Recent Posts

திருவிளையாடல் புராணம் - திருக்கூத்து

திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள் 


திருக்கூத்து





            தன்னையே தான் வணங்கும் அதிசயத்தை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? நடந்ததே! உலகம் என்னும் நாடக மேடையில் மக்களுக்காக மன்னனாக வேஷம் கட்டிக் கொண்ட இறைவன் திருமணம் முடிந்ததும் கோவிலுக்குச் சுற்றத்தாரோடும், தேவியோடும் சென்று லிங்கத்தை வணங்கினார்.  பின்னர் எல்லோரையும் போஜன சாலைக்கு அழைத்தார்.  அப்பொழுது பதஞ்சலி, வியாக்ரபாதர் என இரு முனிவர்கள் இறைவனிடம் மெதுவாக நாங்கள் தினமும் சிதம்பரத்தில் நடராஜப் பெருமானின் திருநடனத்தைக் கண்டபின் தான் உணவருந்துவது வழக்கம்.

      இன்றைக்கு என்ன செய்கிறதென்று தெரியவில்லை" என்றனர். ஈசுவரன் சிரித்தபடி என்னை ஈசனென்று வணங்கு கிறீர்கள். நான் ஆடுகிறேன் நடனம் அற்புதமாக... சரி தானா?" என்று கேட்டார்.

       ஆயினும் சிதம்பரத்தில் உள்ளது போல் இருக்குமா," என வினவினர் முனிவர் இருவரும்.
 அதற்கு ஈசன் மதுரை சிதம்பரத்திலும் மேம்பட்டது.  பிரம்மாண்ட மும் பிரம்மாவின் உடல்.  இடுப்புக்குக் கீழ் ஏழு உலகங் களும், இடுப்புக்கு மேல் ஏழு உலகங்களும் உள்ளன.  அதில் உயர்ந்த இடத்தில் இருப்பது மதுரை" எனக் கூறினார்.  அதைக் கொஞ்சம் விஸ்தாரமாகச் சொல்லவேண்டும் என்று முனிவர்கள் வேண்ட, பிரம்மாவின் கால் கட்டைவிரல், பாதம் (படம்)கணுக்கால், கீழ்க்கால், முழங்கால், தொடைமத்தி, அடித் தொடை இவை கீழ் உலகங்கள்.  பூமி முதலிய மேல் உலகங்கள் மூலாதாரம், சுவாதி ஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை, பிரம்மரந்திரம் என்று நிற்கின்றன.

    பிரம்மனது மூலாதாரம் கமலாயம் எனப்படும் திருவாரூர்.  அங்கே நான் தியாகராஜமூர்த்தி. பிரம்மனது சுவாதிஷ்டானம் திருவானைக்காவல்; அங்கே ஜம்புகேசுவர மூர்த்தியாய் உறை கின்றேன். மணிபூரகம் திருவண்ணாமலை; அங்கே அருணா சலமூர்த்தியாய் அருள் புரிகின்றேன்".

    பிரம்மனது அனாகத சக்கரம் சிதம்பரம்; அங்கு நான் சபாபதி.

 விசுக்திஸ்தானம் தக்ஷிண கைலாசமெனப்படும் திருக் காளஹஸ்தி; அங்கே நான் காளத்திநாதன்".

  பிரம்மனது ஆக்ஞாஸ்தனம் காசி. அங்கே நான் விசுவநாத மூர்த்தி".

  திருக்கைலாயம் பிரம்மனது பிரம்மரந்திரம்; அங்கே நான் ஸ்ரீகண்ட பரமேஸ்வரன்".
ஆலவாய்த்தலம் ஆதாரத்துக்கு மேம்பட்ட துவாதசாந்தம்.  அங்கே நான் சுந்தரலிங்க மூர்த்தி". 

  சிதம்பரத்தைப் போல் இருக்குமா என்று கேட்டீர்கள்! எங்குமே இல்லாதபடி கால்மாறி ஆடுகின்றேன்; இந்த ராஜ சபையில் நான் ஆடும் தாண்டவம் சந்தியா தாண்டவம்".

  நெல்லையில் சித்ரசபையில் ஆடியது முனிதாண்டவம்.  கனகசபையில் ஆடியது ஆனந்த தாண்டவம்.  திருவாலங் காட்டில் தலையால் நடந்து வந்த காரைக்கால் அம்மைக்காக ரத்தினசபையில் ஆடிய தாண்டவம் காளிபங்க தாண்டவம்.  திருக்குற்றாலம் சித்திரசபையில் ஆடியது திருபுரதாண்டவம். இந்த பஞ்ச நடனங்கள் தவிர திருவாரூரில் அஜபா நடனம், திருநள்ளாறில் உன்மத்த நடனம், திருக்காரை வாசலில் குக்குட நடனம், வேதாரண்யத்தில் ஹம்ஸபாத நடனம், திருக்கோயிலில் பிருங்கி நடனம், ஆன தாண்டவபுரத்தில்   முகமண்டல நடனம், பேரூரில் ஊர்த்தவ தாண்டவம், திருப்பத்தூரில் கௌரி தாண்டவம் இந்த ஆலவாய்த் தாண்டவம் அனைத்திலும் சிறப்பானது" என்று கூறினார்.

1. திருநெல்வேலி - முனிதாண்டவம் (தாமிரசபை)
2. திருப்பத்தூர்-கௌரி தாண்டவம்
3. மதுரை - கால்மாறிய தாண்டவம் சந்தியா நடனம் (வெள்ளி யம்பலம்) ராஜதசபை.
4. ஆனதாண்டவபுரம் - முகமண்டல தாண்டவம் (தஞ்சாவூரில் கடலூர் - மாயூரம் ரயில் பாதையில் உள்ளது)
5. திருக்காரவாயல் - குக்குட நடனம் (தஞ்சை மாவட்டம் மாயவரம் - அறந்தாங்கி பாதையில் திருவாரூருக்கு அடுத்து மாவூர் ரோட் ஸ்டேஷனில் இறங்கி தெற்கே மூன்று மைலில் இருக்கிறது).
6. திருவாரூர் - அஜபா நடனம் (தஞ்சாவூர் மாவட்டம்)
7. பேரூர் - ஊர்த்துவ திரிபுர தாண்டவம். (கோயம்புத் தூருக்குக் கிழக்கே ஐந்து 1 மைல் மேலச்சிதம்பரம், பேரம்பலம் என்ற சிறப்புப் பெயர்களும் உண்டு.)
8. திருக்கோளிலி - பிருங்கி நடனம் (தஞ்சை மாவட்டம் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பிரிவில் திருநெல்லிக்காவல் என்ற ஊருக்குத் தென்கிழக்கில் ஆறுமைல் தூரத்தில் உள்ளது. ’திருக்குவளை என்பது தற்போதைய பெயர்)
9. திருமறைக்காடு வேதாரண்யம் - ஹம்ஸ பாத நடனம். 
(தஞ்சை  மாவட்டம்)
      10. சிதம்பரம் - ஆனந்த தாண்டவம் (கனக சபை)
  11. திருவாலங்காடு சம்ஹார தாண்டவம் அல்லது காளிபங்க நடனம் (ரத்னசபை) (வடஆற்காடு மாவட்டம் சென்னை -அரக்கோணம் ரயில்பாதையில் உள்ளது.)
      12. திருக்குற்றாலம் - திரிபுர தாண்டவம்; சித்திரசபை.
      13. திருநள்ளாறு - உன்மத்த நடனம் (தஞ்சை மாவட்டம்; பேரளம் - காரைக்கால் பிரிவில் உள்ளது)

   கோயிலின் முன்புறத்தில் வெள்ளியம்பலம் ஒன்று தோன்ற வேண்டுமென்று நினைத்தார் சுந்தரர். இரத்தின மேடையுடன் வெள்ளியம்பலம் வந்தது.



  அதில் ஏறி நின்றார்.  அபஸ்மாரம் என்ற அரக்கன் வலது காலின் கீழே, இடது கால் மேலே கொஞ்சம் வளைத்து பத்து புஜங்களுடன் பேரழகனாய் நின்றார்.  ஒரு கையில் சூலம், மற்றக் கையில் நாகபாசம், நான்கு வலக் கரங்களில் உடுக்கு, அம்பு, கத்தி, கோடரி, நான்கு இடக்கரங்களில் மழு, வில், கேடயம், கோல் என்று இறைவன் ஆட அனைவரும் மெய்மறந் திருந்தனர்.

      சடையும், கங்கையும் சந்திரனும் துள்ளி ஆடின.  நாகப்பூணூல், மூன்று கண்கள்... சற்றுமுன் கல்யாண கோலத்துடன் நம் அருகில் அமர்ந்தவரா இவர்" என தேவியார் அச்சத்துடன் தாளமிட, பதஞ்சலி போன்ற முனிவர்கள் போற்றி, போற்றி எனப் பாடி வணங்க ஐயன் வெள்ளியம்பலத்தில் நடன மாடிய காட்சியே  ஆறாம் திருவிளையாடலாகும்.

  இந்த 6-ஆம் திருவிளையாடலான ஐயன் நடனம் ஆடிய தாண்டவத்தை பக்தி, சிரத்தையுடன் தினமும் படிப்பவர் எண்ணியது கைகூடும், வியாபரம் பெருகும்.  கல்வியும், செல்வமும், தன்னம் பிக்கையும், தைரியமும், திறமையும் வளரும்.



    இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


   ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...






கருத்துகள் இல்லை