Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - கீழ்மாந்தூர் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில்

மஹா மாரியம்மன் 

ஆடி மாத சிறப்புகள்

கீழ்மாந்தூர் அருள்மிகு மகாமாரியம்மன் திருக்கோயில்



இந்து மதம் மாத்திரமே இறைவனை தாயாகவும் தந்தையாகவும், தலைவனாகவும், தோழனாகவும், குருவாகவும், வழிபடும் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. இவற்றில் தாயாக வழிபடுவது அன்பின் பிணைப்பால் அருள்பெறும் முறையாகக் கொள்ளப்படுகிறது. 

இந்நிறத்தான், இவ்வண்ணத்தான், இப்படியிருப்பான், இன்ன குணங்கள் உடையான், இன்ன நிலையில் இருப்பான் என்று சற்றேனும் குறிப்பிட்டுக் கூற முடியாமல் இருக்கும் இறைவன் ஆன்மாக்களுக்கு இறைமோட்சம் கிடைக்க கீழிறங்கி வந்து உருவம் கொண்டு அனைத் துமாகி அருளாட்சி நடத்தும் இடமே ஆலயம். சகலரும் தன்முன் பொது வெனக் காட்டும் ஆலயத்தில் நடைபெறும் கிரியைகள் அனைத்துமே பொருள் தருவன. தத்துவம் உடையன. அவ்வாறு தத்துவங்களை உணர்த்துபவளாகவும், அண்டசராசரங்கள் அனைத்தின் இயக்கத்துக்குக் காரணமாகவும், ஆள்பவளாகவும், ஆட்டிப் படைப்பவளாகவும், அரவணைப்பவளாகவும் விளங்குகிறாள் அன்னை ஆதிபராசக்தி. அவள் அம்பிகையாகத் திருவுருவம் கொண்டு கீழ்மாந்தூர் மக்களுக்கு தாயாகத் திகழ்கிறாள். 

அந்த அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டி குலதெய்வத்துக்குத் தேரெடுத்து அலங்காரமிட்டு பக்திப் பரவசத்தோடு கொண்டாடும் ஊர்த் திருவிழாவாக கீழ்மாந்தூர் மக்கள் இந்த ஆலயத்தின் பிரம்மோற்சவ த்தைப் பார்க்கிறார்கள். 

ஆலயங்களில் தினந்தோறும் நடைபெறும் கிரியைகள் நித்தியக் கிரியைகள் என்றும் விசேட காலங்களில் நடைபெறும் கிரியைகள் நைமித்தியக் கிரியைகள் என்றும் கொள்ளப்படுகின்றன. நைமித்தியக் கிரியைகளில் சிறப்புடன் குறிப்பிடப்படுவது மகோற்சவப் பெருவிழாவாகும். உற்சவங்களில் மகோன்னதமானதும் விழாக்களில் பெரியதாக வும் பெயர்பெற்ற மகோற்சவங்கள் கொடிமரம் உள்ள அனைத்து ஆலயங்களிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. 

கும்பகோணம் - மயிலாடுதுறை மார்கத்தில் பந்தநல்லூருக்கருகில் உள்ள கீழ்மாந்தூர் அருள்மிகு மகாமாரியம்மன் ஆலயத்திலும் இந்தப் பெருவிழா வருடந்தோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும். 

சிவனில் பாதியாகி, அவரது இயக்கத்துக்குக் காரணமாகி நாடிவரு வோருக்கு நயம்,நலம் தரும் அம்பிகைக்கு மணிமகுடம் சூட்டி, ஆலய வாசலில் கடவுளர்கள், தேவர்கள், ரிஶிகள் குங்குமம் சூட்டி ஆசிர்வதிக்க, நாயகியவள் நகர்வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். 

நான் என்ற அகங்காரமும் எனது என்ற மமகாரமும் நிறைந்த ஆணவம் என்னும் இருள் மலத்தை அருள் என்னும் ஒளியால் அகற்றும் தத்துவமே வீதியுலாவின் பொருளாகும். அதுமட்டுமன்றி ஊர்த்தூய்மை, ஊரவர்களின் ஒற்றுமை, சேர்ந்து செயற்படும் தன்மை, அனைவரும் அன்னையின் நிழலில் ஒன்றுபடும் தன்மை ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. 
அகிலாண்ட நாயகியாய், இப்புவியுலகில் உள்ள ஜீவன்களை காத்தருளும் சக்தி ஸ்வரூபிணியாய் அநேக திருத்தலங்களில் கோயில் கொண்டு எழுந்தருளி, சாதி சமய பேதமின்றி, வேண்டுவோர்க்கு வேண்டுவன வழங்கி, பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் தெய்வமாய், கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் விளங்கும் அன்னை பராசக்தி, ஸ்ரீமஹாமாரியம்மன் என்ற திருநாமத்துடன் தன் அருள் அலைகளை பரப்பி நிற்கும் இடம்தான் கீழ்மாந்தூர். 

இவ்வூர் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை - கும்பகோணம் மார்கத்தில் பந்தநல்லூரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் பழவாற்றின் கரையில் அமைந்துள்ளது. 

இத்திருக்கோயிலுக்கு அம்மன் வந்தமர்ந்தது எப்படி? 

இத்திருக்கோயிலின் தலவரலாறானது மிகவும் தொன்மையும், பழமையானதாகும். சுமார் 250 ஆண்டுக்கு முன்பு இவ்வூரிலிருந்து கட்டை வண்டிகளில் விவசாய விளைப்பொருட்களை சந்தைக்கு ஏற்றி சென்று விற்று விட்டு, தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வருவது வழக்கமாகும். அவ்வாறே ஒரு சமயம், பொருட்களை ஏற்றிக்கொண்டு இரவில் காட்டு வழியில் ஊர் திரும்பி கொண்டிருந்தபோது அதில் ஒரு வண்டியின் முன் பாரம் அதிகமாகவும், பின்பாரம் குறைவாகவும் இருக்க, வண்டி குடை சாயாமல் இருப்பதற்கு அதனை சமன்படுத்த அங்கிருந்த ஒரு கருங்கல்லை ஏற்றி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். அந்த சந்தையானது இவ்வூரிலிருந்து சுமார் 50மைல் தொலைவில் இவ்வூருக்கு வடக்கே இருந்ததாக தெரிகிறது. மறுநாள் விடியற்காலை ஊர்திரும்பிக் கொண்டிருந்தோர், தாங்கள் பாரத்துக்காக ஏற்றி வைத்திருந்தது சாதா கருங்கல் அல்ல, அது அம்மன் சிலை என்று பார்த்ததும் பயந்து விட்டனர். அதனை செருகுடி என்னும் ஊர் குளத்தில் போட்டுவிட்டு ஊர் திரும்பி விட்டனர். அந்த அம்மன் சிலை சில மாதங்கள் செருகுடி குளத்திலேயே இருந்துள்ளது. குளத்தில் அம்மன் சிலை இருப்பதை பார்த்த அவ்வூர் மக்கள் பயந்து கொண்டு, அதனை இரவோடு இரவாக ஸ்ரீரங்கராஜபுரம் அய்யனார் கோயில் குளத்தில் யாருக்கும் தெரியாமல் போட்டு விட்டு வந்து விட்டனர். அக்குளத்திலும் அந்த அம்மன் சிலை சில மாதங்கள் இருந்துள்ளது.  

இதற்கிடையில் தற்போது டிரஸ்டியாக உள்ள பசுபதி அவர்களது முப்பாட்டனாரின் கனவில் அன்னை தோன்றி நான் குளத்திலே இருக்கிறேன் என்று கூறியதனால் அவர் தேடிக்கொண்டு செல்ல, அது போல் அவரிடம் வேலைப் பார்த்த ஒருவருக்கும் கனவும் வர, அவரும் தேடிக்கொண்டு வரவும், இருவரும் தத்தம் கனவுகளை கூறி, ஆட்களைக் கொண்டு கிராமத்தில் உள்ள குளங்கள், குட்டைகளில் தேடிவிட்டு கடைசியாக ஸ்ரீரங்கராஜபுரம் ஸ்ரீஅய்யனார் கோயில் குளத்தை தேடியபோது அந்த அம்மன் சிலை கிடைத்துள்ளது. 

அந்த அம்மன் சிலைதான் தற்போது கீழ்மாந்தூரில் அருள்பாலித்து கேட்டோர்க்கு கேட்ட வரம் தரும் மாரியம்மன் திருவுருவாகும். தற்போது கோயில் உள்ள இடத்தில் ஒரு கீற்றுகொட்டகைப் போட்டு அந்த அம்மனை பூஜித்து வந்தனர். 

டிரஸ்டியின் தாத்தா காலத்தில், (ஆங்கிலேயே ஆட்சி காலத்தில்) ஒரு வழக்கு அவருக்கு சாதகமாக முடிய அந்த அம்மனை வேண்டிக் கொண்டிருந்தார். அந்த வழக்கு இவர்கள் பக்கம் சாதகமாக தீர்ப்பு வர, உடனே தற்போது கோயில் உள்ள கர்ப்பகிருகம், அர்த்த மண்டபத்தை அவருக்கு சொந்தமான இந்த இடத்தில் கட்டி குடமுழுக்கு செய்து வணங்கி வந்தனர். 

இவ்வாறு வளர்ந்து வந்த இவ்வாலயத்தில் கும்பாபி‌ேஶகங்கள் போன்ற ஆலய வைபவங்கள் குறையில்லாமல் நடந்துவருகிறது. 

சிறிய திருக்கோயில்தான் என்றாலும் அன்னையின் கீர்த்தி மிகப்பெரிது. வருடந்தோறும் பத்து தினங்கள் சித்திரை பெருவிழா கொண்டாடப்படும். அப்பொழுது தினமும் ஸ்ரீமாரியம்மன் வீதியுலா காட்சி தருவார். இச்சமயத்தில் தன்னைச் சுற்றியுள்ள தன் ஆணைக்கும் ஆளுகைக்கும் உட்பட்ட பதினான்கு கிராமங்களுக்கும் சென்று தன் பக்தர்களுக்கு தரிசனம் தருவாள் இந்த தாய். அவள் இந்த பதினான்கு கிராமத்தில் வசிக்கும் பல குடும்பங்களுக்குக் குல தெய்வமாக விளங்குகிறாள். 

இவ்விழாவில் அம்மன் வீதிவுலா வரும்பொழுது தினமும் விசேஶ மேளக்கச்சேரியும், கிராமிய நடன நிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும் அதிவிமர்சையாய் நடைபெறும். கரகாட்டம், தீச்சட்டி எடுத்தல், மாவிளக்கு போடுதல், கூழ் காய்ச்சி ஊற்றுதல், பூக்குழி இறங்குதல் போன்ற எல்லா நிகழ்ச்சிகளும் நடைபெறும். 

பலர் வெளியூர் சென்று விட்டாலும் ஆண்டுக்கொரு முறையாவது வந்து அன்னையை தரிசிப்பதை தங்கள் கடமையாகக் கொண்டுள்ளனர். 

மேலும் ஐதீகப்படி இத்திருக்கோயில் தீமிதி திருவிழாவும் காப்பு கட்டுவதற்கு முன்பு ஸ்ரீரங்கராஜபுரம் ஸ்ரீஅய்யனார் கோயில் குளத்தில் இருந்து கரகம் எடுத்து வந்து காப்பு கட்டி முதல் நாள் உற்சவம் ஆரம்பித்து, பத்து நாட்களும், பத்து ஊர்களில் அவ்வூராரின் மண்டகப் படியுடன் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வலங்கைமான் ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு அடுத்த பெரிய திருவிழா, கீழ்மாந்தூர் அருள்மிகு மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழாவாகும். அது பிரதி வருஶம் சித்திரை மாத பெருவிழாவின் இறுதியில் நடை பெறுகிறது. தீமிதி திருவிழாவன்று சுற்றுப்புறத்தில் உள்ள 14 கிராமங்களி லிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். 

அன்னையை அண்டியவருக்குத் துன்பம் என்றும் கிடையாது. முன்வினைகளால் ஏற்படும் துன்பம் பகலவனைக் கண்ட பனி போல் விலகும். அவள் அருளால் கண்ணொளி பெற்றவர்கள், பிழைக்க மாட்டார்கள் என்று மருத்துவரால் கைவிடப்பட்டு பிழைத்தவர்கள், தீராத நோயிலிருந்து விடுபட்டவர்கள், முடம் நீங்கி எழுந்தவர்கள், சொல்ல முடியாத துன்பங்களிலிருந்து விடுபட்டவர்கள், பில்லி, சூனியம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள், அலுவலகத் தொல்லைகளிலிருந்து விடுபட்டவர்கள், காணாமல் போன பொருட்கள் கிடைக்கப் பெற்றவர்கள், ஏராளம்! எத்துனையோ குடும்பங்களை அவள் சேர்த்து வைத்திருக்கிறாள். 'மலடி’ என்ற பழிச் சொல்லிலிருந்து ஏராளமான பெண்களை விடுவித்திருக்கிறாள்! 

எங்களின் குலதெய்வமாக விளங்கும் இத்தகைய சிறப்பு பெற்ற கீழ்மாந்தூர் அருள்மிகு மகாமாரியம்மன் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாய் வேண்டுவோர்க்கு வேண்டுவன வழங்கி அருள்பாலித்து வருகிறார் என்றால் அது மிகையாகாது. 

அவள் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வோர் பெயரில் எழுந்தருளி தன் பக்தர்களைக் காத்து வருகிறாள். அத்தகைய ஆலயங்களை இனிக் காண்போம். 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை