Recent Posts

மஹா மாரியம்மன் - அகமதாபாத் - முத்துமாரியம்மன் கோவில்

மஹா மாரியம்மன் 
அகமதாபாத் - முத்துமாரியம்மன் கோவில் 



உழைப்பால் உயர்ந்து தாம் பெற்ற செல்வத்தின் பயனையும், கல்வியறிவின் அனுபவத்தையும் இறைவழிபாட்டின் வாயிலாகப் பிறருக்கு நலந்தேடும் வகையில் அயராது அருட்பணியில் ஈடுபட்டு, இன்று அகமதாபாத் வாழும் பொதுமக்கள் அனைவரும் ஜாதி, மொழி இவை வேறுபாடின்றி வணங்கிப் பயன் பெறும் கருணைத் தலமாகக் காட்சி தருகிறது. 
1988-ம் ஆண்டில் திருவாளர் நாகபூஶணம் என்பவரும், திருவாளர் ராஜு கிராமணி என்பவரும் அன்னைக்கு ஆலயம் அமைக்கும் பொருட்டு அகமதாபாத்திற்குக் கொண்டு வந்தனர். எவ்வகைச் செயல்கள் யார் மூலம் செய்து கொள்ள அன்னை விரும்புகிறாளோ அவர்கள்தான் அதைச் செய்யும் சக்தியும் பெறுகின்றனர். தாம் கொண்டு வந்த முத்துமாரியம்மனுக்கு ஒரு இடம் அமைக்க அவ்விருவரும் முயன்றும் முடியாது போனது. மேலும் பல இடுக்கண்களுக்கும் ஆளாயினர். ஆதலால் அவர்கள் இத்தெய்வத்தின் குற்றமே தம் இடுக் கண்களுக்குக் காரணம் என்றெண்ணி அவர்களின் நண்பர்  நடேசன் என்பவரின் இல்லத்தில் புதைத்து விட்டார்கள்.

எங்கெங்கிருந்து ஏதேது வேண்டினும் தரவல்ல அன்னை புதைக்கப்பட்ட அவ்வீட்டில் நடேசன் பெருந்துயரில் உழன்று அங்கிருந்து நீங்கினார். அதன்பின் அவ்வீட்டிற்குக் குடிவருவோர் இரண்டு மூன்று மாதங்கள்கூடத் தங்க இயலவில்லை. அவ்வில்லம் காலியாகவே இருந்தது.

கோக்ரா நக்ரா சேட் சால் என்ற குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மட்டங்கா பெரியவர் என அழைக்கப்பெறும் திரு. ராஜு உடையார் மற்றும் அவர்கள் மனைவியாரும், அன்னையைக் கனவில் காணும் பேறு பெற்றார். தொடர்ந்து பல நாட்கள் அவ்வம்மையாரின் கனவில் ஒரு பெண் தோன்றி என்னை பூமியில் புதைத்து வைத்திருப்பது சரியா? என்று கேட்பதும், உடனே குறிப்பிட்ட நடேசன் குடியிருந்த வீடுவரை வந்து மறைவதுபோலும் காட்சிகளைக் கண்டார். மீண்டும் மீண்டும் ஒரே வகையான கனவு தொடர்ந்ததைத் தம் கணவரிடம் கூறினார். திருவாளர் ராஜு உடையார் மனப்பக்குவம் உடையவர். சிந்தித்துப் பார்த்தார். ஒன்றும் தோன்றவில்லை. இது ஏதோ தெய்வத்தின் 

காரியம் என்று அவர் சிந்தனை ஓடியது. சுற்றி வசிப்பவர்களிடம் விசாரித்து நடந்ததை அறிந்து கொண்டார். திரு. நாகபூஶணம், திரு.ராஜுகிராமணி அவர்களை தேடிகண்டுபிடித்து நீங்கள் கொண்டு வந்த முத்துமாரி எங்கே? எனக் கேட்டார். அவர்கள் ""தெய்வக்குற்ற மெனப் பயந்து நடேசனிடம் தாம் கொடுத்துவிட்டதாக” கூறினர்.

தாம் செய்த முயற்சிகள் தோல்வியுற்று மனம் உடைந்து அம்மனை புதைத்துவிட்டோம் என அவர்கள் சொல்லக் கூசினர். திரு நடேசனும் ஊரை விட்டே சென்றுவிட்டதால்  வீடு என்னவோ காலியாகத்தான் இருந்தது. மட்டங்கா பெரியவர் கனவில் வரும் பெண்மணி ஒவ்வொரு முறையும் இவ்வீடுவரை வந்து மறைவதாகத் தோன்று வதால், இப்பகுதியின் உரிமையாளரான திரு. நக்ராசேட் அவர்களை அனுமதி கேட்டுக் கொண்டு இவ்வீட்டை தோண்டிப் பார்ப்பது என்று முடிவெடுத்தார்.

நல்லது நினைத்தால் நடப்பது உறுதி. வீட்டைத் தோண்டிக்கொண்டு வரும்போது சமையலறைப் பகுதியில் ஏதோ நெளிந்துக்கொண்டு ஓர் மூலையில் பூமியில் சென்று மறைந்தது. அது என்ன என்று புலப் படவில்லை. அத்திசையில் தோண்டி எடுக்க அம்மன் சிலை கிடைத்தது. அம்மன் வெளிப்பட்டாள். திரு. ராஜு உடையாரும் மற்றவர்களும் மகிழ்ந்தனர். வீட்டை செப்பனிட்டுக் கொடுத்தனர். உரிமையாளரின் அனுமதியின்பேரில் அதே நக்ரா சேட்சால் பகுதியில் சிறு கோவில் கட்டிப் பூஜை செய்து வந்தனர்.

அன்னைக்கு பெரிய கோயில் கட்ட நினைத்த மட்டங்கா பெரியவர் தம் குழுவினருடன் டக்கர் ஹரிலால் அவர்களை அணுகி அம்மன் கோவிலுக்கு இடம் தர இசைந்தால் தமிழர் அனைவரும் அவருடைய குடியிருப்புப் பகுதிக்கே வந்துவிடுவதாக உறுதி கூறினார். அவரும் ஒப்புக் கொண்டு அம்மன்கோவில் அமைப்பதற்கான இடம் தந்தார். சாலையின் அருகில் மண் சுவர்களுடன் கோவில் உருவாகியது. அம்மன் திருக் கோவில் கொண்டாள். அதற்கான முனிசிபல் வரிகள் தமிழர்களிடம் வசூலித்து மட்டங்கா பெரியவர் கட்டி வந்தார்.

இப்பணி இருபத்தெட்டாண்டுகள் சிறு அளவில் அப்படியே தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1962-ல் ஹரிலால் சேட் குடியிருப்புப் பகுதியை 95 மனைகளாகவும், கோவில் இடத்தை 96-ம் பகுதியாகவும் பிரித்து விற்க ஆரம்பித்தார். கோவில் மனையை சொந்தமாகக் கோவி லுக்கே வாங்கிவிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதற்கும் அன்னையே வழிகாட்டினாள்.

கோவில் பணியில் தொடர்புள்ள திரு. வைத்தியலிங்கம் என்பவர் ரெக்கியால் பகுதியில் வசிக்கும் திரு. சின்னப்பா கவுண்டரிடம் இது பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது அதற்கு வழி கிடைத்தது. திருவாளர் எம். சின்னசாமி வாத்தியாரிடம் ஒரு பொதுப்பணம் உள்ளது. அவரிடம் இதுபற்றிக் கூறினால் மறுக்கமாட்டார் என்று சின்னப்பா கவுண்டர் கூறவே, அவர்கள் இருவரும் திரு. வி. பாபு என்பவரையும் அழைத்துக்கொண்டு வாத்தியாரை அணுகினர். ஒப்புதல் கிடைத்தது. அகமதாபாத் தமிழர்களின் பொதுவில் திருக்கோவிலுக்கான இடம் திருவாளர் எம். சின்னசாமி நாயுடு வாத்தியார் அவர்கள் பெயரால் கிரயம் வாங்கப்பட்டது.

அமைப்பு உருவாகியது. திரு.பி.ஜெகதீசன் அவர்களைத் தலைவராகக் கொண்ட ஐவர் குழு பொது டிரஸ்டாக பதிவு செய்யப் பட்டது. அன்னையின் திருக்கோவில் தமிழ் கலாச்சார முறைப்படி புதுப்பிக்கும் திருப்பணி தொடங்கப்பட்டது. தமிழகத்திலிருந்தே ஸ்தபதியாரை வரவழைத்து வேலை நடந்தது. இத்திருப் பணியின் புகழ் நகரமெங்கும் பரவியிருப்பதால் பொதுமக்களின் ஒத்துழைப்பும், தமிழர்களின் ஒத்துழைப்பும், நிதியும் பொருட்களும் அன்னையின் அருளால் தேவைக்கேற்ப வந்துகொண்டே இருக்கிறது. எல்லாம் அன்னையின் அருள்!



இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை