திருவிளையாடல் புராணம் - மீனாக்ஷி திருமணம்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
மீனாக்ஷி திருமணம்
விஷ்ணுவும், பிரம்மாவும் இருபுறமும் வர மண மண்டபத்துள் சென்றமர்ந்தார் ஈசன்.
நாரதர் வீணை மீட்டினார். அரம்பரையர் நடனம் ஆடினர். வசிஷ்டர், பிரகஸ்பதி போன்ற முனிவர்கள் வேதமந்திரங்கள் ஜெபித்தனர். சரஸ்வதியும், லக்ஷ்மியுமாக அலங்கரிக்கப்பட்ட தேவியை அழைத்து வந்து சுவாமியின் அருகில் உட்கார வைத்தனர். பிரம்மா ஹோமம் வளர்த்தார். காஞ்சனமாலை கெண்டியிலிருந்து நீர் வார்க்க, மகாவிஷ்ணு மீனாக்ஷியை சுந்தரர் கைபிடித்துக் கொடுத்தார். சுந்தரேசுவரப் பெருமான் தடாதகை பிராட்டியின் சங்குக் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டினார். தேவி அம்மி மிதித்தாள். மகாவிஷ்ணு பொரியிட்டார்.
பின்னர் ஈசன், வந்திருந்த அனைவருக்கும் பட்டாடை முதலியன கொடுத்து எதிர் மரியாதை செய்தார். அவர் சடையிலிருந்த இடத்தில் இரத்தின முடி. அவர் இப்போது பாண்டிய மன்னராயிற்றே. பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அரசபதவி ஏற்பவர்கள் லிங்கப் பிரதிஷ்டை செய்வது பாண்டிய குல வழக்கம். அப்போது தான் அந்தப் பரம்பரை நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம். லோக க்ஷேமத்துக்காக அரசாள வந்த ரிஷபக்கொடியோன், அவர் திருமண நாளன்று மதுரை நகரின் நடுப்பகுதியில் பொன்னேர் பூட்டி உழுது, மேற்கு திசைபார்த்து ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அதற்கு இகா பீஷ்டபிரதர் என்று பெயர் சூட்டினார். (இங்கே விருப்பங் களை பூர்த்தி செய்பவர் என்று அதற்குப் பொருள்) முறைப்படி பூஜை செய்தார். பின்னர் சுந்தரேச லிங்கத்திற்கும் பூஜை செய்து வழிபட்டார். தேவர்களும், முனிவர்களும் ’இகா பீஷ்டப்பிரத லிங்கத்தை முறைப்படி பூஜித்து வணங்கினர்.
ஈஸ்வரனின் லிங்கப் பிரதிஷ்டையையும், திருமண வைபவங் களையும் பக்தி சிரத்தையுடன் படிப்பவரும், கேட்பவரும் கன்னியா யிருந்தால் திருமணமாகும். பிரிந்த தம்பதியர் கூடுவர். நோய் நீங்கி பூரண பலம் பெறுவர். எல்லா நலன்களும் கிட்டும். நவரத்தினங்களும் வந்தடையும். தினமும் படிப்பவர்களுக்கு பூமியில் கிடைக் காதது என்பதே இல்லை.
சிவபெருமான் மீனாக்ஷியைத் திருமணம் செய்து கொண்டு பாண்டிய மன்னனாய் அரியணையில் அமர்ந்த லீலையே ஈசனது 5-ஆம் திருவிளையாடல்.
மீனாக்ஷி பெற்றோர் அரண்மனையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தாள். மாதம் மும்மாரி பெய்தது. நாட்டிலே பிரச்சினையே இல்லை. யாகங்கள், ஹோமங்கள் ஒழுங்காய் நடந்தன. நீதிநெறியோடு அரசாண்ட மலையத்வஜன் மகளுக்கு முடிசூட்டி இராஜ்ஜியபாரத்தை அவளிடம் ஒப்படைத்த சில நாட்களிலேயே விண்ணுலகமடைந்தான். தந்தையின் ஈமச்சடங்கு களை தடாதகை பிராட்டியே செய்தாள். மனுநீதி தவறாமல் அரசோச்சினாள். தன் திறமையால் எதிரிகளை ஜெயித்து பேரரசியாய் ஆட்சி புரிந்தாள்.
ஆனால் எத்தனைதான் திறமைசாலியாய் இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் செய்ய வேண்டியது. பெற்றோரின் கடமைதானே! இங்கேயோ மலையத்வஜனும் இறந்துவிட்டான். அதனால் தாயான காஞ்சன மாலைக்கு இரட்டிப்புக் கவலையாகிவிட்டது.
இதையறிந்து தடாதகை அம்மா, இங்கேயே இருந்தால் உன் எண்ணம் நிறைவேறாது. நான் திக்விஜயம் என்ற பெயரில் பலநாடுகளும் சுற்றிவருகிறேன். எனக்குப் பிடித்த மணாளனை அறிந்து வருகிறேன்" என்று தாயிடம் விடை பெற்று நான்கு குதிரைகள் பூட்டிய மீன்கொடி பறக்கும் தேரில் ஏறிக்கொண்டு, நால்வகை சேனையுடன் புறப்பட்டாள்.
பூவுலகில் பலமன்னர்களை ஜெயித்தாள். ஏராளமான ஆடை ஆபரணங்கள், பொன், இரத்தினங்கள் எல்லாம் காணிக்கையாய்ப் பெற்று இராஜ்ஜியத்தை செழிப்புறச் செய்து ஒரு அற்புதமான கோட்டையையும் கட்டுவித்தாள்.
மறுபடி எட்டுதிக்குகளையும் ஜெயித்து வரப்புறப்பட்டாள். கிழக்கே அமராவதி சென்று இந்திரனை ஜெயித்து அவன் பரிசாக அளித்த காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு, தென்கிழக்கு திசைக்குச் சென்று அக்கினியை வென்று அவன் காணிக்கையாக அளித்த தங்கக் கட்டிகளுடன், தெற்கே வந்து யமனைப் போரில் வென்று அவன் தந்த வெகுமதிகளுடன், தென்மேற்கே நிருதியை ஜெயித்து, மேற்கிலே வருண னையும், வடமேற்கில் வாயுவையும், வடக்கே சோமனையும் வென்று, அருள்புரிந்து வடகிழக்கில் கைலாயம் நோக்கி வந்தாள்.
தேவியை ஜெயிக்க யாரால் முடியும்? அம்பிகை கைலாயம் சென்றாள். அவள் அமைச்சரும், படைகளும் எப்படிப்போக முடிந்தது, என்ற கேள்வி எழுகிறதல்லவா?
’நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை அவர்களை ஜெபிக்கச் செய்து திவ்வியமான பார்வையையும், வானில் செல்லும் சக்தியையும் அளித்தாள் தடாதகை பிராட்டி.
என்னடா, இப்படி ஒரு இடம் பாக்கி இல்லாமல் சுற்றியாகி விட்டது. நமக்குத் தகுந்த கணவன் அகப்படவில்லையே" என்று தேவிக்கும் விசனமாகி விட்டது.3
கைலாயம் நோக்கி வந்த தேவி முதலில் காவற்கணங்களை வென்று, பல மதில்களைத் தாண்டி வந்தாள். தேவியிடம் தோற்ற நந்தி ஸ்வாமியிடம் சொல்ல உள்ளே ஓடினார். ’பகவானே, மூன்று ஸ்தனங்களையுடைய ஒரு மங்கை வில்லும், அம்புமாய் வந்திருக் கிறாள். நமது பூதகணங்களையெல்லாம் வென்று விட்டாள், காப்பாற்றவேண்டும்" என்று கைகூப்பி வேண்டினார்.
தேவியின் பிறப்பே ஈசனின் திருவிளையாடல் தானே! அப்படி யிருக்க தேவியின் திக்விஜயத்தைப் பற்றியா ஈசனுக்குத் தெரி யாது! ’அஞ்சேல் என நந்திக்கு அபயம் தந்தவர் எழுந்து வந்து, போர்க்கோலம் பூண்டிருந்த தேவியை உற்று நோக்கினார். தேவி யின் மூன்றாவது ஸ்தனம் மறைந்தது. தேவியின் சேனைகள் இது கண்டு பிரமித்தனர். தேவியோ பார்த்த கண் பார்த்தபடி நின்றாள்! ஈசன் அத்தனை அழகு...! அத்தனை பேரையும் வெற்றிக் கொண்ட வீரம் எங்கே போயிற்று! தேவியின் கையிலிருந்த வில்லும், அம்பும் நழுவிக் கீழே விழுந்தன. இதுநாள் வரை வெட்கத்தையே அறியாம லிருந்த தேவி தலை குனிந்து நின்றாள்.
தடாதகையின் அமைச்சரான சுமதி தேவியைப் பார்த்து தேவி, இவர் உங்களுக்குப் பொருத்தமானவர் தான்" என்று கூற, தேவி ஓரக்கண்ணால் இறைவனைப் பார்த்தாள். ஸ்வாமியும் இன்று எட்டாம் நாள், சோமவாரத்தன்று உன்னை மணக்கிறேன், ஊர் போய் சேருங்கள்" என உத்தரவிட்டார்.
உடனே, பரிவாரங்களோடு மதுரையை அடைந்த தேவி, தாயிடம் அனைத்தையும் கூறினாள். காஞ்சனமாலை இதைக் கேட்டு மனமகிழ்ந்தாள்.
எல்லா நாட்டு அரசர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டன. வந்தவர்கள் தங்குவதற்கு தங்குமிடங்கள் கட்டப்பட்டன. கல்யாணம் என்றால் சும்மாதானா? அதுவும் தேவியின் திருமணம். ஒரு ராணியின் கல்யாணம். எத்தனை கூட்டம் இருக்கும்? எட்டு நாட்கள் கூட இல்லை. ஓயாத உத்தரவுகள்; எங்கும் ஒரே சுறுசுறுப்பு!
மதுரை வரும் எல்லா விதமான பாதைகளிலும், நகருக்குள்ளும் தண்ணீர் பந்தல்கள். மாப்பிள்ளை வீட்டாருக்கு வேண்டிய ஆடை, ஆபரணங்களை எல்லாம் கற்பகத்தரு கொடுத்தது. காமதேனுவோ கேட்ட போதெல்லாம் பால், தயிர், நெய், தேன் , சர்க்கரை இவை
களை வாரி வாரி வழங்குகிறது. சிந்தாமணியோ, பொன்னையும், இரத்தினங்களையும் அள்ளித் தந்தது. இவற்றால் முத்துக்களும், ரத்தினங்களும் பதித்த கல்யாண மண்டபத்தை பல திறமைசாலிகள் கட்டி முடித்தனர். ஊரெல்லாம் கமுகு, வாழை கட்டிய தோரணங்கள்! வீதியெல்லாம் வண்ண வண்ணக் கோலங்கள்! மாப்பிள்ளையை எதிர்நோக்கி ஆவலுடன் பெண் வீட்டார் காத்திருந்தனர்.
மாப்பிள்ளை வீட்டைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே! சுந்தரேசுவரர் சங்கு கர்ணன், மகா கர்ணன், கண்டா கர்ணன், தூல கர்ணன் போன்ற கணத்தலைவர்களை வைகுண்டம், சத்திய லோகம், அமராவதிப்பட்டிணம், திக்பாலர்கள் இருப்பிடம் இப்படிப் பல திசைகளுக்கும் திருமணச் செய்தியை அறிவிக்க அனுப்பி வைத்தார்.
கருடன் மேல் ஏறிக்கொண்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் கைலாசம் வந்தார் மகாவிஷ்ணு. அன்னவாகனத்தில் சரஸ்வதியுடன் வந்து சேர்ந்தார் பிரம்மா. இந்திரன் இந்திராணியுடனும் ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை போன்ற அப்சர ஸ்த்ரீகளுடனும் வந்து சேர்ந்தான். வித்தியாதரர்கள், கந்தருவர்கள் தங்கள் மனைவி மாருடன் கைலாசம் அடைந்தனர்.
மேரு முதலிய ஏழுமலைகள், நாவலம் முதலிய ஏழு தீவுகள், பாற்கடல் முதலிய ஏழு கடல்கள், கங்கை, காவேரி, சிந்து, தாமிரபரணி போன்ற நதிகள் எல்லாம் நிஜ உருவத்தோடு தங்கள் தங்கள் காணிக்கைகளோடு சுந்தர மூர்த்தியைப் பின் தொடர்ந்தன.
ஆமாம், அவைகளுக்கெல்லாம் நம் கண்களுக்குப் புலப்படாத நிஜ உருவமும் உண்டு. ஒரு முனிவர் பாக்கி இல்லை. ஒரு தேவர்கள் மிச்சம் இல்லை. பின்னே, மீனாக்ஷி, சுந்தரேசுவரர் திருமணம் பார்க்க ஆசையாய் இருக்காதா? அஷ்ட திக்பாலகர் தத்தம் தேவியருடன் வந்தனர்.
சுவாமியும் தன் வழக்கமான புலித்தோல், மான்தோல் ஆடைகளைக் களைந்து விட்டு, பாம்புகளையெல்லாம் கழற்றிவிட்டு, நல்ல வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொண்டு, பட்டாடைகள், உயர்ந்த ஆபரணங்களைத் தரித்துக் கொண்டு இவர்களெல்லாம் புடைசூழ ரிஷப வாகனத்தில் புறப்பட்டார். இரத்தினங்களிழைத்த வெண்குடையை குண்டோதரன் பிடித்தான். கணக்கூட்டங்கள் ஆயிரக் கணக்கான வாத்திய ஒலிகளை வாய்களாலேயே எழுப்ப... அடடா! அந்த வைபவத்தை ஆயிரம் நாபடைத்த ஆதி சேஷனாலும் வர்ணிக்கமுடியாது!
மதுரை நகரில் வெளிப் புறத்திலேயே கால் வைக்க இடமில்லை. பூலோகத்தில் ஐம்பத்தாறு தேச அரசர்களும் தம் பரிவாரங்களோடு வந்திருந்தனர். நந்திகேசுவரர் கை கொடுக்க, ரிஷபத்திலிருந்து இறங்கி பட்டுக் கம்பளத்தில் நடந்து வந்தார் பகவான். அனைவரும் அவர் காலில் விழுந்து வணங்கினர். ஒரே நெரிசல்.
காஞ்சனமாலை சுவாமியிடம் வந்து என் மகளை முறைப்படி மணந்து, பாண்டிய நாட்டையும் ஆண்டு எங்களைக் காப்பாற்ற வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார். சுவாமி புன்முறுவல் காண்பித்தார். அழகுப் பெண்டியர் அவர் பாதம் அலம்பி மலர்களால் பூசித்தனர். முத்து மணிகளையும், பொன்மலர்களையும் அவர் பாதங்களில் கொட்டினாள் காஞ்சனமாலை.
விஷ்ணுவும், பிரம்மாவும் இருபுறமும் வர மண மண்டபத்துள் சென்றமர்ந்தார் ஈசன்.
நாரதர் வீணை மீட்டினார். அரம்பரையர் நடனம் ஆடினர். வசிஷ்டர், பிரகஸ்பதி போன்ற முனிவர்கள் வேதமந்திரங்கள் ஜெபித்தனர். சரஸ்வதியும், லக்ஷ்மியுமாக அலங்கரிக்கப்பட்ட தேவியை அழைத்து வந்து சுவாமியின் அருகில் உட்கார வைத்தனர். பிரம்மா ஹோமம் வளர்த்தார். காஞ்சனமாலை கெண்டியிலிருந்து நீர் வார்க்க, மகாவிஷ்ணு மீனாக்ஷியை சுந்தரர் கைபிடித்துக் கொடுத்தார். சுந்தரேசுவரப் பெருமான் தடாதகை பிராட்டியின் சங்குக் கழுத்தில் திருமாங்கல்யம் கட்டினார். தேவி அம்மி மிதித்தாள். மகாவிஷ்ணு பொரியிட்டார்.
பின்னர் ஈசன், வந்திருந்த அனைவருக்கும் பட்டாடை முதலியன கொடுத்து எதிர் மரியாதை செய்தார். அவர் சடையிலிருந்த இடத்தில் இரத்தின முடி. அவர் இப்போது பாண்டிய மன்னராயிற்றே. பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அரசபதவி ஏற்பவர்கள் லிங்கப் பிரதிஷ்டை செய்வது பாண்டிய குல வழக்கம். அப்போது தான் அந்தப் பரம்பரை நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம். லோக க்ஷேமத்துக்காக அரசாள வந்த ரிஷபக்கொடியோன், அவர் திருமண நாளன்று மதுரை நகரின் நடுப்பகுதியில் பொன்னேர் பூட்டி உழுது, மேற்கு திசைபார்த்து ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். அதற்கு இகா பீஷ்டபிரதர் என்று பெயர் சூட்டினார். (இங்கே விருப்பங் களை பூர்த்தி செய்பவர் என்று அதற்குப் பொருள்) முறைப்படி பூஜை செய்தார். பின்னர் சுந்தரேச லிங்கத்திற்கும் பூஜை செய்து வழிபட்டார். தேவர்களும், முனிவர்களும் ’இகா பீஷ்டப்பிரத லிங்கத்தை முறைப்படி பூஜித்து வணங்கினர்.
ஈஸ்வரனின் லிங்கப் பிரதிஷ்டையையும், திருமண வைபவங் களையும் பக்தி சிரத்தையுடன் படிப்பவரும், கேட்பவரும் கன்னியா யிருந்தால் திருமணமாகும். பிரிந்த தம்பதியர் கூடுவர். நோய் நீங்கி பூரண பலம் பெறுவர். எல்லா நலன்களும் கிட்டும். நவரத்தினங்களும் வந்தடையும். தினமும் படிப்பவர்களுக்கு பூமியில் கிடைக் காதது என்பதே இல்லை.
சிவபெருமான் மீனாக்ஷியைத் திருமணம் செய்து கொண்டு பாண்டிய மன்னனாய் அரியணையில் அமர்ந்த லீலையே ஈசனது 5-ஆம் திருவிளையாடல்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...

கருத்துகள் இல்லை