Recent Posts

மஹா மாரியம்மன் - ஆடி மாத சிறப்புகள் - சூலக்கல் மாரியம்மன்

மஹா மாரியம்மன் 

ஆடி மாத சிறப்புகள்


சூலக்கல் மாரியம்மன்


கொங்குநாடு 24 நாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்த காலம். காவடிகாநாடு - கண்ணப்ப நாயனார் வம்சாவளியில் வந்தவர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இங்கு புரவிப்பாளையம் பகுதியில் உள்ள  கிராமம் தான் "சூலக்கல்”. பொள்ளாச்சியிலிருந்து வடக்கு பாளையம் வழியாகப்பயணித்தால் 11 கி.மீ.தொலைவில் சூலக்கல் அமைந்துள்ளது. 

அம்பாள் இங்கு கோயில் கொண்டிருப்பதே ஒரு சுவையான கதை. மெய்சிலிர்க்க வைக்கிறது. பசுமை எழில்  கொஞ்சுமிடத்தில் அன்னை மாரியம்மன் வீற்றிருப்பது எப்படி தெரியுமா? அக்காலத்தில் பசுமை யான மரங்களும், செடி கொடிகளும் நிறைந்த இக்கிராமத்திற்கு சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஓட்டி வருவர். அவ்வாறே வேலாயுதம்பாளையம் எனும் இக்கிராமத் திலிருந்து ஒருவரது பசுக்களை மேய்ச்சலுக்காக வேலைக்காரச் சிறுவன் ஓட்டி வருவது வழக்கம். ஒரு சமயம் அப்பசுக்கள் பொழியும் பால் அளவு குறைந்து கொண்டே வர ஒரு நாள் வனத்துக்குள் சென்று மேய்ந்து கொண்டிருந்த பசுக்களை கவனித்தார். அப்பசுக்கள் என்ன செய்தது தெரியுமா ! கூட்டமாக ஓரிடத்தில் கூடி பால் சொரிந்து கொண்டிருந்தன. இதெல்லாம் நிஜமாக நடக்குமா?  ஆம்.  நிஜமாகவே நடந்தது. அவர் கோபத்தில் அங்கிருந்த பசுக்களை விரட்ட பயந்து ஓடிய ஒரு பசுவின் கால் (குளம்பு) ஒரு சுயம்புவின் மேல் பதிந்து ரத்தம் வழிந்தது. பயந்துபோன அவர் அவ்விடத்தை கூர்ந்து கவனித்த பொழுது சுயம்பு அருகில் அம்பிகையின் சூலம் இருப்பதைக் கண்டு அங்கு ஒரு பெண் தெய்வம் எழுந்தருளி இருப்பதை அறிந்து தன் செயலுக்காக வருந்தினார். 

அன்று இரவு பசுவின் உரிமையாளர் கனவில் அம்பிகை தோன்ற, சுயம்புவாகத் தோன்றியிருப்பது மாரியம்மனான நான்தான். அந்த இடத்தில் எனக்கு கோயில் கட்டி வழிபடுங்கள்,” என்று கட்டளை இட்டார். பசுவின் உரிமையாளர் புண்ணிய ஆத்மா! வேறொன்றும் விளக்க வார்த்தைகளேது? சூலத்திற்கு அருகில் கல் இருந்ததால் அந்த இடம் சூலக்கல் என்றாயிற்று. இவளே சூலக்கல் மாரியம்மன் எனப்படுகிறாள். 

வடக்கு வாயிற் செல்வி’ இவள். வட திசை நோக்கி அன்னை அமர்ந்த கோலத்தில் வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்ட நிலையில் வலது கைகளில் உடுக்கையும், கத்தியும் இடது கையில் சூலமும், கபாலமும் ஏந்தி எழில் கோலத்தில், விநாயகர் சந்நதி அருகில் அருள்பாலிக்கிறாள். கருங்கற்களால் கட்டப் பெற்ற கருவறை யும், மகா மண்டபமும் நாயக்க மன்னர் காலத்திய கட்டடக் கலையை நினைவூட்டுகிறது. சந்நதியின் வெளிப்புறத்தில் சுதை யாலான குதிரைகள் காட்சி அளிக்கின்றன. "மாவிலங்கை” தல விருட்சம். அம்மை நோயும், கண்நோயும், இவளது அபி‌ேஶக தீர்த்தத்தை உபயோகிப்பவர்கள் குணம் பெறுகின்ற விதம் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறது. கலியுகத்தில் கண்கண்ட தெய்வமல்லவா அம்பிகை! குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அம்மனை வேண்டி தல விருட்சத்தில் தொட்டில் கட்டி பின்னர் குழந்தை வரம் கிடைத்தவுடன் நேர்த்திக் கடனும் செலுத்துகின்றனர். 

தமிழ் வருடப்பிறப்பு, ஆடி அமாவாசை, கார்த்திகை பிறப்பு, தீபாவளி, தைப்பொங்கல் ஆகிய தினங்களில் சிறப்பான அபி‌ேஶக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு அமாவாசையன்றும் திரளான பக்தர்கள் பூஜையில் கலந்துகொள்கின்றனர். 

இத்திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பான திருவிழா எது தெரியுமா? "நோன்பு சாற்றுதல்” சித்திரை மாதம் கடைசி செவ்வாயன்று பூச்சாற்றுதலுடன் தொடங்கும் தேர்த்திருவிழா. இத்திருவிழாவின் போது கிராம சாந்தி எனும் நிலத்தூய்மை செய்யப்பட்டு சப்பரம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், அன்ன வாகனம் என ஆறு நாட்களுக்கு தினமும் காலையும், மாலையும் அம்மன் திரு வீதி உலா வருவாள். திரு வீதி உலா வருமுன் ஊஞ்சல் பூஜை நடைபெறும். நோன்பு சாற்றிய 15ம் நாள் மாவிளக்கு வரிசைகளும், பொங்கல் பொங்குதலும் கண்கொள்ளா காட்சி. அன்றுதான் அம்பிகைக்கு திருக்கல்யாண வைபவம். ஜாதி, மத பேதமின்றி எல்லோரும் கலந்துகொள்ள, அலங் கரிக்கப்பட்ட தேரில் அம்பிகை அருளாசி புரிகின்றாள். வியாழன் முதல் சனி வரை திருத்தேர் வடம் பிடிக்கப்படும். பின்னர் ஞாயிறன்று மஞ்சள் நீராட்டு விழா மகா அபி‌ேஶகத்துடன் விழா இனிதே நிறைவேறும். 

கிராமங்களில் ஒற்றுமையோடும், நல் இணக்கத்தோடும் இவ்வாறு வழிபடுவது மிகவும் அற்புதம்! ஆனந்தம் ! 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 




ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை