Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - மாரியம்மன் திருக்கோயிலின் பரிவாரதெய்வங்கள்

மஹா மாரியம்மன் 

ஆடி மாத சிறப்புகள்

மாரியம்மன் திருக்கோயிலின் பரிவாரதெய்வங்கள் 




1. சப்தகன்னியர் : 

மணம் வீசுகின்ற பூக்களைக் கொண்டு விளையாடும் கன்னிமார் ஏழுபேர். இவர்கள் மலை யில் வைத்து வழிபடும் தெய்வங்களாகும்.இவர்கள் மோகனக் கன்னி, விராட கன்னி, இராவுக்கன்னி, சரவடிக் கன்னி, ஆகாசக் கன்னி, பூக்கன்னி, ஈரடிக் கன்னி என்று கிராமங்களில் வழிபடப்படுகின்றனர். பெரும்பாலும் இக்கன்னியர் வடிவங்கள் ஒரு நீண்ட கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். பத்தாம் நூற்றாண்டு வரை இவர்கள் பிரதானமான தெய்வமாகக் கொண்டாடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இவர்கள் தேவலோகத்து மகளிர். நீராடுவதற்காக பூவுலகம் வந்தபோது அருகில் சிவனை நோக்கித் தவம் செய்து கொண்டிருந்த திருமாலின் தவத்தை தங்களின் நீராடும் ஓசையினால் கலைத்து விட்டார்கள். தவத்திலிருந்து எழுந்த திருமால் அக்கன்னியரின் அழகில் மயங்கி அவர்களுடன் நயனத்தால் கூட, அதன் மூலம் ஏழு ஆண் குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளைக் காளியிடம் கொடுத்து வளர்க்கச் சொல்லிவிட்டு தேவருலகம் சென்று விட்டார்கள் சப்தகன்னியர்கள். அவர்கள் தேவருலகம் சென்ற பின்னரும் தங்கள் மக்களைக் காப்பதற்காக நிலவுலகிலும் தெய்வமாகி அமர்ந்துள்ளனர் என்று திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வாறான வரலாறு கூறப்படுகிறது. 

தென்னாற்காடு பகுதியில் இருளர் இனத்தவர் தங்கள் இனத்தின் தெய்வமாக இவர்களை வழிபடுகின்றனர். அவர்களின் கூற்றுப்படி இந்த வரலாறு சற்று வித்தியாசமானது. வித்தியாதர முனிவர் ஏழு கன்னியருடன் கூடி ஏழு பிள்ளைகளைப் பெற்றார். அவர்கள் முனிவரிடம் ஏழு குழந்தைகளையும் கொடுத்துவிட்டுச் சென்று விட்டனர். அவர் தன்னால் அவர்களை வளர்க்க முடியாதென்று கருதி காளியிடம் கொடுத்துவிட்டார். வளர்ந்து ஆளாகிய எழுவரும் சோழ மன்னனிடமும், பாண்டியமன்னனிடமும், வேலையில் அமர்ந்தனர் என்று வலங்கை நூல்கள் கூறுகின்றன. 

2. பேச்சி அம்மன் : 

ஒரு சிறு தெய்வம். மாரியம்மன் கோவிலில் இடம் பெரும் தெய்வங்களில் ஒன்று. வாயில் குழந்தையுடன் நின்ற வடிவில் இந்த தெய்வம் காட்சியளிக்கும். பேச்சி என்ற பெயருக்கேற்ப பிணம் தின்னும் தெய்வமாக இந்த தெய்வத்தைக் கருது கின்றனர். இவளை வழிபட பயம் நீங்கும். பேச்சுவராத குழந்தைகளுக்கு பேசும் சக்தியை அளிப்பவள். ஸரஸ்வதியின் அம்சமாகத் திகழ்பவள். 

3. காத்தவராயன் : 

சிவபெருமான் உலகில் உள்ள எல்லோருக்கும் படியளக்கிறார் என்பதனைப் பரீக்ஷித்துப் பார்க்க ஆசை கொண்ட பார்வதி தேவி, ஒரு சிறு எறும்பைப் பிடித்து ஒரு சிமிழ் ஒன்றில் அடைத்து வைத்தார். பின்னர் சிவன் வந்ததும் இன்று எல்லா உயிரினங்களுக்கும் உணவு அளித்தீர்களா”, என்று கேட்க, அவரும் "ஆம்” என்றார். அடைத்து வைத்த சிற்றெரும்புக்கு உணவு படைத்தாரா என்று பார்க்க சிமிழைத் திறந்ததும், எறும்புக்கும் உணவிருப் பதைக் கண்டாள். 

எறும்பை அடைத்து வைத்து பாவச் செயல் புரிந்ததற்காக, அவளை ஒரு நந்தவனம் அமைத்து அப்பாவத் தைப் போக்குமாறு கூறினார் பரமசிவன். 

பார்வதி தேவியும் அவ்வாறு ஒரு நந்தவனம் அமைத்தார். அதைப் பாதுகாக்க காத்தவராயன்சு என்பவனை நியமித்தாள். அந்த காத்தவராயன் ஒரு முறை காவல் புரிந்து கொண்டிருந்தபோது அங்கு குளிக்க வந்த கன்னிப் பெண் ஒருத்தியின் ஆடையை மறைத்து வைத்தான். இதனையறிந்த சிவபெருமான், அவனை, பூவுலகில் பல பிறவிகள் எடுத்து கழுவேறுவாய்” என்று சபித்துவிட்டார். காத்தவராயனுக்கு உதவிய பார்வதியையும், காமாக்ஷியாகத் தவமியற்றி, காத்தவராயன் பல பிறவிகள் எடுத்து கழுவேறிய பின் சாபவிமோசனம் பெற்று சிவலோகம் வருக,” என்று சபித்துவிட்டார். 

சிவனுடைய சாபத்தின்படி பல பிறவிகள் எடுத்த காத்தவராயன் கடைசியில் காமாக்ஷியம்மனுக்கு மகனாக காஞ்சீபுரத்தில் பிறந்து பின்னர் மலையாள நாட்டிற்குச் சென்றான். அங்கு தொட்டியம் என்ற இடத்தில் தொட்டியத்து சின்னான் என்பவன் மந்திரதந்திரங்களில் வல்லவன். அவன் வைத்த போட்டியில் வெற்றி பெற்ற காத்தவராயன் அந்த மந்திரவாதியை தனக்கடிமையாக்கினான். பின்னர் அவனுடன்  தோழமைக் கொண்டான். அவனுடைய உதவியுடன் தாய் தடுத்தும் கேளாமல் அரசகுலத்துதித்த ஆர்யமாலா என்பவளைக் காதலித்தான். காதலில் வெற்றிபெற கழுவேறினான். கழுவேறிய காத்தவராயனும் ஆர்யமாலாவுடன் தெய்வமானார்கள். காத்தவராயன் கழுவேறியதும், காமாக்ஷியும் தன் சாபம் தீர்ந்து கைலாயம் சென்றாள். 

கொல்லி மலையை ஆண்ட குமரகுருபரன், காத்தவராயனாகக் கருதப்படுகிறார். காத்தவராயன் எடுத்த பல பிறவிகளில் ஒன்றில் அவன் குமரகுருபரனாகப் பிறந்தான் என்று கூறுகிறார்கள். 

சக்தியின் ஸ்வரூபமாக இருந்த காமாக்ஷியே மாரி. சக்தியின் அம்சமான மாரி தனக்குத் துணையாக காத்தவராயனை இருக்குமாறு அழைத்ததாக மாரியம்மன் கதை பாடல் கூறும். இன்றும் பல மாரியம்மன் கோயில்களில் பரிவார தேவதையாக காத்தவராயன் வீற்றிருப்பதைக் காணலாம். 

4. மதுரை வீரன் : 

வீரய்யன், மதுரை  வீரஸ்வாமி என்றெல்லாம் இவர் அழைக்கப் படுகிறார். இவர் ஒரு காவல் தெய்வம். காசிராஜன் என்ற மதுரை அரசனுக்கு மகனாகப் பிறந்து ஜோதிடர்களின் அறிவுரைப்படி காட்டில் விடப்பட்டவன். இந்த பிள்ளையை ஒரு சக்கிலி எடுத்து வளர்த்தான். இவன் நாக தெய்வத்தின் அருள்பெற்று நாகராஜனால் பல சித்திகளைப் பெற்றான். பின்னர் பொம்மி நாயக்கன் மகள் பொம்மியை மணம்புரிந்து கொண்டான். விஜயரங்கனிடம் வேலை செய்து கொண்டிருந்தபோது திருமலை நாயக்கர் அரசாண்டு கொண்டிருந்த மதுரையில் கள்வர்களைப் பிடித்தான். அங்கு வெள்ளச்சி என்பவளைத் திருமணம் செய்துகொண்டான். பின்னர் தவறுதலாக அரசதண்டனைக்கு உட்பட்டு கைகால்களை இழந்தான். இதனால் இவன் மனைவி தீக்குளிக்க, அவனோ மீனாக்ஷி திருக்கோயிலில் தன்னுயிரைப் போக்கிக் கொண்டு தெய்வமானான். இவனுக்கு கல் நாட்டி காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர். 

5. பாவாடைராயன் : 

அங்காள பரமேச்வரியின் காவல் சேவகன். பிறப்பால் கீழ்குலத்தவனாக இருந்தாலும் ஒரு சமயம் அங்காளம்மன் மயானத்தில் இருக்கையில் அவளிடம் சென்று தான் உடுத்திக்கொள்ள ஆடை வேண்டுமென்று கேட்க, அவள் தன்னிடமிருந்த பாவாடையைக் கொடுக்க, அதைத் தான் உடுத்திக்கொண்டு பாலகனாக அங்காளம்மன் இட்ட பணியைச் செய்துகொண்டிருந்தான். தன் அருந்தவத்தால் சக்தி உபாசகனாகி பின்னர் தெய்வமானான். சில இடங்களில் மாரியம்மன் பரிவார தேவதைகளில் ஒருவனாக விளங்குகிறான். 

6. கருப்பண்ணஸ்வாமி : 

கருப்பு, கறுப்பண்ணன், கருப்பசாமி, உத்தண்டசாமி, கருப்பண்ணசாமி ஆகிய பல பெயர்களில் அழைக்கப்படும் இவர் அம்மன் கோயில்களிலும், அய்யனார் கோயில்களிலும் துணை சாமியாக வைக்கப்பட்டு வழிபடப் படுகிறார். சில குடும்பங்களில் குல தெய்வமாகவும் விளங்குகிறார். ஊர் தெய்வமாக விளங்கும் கருப்பண்ண ஸ்வாமியின் கோயில் ஊருக்கு வெளியில் இருக்கும். இவர் இரவு நேரங்களில் குதிரையில் ஆரோகணித்து ஊரைக் காவல் காப்பதாகவும், வேட்டைக்குச் செல்வதாகவும், பக்தர்கள் கூறுவர். இவரை வணங்குவோருக்கு தீய சக்திகளான பேய், பிசாசு, போன்றவற்றால் எந்த தொந்தரவும் வராது எனவும் கூறப்படுகிறது. 

7. சங்கிலிக் கருப்பன் : 

தமிழகத்தின் தென் பகுதிகளில் உள்ள மாட தேவதை. சங்கிலியால் தன்னைப் பிணைத்துக்கொண்டிருப்பதால் சங்கிலிக் கருப்பன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். 

8. முத்தாலு ராவுத்தன் : 

சில மாரியம்மன் கோயில்களில் பரிவார தெய்வங்களில் ஒன்றாக குதிரைமேல் அமர்ந்த கோலத்தில் முகமதியரின் கற்சிலைகள் காணப்படும். ிஇராவுத்தன்’ என்றால் குதிரைவீரன் என்று பெயர். இது முஸ்லீம்களின் ஒரு பிரிவினரின் பெயராகவும் விளங்குகிறது. இவர்கள் முன்னர் குதிரை வியாபாரம் செய்து வந்ததை இது குறிப்பிடுகிறது. இவர்கள் மாரியம்மனை வணங்கி வழிபட்டதும் சிலர் அம்மனின் அருள் பெற்றதும் தெரிய வருகிறது. இன்றும் சிலர் தங்களுக்கு முத்தாலு ராயன், முத்தாலு ராவுத்தன் என்று பெயரிட்டுக்கொண்டு மாரியம்மனையும், தங்களின் முன்னோரான முத்தாலு ராவுத்தனையும் வழிபடுகின்றனர். 

பல கோயில்களில் மேலும் பல பரிவார தெய்வங்களையும் காணலாம். 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 




ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை