Recent Posts

மஹா மாரியம்மன் - நார்த்தாமலை முத்துமாரியம்மன்

மஹா மாரியம்மன் 
நார்த்தாமலை முத்துமாரியம்மன் 






நார்த்தாமலை முத்துமாரியம்மன் சமயபுரம் மாரியின் சகோதரி. 


நார்த்தாமலை பெயர்க்காரணம் - நார்த்தங்காய் நிறைய விளை யுமோ இப்பகுதியில்? இல்லை இல்லை! பூலோகத்துக்கு விஜயம் செய்தார் நாரத முனிவர். நாரதர் பற்றி அறியாதவருமுளரோ? இவர் கலகம் செய்தாலும் நல்லதற்காகவே செய்வார். நாரதர்இங்குள்ள மலையில் கடுந்தவம் புரிந்தார். நாரதர் மலைதான் பிற்காலத்தில் நார்த்தாமலை ஆயிற்று. 

இன்னொரு செவிவழிச் செய்தி. பல நூற்றாண்டுகளுக்கு முன் மன்னர்களிடம் மானியம் பெற்று அவர்கள் பிரதிநிதியாக நகரத்தார் இப்பகுதியை நிர்வகித்து வந்ததால் நகரத்தார் மலை எனப்பட்டு அதுவே நார்த்தாமலையாயிற்று என்பதுண்டு. இப்பகுதியைச் சுற்றி நிறைய மலைகள் உண்டு. திருச்சி புதுக்கோட்டை சாலையில் புதுக்கோட்டை யிலிருந்து சுமார் 18 கி.மீ. தூரமுள்ள இப்பகுதியில் பல அற்புத மூலிகைகள் கிடைக்கிறது. 

நார்த்தாமலையிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் கீழக்குறிச்சி கிராமம். குருக்கள் ஒருவர் தினமும் ஒற்றையடிப் பாதையில் செல்லும் போது குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து தடுக்கி விழுந்து கொண்டிருந் தார். ஒரு நாள் அப்படி விழுந்து எழுந்தபின் அருகில் வயலில் வேலை செய்தவர்களை அழைத்து நடந்தததைக் கூறி அந்த இடத்தை தோண்டச் செய்தார். அவ்விடத்திலிருந்து கிடைத்த அம்மனை எங்கே பிரதிஶ்டை செய்வது? அப்போது ஒரு அசரீரிக்குரல். மலையடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு அருகிலேயே என்னை ஸ்தாபியுங்கள் உங்களை நோய் நொடியிலிருந்து நான் காப்பாற்றுவேன் என்று கூறி அருளினாள். அம்மை நோயால் பாதிப்பு ஏற்படாமல் காத்ததால் முத்துமாரி எனப் பெயர் பெற்றாள். 

முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள சிவாலயத் தெய்வங்கள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியும் ஸ்ரீ ஜம்புகேஸ்வரரும் ஆவார். உறையூரிலிருந்து சோழ மன்னர் ஒருவர் தினமும் திருவானைக் காவல் சென்று அகிலாண்டேஸ்வரி - ஜம்புநாதரைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் சோதனையாக காவிரியில் வெள்ளம் கரை புரண்டோடியது. மன வருத்தத்தோடு அரண்மனை திரும்பினார்  அரசர். அன்றிரவு அவர் கனவில் ஜம்புகேஸ்வரர் தோன்றியதும், மன்னருக்கு பரமானந்தம். மனம் கொள்ளாமல் இருந்த வருத்தம், சிவபெருமானின் தரிசனம் கண்டதும் க்ஷண நேரத்தில் மாற்றியது. அவர் மன்னரிடம், ிிதெற்கே ஒரு மலையடி வாரத்தில் எனக்கு ஆலயம் எழுப்பு என்றாராம். அப்படி கட்டப்பட்ட ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஜம்புகேஸ் வரரையும், அகிலாண்டேஸ் வரியையும் முத்துமாரி அம்மனுடன் ஆனந்தமாய் தரிசிக்கலாம். 

இத்திருக்கோயில் முன்னூறு ஆண்டுகள் புராதனமானது. கட்கம், கபாலம், டமருகம், சக்தி ஹஸ்தம் ஆகியவற்றை சதுர்கரங்களில் தாங்கி அருள்பாலிக்கிறாள் அன்னை. முத்துமாரியம்மனுக்கு காவடி எடுத்து வழிபடுவது, சிறப்பாகும். இங்கே திருமணம் செய்வதாய் வேண்டிக் கொண்டால் திருமணத்தடை நீங்குகிறது. 

ஜமீன் வேட்டவரம் என்ற ஊர் திருவண்ணாமலைக்கு அருகி லுள்ளது. அந்த ஜமீன் குடும்பத்து வாரிசான மலையம்மாளை அம்மை நோய் கடுமையாகத் தாக்க ஜமீன்தார் பயந்துபோய் அவளை இங்கு கொண்டுவந்து முத்துமாரியம்மன் கோவில் வாசலில் கிடத்திச் சென்று விட்டார். தகிக்கும் கோடையில் தவித்துப் புலம்பிய சிறுமியின் குரல்கேட்டு முத்துமாரி, அம்மை முத்துக்களை எடுத்துக் கொண்டாள். மலையம்மா சுகமாகி அங்கேயே தங்கிவிட்டாள். 

கோவிலை சுத்தப்படுத்துவதும், பூக்கட்டுவதும், தியானம் செய்வதும், கோவில் நிவேதனத்தை மட்டுமே சாப்பிடுவதுமாகக் காலம் கழித்தாள். குறைகளும், பிரச்சினைகளுமாகக் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மலையம்மா கூறிய ஆறுதல் மொழிகள் அப்படியே பலிக்கவே அருள் வாக்குப் பெற வேண்டி மக்கள் வந்தனர். காணிக்கை பணம் குவிந்தது. அதில் மண்டபங்கள் அமைத்து கோவிலை விரிவுபடுத்தினாள். மாவட்டத்து ஜமீன் பரம்பரையினர் அவள் நினைவாக வருடம் தோறும் கோவிலுக்கு அருகிலேயே இருக்கும் மலையம்மா சமாதிக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர். 



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை