Recent Posts

சிவ புராணம் - ருத்ராட்ச மகிமை

சிவ புராணம்

ருத்ராட்ச மகிமை



சிவ சின்னங்களில் ஒன்றான ருத்ராட்சம், சிவ பக்தர்களால் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. சகலவிதமான சௌபாக்கியங்களையும் தரும் ருத்ராட்சம் எப்படி தோன்றியது என்பதை ஸ்ரீதேவி பாகவதம், ருத்ராட்ச ஜாபாலா உபநிஷதம் மற்றும் ஸ்காந்த புராணம் போன்ற புராணங்கள் அனைத்தும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

திரிபுர அசுரர்களை (தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி) சம்ஹாரம் செய்வதற்கு முன்னதாக தனது திருக்கண்களை மூடாமல் தியானம் புரிந்தாராம் ஈசன். அவ்வாறு தியானத்தில் அமர்ந்திருந்த வேளையில், அவரது திறந்த விழிகளிலிருந்து விழுந்த நீர்த்துளிகள் பூமியில் விழுந்து ருத்ராட்ச மரங்களாகத் துளிர்த்தன.

இம்மரங்களில் காய்க்கும் காய்களே ருத்ராட்சம் எனப்படுகிறது. பாவங்களைக் கண்டிப்பதால் இதற்கு ’கண்டிகை என்று மற்றொரு பெயரும் உண்டு. நன்கு கனிந்த ருத்ராட்சத்தைக் கண்ணால் பார்த்தாலே புண்ணியமாம். உடம்பில் அணிந்து கொண்டாலோ நூறு கோடி புண்ணியம் என்கின்றன புராணங்கள்.

ருத்ராட்சத்தின் மேலே உள்ள கோடுகளைக் கொண்டு அது எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் என்பதை அறியலாம். ஒவ்வொரு முக ருத்ராட்சத்துக்கும் ஒவ்வொரு விதமான சக்தி உண்டு. ஒரு முக ருத்ராட்சம் சிவனின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல 14 முக ருத்ராட்சத்தை அணிபவர் சிவனின் அம்சமாகவே பார்க்கப்படுகிறார்.

108 அல்லது 54 அல்லது 27 என்ற எண்ணிக்கை கொண்ட ருத்ராட்சங்களை மாலையாக அணிந்தாலும் அந்த மாலையைக் கொண்டு ஜபம் செய்தாலும் அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்கிறது தேவி பாகவதம்.

சிகையில் 1 ருத்ராட்சம், தலையில் 36, கழுத்தில் 32, மார்பில் 5, கையில் 16, மணிக்கட்டில் 12 அணிய வேண்டும் என்கிறது பேரூர் புராணம்.

இத்தகைய அற்புத பலன் தரும் ருத்ராட்சங்களை புனிதப்படுத்தி அணிவது சிறந்த பலனைத் தரும், என்கிறார்கள் சான்றோர்கள். அவ்விதம் புனிதப்படுத்துவதற்கு சில வழிவகைகள் இருக்கிறது. முதல் நாள் இரவே ருத்ராட்சத்தை எண்ணெயில் ஊற வைத்து, மறுநாள் ஆசனத்தில் கிழக்கு முகமாக உட்கார்ந்தபடி ’ஓம் நமசிவாய என்று சிவபெருமானின் பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே பக்தியுடனும், சிரத்தையுடனும் பஞ்சகவ்யத்தாலும் (பசுஞ்சாணம், கோமியம், பசும்பால், பசு நெய், பசுந்தயிர்) மற்றும் சந்தனத்தாலும் அபிஷேகம் செய்து, முறைப்படி மந்திரங்களால் உருவேற்றிய பிறகே அணிய வேண்டும் என்று சான்றோர் கூறுவர்.

இயற்கையாகவே துவாரம் உள்ள ருத்ராட்சமே சிறந்தது. முண்டு முடிச்சில்லாமல், பளபளப்பாகவும், திடமானதாகவும் உள்ள ருத்ராட்சங்கள் மங்கலமானவை. புழுக்கள் அரித்தவை, பிளவுபட்டவை, உடைந்தவை, முட்களில்லாதவை, மூடப்பட்டவை ஆகிய ருத்ராட்சங்களை விலக்கிவிட வேண்டும். அரிநெல்லிக்காயளவு உள்ள ருத்ராட்சமே மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிகு ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு செல்வம், ஆரோக்கியம், அதிர்ஷ்டம், சக்தி மற்றும் சௌபாக்கியங்களும் பெருகும். ருத்ராட்சத்தையும், விபூதியையும் அணிந்தவர்களை பேய், பிசாசு அண்டாது. விஷப் பாம்பு தீண்டாது.

சிவ பூஜை செய்யும் போது ருத்ராட்சம் அணிந்து கொண்டு செய்தால் பல கோடி பயனுண்டாகும் என்கின்றனர் சாஸ்திரம் அறிந்தவர்கள்.

ருத்ராட்சத்தை உறங்கும் போதும், தேக உபாதைகளைத் தீர்க்கச் செல்லும் போதும், ஜனன, மரண தீட்டு காலங்களிலும் அணியக்கூடாது என்கின்றன புராணங்கள்.


இந்த பகுதியானது திரு.கார்த்திகேயன் அவர்கள் எழுதிய ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. ஸ்ரீ சிவ புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை