Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - கைலாயத்திலிருந்து வந்த மாரியம்மன்

மஹா மாரியம்மன் 

ஆடி மாத சிறப்புகள்

கைலாயத்திலிருந்து வந்த மாரியம்மன் 





வெள்ளியாகப் பிரகாசிக்கும் கைலாச மலையில் ஓலக்கால் மண்டபத்தில் கேட்பவர்க்கு இல்லையெனாது வரம் கொடுக்கும் சிவபெருமான் வீற்றிருக்க அவர் இடது புறம் பார்வதி தேவி கொலுவிருக்க எதிரில் அவர்களது பிள்ளை கணபதியும் மற்ற கணங்களும் தேவர்களும் அவர்களைத் தொழுது நின்றனர். 

கையிலையின் ஒருபுறம் சிவபெருமானின் மலர் பாதங்களை மனதில் நினைந்து,தன்னை சுற்றி நிகழும் எதுவொன்றும் நினைக்காமல் பரமனின் பாதங்களே குறியாக இரவு, பகல், மழை, வெய்யில் எதுவுமறியாமல் நெடுந்தவம் செய்தாள். 

அவள் தவம் செய்த புனிதமான இடத்தில் கற்பக மரமாக வேம்பு வளர்ந்து அவளுக்கு நிழலாக கொடை பிடித்தாற்போல் நிலை கொண்டிருந்தது. அந்த வேம்பின் இலையை உண்டால் நோய் நொடியின்றி வெகுகாலம் ஜீவித்திருக்கலாம். அதன் பழத்தைத் தின்பவர்கள் அமரலோகத்தை அடைவர். 

மாரியம்மன் தவம் மேற்கொண்டிருந்த இடத்தை அரக்கர்கள் அணுகாமல் பூதங்கள் காவல் காத்து நின்றன. கையில் சூலம் ஏந்தி, நெற்றியில் திருநீறு பூசி, தோளில் சூலம் தாங்கிக் கொண்டு தவம் செய்த அவள் மேனியில் பூசியிருந்த மஞ்சள் தங்கமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அவள் கொண்டையில் குருவிகளும் அன்னங்களும் முட்டையிட்டுக் குஞ்சு பொறித்தன. அவளது ஜடா முடி வளர்ந்து தரையில் வீழ்ந்து புரளும் நீளம் கொண்டதாக விளங்கியது. ஐந்து தலை நாகம் குடைபிடித்து நின்ற அவளுடைய திருக்கரங்களில் கிளியும், பூச்செண்டும் அழகுடன் விளங்கின. அவளுடைய திருமேனியில் பல புலிகள் உராய்ந்து சென்றன. 

இப்படி கடுந்தவம் செய்த மாரியம்மனுக்கு உமையொருபாகனாக ரிஶபம் மீதேறி காட்சி தந்தார் சிவபெருமான். அவளது தவத்திற்கு இவ்வுலகமே ஈடாகாதென்றும் அத்தகைய தவம் செய்த அவளுக்கு என்ன வரம் வேண்டுமென்றும் கேட்டார். அதற்கு அவள் முன்னொரு முறை வரம் பெற்று முத்தாரம்மனாகத் தோன்றினேன். பின்னர் வேறொரு முறை வரம் பெற்று சந்தனமாரியாக ஆனேன். அப்போது என்னை மக்கள் மிகவும் விரும்பி கொண்டாடினர். மேலும் என் திருக்கோயில்களை ஊருக்கொன்றாகக் கட்டி என்னை வணங்கி வந்தனர். ஆனால் பின்னாளில் இவையெல்லாம் குறைந்து விட்டது. இப்பொழுது யாரும் தெய்வங்களைக் கொண்டாடுவதில்லை. பேய்களையே வணங்கி வருகின்றனர். இதனால் அவர்களை நல்வழிப்படுத்த விழைகிறேன். அவர்களை அவ்வாறு நல்ல வழியில் செலுத்துவதற்கு எனக்குப் புதிய வரம் வேண்டு மென்றாள். 

சிவபெருமானும் மாரியம்மன் கேட்ட வரத்தைத் தந்தேனென்றார். கெட்ட சக்திகளை கட்டுப்படுத்தி, தாங்களே தெய்வம் என்று கூறி மக்களை மயங்கச் செய்யும் பேய்களையும் துஶ்டர்களையும் அடக்கி உலகைக் காப்பதும் உன் பணியாகட்டும்,சு என்று ஆசீர்வதித்தார். தனக்கு வரமீந்த பரமனை வணங்கி தனக்கு மற்றுமோர் வரம் தருவீரெனக் கேட்டாள் மாரியம்மன். 

குருவின் வார்த்தையை மதிக்காதவர்களும், தெய்வம் குடி கொண்டிருக்கும் திருக்கோயில் பூஜையை, வழிபாட்டை மதிக்காமல் கேலிபேசி அங்குள்ள பொருள்களைத் திருடும் கயவர்களை தண்டிக் கவும், காசி முதல் கன்னியாகுமரி வரை தான் சொன்ன கட்டளையை நிறைவேற்றவும், பணக்காரர்கள் செய்யும் கொடுஞ் செயல்களை மாற்றிடவும் சிவபெருமானிடம் உள்ள சிவ கணங்களை தருவீரெனக் கேட்டாள். 

மேலும் தன்னுடன் சப்தகன்னியரும் துணையாக வர வேண்டு மென்றும் கொடிய எண்ணம் கொண்ட தீயவரைப் பிடிக்க பாசக்கயிறும் தூண்டிலும் வேண்டுமென்றாள். காய்ச்சல் வயிற்று போக்கு, காது கேளாமை, தலைவலி, மயக்கம், மூர்ச்சை, இழுப்பு நோய், மூச்சைய டைக்கும் சளி, தோல்நோய்கள் போன்றவற்றை கொடுஞ்செயலாளர் களுக்கு தருவதற்கும், அவ்வாறு தந்தவை எந்த மந்திரத்தினாலும் கட்டுப்படாததாகவும் இருக்க வரம் கோரினாள். 

மக்களை நல்வழிப்படுத்த வரம் கேட்ட மாரியம்மனுக்கு எல்லா வரங்களையும் கொடுத்து ஆசீர்வதித்தார் பரமன். தனக்கு வரம் தந்த பரமன் வீற்றிருக்கும் கைலையை பல முறை வலம் வந்து வணங்கி பச்சை பல்லக்கில் ஏறி வெற்றி முழக்கத்துடன் தன் பரிவாரங்களுடன் தெற்கு நோக்கிப் புறப்பட்டாள். மிக்க மகிழ்ச்சியுடன் குலவையிட்டுக் கொண்டு, தாரை தம்பட்டம் முழக்கத்துடனும் சங்க நாதத்துடனும் கொம்பு, தாளம், எக்காளம், பம்பை, உடுக்கை முழங்க காசி நோக்கி வந்தாள். தன்னை மதிக்காத பாதுஶா ஆண்ட பகுதிகளில் அம்மை நோயைப் பரப்பினாள். பின்னர் பாதுஶா தன் தவறுக்காக மன்னிப்பு  கூறி அவளை பலவிதங்களிலும் உபசரித்தான். நாடெங்கும் வேப் பிலைத் தோரணங்களைக் கட்டி மாரியம்மனை வரவேற்றான். நகரம் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன. மாரியம் மனுக்கும் அவள் படைகளுக்கும் நாடு முழுவதும் பொங்கலிட்டு படையல் செய்தான். அதனுடன் மதுக்குடங்களையும் நிறைய வைத்தான். பூதகணங்கள் அவற்றை உண்டு இளைப்பாறின. 

பின்னர் மாரியம்மனை மலர் மாரி பொழிந்து நெடுஞ்சாண் கிடையாக தரையில் வீழ்ந்து வணங்கினர். ஆடல் பாடல் கொண்டு மகிழ்வித்தனர். பூஜைசெய்து பொங்கலிட்டு படைத்தனர். எல்லாவற் றையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கிய மாரியம்மன் தென்னாடு வந்தாள். 

சிவபெருமான் கேட்ட வரங்களை உடனே கொடுத்துவிடும் இயல் புடையவர். ஆனால் அவ்வரங்களை சரியாகப் பயன்படுத்தாமல் மமதை கொண்டு மக்களைத் துன்புறுத்திய அரக்கர்களை மாய்க்க ஒவ்வொரு முறையும் திருமால் வர வேண்டியதாயிற்று. அது போல் மாரியம்மனும் தான் பெற்ற பெருவரத்தால் மக்களை அதிகமாகத் துன்புறுத்தக் கூடாதென்று மாரியம்மனிடம் கூறி அவளது வேகத்தைக் கட்டுப்படுத்த அவளுடன் திருமாலும் சேர்ந்துகொண்டார். 

பெருத்த ஆரவாரத்துடனும் புதிய வரங்களைப் பெற்றும் புதுமை பொலியத் திகழும் மாரியம்மனைச் சந்திப்பதற்காக திருமால் வந்தார். பிறகு தெற்கு நோக்கி வந்த மாரியம்மனும், திருமாலும் காவிரிக் கரையோரம் கண்ணனூர் என்ற இடத்தில் நிலை கொண்டனர். அதுவே இன்றைய சமயபுரம். 

இவ்வாறு மாரியம்மனின் கதை பாடலாக, வில்லுப்பாட்டாக, சமயபுரம் மாரியம்மன் வரலாறாக தென் தமிழகத்தில் பாடப்பட்டு வருகிறது.  


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 

ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை