Recent Posts

மஹா மாரியம்மன் - ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனின் அருளாடல்கள்

மஹா மாரியம்மன் 
ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனின் அருளாடல்கள் 



அன்னை ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் மிகவும் சாந்தஸ்வரூபி, காருண்ய மூர்த்தி, அண்டினோரை நலமுடன் காப்பவள். துன்பத்தில் உடன் வந்து உதவி அருள்பவள். அவள் நிகழ்த்தும் அற்புதங்கள்தான் எத்தனை எத்தனை தெரியுமா! சொல்லி முடியாது. 

பெங்களூரில் எம்.எஸ்.ஆர். நகரில் ஸ்ரீ ராமரத்தினம் தம்பதிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டில் தான் அம்பாள் நித்திய வாசம் செய்கிறாள். அவள் நிகழ்த்தும் அற்புதங்கள் கோடி! கோடி! அவர்களது பூஜையறையில் அம்பாள் நிதர்சனமாக கொலுவீற்றிருக்கிறாள். அங்கு வரும் அன்பர்களின் கோரிக்கையை அருள் கூர்ந்து நிவர்த்தி செய்கிறாள். இவரது மகன் ஸ்ரீ நாராயணன் என்கிற ரவியினிடத்தில் அம்பாள் ஆவிர்பவிக்கிறாள். 

ஸ்ரீ மஹாமாரியம்மனைப் பற்றிய நூல் ஒன்றைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு உதவியான தகவல்கள் தெரிந்தால் சொல்லுமாறு ஒரு முறை என் நண்பர் ஸ்ரீ நாராயணன் அவர்களிடம் சொன்னேன். ஸ்ரீ நாராயணன் அவர்கள் வருமான வரி அலுவலகத்தில் அதிகாரியாகப்பணிபுரிந்து இரண்டாண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்றவர். 

நான் அவரிடம் கேட்டதுதான் தாமதம். தனக்கும் அன்னை சமயபுரம் மாரியம்மனுக்கும் இருந்த பல்லாண்டுகால தொடர்பை விவரிக்க, நேரம் போனதே தெரியவில்லை. சமயபுரம் ஸ்ரீ மாரியம் மனின் ஒரு சிறந்த பக்தர் அவர் என்பது அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. அன்னை அவர் வாழ்வில் என்றும் உறுதுணையாக இருந்த பல விவரங்களை என்னிடம் தெரிவித்தார். அலுவலகத்தில் தனக்கு பாதிப்பு வரும் சந்தர்ப்பங்களில் தேவி தன்னைக் காத்த விதத்தை அவர் விவரித்தபோது என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

இவரின் நண்பர் ஸ்ரீ நாகேந்திரன் தம்பதியினருக்கும்  ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் பிரத்யக்ஷ தெய்வம். அவருடைய கிருஹத்திற்கும் சென்றிருந்தோம். அவர் வாழ்வில் அன்னையின் திருவிளையாடல் களை விவரித்தபோது கண்களில் ஆனந்த கண்ணீர்! வேறொன்றும் பேசத் தெரியவில்லை. அந்த கிருஹத்திற்கு வந்து தேவியை மனமுருகப் பிரார்த்தித்தவர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறுவதைக் கண்கூடாகக் காணலாம். 

ஸ்ரீ நாராயணன் மாலா தம்பதியினருக்கு எல்லாமே அன்னை ஸ்ரீ சமயபுரத்தாள்தான். இவருடைய குடும்பம் பல தலைமுறைகளாக சமயபுரத்தாளை வழிபட்டுவர இடையில் சிறிது இடைவெளி. ஆனால் அன்னைக்கு தன் குழந்தைகளை விட்டுவிட மனம் வருமா? நீங்கள் வராவிட்டால் என்ன? நானே உங்களிடம் வருகிறேன் என்று அவர்கள் வீட்டிலேயே வந்து அமர்ந்து விட்டாள் அந்த பாசமுள்ள தாய். இவர்களையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தியது ஓய்வு பெற்ற வருமானவரி அதிகாரி ஸ்ரீ நாராயணன்தான். 

அவர் ஒரு நாள் ஸ்ரீ ரவி தம்பதியினர் மீது அம்பாள் ஆவிர்பவித்து வருவது பார்க்க பரவசமாக இருக்கும். பெங்களூரில் மஹா அபி‌ேஶகம் நடக்கும் ! நீங்கள் வருகிறீர்களா”, என்று கேட்டார். அன்னையைக் காண ஆவலோடு  அவருடன் சென்றேன். ஆடி மாதம் வெள்ளிக் கிழமை. அம்பாளுக்கு உகந்த நாள். அவர்கள் கிருஹத்திற்கு காலை 7.30க்கு சென்றோம். என்னைப் போல் பலரும் வெளியூர்களிலிருந்து வந்திருந்தனர். அன்பான உபசரிப்புகளுக்குப் பிறகு சுமார் 8 மணி அளவில் ஸ்ரீ ரவி அவர்களுக்கு கால்களில் மஞ்சள் பூசி, கொலுசு, மெட்டி போன்றவைகளும் கைகளில் வளையல்களும் போட்டு விட்டனர். சிறிது நேரத்தில் ஸ்ரீ ரவியின் மனைவி ஸ்ரீமதி மாலாவின் மீது நாகம் வர தரையில் நாகமாக மாறி நெளிந்தாள். அங்கு தரையில் ஓரிடத்தில் வட்டமாக வலம் வந்தார். அந்த இடத்தைக் குறித்துக் கொண்டனர். அங்கு கோலமிட்டனர். 

பின்னர் ஸ்ரீ ரவி அவர்கள் தன் கரங்களால் மஞ்சள் கிழங்குளை அள்ளி தண்ணீரில் போட்டார். அந்த கிழங்குகளை வந்திருந்த அனைவரும் கருங்கற்களில் வைத்து இழைத்து அந்த மஞ்சள் சாந்தை குடங்களில் நிரப்பினோம். பின்னர் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பல குடங்களில் நிரப்பப்பட்டது. பெரிய பெரிய  டிரம்களில் தண்ணீர் பிடித்து வைத்திருந்தனர். அவற்றில் ஸ்ரீ ரவி அவர்கள் மஞ்சள் பொடி, குங்குமம் போன்றவற்றைப் போட, மஞ்சள் நீர், குங்குமம் நீர் தயார் செய்யப்பட்டது. பெரிய டிரம் ஒன்றில் பன்னீர் கொண்டு வரப்பட்டது. 

மாலை சுமார் 6 மணி அளவில் ஸ்ரீ ரவி அவர்களுக்கு தலையில் எல்லோரும் எண்ணெய் வைத்தனர். அவர் ஸ்நானம் செய்து கொண்டிருக்கையில் ஸ்ரீமதி மாலா அவர்களுக்கு நாகம் வர, நாகம் படமெடுக்கும் விதமாக வளைந்து இறுதியில் காலையில் கோலம் போட்ட பலகையின் பின் அமர்ந்தார்.  அதைத் தொடர்ந்து ஸ்ரீ ரவி அவர்கள் எண்ணெய் ஸ்நானம் முடிந்த பின் மற்றொரு கோலம் போட்ட பலகையில் புடவைக் கட்டிக் கொண்டு வந்து அமர அன்னை 

ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் அவர் மீது இறங்கினாள். அதைத் தொடர்ந்து அபி‌ேஶகம் தொடங்கியது. இதை தொடர் அபி‌ேஶகம் என்று கூறலாம். ஏனெனில் அபி‌ேஶகத்தில் சிறிது கூட இடைவெளியில்லை. பக்தர்கள் சுறுசுறுப்பாக இயங்கி அபி‌ேஶக குடங்களை உடனுக்குடன் அனுப்ப அபி‌ேஶகம் தொடர்ச்சியாக நடை பெறுகிறது. அரைத்த மஞ்சள், பால், பன்னீர், குங்கும நீர், மஞ்சள் பொடி நீர், பஞ்சாமிர்தம் ஆக 200 குடங்களுக்கு மேல் அபி‌ேஶகம். பின்னர் பக்தர்கள் வாங்கி வந்த புடவைகள் சமர்ப்பிக்கப்பட்டு பூவினால் அலங்காரங்களும் அதைத் தொடர்ந்து பூவினால் அபி‌ேஶகமும் நடை பெற்றது. பின் கற்பூர ஆரத்தி. இந்த கற்பூரமும் காலையில் அம்பாளால் ஆசீர்வதிக்கப்பட்டதுதான்.  

உபசாரங்களை ஏற்றுக் கொண்டபின் சந்தோஶமாக கண்ணைத் திறந்து பார்க்கிறார் அம்பாள். அந்த பார்வை தங்கள் மீது படவேண்டு மென்று பக்தர்களிடையே போட்டி. அந்த பார்வை பட்டாலே எல்லா வினைகளும் தீருமென்பது அவர்கள் நம்பிக்கை. அதன் பின் அம்பாளும் நாகமும் மலையேற சுய நினைவுக்கு திரும்புகிறார் ஸ்ரீ ரவி. 

இது மஹா அபி‌ேஶகம் என்று அழைக்கப்படுகிறது. ஆடி மாதமும், தை மாதமும் வெள்ளிக் கிழமையில் நடைபெறும் இந்த அபி‌ேஶகம் சில சமயங்களில் பக்தர்களின் கிருஹங்களிலும் நடைபெறுவதுண்டு. இந்த அபி‌ேஶகத்தை நேரில் காண்பதே பெரும் பாக்யம். ஒவ்வொரு செவ்வாய், வெள்ளியன்றும் அம்பாள் ஸ்ரீ ரவியின் மீது இறங்கி வந்து பக்தர்களின் குறைகளைத் தீர்க்கிறாள்.  

எனது நண்பர் ஸ்ரீநாராயணன் அவர்களும் ஸ்ரீ நாகேந்திரன் அவர்களும் அன்னை அருள் புரிந்த பல நிகழ்வுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டனர். அவற்றில் என் நினைவில் இருந்தவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...




கருத்துகள் இல்லை