மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - வேப்பிலை/மஞ்சள்
மஹா மாரியம்மன்
ஆடி மாத சிறப்புகள்
வேப்பிலை/மஞ்சள்
வேப்பிலை ஆடையும், மஞ்சளும் அன்னையின் துயர் தீர்த்ததால் அவளுக்கு மிகவும் பிரியமானதென்று பார்த்தோமல்லவா? அந்த புனித மூலிகைகளைப் பற்றி இங்கு காண்போம்.
வேப்பிலை
தெற்காசிய நாடுகளில் அதிகம் வளரும் இம்மரம் கடவுள் நமக்களித்த இயற்கை வைத்தியராகும். வளமுள்ள பிரதேசங்கள் மட்டுமல்லாமல் வறண்ட காடுகளிலும் இம்மரத்தைக் காணலாம்.
இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இம்மரம், இந்துக்களால் பராசக்தியின் வடிவாகப் போற்றப்படுகிறது. ஸ்ரீ மஹா மாரியம்மன் வழிபாட்டில் வேப்பிலை முக்கிய இடம் பெறுகிறது. ஸ்ரீ மஹா மாரியம்மனே 'வேப்பிலைக்காரி’ என்று பக்தர்களால் போற்றப் படுகிறாள். பெரும்பாலும் மாரியம்மன் திருக்கோயில்களில் வேப்ப மரமே ஸ்தல விருக்ஷமாக உள்ளது இது தவிர வைத்தீஸ்வரன் கோவில், ஐயர் மலை போன்ற ஸ்தலங்களில் வேப்ப மரமே ஸ்தல விருக்ஷமாகப் போற்றப்படுகிறது.
ஸ்ரீ மாரியம்மனுக்கும் வேப்பிலைக்கும் என்ன உறவு? எப்படி ஏற்பட்டது என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறதல்லவா? நம் எல்லோருக்கும் தெரிந்த ஸ்ரீ ரேணுகா தேவியின் சரித்திரம் தான் அது. அதனை முன்னரே பார்த்தோமல்லவா? ஜமதக்னிமுனிவர் கொல்லப் பட்டதைக் கண்ட ரேணுகா உடன்கட்டை ஏற, இந்திரன் மழை பெய்து அவள் தீயில் இறக்காமல் தடுத்துவிட, உயிர்பிழைத்த ரேணுகாவின் புடவை மட்டும் தீயில் கருக, உடனே ரேணுகா அருகில் உள்ள வேப்ப மரத்தின் இலைகளை ஆடையாக உடுத்திக் கொண்டு அருகில் இருந்த குப்பத்திற்குச் செல்ல, அங்குள்ள மக்கள் அவள் நிலையைக் கண்டு அவளுக்கு உணவு தந்து உபசரித்ததுடன் அவள் மீதிருந்த தீக்காயங்களுக்கு வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து பற்று போட்டு காயங்களைக் குணமாக்கினர். தன்மானம் காத்த, உயிர் காத்த வேப் பிலையும் மஞ்சளையும் தனக்குகந்த பொருட்களாகக் கொண்டாள் ரேணுகா.
உடலில் உள்ள கொப்புளங்கள் மறையும் வரை வேப்பிலையே ஆடையாக அணிந்திருந்தாள் ரேணுகா தேவி. தன்னுயிர் காத்த வேம்பையே தனக்குரிய விருக்ஷமாக அருள் புரிந்தார். பின்னர் அவளுக்கு தூய வெண்ணிற ஆடையும் சிவப்புப் புடவையும் அணிவித்தனர். பின்னர் ரேணுகா தேவி பரமேச்வரனையும் பார்வதி தேவியையும் வணங்கி வழிபட அப்பொழுது அங்கு தோன்றிய சிவபெருமான், அவள் பார்வதியின் அம்சமான உமாதேவியே என்றும், 'மாரியம்மன்’ என்ற பெயருடன் உலகைக் காத்து ரக்ஷிக்கும்படியும் ஆசீர்வதித்து மறைந்தார்.
இன்றும் உடலில் கொப்புளங்கள் தோன்றி அம்மை நோய் படுத்தும்போது வேப்பிலைக்காரியையே நாம் வேண்டிக் கொண்டு அவளுக்கு நிவேதனமாகப் பானகமும், நீர் மோரும், இளநீரும் படைக்க, நோய் வந்த இடம் தெரியாமல் போகிறது. கூழ்காய்ச்சி தானம் செய்தால் அன்னையின் மனம் குளிரும்.
வேப்பிலையையே பராசக்தி வடிவமாகப் பார்க்கும் நாம், என்றும் நம் பையில் அதனை வைத்துக் கொண்டால் எந்த இடர்களும் இல்லாமல் வாழ்க்கைப்பயணம் இனிமையாகும். அதன் காரண மாகவே வெளியூர் செல்லும் போது மகளுக்கும், மருமகளுக்கும் தலையில் வேப்பிலையைச் சூடிவிடும் தாய்மார்கள் இன்னமும் கிராமங்களில் வசித்து வருகிறார்கள். வழிப்பயணத்தில் அன்னை
பரா சக்தி அவர்களுக்கு துணையிருப்பாள் என்று நம்பியே இதனைச் செய்கிறார்கள்.
வேப்பிலைரதமேறி வித்தகியே வலம் வருவாய்
வேதனையைச் சோதனை விளையாட்டாய் நினைப்பவளே” சிவபெருமான்
என்றும்
வேப்பிலை பிட்டால் வினைகள் பறந்தோடுமென்று
காப்பு வளைமுதலாய் அணிந்தவளே காப்பவளே
வேப்பம்பால் உண்டவள் தான் வேறு முகம் மாறுபட்டுத்
தோப்புத் துரவெங்கும் துள்ளாட்டம் போடுகின்றாய்”
என்றும்
வேப்பிலையின் கசப்பினிலே வெம்புலியின் சீற்றத்திலே
வேப்பம்பால் வெண்மையிலே வெண்ணிலவின் குளுமையிலே
தானாகி நின்றவளே தவப்பயனே கண் திறப்பாய்
மானாகி நின்றவளே மனங்குளிர பண் இசைப்பாய்
வேப்பிலை பற்றி மாரியம்மன் தாலாட்டு, மாரியம்மன் பாடல்கள் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ளது. மாரிக்கு வேப்ப மரம் ஔஶதம். மக்கள் பிணி தீர்க்கும் அருமருந்து. கிருமிகளைக் கொல்லும் கிருமி நாசினி. வினை தீர்க்க வல்லது. வாழ்வளிக்கும்; வளமான சுகம் அளிக்கும்; வேப்பமரம் சக்திக்கு அர்ப்பணம். வேப்பங்காற்று உடல் சுகாதாரத் திற்கு, சுவாசிப்பதற்கு நல்லது. வேப்ப மரத்தில் பால் சுரந்து ஊற்றெடுத்து ஒழுகியோடும். மக்கள் ஆவலாய் பயபக்தியோடு பருகுவார்கள்.
கேட்டதைக் கொடுக்கின்றாள் கோமாதா உமையவளே
கேள்விக்குப் பதிலானாய் பாட்டினில் பொருளானாய்
வேப்பமரம் தலவிருட்சம் வேப்பிலையோ அருமருந்து
வறுமைதனைக் களைந்து வளமையினைக் கொடுப்பவளே
- அம்மா உன் தாள் சரணம்
அம்பாள் வேப்பிலைக்காரி. வேப்பிலைச் சாறு விஶம் நீக்கும் அருமருந்து. பண்டை நாளில் பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூ மாலையை வெற்றியின் சின்னமாக அணிந்திருந்தனர்.
வேப்பிலையும் பொற்கரகம் வீதிவிளையாடிவர
பதினாயிரம் கண்ணுடையாள் பராசக்தி வாருமம்மா
கத்திபோல வேப்பிலையைக் கதறவிட்டாய் லோகமெல்லாம்
ஈட்டிப்போல வேப்பிலையை இனியனுப்பிக் கொண்டவளே?
வேப்பிலைக் குள்ளிருக்கும் வித்தைகளை யாரறிவார்?
வேணுமென்று காரடி வேப்பஞ்சிலையாளே !
வேம்பு ரதமேறி வித்தகியே முத்தமுத்திவிடு
வேப்பிலை பட்டவுடன் வினைகள் பறந்தோடுமம்மா
- மாரியம்மன் தாலாட்டு
கருமாரியம்மன் புராணத்தில் மஹாமாரிப் படலத்தில் வேப் பிலையை பற்றி:-
்துடியோசை பம்பை ஒலி அதிர்ந்து ஆட
அருட்சக்தி கருமாரி முதியோளாய் வடிவெடுத்து
வேப்பிலையும் பிரம்பும் கொண்டாள்சு
பிரம்பேறி பெருங்கிழவி ஒய்யார பெருநடையால் அம்மா! நின் திருவடி பணிகின்றோம்! காத்தருள்வாய் !
தீராத நோய் தீர்க்கும் வேப்பிலையைத் தந்து
மருத்துவம்உ தந்திட்டாள் கேளுங்கடி
நேராக அவள் பார்வை பட்டுவிட்டாலே
சேராத பந்தங்கள் சேருமடி.
புதுவருடப் பிறப்பின் போதும், மகர சங்கராந்தி மற்றும் விசேஶ தினங்களிலும், வேப்பங்குச்சியை வீட்டு வாசலில் வாயிற்படியின் இரு பக்கமும் நடுவதை கிராமத்தில் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். துர்தேவதைகள் எதுவும் வீட்டில் நுழையாமல் இருக்கவும், திருஶ்டிகள் கழியவுமே இந்த ஏற்பாடு.
மேலும் தமிழ் வருடப் பிறப்பன்று புதிய வேப்பம் பூவைக் கொண்டு இனிப்பு பச்சடி செய்து, உணவு கொள்ளும் முன், முதலில் இப்பச்சடியையே உண்டு பின்னரே மற்ற உணவை உண்கின்றனர்.
பெண்களுக்கு வளையல் காப்பின் போது, அன்னை பராசக்தி என்றும் துணையிருந்து நல்ல குழந்தையை நல்லபடியாகப் பெற் றெடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, முதல் காப்பாக வேப்பிலை வளையலையே அணிவிக்கின்றனர்.
அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்வித்து ஊர் மக்கள் நல்லவிதமாக வாழவேண்டுமென்று ப்ரார்த்தனை செய்கின்றனர். துர்சக்திகளை வெளியேற்றவும் வேப்பிலையையே மாந்த்ரிகர்கள் பயன்படுத்துகின்றனர். உடல் வியாதி நீங்க மந்திரிக்கும் போதும், வேப்பிலையே பயன்படுகிறது. இத்தகைய பெருமை வாய்ந்த இம்மரத்தின் மருத்துவ குணங்களை இனிக் காண்போம்:-
வேப்ப மரத்தின் ஒவ்வொரு பாகமும் - இளந்தளிர் முதல் வேர் வரை - அனைத்தும் மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டவை.
வேப்பிலைக் கொழுந்தில் புரதச் சத்து, நார்ச்சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்பு, இரும்பு சத்துக்கள் மட்டுமில்லாமல் வைட்டமின் ’ஏ’வும் அடங்கியுள்ளது. தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு வெறும் வயிற்றில் வேப்பிலைக் கொழுந்தை உண்டு வந்தால் பெரும்பாலான வியாதிகள் அணுகாமல் காக்கலாம்.
வேப்பங்கொழுந்தை, புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றுடன் சேர்த்து சட்னி, துவையல் செய்து சாப்பிடலாம். இதனால் வயிற்று உப்புசம், பசியின்மை, பித்தம், சளி மற்றும் சுவாசக் கோளாறுகள் அடியோடு நீங்கும்.
வேப்பங்கொழுந்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதுடன், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும். இதனை கடுக்காய் தோல் மற்றும் பிரண்டை சாற்றுடன் அரைத்து விளக்கெண்ணையுடன் கொடுக்க குடல் பூச்சிகள் வெளியேறும்.
வேப்பிலையை மஞ்சளுடன் அரைத்து கட்டிகள், பித்த வெடிப்பு, பொன்னுக்கு வீங்கி, முகப்பரு, அம்மைக் கொப்புளங்களின் மீது தடவ அவை பூரண குணமாகும். வேப்பிலையைத் தனியாக அரைத்து கட்டிகளின் மீது பற்று போட்டால், கட்டி பழுத்து உடைந்து, ரணம் வெளியேறும்; வீக்கம் தீரும்.
வேப்பங் கொழுந்தையும் அதிமதுரத்தையும் சமமாக எடுத்து அரைத்து சிறு சிறு மாத்திரைகளாகச் செய்து, நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு, தினசரி மூன்று வேளையும் இரண்டு மாத்திரைகள் கொடுத்துவர, அம்மை நோய் அகலும்.
வேப்பெண்ணையை உடல் முழுவதும் பூசி தலை முழுகி குளித்துவர வாத நோய்கள், மூட்டுவலிகள் நீங்கும். நுண்ணுயிரிகள் தொற்றாது. வேப்பெண்ணையை தினசரி மூன்று வேளை வெந்நீருடன் உள்ளுக்கு அருந்திவர சுவாசக் கோளாறுகள், கணை முதலியவை குணமாகும். மார்பில் தடவி வர கபம் கரையும்.
வேப்பம் பூவை வெந்நீரில் ஊறவைத்து, காலையில் ஊறிய நீரை வெறும் வயிற்றில் அருந்தி வர பசியின்மை நீங்கும். கல்லீரல் நன்கு இயங்கும். உடல் தளர்ச்சி குணமாகும். வேப்பம் விதையை வெல்லத்துடன் அரைத்து தினமும் காலை, மாலையில் ஒரு மண்டலம் சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். தோல் வியாதிகள் தீரும், சூதகச் சன்னி, நரம்பு இசிவு நீங்கும்.
வேப்பம் பூவை சிறிது நெய்விட்டு வறுத்து சூடான அன்னத்தில் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட, அன்னதுவேஶம் தீரும்.
50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட முற்றிய வேம்பின் வேர்ப்பட் டையுடன் முற்றிய பூவரசம் பட்டையையும் சேர்த்து பொடி செய்து, சிறிது வெல்லத்துடன் காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வர தொழுநோய் மற்றும் பலவிதமான தோல்வியாதிகள் குணமாகும்.
வேப்பம் பூவை ரசம் வைத்து அருந்தினால் வயிறு மந்தம் குணமாகும். பசியைத் தூண்டும்.
வேம்பின் வேர்ப்பட்டையைப் பொடி செய்து பல் துலக்கிவர, ஈறுகள் கெட்டியாவதுடன், வாய் துர்நாற்றம் நீங்கும். வாயிலுள்ள கிருமிகள் மடியும்.
வேம்பு மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. வேதிப் பொருட்கள் இல்லாத தூய மூலிகை கிருமி நாசினி தயாரிப்பில் முதலிடம் வகிப்பது வேம்புதான். அதனால் இன்று உலகம் முழுவதும் இதற்கு மதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே அமெரிக்கா இதன் காப்புரிமையைப் பதிவு செய்தபோது, நீதிமன்றத்தில் 15 வருடம் போராடி காப்புரிமையை தகர்த்தது இந்தியா.
1959ல் சூடான் தேசத்தில் ஏற்பட்ட நுண்ணுயிர் தாக்குதலில் எல்லா தாவர இனங்களும் பாதிக்கப்பட்டன. ஆனால் அத்தாக்குதலில் பாதிக்கப்படாமல் இருந்த ஒரே தாவரம் நம்முடைய வேம்புதான் என்றால் ஆச்சர்யமாயிருக்கிறதல்லவா?
ரசாயன உரங்களைப் போட்டு அழிவுற்ற நிலத்தில் வேப்பம் பிண்ணாக்கை உரமாகப் போட்டால் மீண்டும் நிலத்திற்கு உயிர் வந்துவிடும். மேலும் அதில் தாவரங்கள் செழித்து வளரும் என கண்டறியப்பட்டுள்ளது. வேம்பின் பெருமைக்கு ஒரு கதையை உதாரணமாகக் கூறலாம்.
ஒரு வீட்டில் கணவனும் மனைவியும் மிகவும் பிரியமுடன் வசித்து வந்தனர். பொருளீட்டுவதற்காக கணவன் வெளியூர் செல்ல விரும்பினான். ஆனால் மனைவியோ கணவனைப் பிரிந்திருக்க விரும்பவில்லை. கிடைத்த பொருளைக் கொண்டு நிம்மதியாக வாழலாமென்று சொன்னாள். அதிகப் பொருளீட்டுவதில் நாட்ட முடைய கணவன் அதற்கு உடன்படவில்லை.
மனைவி தன் நிலையச் சொல்லி அவ்வூரில் உள்ள பெரியவரிடம் ஆலோசனை கேட்டாள். அதற்கு அவர், உன் கணவனை அன்போடு வழியனுப்பு. ஆனால் போகும் முன் வழியில் கஶ்டம் தெரியாமல் இருக்க புளிய மர நிழலில் இளைப்பாறிவிட்டு செல்லும்படியும், திரும்பி வீட்டிற்கு வரும்போது வேப்பமர நிழலில் இளைப்பாறிவிட்டு வரும்படியும் கணவனுக்கு சொல்லி அனுப்பு. கணவன் விரைவிலேயே திரும்பிவிடுவான்” என்றார்.
அவ்வாறே மனைவியும் கணவனிடம் கூறி வழியனுப்பி வைத்தாள். கணவன் போகும்போது புளிய மரநிழலில் ஓய்வெடுத்துக் கொண்டதால், அவன் உடல் நிலை கெடத் துவங்கியது. அதனால் அவனுக்கு ஊர் திரும்பும் எண்ணம் ஏற்பட்டது. அவ்வாறு ஊர் திரும்பும்போது, மனைவியின் சொல்படி வேப்பமர நிழலில் தங்கி இளைப்பாறினான். இதனால் வேப்பங் காற்று பட்டு உடல் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பியது. (புளியமரம் அதிக அளவு கரியமில வாயுவையும், வேப்பமரம் அதிக அளவு ஆக்ஸிஜனையும் வெளி விடுகிறது). புத்துணர்ச்சியோடு திரும்பிய கணவன், தன் உடல் கெட்டதற்கான காரணம் அறியாமல், இனி மனைவியைப் பிரிந்து செல்லமாட்டேனென்று கூற, மனைவி மிகவும் மகிழ்ச்சியுற்றாள். கணவனோடு சேர்ந்து இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தாள்.
இது கதை மட்டுமல்ல. உண்மையும் கூட, வேப்பங் காற்று உடலுக்கு நல்லது. வேப்பமரத்தடி விநாயகரைத் தொழுவதால் உடலும் வளம் பெரும். மனத்திலும் அமைதி நிலவும்.
மஞ்சள்
மஞ்சள் ஒரு மருத்துவ மூலிகையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் (இதணூஞிதட்டிண) எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடிய பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது.
மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ஆலப்புழை மஞ்சள் உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது.
இந்து சமயத்தவர் இந்த மஞ்சளைப் புனிதப் பொருளாகக் கருதுகின்றனர். புதிதாக ஒரு வீட்டில் குடியேறுபவர்கள் உப்பு, மஞ்சள் போன்றவற்றை கடவுள் படத்தின் முன் வைத்து அதன் பின்னரே பால் காய்ச்சுகின்றனர். புத்தாடை அணிவதற்கு முன்பு மஞ்சளை நீரில் தேய்த்து அதை ஆடையில் வைத்துக் கொள்கின்றனர். மாரியம்மன் கோயிலுக்கு அக்கினிச்சட்டி எடுப்பவர்கள் மீது முதலில் மஞ்சள் கலந்த நீர் ஊற்றப்படுகிறது.
மஞ்சள் தடவிய புத்தாடை, மஞ்சள் பூசிய கயிறு, மஞ்சள் பூச்சுபெற்ற அரிசி, பிடித்து வைத்த மஞ்சள், சுவரில் திறுநீறு போல இடப்படும் மஞ்சள்கீற்று, மஞ்சள் கரைத்த கலசநீர் எனத் தமிழர் பண்பாட்டில் மஞ்சள் இரண்டறக் கலந்துள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் தெற்காசிய நாடுகளான ஜாவா, இந்தோனேசியா, பாலித்தீவுகள் முதலியவற்றில் மஞ்சள் மங்களக் குறியாகக் கருதப்படுகிறது என்பது சிறப்புச் செய்தி.
இஸ்லாமிய தாக்கத்தின் பின்பும் இந்தோனேசியா, பாலித் தீவுகளில் மஞ்சள் கலந்த அரிசி புனிதமாகக் கருதப்படுகிறது. குறிப்பிட்ட சடங்குகளில் நாசி குளிர் என்னும் இந்தக் கலவை வழங்கப் படுகிறது என்பது சிறப்புச் செய்தி.
இந்தியாவிலும், தெற்காசியாவிலும் உணவில் மஞ்சளின் பயன்பாடு மிகுதி. இந்தியாவில் மஞ்சள் உலரவைத்து, இடித்து, பொடித்து மஞ்சள் பொடியாக பலரால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தெற்காசியாவில் மஞ்சள் கிழங்கு அப்படியே கறி சமைக்கப் படுகிறது. சுமத்திரா இந்தோனேஶியாப் பகுதிகளில் மஞ்சளின் தழை நிறம்-மணம் சேர்க்க உணவில் பயன்படுத்தப்படுகிறது.
மஞ்சளின் வகைகள்
முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரளி மஞ்சள், கரிமஞ்சள், நாக மஞ்சள், காஞ்சிரத்தின மஞ்சள், குரங்கு மஞ்சள், குடமஞ்சள், காட்டு மஞ்சள், பலா மஞ்சள், மர மஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என்று மஞ்சளில் பல வகைகள் உண்டு. இதில் முட்டா மஞ்சள் சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள். கஸ்தூரி மஞ்சள் வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது. விரளி மஞ்சள் நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள்.
மஞ்சளின் பயன்பாடுகள்
சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது. சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது. உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது. வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது.
மருத்துவ குணங்கள்
மஞ்சள் சூரணம் உட்கொண்டால் குடல் நோய் விரைவாகவும், நிரந்தரமாகவும் தீரும். பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும். மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஶம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும். மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம். மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல் போன்றவை நீங்கும். வாயு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும். மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி விடும். துர்நாற்றம் நீக்கும். மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்து விட்டால் அனைத்து வகையான நச்சு நுண்ணுயிரிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும். மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுத்தால், தொற்று நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் அழியும். மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும். மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும். மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேகப் புண், மேகப் படைகள், வட்டமான படைகள், நச்சுக்கடிகள் நீங்கும். தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும். மஞ்சளை இலுப்பெண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும். மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக உள் இழுத்தால், தலைவலி நீங்கும். மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, புண்களுக்குப் போட்டால், விரைவில் ஆறாத புண்கள் ஆறும். மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும். மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும். அடிபட்ட புண்ணுக்குப் மஞ்சளை அரைத்துப் போட்டால், சீக்கிரம் புண் ஆறிவிடும். அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போட்டால், இரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைந்து விடும். பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும்.
பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கல் போன்றவை மஞ்சள் பொடி சாப்பிடுவதால் நீங்கும். மஞ்சளை கஶாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஶ நீர் வெளியேறி விடும்.
மற்ற பயன்கள்
மஞ்சள்தூள் உணவில் சேர்ப்பதால் அகவை முதிர்ந்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) ஏற்படும் நினைவுக் குறைபாடு தரும் அல்சைமர் நோய் உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் கெடுதி தரும் படிவு குறைகின்றது என்று துவக்கநிலை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் என்ற ஒரு மூலக்கூறு, வயதான ஆய்வக எலிகளின் மூளையில் இருக்கும் பீடா-அமைலோய்ட் புரத சேமிப்புகளை அகற்றுகிறது என்பதையும் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். மூளையில் அல்சைமர் உருவாக்கும் கெடுதி தரும் படிவுகளாகக் கருதப்படுபவை அமைலாய்ட் நாறுகள். மனித மூளையில் இருக்கும் இப்படிப்பட்ட பீட்டா-அமைலோய்ட் புரதங்களை பரிசோதனைக்குழாயில் போட்டு அத்துடன் மிகக்குறைவான அளவு குர்க்குமின் சேர்த்தால், அது பீட்டா- அமைலோய்ட் புரதங்கள் ஒன்றுசேரவிடாமல், அவை நாறுகள் ஆக்கவிடாமல் பண்ணுகிறது. பீட்டா-அமைலோய்ட் புரோட்டீன்கள் மூளையில் ஒன்று சேர்ந்து அழுக்குகளாக சேர்வதே அல்சைமர் நோயாக உருவாகிறது. ஆகவே இந்த புதிய கண்டுபிடிப்புகள், அல்சைமர் நோயைக் குணப்படுத்தவும், அது வராமல் தடுக்கவும் மஞ்சள்தூளில் இருக்கும் குர்க்குமின் உதவும் என்னும் கருத்துக்கு வலுவூட்டுகின்றன. மஞ்சள்தூளைத் திரவ வடிவத்தில் பயன்படுத்தி வெடிகுண்டுகள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதாரண இயல்பு நிலையில் திரவ மஞ்சள் ஒரு மெல்லிய படலமாக இடப்பட்டால் ஒளியை உறிஞ்சி மிளிரும் தன்மை கொண்டது, மஞ்சளில் உள்ள வேதிப்பொருளானது டி.என்.டி (கூNகூ) போன்ற வெடிபொருட்களின் மூலக்கூறுகளை வளியில் இருந்து அகத்துறிஞ்சுவதனால் மஞ்சளின் ஒளிவெளிவிடும் தன்மை மாற்றம் அடைகின்றது; மிளிரும் தன்மை குறைகின்றது.
இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


கருத்துகள் இல்லை