Recent Posts

மஹா மாரியம்மன் - வில்லிவாக்கம் - பாலியம்மன்

மஹா மாரியம்மன் 

வில்லிவாக்கம் - பாலியம்மன்  




ஆதியில் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் மேருமலைச் சாரலில் நடைபெற்ற திருமணத்தைக் காண புவனமுழுவதிலுமிருந்து தேவர்கள், சித்தர்கள், யோகிகள், ரிஶிகள், வித்யாதரர்கள், கந்தர்வர், யாதவர், உவணர், உரகர் ஆக எல்லோரும் ஒன்றாகக் கூட அந்த பாரத்தால் வடபகுதி தாழ்ந்து தென்பகுதி உயர்ந்தது. பூமியைச் சமப்படுத்த தவசிரேஶ்டரான அகத்தியரை தென்னாட்டுக்கு அனுப்பினார் சிவபெருமான். 

அகத்தியர் தென்னாட்டை நோக்கி வரும் வழியில் பல அற்புதங்களை நிகழ்த்தினார். வில்வாரண்ய க்ஷேத்திரத்திற்கு வரும் பொழுது வாதாபி, வில்வலன் ஆகிய இருவரும் அகத்தியரை கொன்று தின்ன முடிவு செய்தனர். இறந்தவரை உயிர்பிக்கும் மந்திர சக்தியை அவர்கள் அறிந்திருந்தனர். வில்லவன் அகத்தியரிடம் சென்று அவனுடைய இல்லத்தில் உணவருந்தச் செல்லுமாறு கூற, அவரும் இசைந்து அவன் இல்லம் சென்றார்.

அம்பாளை தியானித்தார் அகத்தியர். நடக்கப் போவதையும், வில்வலனின் வஞ்சக எண்ணத்தையும் அகத்தியருக்கு உணர்த்தினாள் அம்பாள். அந்த அம்பாள் தான் வில்லிவாக்கம் க்ஷேத்திரத்தில் பாலியம்மனாகக் குடிகொண்டு பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வருகிறாள். 

வில்வலன் வாதாபியை மாம்பழமாக மாற்றி அகத்தியருக்குக் கொடுக்க, அவர் உண்டபின் வாதாபியை அழைக்க, ஆனால் அதற்குள் தன் வயிற்றைத் தடவி, வாதாபியை ஜீரணித்துவிட்ட அகத்தியர், வில்லவனுக்கு புத்திமதிகள் கூறி நல்வழிப்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. 

வில்வாரண்யம் என்று அழைக்கப்பட்ட தலமே இன்று வில்லிவாக்கம் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது. அகத்தியரால் அமைக்கப்பட்ட அகஸ்தீஸ்வரர் ஆலயம் இவ்வூருக்குப் புகழ் சேர்க்கிறது. இவ்வூரின் மையப்பகுதியில் பாலியம்மன் என்ற பெயருடன் கோயில் கொண்டுள்ளாள் ஸ்ரீ  மாரியம்மன். ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் இவள், நல்லவர்களைக் காப்பதிலும் தீயவர்களுக்கு தண்டனை கொடுப்பதிலும் வல்லவள். 

வில்லிவாக்கத்தின் நான்கு எல்லைகளிலும் நான்கு காவல் தெய்வங்கள் உள்ளன. கிழக்கில் தான்தோன்றி அம்மனும், தெற்கில் படவீட்டம்மனும். மேற்கில் சீயாத்தம்மனும், வடக்கில் இளங்காளியம் மனும் கோயில் கொண்டுள்ளனர். இவர்களுக்குத் தலைமை பீடமாக விளங்குகிறாள் ஸ்ரீ பாலியம்மன். 

ஆடி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.  தீமிதி போன்ற வற்றில்  பங்கெடுத்துக் கொள்பவர்கள் திருவிழா ஆரம்பத்தில் காப்பு கட்டிக்கொள்வர். முன்னாட்களில் அவ்வாறு காப்புக் கட்டிக் கொண்ட வர்கள் 10 நாட்களும் தங்கள் இல்லத்திற்குச் செல்ல மாட்டார்கள். தினமும் ஒவ்வொரு வீட்டில் அவர்களுக்கு உணவு வழங்கப்படும். ஆனால் தற்போது 3 நாட்களே காப்பு கட்டிக் கொள்கின்றனர். இப்பெருவிழா அபி‌ேஶகம், அலங்காரம், வீதியுலா என்று அம்பாளின் உக்ரத்தைக் குறைப்பதற்காக நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. 

திருவிழா தொடங்குமுன் பம்பை உடுக்கை அடித்து குறி கேட்டு பின்னரே தொடங்கப்படுகிறது. தீமிதியில் தீயை உருவாக்க பட்டுத்துணியில் பெரிய கற்பூரக் கட்டி வைக்கப்பட்டு ஏற்றப்படுகிறது. அக்கற்பூரக் கட்டி அன்னையை வேண்டிக்கொண்டு தீக்குண்டத்தில் போடப்பட்டு, தீக்குண்டம் தயார் செய்யப்படுகிறது. (இதில் பட்டுத் துணி எரிந்து போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது) 

தீமிதி உற்சவத்தின் போது எல்லோரும் அருகில் உள்ள தாமோதரப் பெருமாள் கோயில் திருக்குளத்தில் நீராடியபிறகே தீமிதிக்க வருகின்றனர். தீமிதிப்பவர்கள் அனைவரும் கோவிந்தா... கோவிந்தா” என்று சொல்லிக் கொண்டே தீமிதிக்கின்றனர். தன் தங்கையின் பக்தர்களை அண்ணனாகிய தாமோதரப் பெருமாளும் காப்பாற்றுகிறார். 

இங்குள்ள இளங்காளியம்மன், பாலி அம்மனின் சகோதரியாகக் கருதப்படுகிறாள். தீமிதிக்க காப்புக் கட்டிக் கொள்ளும் பக்தர்கள் எல்லோரும் ஒன்று கூடி சந்தன, புஶ்ப அலங்காரம் செய்துகொண்டு அம்பாளின் உத்தரவு பெற்றுக்கொண்டு தீமிதிப்பதற்கு கோயிலில் இருந்து புறப்பட்டு செல்லும் ஸம்ப்ரதாயம் இன்றும் நடைபெறுகிறது. 

மருத்துவரால் தீர்க்கமுடியாத பல நோய்களை ஸ்ரீ பாலி அம்மன் தீர்த்து வைத்திருக்கிறாள். மன நோய்கள் குணமாகி இருக்கின்றன. கண் பார்வை குறைந்தவர்கள் மீண்டும் பார்வை பெற்றிருக்கிறார்கள். அம்மை நோய்க்கு முன்னர் பரம்பரை பூசாரிகளாக இருந்த நாகலிங்கம், ஏழுமலை ஆகியோர் அன்னையை வேண்டிக்கொண்டு தரும் திருநீறாலும் அவர்கள் சொல்லும் குறிமூலமாகவும் பயனடைந்தவர்கள் ஏராளம். 

பிற மதத்தினரும் அன்னையை வழிபட்டு பயன்பெறுவதைக் கண்கூடாகக் காணலாம். கேட்டவர்களுக்கு கேட்ட வரங்களை வாரி வழங்குகிறாள் ஸ்ரீ பாலி அம்மன். இத்திருக்கோயில் வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ளது. 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை