Recent Posts

மஹா மாரியம்மன் - ஸ்ரீ சீதளாம்பிகை

மஹா மாரியம்மன் 
ஸ்ரீ சீதளாம்பிகை 



கூழையர் என அழைக்கப்படும் அகத்திய முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜை செய்யப்பட்ட ஸ்ரீ அபிராமி அம்பிகா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் மிகவும் பழமையானது. கூழையர் தனது கையினால் செய்த சுயம்புமூர்த்தி ஸ்ரீ அகஸ்தீஸ்வரர். பீஜாக்ஷர திருக்கோயிலில் மிகவும் முக்கியமானதும், நால்வரில் ஒருவரால் பாடல் பெற்றதுமான தலம். கூழையூர் என்பது பிற்காலத்தில் கொழையூர் ஆனது. இந்த கிராமம் வீர சோழன் காவிரி ஆற்றின் வடபுறமும், மகிமாலை ஆற்றின் தென்புறமும், காலசம்ஹார மூர்த்தி ஸ்தலமான வழுவூரின் மேற்காகவும் அமையப்பெற்றது. 

இந்த புண்ணிய கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ சீதளா மஹா மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றது. கேட்டதை மட்டுமல்லாமல், எண்ணிய அனைத்தும் மட்டுமல்லாமல், என்ன தேவையோ அதனை அவளாகவே தரக்கூடிய கருணை உள்ளம் உடையவள் தேவி கொழையூர் ஸ்ரீ மஹாமாரியம்மன். 

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் அந்த கிராமத்தில் பூஜை செய்து கொண்டிருந்தவரின் கனவில் தோன்றிய அம்பிகை, நான் உங்களது புண்ணிய கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். சரியாக பொழுது விடியும் அதிகாலை வேளையில் நான் வீரசோழன் ஆற்றில் உனக்கு கிடைப்பேன்சு என கூறினாள். 

உடனடியாக தூக்கம் கலைந்த அந்த அர்ச்சகர் உடனடியாக தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வீரசோழன் ஆற்றின் கரையில் நின்றுகொண்டு இறைவியை காண காத்திருந்து விடியற்காலையில் ஆற்றில் இறங்கும்போது அவரது கைகளில் அகப்பட்டது அம்பிகையின் சிலை. மெய் மறந்த அர்ச்சகர் அந்த சிலையை மகிழ்ச்சியாக கிராமத்திற்கு கொண்டு வரும் போது, விக்கிரகத்தின் (சிலை) பாரம் அதிகரிக்க, அதிகரிக்க ஒரு நேரத்தில் அதை கீழே வைக்க வேண்டிய கட்டாயத்தில் ஒரு மரத்தின் அடியில் வைத்தார். அந்த மரம் ஒரு பெரிய வேம்பு மரம். 

கிராம மக்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று உடனடியாக கொட்டகை அமைத்து வழிபடத் தொடங்கினர். கிராமம் நோய் நொடி அற்று, சுபிட்சமாக மாறியது. மக்கள் ஆனந்தம் அடைந்தனர். 

இந்தச் செய்தியைக் கேட்ட பலர் வெவ்வேறு மாநிலத்தில் இருந்தும் வந்து வழிபடத் தொடங்கினார்கள். தனவந்தர்களில் ஒருவர், கோவிலை கட்டி அம்பாளை பிரதிஶ்டை செய்தார். ஆற்றில் வந்த அம்பிகையில் பின்னம் இருந்ததால் புதிய சிலை செய்யப்பட்டு கும்பாபி‌ேஶகம் நடைபெற்றது. பல பேர் தங்களது குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு இன்றைய நாளில் ஆயிரக்கணக்கான குலதெய்வக் காரர்கள் உள்ளனர். 

இந்த திருக்கோயிலில் சிறப்பாக பூஜை செய்து வரும் சிவஸ்ரீ. கல்யாண சுந்தரசிவாச்சாரியார் அவர்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பூஜை செய்து வந்துள்ளார். அவருடன் அம்பிகை நேரில் பேசுவாள். லக்ஷார்ச்சனை, மஹா அபி‌ேஶகம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 

தன் பக்தனுக்கு ஒரு சிறு துன்பம் வந்தாலும் பொறுக்காதவள் ஸ்ரீசீதளா தேவி. ஒரு சிறு சம்பவம்: 

சிவஸ்ரீ சிவாச்சாரியார் அவர்கள் பூஜை செய்ய வந்தபோது கோவில் வாசலில் தன் மர பாதரக்ஷையை போட்டுவிட்டு பூஜையை முடித்து வந்த போது அதைக் காணவில்லை. தேடிப்பார்த்து விட்டு வீடு வந்து சேர்ந்தார். மறுநாள் நள்ளிரவில் ஒருவன் அலறியபடி வாசக்கதவை தட்டியுள்ளான். எழுந்து வந்து பார்த்த சிவாச்சாரியார் என்ன என வினவியபோது, அந்த நபர் கூறியது ஆச்சரியத்தில் ஆச்சர்யம். தான் ஒரு வழிப்போக்கன் என்றும், கோவிலிலிருந்த மர செருப்பை எடுத்து சென்றுவிட்ட பாதகன் என்றும் கூறியவன் மேலும் தொடர்ந்தான். 

தான் செருப்பு எடுத்துச் சென்ற அன்று இரவு முதல் பல இன்னல்களைச் சந்தித்ததாகவும், உடனடியாக திருப்பிக் கொடு, உடனடியாக திருப்பிக் கொடு என உத்தரவு வந்து கொண்டே இருந்தது என்றும், எதை யாரிடம் என கேட்டபோது காலையில் எடுத்து வந்த மரசெருப்பை உடனடியாக திருப்பி கொடு, எனது பக்தன் கால்கள் வெயிலில் சூடுபட்டுவிட்டது என்ற குரல் கேட்க, திருப்பிக்கொடுக்க தயாரானபோது வழி தெரியாதே? எங்கே எடுத்தேன்? யாரிடம் கொடுப்பேன் என கேட்டபோது, இப்போதே நடக்க தொடங்கு, நான் வழிகாட்டுகிறேன் என கூற, அவன் நடக்க நடக்க வழிகாட்டி நள்ளிரவில் சிவாச்சாரியாரின் வீட்டின் முன்பு தலையில் தாங்கிய பாதுகையுடன் வந்ததாகத் தெரிவித்து சாஶ்டாங்கமாக விழுந்து வணங்கி செய்த குற்றத்திற்கு மன்னிக்கவும் வேண்டியுள்ளான். 

சிவாச்சாரியார் அவர்கள் ஸ்ரீசீதளாம்பிகையின் கருணையால் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது என்பதை உணர்ந்தார். மீண்டும் அந்த செருப்பை அவனிடமே கொடுக்க முன் வந்தார். ஆயினும் அவன் பயந்து ஏற்க மறுத்து உள்ளான். 

இந்த ஒரு சாதாரண பாதரக்ஷக்கே அம்பாள் கருணை காட்டினாள் என்றால் மக்களின் (பக்தர்களின்) வேண்டுதல்களுக்கும், நல்ல எண்ணங்களுக்கும், மானசீகமாக வழிபடுபவர்களுக்கும் தேவையான வற்றை அளித்து காப்பாள் அல்லவா? இத்திருக்கோவில் மயிலாடுதுறைக்கும், கும்பகோணத்திற்கும் இடைப்பட்ட குத்தாலம், தேரெழுந்தூருக்கு அருகில் உள்ள கோமல் கிராமத்தின் அருகில் உள்ளது. பஸ் வசதிகள் உண்டு. 

அன்னையை தரிசனம் செய்து அவள் அருள் பெற நீங்களும் வாருங்கள்!


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை