Recent Posts

மஹா மாரியம்மன் - மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் - தேர்/சப்பரம் இழுத்தல்

மஹா மாரியம்மன் 
மாரியம்மனுக்கு எடுக்கப்படும் விழாக்கள் 
தேர்/சப்பரம் இழுத்தல் 



மாரியம்மன் கோயில் திருவிழாவின் இறுதி நாளுக்கு முதல் நாள் பெரும்பாலும் தேர் திருவிழா நடைபெறும். சில இடங்களில் தேர் இழுத்துச் செல்லும் போது கூடவே சப்பரமும் இழுத்துச் செல்லப்படும். 

தேர் திருவிழாவிற்கு சில நாட்கள் முன்பிருந்தே தேரைப் பழுது பார்த்து வர்ணம் பூசி, மராமத்து வேலைகள் செய்து சரி செய்து வைப்பர். தேர் திருவிழா நாளன்று தேரினை அல்லது சப்பரத்தை பூவினால் அலங்கரித்து அதில் அம்மனின் உற்சவ விக்கிரகத்தை வைத்து வடம் பிடித்து இழுத்துச் செல்வர். இது பெரும்பாலும் அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் வலம் வரும். அவ்வாறு வரும்போது சில குறிப்பிட்ட இடங்களில் நிறுத்தி அங்குள்ள மக்களின் பூஜையை ஏற்று பின் தொடரும். இந்த தேரோட்டம் கோயில் திருவிழாவின் போது ஆண்டிற்கொரு முறை மட்டுமே நடைபெறும். பின்னர் அந்த தேர்/சப்பரம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுவிடும். 

செடில் இழுத்தல் 

தேர் திருவிழாவின் போது சிறிய தேர்கள் அல்லது சப்பரத்தை தேரைப் போலவே நன்கு அலங்கரித்து நேர்ந்து கொண்டவர் தனி மனிதனாக இழுத்துச் செல்வர். பெரிய தேரைப் பின்தொடர்ந்து இந்த சிறு தேர்களும்/ சப்பரங்களும் செல்லும். சிலர் கையால் இழுப்பதற்குப் பதிலாக தாங்கள் நேர்ந்து கொண்டபடி தங்கள் முதுகில் இரும்பு வளையத்தை குத்தி அதன் மறுமுனையை சங்கிலியால் தேருடன் இணைத்து இழுத்துச் செல்வர். இதற்கு ’செடில் இழுத்தல்’ என்று பெயர். 

செடலாட்டம் 

செடலாட்டம் என்பதில் சுமார் 20 அடி நீளமுள்ள தடித்த கம்பம் நிலத்தில் ஊன்றப்பட்டிருக்கும். அதன் உச்சியில் சுமார் 20 அடி நீளமுள்ள கம்பை அதன் நடுவில் கிடைக்கையாக பிணைத்திருப்பர். மேலுள்ள கம்பு கீழ் உள்ள கம்பின் ஆதாரத்துடன் சுற்றி வருமாறு அமைக்கப்பட்டிருக்கும். படுக்கையாக இருக்கும் கம்பின் இரு முனைகளிலும் இரும்பு சங்கிலியும் சங்கிலியின் முனையில் ஒரு வளையமும்  இணைக்கப்பட்டிருக்கும். செடலாட்டம் ஆட விரதமிருப் பவர்களின் முதுகில் இந்த கம்பியின் முனையை குத்தி அதில் அவர்கள் கிடையாகத் தொங்குவர். அந்த கம்பில் ஒரு கயிற்றைக் கட்டி இழுக்க அந்த இடம் முழுவதும் செடலாட்டம் ஆடுபவர்  கிடையாகத் தொங்கிக் கொண்டே சுற்றுவர். இதற்கு செடலாட்டம் என்று பெயர். 

செடலாட்டம் நடைபெறும் பொழுது, கம்பியில் தொங்கிக் கொண்டிருப்பவர் கைகளில் குழந்தையைக் கொடுத்து சுற்றி வரச் செய்து திரும்பப் பெற்றுக் கொள்வர். இவ்வாறு செய்வதால் அக்குழந்தைக்கு நோய் நொடிகள் தாக்காது என்பது நம்பிக்கை. 

செடலாட்டம் நாகையில் பிரசித்தம் எல்லா மாரியம்மன் கோயில்களிலும் செடலாட்டம் நடைபெறுவதில்லை. குறிப்பிட்ட கோயில்களில் மட்டுமே நடைபெறுகிறது. 

செடில் என்பது தரையில் குழி தோண்டி அதில் ஒரு மர உருளையைப் புதைத்திருப்பார்கள். அந்த உருளையில் குறுக்காக ஒரு மரத்துண்டு இருக்கும். இந்த மரத்துண்டை புதைத்துள்ள உருளையை மையமாக வைத்து சுற்றி வரலாம். குறுக்கு மரத்தின் ஒரு பக்கம் நீட்டமாக நான்கைந்து பேர் தள்ளிக்கொண்டு ஒரு வட்டச் சுற்றாகச் செல்லுமாறு இருக்கும். மறு முனையில் மரச்சட்டகம் ஒன்றில் மனிதர்கள் ஏறி நிற்குமளவுக்கு இடம் இருக்கும். குறுக்கு மரம் மேலும் கீழுமாகவும் செல்லுமாறு இருக்கும். 

முதலில் மரச்சட்டகம் கீழே வருமாறு குறுக்கு மரத்தின் நீண்ட பகுதியை மேலே உயர்த்துவார்கள். செடில் சுற்ற வேண்டிக்கொண்ட வரை  ஏற்றிக்கொண்டதும் நீண்ட பகுதியைக் கீழே இறக்குவர். சட்டகம் மனிதர்களைச் சுமந்து கொண்டு மேலே செல்லும். இப் பொழுது குறுக்கு மரத்தை ஒரு சுற்று சுற்றிக் கொண்டுவந்து நிறுத்தி, சட்டகத்தைக் கீழே இறக்கி, அடுத்த ஆளை ஏற்றிக்கொள்வார்கள். 


இந்த பகுதியானது திருமதி.ரஞ்சனா பாலசுப்ரமணியன் மற்றும் ந.பாலசுப்ரமணியன் அவர்கள் எழுதிய மஹாமாரியம்மன்  என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. மஹாமாரியம்மன் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது. 


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

 giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube  giri sharechat giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...



கருத்துகள் இல்லை