Recent Posts

சிவ புராணம் - பக்தைக்கு அருளிய குச்மேசர்

சிவ புராணம்

பக்தைக்கு அருளிய குச்மேசர்




தேவகிரி என்ற பர்வதத்துக்கு அருகே உள்ள அக்கிரகாரத்தில் பாரத்துவாஜ க்ஷேத்திரத்தில் பிறந்த சுதன்மன் என்னும் அந்தணன் இருந்தான். அவன் மனைவி சுதேகை. கற்பில் சிறந்தவளாகத் திகழ்ந்தாள். கணவன் மனைவி இருவருக்கும் தர்ம மார்க்கத்தில் அதிக ஈடுபாடு உண்டு. நித்திய கர்மாக்களை விடாது நடத்தி வந்தனர். அதிதிகளை உபசரிப்ப திலும், துன்பப்படுபவர்களுக்கு உதவுவதிலும் அவர்கள் பிரக்யாதி பெற்றிருந்தனர். தம்பதிகள் இருவரும் சிவபெருமானிடம் பக்தி பூண்டு அவரைத் தினமும் வழிபட்டு வந்தனர்.

இத்தனை நற்குணங்களுடன் கூடியவர்களாக இருந்தாலும் புத்திரப்பேறு இல்லாது அவர்கள் வருந்தினர்.

சுதேகை அவ்விஷயத்தில் பெரிதும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். கணவனிடம் தன் குறையைப் பற்றி அடிக்கடி கூறி வருந்தினாள்.

பிரியே! எனக்கு மட்டும் இதில் வருத்தமில்லை என எண்ணுகிறாயா? நாம் செய்யாத தர்மம் இல்லை. ஏனோ, பகவான் நமக்கு இந்த ஜன்மத்தில் அந்தப் பாக்கியத்தை அளிக்கவில்லை. சம்சார மாயையில் சிக்கித் திரும்பத் திரும்ப பிறவிச்சுழலில் அகப்படுவதை விட்டு பகவானின் பாதார விந்தங்களில் மனத்தைச் செலுத்து" என்று அவளுக்குப் பலவாறு ஆறுதல் சொன்னான் சுதன்மன்.

ஒருநாள் தெரிந்தவர் ஒருவர் வீட்டுக்கு அவர்கள் இருவரும் சென்றிருந்தனர். அவ்வீட்டுப் பெண்களுடன் சுதேகை உரையாடிக் கொண்டிருக்கும்போது அவர்களில் ஒருத்தி அவளை மலடி என இடித்துக் கூறிவிட்டாள். அதனால் வேதனை அடைந்த சுதேகை வீடு திரும்பியதும் தன் நிலை பிறர் பரிகசிக்கும்படியாக இருக்கிறதெனச் சொல்லிக் கண்ணீர் விட்டாள்.

சுதேகை, பிறர் எதைச் சொன்னாலும் அதை நாம் லட்சியம் செய்யக்கூடாது. அவர்கள் சொல்லுகிறார்கள் என்பதற்காக நாம் என்ன  செய்யமுடியும்?" என்று கேட்டான் சுதன்மன்.

சுவாமி, இப்படி ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத இந்த ஜென்மம் எதற்கு? அதைவிட நான் உயிரை விடுவதே மேல்" என்று விரக்தியோடு கூறினாள் சுதேகை.

அதைக் கேட்டு பதைபதைத்துவிட்ட சுதன்மன், ‘‘பிரியே, அம்மாதிரி ஏதும் அவசரப்பட்டு முடிவு தேடிக் கொண்டு விடாதே. இன்று பூஜை முடிந்ததும் பகவானையே கேட்போம்" என்று தேற்றினான்.

அன்றைய பூஜை முடிந்ததும் இருமலர்கள் கொண்ட பொட்டலங்களைப் பகவானின் பாதங்களில் சமர்ப்பித்து விட்டுப் பக்தி சிரத்தையோடு வேண்டிக்கொண்டு ஒரு பொட்டலத்தை எடுத்தான். அதைப் பிரித்ததும், பிள்ளை இல்லை என்பதை அறிவிக்கும் மலரே இருப்பதைக் கண்டனர்.

சுதேகை மனம் ஒடிந்து விட்டாள். அதற்காக அவனை மறுமணம் செய்து கொள்ளுமாறு தூண்டினாள்.

சுவாமி! நான்தான் பிள்ளையில்லாத மலடியாக இருக்கிறேன். அதற்காக உங்கள் வம்சம் சந்ததியற்று அழிந்து போக வேண்டுமா? நல்ல பெண்ணாக ஓருத்தியைப் பார்த்து மணம் செய்து கொள்ளுங்கள்" என்றாள்.

சுதேகை, என்ன வார்த்தை கூறினாய்? உன்னை விட்டு இன்னொருத்தியுடன் இல்லறம் நடத்துவதா? இனி அந்த யோசனையை மறந்துவிடு" என்று கடிந்து கொண்டான் சுதன்மன்.

சுதேகையோ கணவனை விடவில்லை. திரும்பத் திரும்ப வற்புறுத்தினாள்.

சுவாமி என்பொருட்டுத் தாங்கள் தோஷமுடையவராக இருக்க வேண்டாம். எப்படியும் மணம் செய்து கொண்டு சந்ததியை விருத்தி செய்யுங்கள். வேறு பெண்ணுடன் இல்லறம் நடத்த வேண்டுமே என வருந்த வேண்டாம். என் சகோதரன் குமாரத்தி குசுமை இருக்கிறாள். அவளை மணந்து கொள்ளுங்கள்" என்றாள்.

சதன்மன் சிரித்தான்.

சுதேகை ஏதோ ஒரு வேகத்தில் நீ இப்படிப் பேசுகிறாய். நன்றாக யோசனை செய்தால் நீயே இதற்குச் சம்மதிக்க மாட்டாய். உன் வார்த்தைப்படி நான் வேறு பெண்ணை, ஏன் குசுமையையே, மணந்து கொள்ளுகிறேன் என்று வைத்துக் கொள். நாளடைவில் அவளிடமே உனக்கு அசூயை உண்டாகும். அவளுக்குப் பிள்ளை பிறந்து விட்டாலோ, நான் உன்னைக் கவனிக்காது அவளிடமே சுற்றுகிறேன் என எண்ணுவாய். அதனால் நம் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்படும். இதெல்லாம் வேண்டாத வீண் வேலைகள்" என்றான்.

சுவாமி, நான் எல்லாவற்றையும் யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். வேறு பெண்ணாக இருந்தால் நீங்கள் சொல்வது போல் நடக்கலாம். குசுமை என் சகோதரன் மகள் அல்லவா! அவளிடம் நான் ஒருபோதும் விரோதம் பாராட்டமாட்டேன். என் விருப்பத்துக்குச் சம்மதியுங்கள்" என்றாள் அவள்.

மனைவியின் வற்புறுத்தலுக்கு இணங்கி சுதன்மன் குசுமையை மணந்தான். வீட்டிற்குப் புதுமணப் பெண்ணை அழைத்து வந்தபோது சுதேகை அவளைப் பிரியத்தோடு வரவேற்றாள். அவளை மிகவும் அன்போடு நடத்தி வந்தாள். எல்லா வேலைகளையும் தானே செய்து வந்தாள்.

சுதன்மன் குசுமைக்கும் சிவபூஜையைப் போதித்து நாள் தவறாது பூஜை செய்து வருமாறு சொன்னான். குசுமை ஒவ்வொரு நாளும் புதிதாக மண் எடுத்து வந்து நூற்று ஒரு லிங்கங்களைச் செய்து அவற்றைப் பூஜை செய்வாள். பூஜை முடிந்ததும் லிங்கங்களை அருகிலுள்ள தடாகம் ஒன்றுக்கு எடுத்து சென்று அங்கே சேர்த்து வந்தாள்.

இப்படியாகத் தினமும் நடந்து வந்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் குசுமை பூஜித்து வந்த லிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து லக்ஷத்தை எட்டியது. அதனால் சந்தோஷமடைந்த சிவபெருமான் அவள் கர்ப்பமுறும்படி அனுக்கிரகித்தார்.

குசுமை கருவுற்று அழகிய ஆண்மகவைப் பெற்றாள். அக்குழந்தைக்கு சுப்பிரியன் என்று பெயரிடப்பட்டது. சுதன்மன் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க முடியாது. குழந்தையிடம் அதிகப் பிரியம் கொண்டு அவனைக் கொஞ்சினான்.

நாட்கள் செல்லச் செல்ல, சுதேகை உள்ளத்தில் மெல்ல பொறாமை தலை தூக்கியது. தனக்குக் கிட்டாத பாக்கியத்தைக் குசுமை பெற்றிருப்பதால் அவளிடமே கணவன் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதாகவும் அதனால் தன்னை அலட்சியப்படுத்தி வைத்திருப்பதாகவும் எண்ணத் தொடங்கினாள். அவள் உள்ளத்திலே தலைதூக்கிய பொறாமைத் தீ பரவுவதற்கு ஏற்ப சில சம்பவங்களும் நடந்தன. சுதன்மன்  வீட்டுக்கு வந்தவர்கள் எல்லோரும் குழந்தையைக் கொண்டாடியதோடு குசுமையைப் பாராட்டிச் சென்றனர். அந்த வார்த்தைகளைக் கேட்கும்போது அவள் உள்ளம் வேதனையால் துடித்தது.

குமாரன் வளர்ந்து பெரியவனானான். அவனுக்குத் தகுந்த இடத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து மணம் செய்து வைத்தனர் பெற்றோர்கள்.

வீட்டிலே நிலவும் சந்தோஷம் சுதேகைக்குப் பொறுக்கவில்லை. தான் புத்திர பாக்கியம் இன்றி அனைவராலும் ஒதுக்கப்பட்டிருக்க, இளையாள் எல்லோராலும் கொண்டாடப் படுகிறாளே என்று உள்ளூர மருகினாள்.

மூத்தவள் மகிழ்ச்சியின்றி ஏதோ பறி கொடுத்தவளைப் போன்று துக்கத்தோடு நடமாடுவதைக் கண்ட குசுமை ஒரு நாள் அவளிடம் இதை பற்றி விசாரித்தாள்.

அக்கா, உங்களுக்கு என்ன குறை இருக்கிறது? ஏன் இவ்வாறு வருத்தப்பட்டு வருகிறீர்கள்? வீட்டிலே மழலைச் செல்வம் நடமாடவில்லையே என்று வருந்தி என்னை மணம் செய்து கொள்ளச் செய்தீர்கள். உங்கள் எண்ணமும் நிறைவேறியது. குமாரன் பெரியவனாகி அவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டோம். நமக்கு இனி ஒரு குறையும் இல்லை. சதா பகவானின் நினைவிலேயே லயித்திருப்பதுதான் நமக்குள்ள காரியம்" என்று அறிவுறுத்தினாள் குசுமை.

 சுதேகை அவளுக்குத் தகுந்த பதில் சொல்லவில்லை. ஏதோ சமாதானம் கூறி அனுப்பிவிட்டாள். பொறாமையால் நிறைந்த மனதோடு தன் அறிவையும் இழந்துவிட்டாள் என்றே சொல்லலாம். இளையாளின் குமாரன் உயிரோடு இருக்கும் வரை தனக்கு நிம்மதி ஏற்படாதென்று தீர்மானித்து அவனைக் கொன்றுவிடுவது என்று முடிவு செய்தாள்.

ஒரு நாள் இரவு யாரும் அறியாது மகனும் அவன் மனைவியும் படுத்துறங்கும் அறைக்குள் நுழைந்தாள் சுதேகை. இருவரும் அயர்ந்து நித்திரையிலிருந்தனர்.

சுதேகை மனத்திலே சிறிதும் இரக்கம் இல்லாதவளாய் குமாரனைப் பல துண்டுகளாகச் சேதித்து அந்தத் துண்டுகளை எடுத்துச் சென்று ஒருவரும் அறியாமல் குசுமை பூஜித்த லிங்கங்களைச் சேர்ப்பித்து வைத்திருக்கும் தடாகத்தில் போட்டுவிட்டு வந்துவிட்டாள்.

காலையில் கண் விழித்த மருமகள், பக்கத்திலே படுத்திருந்த கணவனைக் காணாது திடுக்கிட்டு எழுந்தாள். எங்கும் இரத்தம் தேங்கியிருப்பதையும் மாமிசத் துண்டுகள் சிதறிக் கிடப்பதையும் கண்ட அவள் பதைபதைத்து உள்ளே ஓடினாள்.

குசுமையும் சுதன்மனும் சிவபூஜையில் ஈடுபட்டிருந்தனர். பெரியவளான சுதேகை உள்ளே ஏதோ காரியத்தில் ஈடுபட்டிருந்தாள். அவளிடம் ஓடிவந்த மருமகள், ‘‘அம்மா, உங்கள் குமாரரைக் காணவில்லை. படுக்கையில் ஓரே இரத்தமாகத் தேங்கிக் கிடக்கிறது. அங்கங்கே மாமிசத் துண்டுகள் இரைந்து கிடக்கின்றன" என்றாள்.

ஐயையோ, என்ன நடந்து விட்டது?... தெய்வமே!.." என்று பதைபதைத்து அழுவதுபோல் நடித்தாள் சுதேகை.

சிவபூஜை முடிந்து குசுமையும் சுதன்மனும் எழுந்துவர இரண்டு ஜாமங்கள் ஆயின. சுப்பிரியனுக்கு நேர்ந்த கதியைக் கேட்டபோது அவர்கள் இருவரும் மனமொடிந்து போய்விட வில்லை.

சாக்ஷாத் கைலாசநாதனே நமக்குக் குழந்தையைக் கொடுத்தான். அவனைப் பாதுகாப்பது அவனுடைய பொறுப்பல்லவா? குமாரனுக்கு என்ன துன்பம் நேர்ந்திருந்தாலும் அவனை எழுப்பித் தருவது பகவானுடைய பொறுப்பு. நம் வசத்தில் எதுவும் இல்லை" என்றனர்.

வழக்கம்போல குசுமை தான் பூஜை செய்த லிங்கங்களை எடுத்துக் கொண்டு தடாகத்தில் சேர்ப்பித்து வரப்புறப்பட்டாள். லிங்கங்களைச்  குளத்திலே சேர்ப்பித்து விட்டுத் திரும்பிய போது அம்மா" என்று அழைக்கும் குரல் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பினாள் குசுமை.

குளத்தின் நடுவிலிருந்து சுப்பரியன் எழுந்து வருவதைக் கண்டாள். குசுமைக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

அம்மா, நான் தான் சுப்பிரியன். இறந்து போன நான், உன் பூஜாபலத்தால் உயிர் பெற்று எழுந்து வருகிறேன். நானும் உன்னுடன் வீட்டுக்கு வருகிறேனம்மா!" என்று கூறினான் சுப்பிரியன்.

குசுமை ஆனந்தத்தால் உள்ளம் பூரிக்க ஓடிபோய் மகனை அணைத்துக் கொண்டாள். அப்போது தடாகத்திலே ஏதோ சப்தம் கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தனர். நீரிலிருந்து சிவபெருமான் தோன்றினார்.

குசுமை, இத்தனை காலமாக என்னைப் பூஜித்து வந்த நீ ஒருபோதும் துயரமடைய நான் அனுமதிக்கமாட்டேன். சுதேகை உன்மீது பொறாமை கொண்டு, சுப்பிரியனைக் கொன்று உடலைத் துண்டுகளாகச் சேதித்துத் தடாகத்தில் எறிந்து விட்டாள். என் அனுக்கிரகத்தால் உன் மகன் பிழைத்து எழுந்தான். அந்தப் பாதகி தான் செய்த கொடுமைக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டும். சூலாயுதத்தால் அவள் உடலைத் துண்டு துண்டாக வெட்டி எறியப்போகிறேன்" என்றார்.

குசுமை மகனை அருகில் இழுத்து நிறுத்தி பகவானைப் பணியும்படி தெரிவித்தாள். பின் அவளும் நமஸ்கரித்து, பிரபோ தங்கள் தரிசன பாக்கியத்தால் நாங்கள் தன்யர்களானோம். சுதேகை என் கணவரின் மூத்த மனைவி என்ற உறவோடு என் அத்தையுமாகிறாள். அவள் செய்த அபசாரங்களைத் தாங்கள் என் பொருட்டு மன்னித்து அவளுக்கும் அருள வேண்டும். அவள் செய்த அபசாரத்தால் தான் தங்களைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். தங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே அவள் மனத்தில் உள்ள களங்கம் நீங்கிவிடும்" என்று வேண்டினாள் குசுமை.

குசுமை! உன் வார்த்தைகளைக் கேட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியுறுகிறேன். உனக்கு இன்னல்களை இழைத்த சுதேகைக்கு நல்லது செய்ய வேண்டுமென்று கோரும் உன் நல்ல எண்ணத்தைப் பாராட்டுகிறேன். இன்னும் ஏதாகிலும் விருப்பமிருந்தால் கேள்" என்றார் ஈசன்.
பிரபோ, அப்படியானால் இன்னொரு வரம் கொடுங்கள். எனக்குத் தரிசனம் கொடுத்த கோலத்திலேயே இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள வேண்டும்" என்றாள்.

பகவான் அவ்வாறே அருளி, அந்தத் தடாகத்தையே ஆலயமாகக் கொண்டு குஸ்மேசர் என்ற திருநாமத்தோடு அங்கே எழுந்தருளினார்.

குசுமை மிகுந்த ஆனந்தத்தோடு குமாரனை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.

சுப்பிரியனைக் கண்டதும் சுதேகையின் முகம் வெளிறி விட்டது. அவளைப் பயப்பட வேண்டாமென்று குசுமை தேற்றி, நடந்த விருத்தாந்தங்களைத் தெரிவித்தாள். அதைக் கேட்டதும் சுதன்மன் முதலானோர் வியப்படைந்து பகவானைத் தியானித்து அவரது அருட்கடாக்ஷத்தைப் போற்றினர். ஈசன் அவர்களுக்கும் தரிசனம் கொடுத்து சுகத்தோடு வாழ்ந்து வருமாறு அருளினார். சுதேகை, மனத்திலுள்ள பொறாமை நீங்கியவளாய் கணவன், குசுமை, சுப்பிரியன், மருமகள் ஆகியோருடன் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தாள்.


இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை