Recent Posts

மஹா மாரியம்மன் - இருமாத்தூர் - கொல்லாபுரி அம்மன்

மஹா மாரியம்மன் 
இருமாத்தூர் - கொல்லாபுரி அம்மன்  



தர்மபுரியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழிதடத்தில் 19வது கி.மீட்டரில் அமைந்துள்ளது இருமாத்தூர். இங்குதான் கோயில் கொண்டுள்ளாள் கொல்லாபுரி அம்மன். இந்த அம்மன் இங்கு எப்படி வந்தாள்? அதற்கும் ஒரு வரலாறு உண்டு. 

சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் தர்மபுரி முழுவதும் அம்மை நோயினால் தினமும் பலர் மடிந்து கொண்டிருந்தனர். ஆனால் தர்மபுரிக்கருகில் உள்ள புடைச்சல்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் அம்மை நோய் சுவடே இல்லை. இதற்கு காரணம் தேடப்போக புடைச்சல்பட்டியில் கொலுவிருக்கும் மாரியம்மனும் அவளுடைய தங்கையான கொல்லாபுரித்தாயும்தான் அந்தப் பகுதிகளை காத்து நிற்பதாக தெரிந்துகொண்டனர். உடனே தர்மபுரியில் உள்ள அனைத்து கிராம மக்களும் இருமாத்தூர், திம்மம்பட்டி, கொண்டராம்பட்டி, கோணம்பட்டி, வையம்பட்டி உள்ளிட்ட 12 கிராமங்களில் வசிக்கும் மக்களும் புடைச்சல்பட்டி அம்மனிடம் தங்களையும் காக்குமாறு வேண்டி நின்றனர். அம்மனை பல விதங்களிலும் ஆராதித்தனர். 

புடைச்சல்பட்டி மாரியம்மனும் தன் சகோதரியான கொல்லாபுரியை அம்மக்களுடன் அனுப்பி வைக்க கொல்லாபுரி அம்மனும் 12 ஊர்க்காரர்களையும் காக்கும் பொறுப்பை மேற்கொண்டாள். அவ்வூர் மக்கள் இருமாத்தூரில் ஒரு கல்லை நட்டு அதையே அம்மனாகப் பாவித்து அபி‌ேஶக ஆராதனைகள் செய்ய, அவர்களைப் பிடித்திருந்த அம்மை நோய் விலகியது. மக்கள் மகிழ்ச்சியுடன் வாழத்தொடங்கினர். அன்னையின் புகழ் எல்லா இடங்களிலும் பரவ, மக்கள் குடும்பம்  குடும்பமாக வந்து அன்னையை வேண்டி நின்றனர். 

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒருமுறை அம்மன் வீற்றிருக்கும் இடத்திற்கருகில் பூட்ஸ் காலோடு சிப்பாய்கள் நடமாடினர். அவ்வூர் மக்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கல்லை இறைவனாக கருதும் அவர்கள் பழக்கத்தைக் கேலி செய்து பேசி அவர்களையும் அவமதித்தனர். 

தன் பக்தர்களுக்கு துன்பம் ஏற்படுத்துவதை பொறுக்காத தேவி, வெள்ளையர்கள் சிலருக்கு அம்மை நோயைக் கொடுத்தாள். அதில் பலர் மரணமுற்றனர். அப்பொழுதுதான் அன்னையின் பெருமை அவர்களுக்குப் புரிந்தது. ஊரையே காலி செய்துவிட்டு ஓடிவிட்டனர் அவர்கள். தன்னை அண்டியவர்களை காப்பாற்றுபவளாகவும், அநியாயம் செய்பவர்களைத் தண்டிப்பவளாகவும் விளங்கும் இந்த அன்னையின் ஆலயம் மிக எளிமையானது. 

கோயில் என்பதற் கடையாள மாக எதுவும் இங்கு இல்லை. நான்கடி உயரத்திற்கு கருங்கற்களை அடுக்கி கோயிலின் சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதில் கல்லில் இறங்கி வந்து அருள் புரிகிறாள் அன்னை. பின்புறம் சுதையால் ஆன அம்மன் உருவம் உள்ளது. 

இங்கு பொங்கல் படைப்பதும், ஆடுகோழிகள் பலியிடப் படுவதும் நடக்கிறது. அம்மனுக்குப் புதிதாக  ஒரு ஆலயம் பின்பகு தியில் அமைக்கப்பட்டிருந்தாலும் பழைய இடத்தில் அம்மனை தரிசிப் பதற்கே மக்கள் அதிகம் கூடுகின்றனர். எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாமல் மக்களோடு மக்களாக கலந்து நிற்கும் அன்னையின் தரிசனம் நாமும் பெறலாம்.



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 



ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை