திருவிளையாடல் புராணம் - அன்னக்குழி, வைகை அழைத்தல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
அன்னக்குழி, வைகை அழைத்தல்
இவ்வளவு சாப்பிட்டானே அந்த குண்டோதரன் வயிறு எப்படி இருந்தது தெரியுமா? தூர் எடுத்த கிணறு போல பள்ளமாக இருந் தது! ஈசனை வணங்கி, ஈசனே, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகிவிட்டது இப்போது சாப்பிட்ட அற்ப உணவு" என்று வேண்டினான்.
அவன் சாப்பிட்டது அற்ப உணவா! மீனாக்ஷி வியந்தாள். சதாசிவன் அன்னபூரணித் தாயாரை நினைத்தார். எதிரில் நான்கு தயிர் சாதக்குழிகள் தோன்றியது. குண்டோதரனைச் சாப்பிடச் சொன்னார்.
உவகையோடு குண்டோதரன் அதை நான்கே வாயாக விழுங்கிவிட்டான். வாலு போய் கத்தி வந்த கதையாக பசிபோய் பெருந்தாகம் ஏற்பட்டுவிட்டது! மதுரை மாநகரி லுள்ள கிணறுகள், குளங்கள் அனைத்திலுமுள்ள நீர் வற்றியும் அவன் தாகம் தீரவில்லை! மீண்டும் ஈசனிடம் ஓடிவந்து வேண்டினான்.
ஈசன் முடியிலிருந்து கங்கையை எடுத்து விட்டார். குண்டோத ரனைப் பார்த்து அதில் ’வை, கை என்றார். இரு கைகளாலும் அள்ளி அள்ளிப் பருகி தாகம் தீர்ந்தான் குண்டோதரன்.
பின்னர் மீனாக்ஷியையும், சோமசுந்தரக்கடவுளையும் தொழுது வணங்கினான். இந்த 8-ஆம் திருவிளையாடலை பக்தியோடு தினமும் படிப்பவர்க்கும் கேட்பவருக்கும் பசி, தாகம் போன்ற தொல்லைகள் ஏற்படாது. ஒருமுறை வைகையில் நீராடுபவன் சம்சார சாகரத்தைக் கடக்க சிவனருள் பெறுவான்.
வைகைக்கு சிவகங்கை, வேகவதி, விளம்பியதை (மெதுவாகச் செல்பவள்) கிருதமாலை, சிவஞானநதி என்று பல பெயர்கள் உண்டு. குண்டோதரன் பசிதீர்த்த இந்தக் கதை தீராத நோய்களையும் தீர்க்கும் வல்லமை பெற்றது.
’வை, கை என்று ஈசனே பெயர் வைத்த இந்தக் கதையைப் படிப்பவருக்கு பல புண்ணிய நதிகளில் நீராடிய பலனும் கிடைக்கும்.
ஏழு கடலழைத்தல்
மீனாக்ஷி அம்மையைத் திருமணம் செய்து கொண்ட சோம சுந்தரக் கடவுள் பாண்டிய மன்னனாக மதுரையில் ஆட்சி செய்து வந்தார். இறைவனே ஆட்சி பீடத்தில் இருக்கும் போது வளமைக்குக் கேட்கவா வேண்டும்? மாதம் மும்மாரி பெய்தது. முப்போகம் விளைந்தது. நதிகள் வற்றியதில்லை. வானம் பொய்க்கவில்லை. பூமித்தாய் வஞ்சனை செய்யவில்லை.
பசுக்கள் பாலைப் பொழிந் தன. கோவில்களில் காலம் தவறாமல் பூஜையும், அறவழி பாடுகளும் குறைவின்றி நடந்தன. இல்லை என்ற சொல்லே எங்கும் இல்லை!
அப்போது ஒருநாள் கௌதம முனிவர் அரண்மனைக்கு விஜயம் செய்தார். மீனாக்ஷியின் தாயாரான காஞ்சன மாலை அவரை எதிர்கொண்டு உபசரித்து, வணங்கி அறங்களைப் பற்றி விளக்கிக் கூறுமாறு வேண்டினாள்.
அறங்கள் மூன்று வகைப்படும். அவை மனஅறம், நாஅறம், உடல் அறம். உண்மைப்பேசுவது, பொறுமை, புலன் கட்டுப்பாடு, இரக்கம், நேர்மை, தர்மசிந்தனை, தூய்மை, பக்தி இவைகள் மனஅறம்.
மந்திரங்கள் உச்சரிப்பது, இறைவனைப் பாடுவது, சுவைக்கு அடிமையாகாமல் இருப்பது, எவரையும் தூஷிக்காமல் இருத்தல், பொய்பேசாமை இவையெல்லாம் நாஅறம்.
குளிப்பது, ஆலயம்செல்வது, சந்தனம் அரைப்பது, பூத்தொடுப்பது, பஜனை செய்வது, ஸ்வாமி இருக்கும் பல்லக்கு, வாகனம், சுமப்பது, தேர் இழுப்பது, கோவிலைப் பெருக்கி, மெழுகிக் கோலமிடல், அபிஷேகத்துக்கு நீர் சுமத்தல், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல் இவைகள் உடல்அறம்.
உடனே பயனளிக்கக் கூடியது தீர்த்தமாடல். புலனடக்கமும், யாகமும் செய்த பலன் தீர்த்தமாடுதலில் கிடைக்கிறது. அடுத்தப் பிறவி பெருஞ்செல்வந்தனாக்கும். முற்பிறவிகளில் செய்த பாபங்கள் தொலையும். அத்தனை தீர்த்தங்களிலும் நீராடுவ தென்பது நடக்கக் கூடிய காரியமா? அதனால் எல்லா நதிகளும் கலக்கும் கடலில் நீராடுவது விசேஷம்" என்றார்.
காஞ்சனமாலை அவரை அன்புடன் உபசரித்து அனுப்பி விட்டு மகளிடம் அங்கயற்கண்ணி! எனக்கும் வயதாகிற தல்லவா? கடல் நீராடவேண்டும் என்பது என் தணியாத ஆசை" என்றாள்.
பரமேச்வரனிடம் சமயம் பார்த்து தன் தாயின் ஆசையைத் தெரிவித்தாள் மீனாக்ஷி. உன் தாய் ஒரு கடலில் நீராட விரும்பி னாள். நான் ஏழு கடலையும் இங்கு வரவழைக்கிறேன்" என்று கூறி ஏழு கடலையும் அழைத்தார் ஈசன்.
என்ன ஆச்சரியம்! பலவகை மீன்களும், பாம்புகளும் பவளக் கொடிகளோடு, அலைகளடித்துக் கொண்டு ஏழு கடல்களும் வந்த அழகும், ஆர்ப்பாட்டமும் சொல்ல ஆயிரம் நாபடைத்த ஆதிஷேனா லேயே ஆகாது! ஏழு கடல்களையும் ஒரு பெரிய பொய்கையில் போய் சேர்ந்து கொள்ளச் சொன்னார் ஈசன். இன்றும் மதுரை மாநகரிலுள்ள குளத்தில் குளித்தால் ஏழுகடல்களிலும் குளித்த புண்ணியம் என்று கூறுவார்கள். விசேஷமாக அமாவாசை, கிரகணம் போன்ற காலங்களில் அப்பொய்கையில் நீராடி தர்ப்பணம் செய்தால் பிதுர்க்கள் மகிழ்வர். ஒரு கடலின் அலைகளே குளிக்க சிரம மாயிருக்கும். ஏழு கடல்களின் அலைகளில் காஞ்சனமாலை அன்று எப்படிக் குளித்திருப்பாள்!
பகவான் ஏழு கடல்களை அழைத்த இந்த 9-ஆம் திருவிளை யாடலைப் பக்தியுடன் தினமும் படிப்பவருக்கும், கேட்பவருக்கும் ஈசனருள், அம்பிகை அருள், பௌர்ணமி, அமாவாசைகளில் செய்த பூஜா பலன், பிதுர்களுக்கு மோட்சம், வம்சவிருத்தி எல்லாம் கிடைப்பது திண்ணம்.
இந்த ஏழுகடல் பொய்கை விட்டவாசல் தெருவுக்கும் கீழமாசி வீதிக்கும் நடுவில் இருக்கிறது. புதுமண்டபத்திற்கு எதிரே உள்ளது விட்டவாசல் தெரு. விட்டவாசல் தெருவழி போவோர் இடது கைப்பக்கம் ஏழுகடல் பொய்கையைப் பார்க்கலாம். கீழமாசி வீதி வழியாக விட்டவாசல் தெருவுக்கு வருவோர் நடுவில் ஏழுகடல் குளத்தைக் காணமுடியும்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.



கருத்துகள் இல்லை