Recent Posts

மஹா மாரியம்மன் - வெட்டுவானம் எல்லையம்மன்

மஹா மாரியம்மன் 
வெட்டுவானம் எல்லையம்மன் 




மழையும், வளமும் தந்து உலகத்தையே ஜீவித்திருக்க வைப்பவள் அன்னை மாரியம்மன். உருமாறி வந்தவள் கருமாரி. ரேணுகா தேவியின் உடலில் அருந்ததிப் பெண்ணின் தலையும், அவளுடைய உடலில் தேவியின் தலையுமாக மாறியதால், தலைமாறி உயிர் பெற்றதால் பரமேஸ்வரிக்கு மாரியம்மன் என்ற பெயர். தலை வெட்டப்பட்ட ஊர் வெட்டுவானம். 

மாரியம்மன் ஆலயங்களுக்கெல்லாம் தலைமைக்கோயிலாக வெட்டுவானம் இருப்பதால் இத்திருத்தலம் மிகவும் சிறப்புப் பெற்றது. பதினாறு (16) கலைகளுடன் பிரகாசிக்கின்ற அம்மனை முழுநிலவு அன்று நடக்கும் பௌர்ணமி பூஜையில் தரிசிப்பது மிகவும் சிறப்பு. அம்மனையும், சந்திரனையும் நேருக்கு நேர் சந்திக்க வைக்கும் வைபவம். பக்தியில் உருகாதவரையும் உருக வைக்கும். அதே போல அமாவாசையும் மிகவும் சிறந்தது. எலுமிச்சை பழத்தை அன்னை மடியில் வைத்து அதன் சாற்றைப் பருகலாம். அந்த கனியை எப் பொழுதும் உடன் வைத்திருந்தால் எல்லாம் சுபம்தான். 

வேலூரிலிருந்து  22 கி.மீ. தூரத்தில் இருக்கிறது இந்த ஆலயம். இந்த ஆலயத்திற்கு வந்தால் தீராத நோய் தீரும். அம்மை நோய் வந்து அவதிப்படுபவர்கள் இத்திருக்கோயிலில் தங்கி குளத்தில் நீராடி, அம்மனின் பிரசாத மஞ்சள் நீரை பருக அம்மையின் வேகம் தணியும். சுயம்வர பார்வதி சர்வமங்களா கௌரி பூஜை திருமணத் தடை நீங்க செய்யப்படுகிறது. மக்கள் எந்த  பிரச்சனையுடனும் அம்பிகையை அணுகினால் அவர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பது உறுதி. கண், காது, மூக்கு, கை, கால் என எந்த உடலுறுப்பு பாதிப்பானாலும் அம்பிகைக்கு அந்த உரு வாங்கி சாற்ற நோய் குணமாகிறது.  மனிதர்களுக்கு மட்டுமல் லாமல் பசுவிற்கு ஏற்படும் நோய் கூட அதன் உரு வாங்கிப் போட குணமாகிறது. நாக வாகனம் தொடங்கி பிரம்மோற்சவம் வரை  எல்லா விழாக்களும் விமரிசையாக நடைபெறுகிறது. 

400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது இந்த கோயில். இந்த ஆலயத்தை சுற்றிலும் மகாசக்தி இருக்கிறாள் என மக்கள் நம்புகின்றனர். வேப்பமரமாக அம்பாள் அருள்பாலிக்கிறாள். சென்னையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் ஜவ்வாது மலைச் சாரலில் பாலாற்று நதியின் தென்கரையில் அமைந்துள்ளது இத்திருத்தலம். வேப்பமரமாக அருள் பாலிக்கும் அம்பிகைக்கு மஞ்சள் தாலியும், மஞ்சள் துணியும் கட்டுகிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் இப்பிரார்த் தனைக்கு உகந்த நாட்களாகும். இங்குள்ள நாகக் கன்னிக்கு செவ்வாய்க் கிழமைகளில் விளக்கேற்றினால் நாக தோஶம் நீங்குகிறது. 

ஆடி மாதத்தில் வேப்பிலை ஆடைகாப்பு பிரார்த்தனை நிறைவேற் றுவதற்காக வெளி மாநிலங்களிலிருந்தும் மக்கள் வருகின்றனர். அதே போல அங்கப் பிரதட்சணம், அக்னி சட்டி எடுத்தல், மாவிளக்கு போடுதல் போன்றனவும் சிறப்பான பிரார்த்தனைகள். ஆறாம் வெள்ளி ஏற்றப்படும் லட்ச தீபம் கண்கொள்ளாக் காட்சி. மத ஏற்றத்தாழ்வு இல்லாமல் எல்லோர் மனதிலும் வெட்டுவானம் எல்லையம்மன் நிறைந்து இருக்கிறாள். துன்பமும், துயரமும் அனுபவித்து வருபவர்கள் ஒரு முறை வெட்டுவாணம் எல்லையம்மனை தரிசிக்க அனைத்து குறைகளும் பறந்தோடுமே! 

வெட்டுவானம் என்னும் இவ்வூருக்கு மேலைவித்தூர், வித்தகாபுரி என்னும் பெயர்களும் உண்டு. வெட்டுவாணம், கோவிந்தம்பாடி, பேட்டை என்று மூன்று தனித்தனி கிராம நிர்வாகமாக இருந்ததை ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஒரே கிராம நிர்வாகமாக மாற்றி, ஒரு கிராம அதிகாரியின்கீழ் கொண்டுவந்துள்ள விவரம் அரசு குறிப்பேட்டில் காணப்படுகிறது. 

இவ்வூரில் கோட்டை இருந்த அடையாளங்கள் காணப் படுவதாலும் பேட்டைத் தெரு என இருப்பதாலும் இலக்கியத்தில் காணப்படும் படவேடுீ என வழங்கும் குண்டலிபுர நகரத்தை ஆண்ட நன்னன் என்ற அரசரின் நாட்டு எல்லையாக இவ்வூர் இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. ஜவ்வாது மலையில் உற்பத்தியாகும் நதியானது இரு கிளைகளாகப் பிரிந்து படவேடு கிராமத்தின் வழியாகச் செல்லும் நதி கமண்டல நதி எனவும்,  வெட்டுவானம் கிராமத்தின் வழியாகச் செல்லும் நதி புண்ணிய தீர்த்த நதி எனவும் பெயர்களைப் பெறுகின்றது. 

ஒரு உழவன் நீர்பாசனத்திற்காக வயலை செம்மைப்படுத்தும் போது அம்மன் சிலை ஒன்று மண்வெட்டியால் வெட்டுபட, அதிலிருந்து உதிரம் பெருகிற்று. இதனால் மயங்கிவிழுந்த அந்த உழவன் பிறகு தெளிந்து நான் எல்லையம்மன் என தெய்வவாக்கால் ஆவேசமுற கூற அம்மனுக்கு கோயில் எடுப்பித்து வழிபட ஆரம்பித்தனர். இதன் துல்லியமான காலம் தெரியப்படாமல் உள்ளது. 1961ம் ஆண்டு ஜனகணிதப்படி தமிழ்நாட்டின் 2500 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கேரளத்தில் மிகவும் பிரபலமாக போற்றப்படும் சோற்றானிக் கரை பகவதியம்மன், புராண வரலாற்றின்படி பரசுராமர் கேரளத்தைக் காக்க உருவாக்கிய 108 துர்க்கை தலங்களில் இதுவும் முக்கியமான கோயிலாக விளங்குகிறது. 

விஞ்ஞான முன்னேற்றம் சிறப்புற்று விளங்கும் இக்காலத்தில் மருத்துவர்களாலும், மருத்துவ வல்லுநர்களாலும் கைவிடப்பட்டோர் தம் நோய்தீர, பிணி அகல நாட்கணக் கிலும், மாதக் கணக்கிலும் தங்கியிருந்து குறைநீங்கப்பெற்று வணங்கி மகிழ்ந்து செல்கின்றனர். இந்தக் காட்சிகள் காண்போரையும், கேட்போரையும் பரவசப்படுத்தும் நிகழ்ச்சியாகும். அம்மனின் அபி‌ேஶக மஞ்சள் நீரும், தல விருட்ச மாகிய வேம்பும், புனிதமான குங்குமமும், அன்னைமீது அசைக்க முடியாத நம்பிக்கையுமே இப்பெருமைகளுக்கு காரணமாகும். இத்திருக்கோயிலின் வேம்பு மரம் காலத்தால் முற்பட்டதாகும். இதனை வலம் வந்து வழிபடுவோரைக் கண்டாலே அதன் உண்மை விளங்கும். 

அம்மனின் திருக்கோயில் எதிரே புனித திருக்குளமும், அருகே சிறுமி ஒருத்தியால் அடையாளம் காட்டபெற்ற புற்றுகோயில் ஒன்றும் உள்ளது. ஒவ்வொரு பௌர்ணமி நாளன்றும் இங்கே பூசைகள் நடக்கின்றன. 

இத்திருக்கோயிலின் வடகிழக்கில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலும், கீழ்புறத்தே பள்ளிகொண்டான் என வழங்கும் உத்திர ரங்கநாதர் திருக்கோயிலும். கீழைவித்தூர் அல்லது கீழச்சூர் என்னும் கிராமத்தில் நாக நாதீஸ்வரர் கோயிலும், வெட்டுவானம் பேட்டையில் பிள்ளையார் கோயிலும், அக்னி மூலையில் நெடுஞ்சாலையின் பீஜாசலகிரியின் மீது செல்லியம்மன் கோயிலும், அடியில் சாமுண்டீஸ்வரி கோயிலும் உள்ளன. இந்த சாமுண்டீஸ்வரியே மண்ணுலகில் மந்திரியின் மகளாகப் பிறந்து ரேணுகாதேவி என்ற எல்லையம்மனுக்கு தோழியாய் இருந்ததாக வரலாறு. இவ்வூர் வடகரையில் ஓலகாசி இவ்வூரின் பெயராலே வழங்கும் காசி விஸ்வநாதர் திருக்கோயிலும் உள்ளது. 

சென்னை பெங்களூரு சாலையில் வேலூரிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது வெட்டுவானம்.



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை