Recent Posts

திருவிளையாடல் புராணம் - குண்டோதரனுக்கு உண்டியிடல்

திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள் 

குண்டோதரனுக்கு உண்டியிடல்




             கூத்துக் கண்ட மகிழ்ச்சியுடன் பதஞ்சலி போன்ற முனிவரும் மற்றையோரும் சாப்பிட உட்கார்ந்தனர்.  அறுசுவை உணவைப் பொன்பாத்திரங்களில் பெண்கள் உபசரித்துப் பரிமாற ஆனந்தமாய் சாப்பிட்டுத் தாம்பூலம் வாங்கிக் கொண்டு விடைபெற்றுச் சென்றனர்.

      மன்னர்களும், தேவ, கந்தர்வர்களும் கூட சாப்பிட்டு முடித்தாயிற்று.  சமையல் சாமான்கள் ஏகப்பட்டது மிச்சம்.  சமையல் காரர் காஞ்சனமாலையிடம் வந்து பூதநாதனுடன் பூதகணங்கள் நிறைய வருமென்று எண்ணி ஏகப்பட்டது தயார்  செய்தோம்.  இப்போது என்ன செய்வது?" எனப் பணிவுடன் கேட்டார்.

    அப்போது காஞ்சனமாலையும், தேவியும் செல்வத்தால் சற்று பெருமையுற்றிருந்தனர்.  தேவி தோழியருடன் சென்று அன்னம் பதார்த்தங்களைப் பார்வையிட்டாள்.  பின் ஸ்வாமி யிடம் சென்று, உங்கள் வீட்டு விருந்தினர் இவ்வளவு தானா? நிறைய உணவு மிஞ்சிக் கெட்டு விடும் போலிருக் கிறதே!" என்றாள்.

  சுவாமிக்கும் தேவியிடம் கொஞ்சம் விளையாடிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது.  நீ அரசி.  அந்த கர்வத்தால் அதிகமாக ஏற்பாடு செய்திருந்தால் நான் என்ன செய்கிறது?" என்றவர் அருகிலிருந்த குண்டோதரனை அருள் பார்வையொன்று பார்த்தார்.  அவர் தன் நெற்றிக் கண்ணிலிருந்து ஒரு பொறியை அவன் வயிற்றினுள் செலுத்தினார்.

 உடனே குண்டோதரன் ஈசனிடம் வந்து வணங்கி உமது குடையைப் பிடித்துப் பின் தொடர்ந்து ஓடி வந்ததலாலோ என்னவோ பெரும் பசியாயிருக்கின்றது.  நான் சாப்பிடப் போகட்டுமா?" எனக் கேட்டான்.



   தேவி, உன் அரண்மனையில் இப்படி அன்னம் கிடைக்கு மென்று தெரியாததால் மற்ற பூதங்களை அழைத்து வர வில்லை.  குடையைத் தாங்கிவர இந்தக் குட்டை பூதத்தை மட்டும் அழைத்து வந்தேன்.  இது சாப்பிடுவதற்குள் மற்றைய பூதங்களை அழைத்து வர ஆளனுப்புகிறேன்.  குண்டோதரா, நீ போய் திருப்தியாய் உண்டு வா" என இருவருக்குமாய் பதில் உரைத்தார்.

 குண்டோரன் சமையல் அறைக்கே போய்விட்டான்.  தேவியும் அந்தப்புரம் சென்றுவிட்டாள்.  குண்டோதரனுக்கு இலைபோட்டு நீர் எடுத்து வைத்தனர் பணிப்பெண்கள்.

   எனக்குள்ள பசிக்கு இலையில் போட்டு கட்டுப்படியா காது" என்று கூறிய குண்டோதரன் வெள்ளை மலைபோல் இருந்த அன்னக் குன்றுகளில் சாம்பார் நதிகளை ஓட விட்டுக் கலந்தான். வாயைத் திறந்தான். பணிப் பெண்கள் பயந்து ஓடினர். ஏனெனில் வாய் குகைபோல் இருந்தது.  இரண்டு கைகளாலும் வாரி வாரி விழுங்கினான்.  ஐந்து நிமிடத்தில் அண்டா காலி.  இதேபோல் அன்னரசமலை, அன்னபருப்பு மலை, பொரியல், கூட்டுடன் காலியானது. பின்னர் தயிர்க்குடம், நெய்ப்பானை, பால்அண்டா, பாயச அண்டா, தேன்தவலை எல்லாவற்றையும் காலி செய்தான்! பிறகு பழ வகைகள்... வாழைப் பழக்குலைகள்! மூட்டையோடு பலாப் பழங்கள். ஆமாம், சகுணி, கொட்டை, தோல் எல்லாவற்றுடனும் தான்! மாதுளைமூட்டைகள், ஆரஞ்சுக் குவியல், பழக்குன்று நிரம்பிய இடங்களெல்லாம் காலி. அடுத்து லட்டுமலை, மனோகர மலைகள், அதிரசக்குன்று, மைசூர்பாகு அடுக்குகள், அண்டாக் களில் நிரம்பி வழிந்த பாதாம் கீர், தட்டு தட்டாக கோதுமை அல்வா, குடம் குடமாக பானகம் எல்லாம் காலியாகி பாத்திரங்கள் உருண்டன! அடுத்து இரவு சமையலுக்காக வாங்கி வைத்திருந்த பரங்கி, பூசணிக்காய் மற்ற காய் வகைகள், தேங்காய், மாங்காய் எல்லாம் காலி. அதன் பிறகு களஞ்சியத்திலிருந்த தானியங்கள் அரிசி, பருப்பு, கோதுமை, உளுந்து, பயறு இப்படி எதைத் தான் சாப்பிடுவது, எதை விட்டுவைப்பது என்றில்லாமல் அவன் காலி செய்யவே வேலைக்காரர்கள் பயந்து தேவியிடம் போய் முறையிட்டனர்.  இதில் என்ன ஆச்சரியம் என்றால் இவ்வளவு சாப்பிட்டும் குண்டோதரன் வயிறு ஒட்டிப் போயே இருந்தது.  அவன் வயிற்றில் இருந்தது அக்கினி.  நெருப்பில் எதைப் போட்டாலும் பஸ்மமாகி விடும் அல்லவா?

   தேவி தயங்கியபடி ஸ்வாமி அருகில் வந்து நின்றாள்.  எப்படித் தொடங்குவது என்று தயக்கம்.  ஸ்வாமிக்கா தெரியாது! இருந்தாலும் ஒன்றும் தெரியாதவர் போல, என்ன தேவி, குண்டோதரன் சாப்பிட்டு முடித்து விட்டானா?" மற்ற பூதங்களுக்கு ஆள் அனுப்பி இருக்கிறேன்.  இதோ வந்து விடுவார்கள்.  சற்று பொறுத்துக் கொள்" என்றார் ஈசன் குறும்பாக.  பாவம் தேவி! என்ன செய்வாள்.

   ஸ்வாமி, குண்டோதரனையே சமாளிக்கத் தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.  எல்லா பூதங்களும் இங்கு வந்தால் அழிக்கும் கடவுள் என்ற பெயர் உங்களுக்குப் பொருத்தமாகி விடும்.  என் கர்வத்தை மன்னித்துக் கருணை காட்டுங்கள்.  இவனை எப்படித் திருப்தி செய்வதென்று கவலையாயிருக்கின்றது.  ஜனங்களெல்லாம் நல்லவேளை ஈசன் ஒரு பூதத்தோடு வந்தார்.  இன்னொரு பூதத்தோடு வந்திருந்தால் இந்த ஊரையே சாப்பிட்டிருக்கும்" என்று பேசுவது உங்கள் காதில் கேட்க வில்லையா? உமது திருவிளையாடல் என்னிடமுமா?" எனப் பலவாறு வேண்டி கால்களில் பணிந்தாள்.

  வடமுகாக்கினிப் பொறியை குண்டோதரன் வயிற்றில் வைத்து அவன் ஏராளமாய் சாப்பிடுவதை எல்லோரையும் காணவைத்த திருவிளையாடலே ஈசனின் ஏழாம் திருவிளை யாடலாகும்.

    இந்த 7-ஆம் திருவிளையாடலை பக்தி சிரத்தையுடன் படிப்பவருக்கும், படிக்கச்சொல்லி கேட்பவருக்கும், வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும். மகப்பேறு ஏற்படும்.  இல்லங்களில் தானியங்கள் வற்றாமல் செழிப்பாய் இருக்கும்.  எல்லாமே சுபீட்சமாய் இருக்கும்.




   இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


   ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...




கருத்துகள் இல்லை