Recent Posts

மஹா மாரியம்மன் - தேனாம்பேட்டை - அலைமேல் அமர்ந்த மங்கை

மஹா மாரியம்மன் 

தேனாம்பேட்டை - அலைமேல் அமர்ந்த மங்கை  





சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் வழியே செல்லும் தியாகராய சாலையும், அண்ணா சாலையும் சந்திக்கும் இடத்தில் கோயில் கொண்டருளும் அன்னை ஆலையம்மன் என்றழைக்கப்படும் "அலை மேல் அமர்ந்த மங்கை’. அவள் இங்கு கோயில் கொண்ட வரலாறு சற்றே வித்தியாசமானது. 

இன்று தேனாம்பேட்டை என்றழைக்கப்படும் இடம் பலநூறு ஆண்டுகளுக்கு முன் தோப்பும் துரவுமாக இருந்தது. அங்கு ஏரியும் இருந்ததாகத் தெரிகிறது. அந்த ஏரியை சலவைத் தொழிலாளர்கள் துணிகளை துவைத்து காயவைக்க பயன்படுத்தி வந்தனர். 

ஒருநாள் நல்ல மழை. ஏரியில் வெள்ளம் கரைபுரண்டோடியது. சற்று மழை நின்றதும் துணிகளை வெளுப்பதற்காக ஒரு வண்ணான் அவ்விடம் வந்தான். துணி துவைக்கும் கற்கள் எதனையும் காண வில்லை. எல்லாவற்றையும் வெள்ளம் அடித்துக்கொண்டு போய் விட்டது. கவலையுற்றிருந்த அவன் ஏரியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென்று ஏரியில் சுழன்றோடும் தண்ணீர் அலைகளின் நடுவே ஒரு கல் ஆடிக்கொண்டே மிதந்து வந்து கரையில் ஒதுங்கியது. கல் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் உடனே நீரில் துணிகளை நனைத்து துவைப்பதற்காக அந்த கல்லில் ஒரு துணியை ஓங்கி அடித்தான். அவ்வளவுதான். அவன் உடம்பு நடுங்க, மூக்கிலிருந்தும் வாயிலிருந் தும் இரத்தம் வரத் தொடங்கியது. கல்லில் அடித்த துணியிலும் இரத்தம். மயங்கி விழுந்தான் அவன். 

அதேவேளையில் மிகவும் அமைதியாய் இருக்கும் அவ்வூர் நாட்டாண்மைக்காரர் மனைவி ஆவேசமாகி, ""நான் உங்கள் ஊரைக் காக்க வந்திருக்கேன். ஏரிக்கரையில் இருக்கேன். என் பக்தனான வண்ணான் மூலம் கோயிலெழுப்பினால் உங்களைக் காத்து வருவேன்,”  என்று கத்த உடனே எல்லோரும் ஏரிக்கரைக்கு சென்றனர். அங்கு வண்ணான் மயங்கிக்கிடப்பதையும், அருகில் ஒரு கல் இருப்பதையும் கண்டு உடனே அவன் முகத்தில் நீர் தெளித்து மூர்ச்சை தெளிவித்தனர். 

அன்னையின் ஆணைப்படி ஏரிக்கரையில் ஒரு நல்ல இடத்தில் நல்ல நாளில் வண்ணானின் கரங்களால் அந்த கல் பிரதிஶ்டை செய்யப்பட்டு சிறு கோயில் கட்டப்பட்டது. ஏரியில் நீரலையில் மிதந்து வந்த அன்னை அலை மேல் அமர்ந்த அம்மனாக வணங்கப் பட்டு வந்தாள். காலம் மாற மாற அவள் அமர்ந்த கட்டிடமும் புதுப் பொலிவுடன் மாற்றம் கண்டது. இன்று பல சந்நிதிகளைக் கொண்டு அற்புதமாகத் திகழ்கிறது ஆலயம். 

மூலவருக்கு பக்கத்தில் உற்சவர் சந்நிதி மிகுந்த அழகுடன் வடிவமைக்கப்பட்டு அதில் அலைமேல் அமர்ந்த அன்னையின் முழு உருவச் சிலையை நிறுவி உள்ளனர். அவளை நாளெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம். இந்த சிலையும் அன்னையின் ஆசியின் பேரில் அன்னையின் மீது ஈடுபாடு கொண்ட ஒரு சிற்பி வடிவமைத்ததாகும். இங்கு பேசும் பொற்சித்திரமாய் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள் அன்னை. மூலவருக்கும் அன்னை வடிவில் வெள்ளிக்கவசம் சாற்றி வழிபாடு நடைபெறுகிறது. 

கோயிலில் ப்ராகார தெய்வங்களாக லக்ஷ்மி கணபதி, சுப்ரமண்யர், துர்க்கை வேம்புடன் கூடிய நாக மண்டபம், நவக்கிரகங்கள், ஆஞ்சனேயர் ஆகியோரும் உள்ளனர். நாகமண்டபத்தில் உள்ள நாகர்களுக்கு தினமும் பக்தர்களால் பாலாபி‌ேஶகம் தான். சிலர் முட்டைகளையும் இடுகின்றனர். இருந்தாலும் தூய்மையாக இந்த இடங்கள் பராமரிக்கப்படுகின்றன. 

ஆலையம்மனின் அற்புதங்கள் எண்ணிறந்தவை. எல்லோருக்கும் தாயான அவள் எத்தனையோ பேரின் நோய் நொடிகளைக் களைந்திருந் கிறாள். திருமணமாகாமல் இருந்த பலரின் வாழ்வில் விளக்கேற்றி வைத்திருக்கிறாள். மழலைச் செல்வங்களுக்காக வேண்டியவர்களின் வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறாள். திக்குத்தெரியாமல் நின்ற பலருக்கு வாழும் வழியைக் காட்டியிருக்கிறாள். தீயவர்களுக்கு பாடமும் புகட்டியிருக்கிறாள். 

இங்கு ஆடித்திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அம்மாதத்தில் எல்லா ஞாயிறன்றும் வாத்தியங்கள் முழங்க அம்மன் திருவீதியுலா வருகிறாள். கூழ் ஊற்றுதலும், அன்னதானமும் சிறப்பாக செய்யப்படுகிறது. அதுதவிர பொங்கல் பண்டிகை, பௌர்ணமி தினங்கள், வரலக்ஷ்மி விரதம் போன்ற நாட்களிலும் சிறப்பாக அலங்காரங்கள் நடைபெறும். நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் திருவிழாக் கோலம் தான். தினமும் வெவ்வேறு தேவியராக காட்சி தருவாள் அன்னை. பக்திப் பாடல்களும், இசைச்சொற்பொழிவுகளும் தினமும் இடம் பெறும். 

நீங்களும் சென்று ஒரு முறை தரிசித்து வந்தால் அடுத்தமுறை எப்பொழுது வரும் என்று காத்திருப்பீர்கள். 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...






கருத்துகள் இல்லை