிடுவென்று ஆடியது. ஆசனத்தில் அமர்ந்திருந்த தேவர்கள் உருண்டு விழுந்தனர். விஷ்ணு பிரம்மாதியர் நிலை தடுமாறி விழுந்தனர்.

பகவானின் பக்கத்தில் அமர்ந்திருந்த பார்வதி பிரபோ, இதென்ன? இராவணனுக்கு வரம் கொடுத்ததை நம்மிடமே பரிசோதிக்கிறானே" என்றாள்.

ஈசன் பெரும் கோபம் கொண்டார். இராவணா, என்னிடமே உன் பலத்தைச் சோதிக்கத் துணிந்தாயா? எந்தக் கரங்களால் கைலயங்கிரியைக் பெயர்க்க முயற்சித்தாயோ அந்தக்  கரங்களை வெட்டி எறிந்து, உன்னைச் சம்கரிக்க ஒரு புருஷன் தோன்றுவான்" எனச் சாபமிட்டார். அதைக்  கேட்ட நாரதர் மிகவும்  மகிழ்ச்சியடைந்தார்.

மலையை அசைத்த இராவணன் ஈசுவர சாபத்தைப் பற்றி அறியாது, பகவான் தனக்கு மனப்பூர்வமாகவே வரம் கொடுத் திருக்கிறார் என்று மகிழ்ச்சி அடைந்து கையிலயங் கிரியை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு இலங்காபுரி திரும்பினான்.


இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை