Recent Posts

மஹா மாரியம்மன் - ஆரணி பெரிய பாளையத்தம்மன்

மஹா மாரியம்மன் 
ஆரணி பெரிய பாளையத்தம்மன்





ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை’ என்று அபிராமி பட்டர் கூறியதுபோல், அகில உலகத்தாய் ஊருக்கு ஆத்தாளாக இருப்பதில் என்ன வியப்பு உள்ளது? பெரிய பாளையம் என்னும் ஊரைத் தெரியாதவர்கள் சென்னையிலோ அதன் சுற்றுப்புறத்திலோ இருக்க முடியாது. மகமாயி! தாயே!” பெரியபாளையத்தாளே! வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருகிறேன். பொங்கலிடுகிறேன். இளநீர் கண்திறக்கிறேன்” என்று பலவிதமாக பிரார்த்தனைகள் செய்யும் தலம் இது. எது பொய்த்தாலும் பெரியபாளையத்தாள் அருள் பொய்க்காது. 

சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருத்தலம். திருத்தல நாயகி பெரியபாளையத்தாள் என்றே அழைக்கப்படுகிறாள். வேப்பிலை ஆடை அணிந்து பிரார்த்தனை செய்தல் இங்கு மிகவும் விசேஶம். உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் இவள் மருந்தாக இருந்து குணப்படுத்துகிறாள். சென்னை, திருவள்ளூர் மாவட்ட மீனவர்களுக்கு குலதெய்வம் இவள். ஆரணி ஆற்றங்கரையில் சிறிய அளவில் இருந்த இக்கோவில் இப்பொழுது மிகப் பெரியதாக உருமாறியிருக்கிறது. இவளது கருணை முகம் அனைவரையும் பரவசத்திற்குள்ளாக்குகிறது. சுயம்புவான அம்மன் வெள்ளிக் கவசத்துடன் கீழே காட்சியளிக்க, கைகளில் சங்கு, சக்கரம், வாள், அமுத கலசமேந்தி நாகக் குடையுடன் சுதை உருவமாக கம்பீரமாக காட்சி தருகிறாள். 

பகவானையே காப்பாற்ற பிறந்தவள் இவள். கைகளில் சங்கு, சக்கரத்துடன் அம்மன் தோன்றும் காட்சியே இவள் பகவான் கிருஶ்ணருடன் பிறந்த மாயாதேவி என்பதை உணர்த்துகிறது. 

கம்சன்-கண்ணன் கதை. அதில்தான் இந்த பவானியின் அவதார கதையும். தன் தங்கை தேவகியின் வயிற்றில் பிறக்கும் குழந்தையால் தான் தனக்கு அழிவு என்று தேவகியையும், அவளுடைய கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்து அவர்களுக்குப் பிறந்த ஏழு குழந்தைகளையும் கொன்றான் கம்சன். எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் பகவான்  கிருஶ்ணர். அவர் பிறந்தவுடன் தன்னை ஆயர் பாடியில் இருக்கும் நந்தகோபன் யசோதை தம்பதியின் வீட்டில் விட்டுவிட்டு அங்கே பிறந்திருக்கும் மாயாதேவியை இங்கே கொண்டு வந்து விடும்படி தந்தையிடம் பணித்தார். 

பகவானுக்கு மாற்றாக சிறை வந்தாள் மாயா தேவி. கம்சன் அவளை அழிக்க முற்பட்டபோது அவன் மார்பில் எட்டி உதைத்து வானில் எழும்பியவள் அவனை எச்சரித்து விட்டு நேராக ஆயுதபாணியளாக ஆரணி ஆற்றங்கரையில் அமர்ந்தாள். பவானி என்னும் திருநாமமும் பெற்றாள் என்கிறது தல வரலாறு. 

அன்னையிடம் மனதார வேண்டினால் கிடைக்காத வரமென்று ஒன்று உண்டா? தாலி பாக்கியம் அருள்வதில் அவளுக்கு நிகர் அவளே தான். ஒரு மீனவனின் மனைவிக்கு அம்பிகை அருளால் தாலி பாக்கியம் நிலைத்தது. இங்கு வரும் பக்தர்கள் தாலி பாக்கியம் கிட்டியவர்கள். அன்னைக்கு தாலி காணிக்கை செலுத்துகின்றனர். பல டாக்டர்களிடம் காண்பித்தும் குணமாகாத நோய்க்கு இவளது வேப்பிலை ஆடையே மருந்து. குணமானவர் எண்ணிக்கை சொல்லிலடங்கா. 

இறை சக்திக்கு மிஞ்சி ஏதேனும் உண்டா? வேப்பிலை ஆடைக்கு மிஞ்சிய மருந்தும் உண்டா? இல்லை!  செவ்வாடை, மஞ்சளாடை என உடுத்தி அம்பிகையை தரிசிக்க வரும் பெண்கள், பொங்கல் வைப்பது, அடித்தண்டம் உருட்டுவது, மொட்டையடித்தல், அங்கப் பிரதட்சணம் செய்கின்றனர். தங்களது வியாதி குணமானவுடன் வேப்பிலை ஆடை அணிந்து அம்பிகையை வலம் வந்து வணங்கு கின்றனர். பெரிய பாளையத்தாள் அருள்வதற்கு நிகர் அவளே! 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை