Recent Posts

திருவிளையாடல் புராணம் - தடாதகைப் பிராட்டியாரின் பிறப்பு



திருவிளையாடல் புராணம்


மஹா சிவராத்திரியின் சிறப்புகள் 


தடாதகைப் பிராட்டியாரின் பிறப்பு





         மலையத்வஜ பாண்டியனும் தந்தையைப் போலவே சீரும் சிறப்புமாக அரசாண்டான்.  ஏழை எளியவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்தான்.  மூன்று நேரமும் சிவபூஜை செய்தான். சுந்தரேசுவரரை வணங்கிவந்தான்.

   அவனிடம் பெரிய குதிரைப்படை, யானைப்படை, தேர்படை இருந்தமையால் மன்னர்களெல்லாம் அவனைப் பணிந்து நடந்தனர். ஆயினும், கர்வம் கொள்ளாமல் பெரியோர்களை மதித்து நடந்து வந்தான்.

       அவன் மனைவி பெயர் காஞ்சனமாலை.  மிகுந்த அழகி.  நற்குணவதி. இப்படிப்பட்ட மன்னனுக்கு எல்லா பாக்கியங்கள் இருந்தும் புத்திர பாக்கியமில்லை! அவன் செய்யாத விரதமில்லை. தொண்ணூற்றொன்பது அசுவமேத யாகம் செய்தான். நூறாவது தொடங்கையில் இந்திரன் வந்து தடுத்துவிட்டான்.

    ஏனென்றால் நூறு அசுவமேதம் செய்பவர்க்கு இந்திர பதவி கிடைக்கும். தன் பதவி பறிபோய் விடுமே என்று இந்திரனுக்குப் பயம்.

       நீ ஏன் அசுவமேதம் செய்கிறாய்?" என்று மலையத்வஜனைக் கேட்டான்.

       ஒரு குழந்தையை வேண்டி" எனப் பாண்டியன் பதிலளித்தான்.

     அதற்குப் புத்திர காமேஷ்டி யாகம் செய்யவேண்டும்" என்று கூறிச் சென்றான் இந்திரன். அசுவமேதம் நின்றது. புத்திர காமேஷ்டி யாகத்தை மன்னன் வெகு சிறப்புடன் செய்தான்.

     யாகத்தின் முடிவில் அக்கினியிலிருந்து மூன்று வயதுப் பெண் குழந்தை ஒன்று எழுந்து பட்ட மகிஷி காஞ்சன மாலையின் மடியில் வந்து அமர்ந்தது.  காஞ்சனமாலையைக் கட்டித் தழுவிக் கொண்டது. அக்குழந்தையை உற்று நோக்கிய காஞ்சனமாலையின் முகம் வாடியது.  குழந்தையின் பேரழகுக்கு திருஷ்டி மச்சம்போல் மூன்றா வது ஸ்தன மொன்று காணப்பட்டது. அப்போது காஞ்சனமாலா, கலங்காதே! பருவ வயதில் தன் கணவனை தடாதகை சந்திக்கும் சமயம் மூன்றாவது ஸ்தனம் மறைந்துவிடும்" என்று அசரீரி ஒலித்தது.

    தெய்வக்குரல் ’தடாதகை என்றொலித்ததால் அப்பெயரே சூட்ட பெற்றோர் தீர்மானித்தனர்.  தடாதகையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளுக்கு வலுவில்லை.

      குஞ்சுக்கால்களில் தங்கக் கொலுசும், தண்டையும், பட்டுப் பாவாடை, சட்டை முத்துப் போன்ற பற்கள். குயிலைப் போன்ற கொஞ்சு மொழிகள்.  சங்கு போன்ற நிறம்.  மன்னன் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. குழந்தைக்குத் தடாதகை எனப் பெயரிட்டு பாசத்தோடு வளர்த்து வந்தான்.  மலையத்வஜன் அவளை தன் குலம் உய்விக்க வந்த மகளாகவே எண்ணி அவளுக்கு வில்வித்தை, யானை யேற்றம், குதிரையேற்றம், போர்ப்பயிற்சி எல்லாம் அளித்து வந்தான். மீனைப்போன்ற கண்களை உடையவளாதலால் அவளுக்கு மீனாக்ஷி என்ற பெயர் காரணப் பெயராக அமைந்தது.

    யாகம் செய்பவர்களுக்கெல்லாம் அம்பாளே வந்து குழந்தையாகப் பிறக்கிறாளா? இல்லை.  முற்பிறவியில் காஞ்சனமாலை செய்த புண்ணியமே மீனாக்ஷி மூன்று வயதுக்குழந்தையாய் அவதரித்தாள்.

         முந்தைய ஜன்மத்தில் காஞ்சனமாலை வித்தியாவதி என்ற பெயருடன் ஒரு கந்தர்வ ராஜாவின் மகளாக இருந்தாள்.  அந்த கந்தர்வ ராஜாவின் பெயர் விசுவாவசு.  வித்தியா வதியின் இசைத் திறமையைக் கேட்டு மயங்காதவர்களே இல்லை.  அவள் போட்டுக் கொண்ட நகைகள் உருத்திராட்சம். பூசிக் கொள்வதோ விபூதி. வாசனைப் பொருள்களிலும், உலக வாழ்க்கையிலும் அவளுக்கு மிகுந்த வெறுப்பு. அவளுக்கு எப்போதும் சக்தி பூஜை செய்வதிலேயே விருப்பம் அதிகம்.

         ஒரு தைமாதப் பிறப்பன்று தந்தையின் அனுமதி பெற்று கடம்பவனம் வந்து சேர்ந்தாள்.  எப்பாடுபட்டாவது தேவியை நேரில் பார்த்து விடுவது என்பது அவள் பிரதிக்ஞை.

   முதலில் குளத்தில் நீராடி விநாயகரைத் துதித்தாள். பின் 108 குடங்களில் புண்ணிய தீர்த்தங்களிலிருந்து கொண்டு வந்த நீரை தேவிக்கு அபிஷேகம் செய்தாள். ஆடை ஆபரணங்களால் அலங்கரித்தாள். சந்தனம், பன்னீர் போன்ற வாசனைகளால் மணம் கூட்டினாள். அதன்பின் தினமும் ஆயிரத்தெட்டு நீலோற்பல மலர்கள் கொண்டு மாலை கட்டி தேவிக்குச்  சூட்டி அழகு பார்த்தாள்.

       ஊஹும். தேவி பிரத்யட்சமாகவில்லை. காலம் பல கடந்தது.  அதன்பின் கடும் விரதம் இருக்கத் தீர்மானித்தாள்.  ஒருமாதம் வரை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு வந்தாள்.  அடுத்தமாதம் இரவில் மட்டும் சிறிது உணவு உண்டாள்.  மூன்றாம் மாதம் யாராவது வற்புறுத்தினால் மட்டுமே சிறிது உணவு உண்டாள்.  நாலாம் மாதம் கீரைகளும். பழங்களுமே உணவாகக் கொண்டாள். ஐந்தாம் மாதம் உணவு எள்ளுப் பிண்ணாக்கு. ஆறாம் மாதம் அதையும் குறைத்துப் பார்த்தாள்.  எந்தபலனுமில்லை.  அப்போதும் அவள் முயற்சியைக் கைவிடவில்லை. ஏழாம் மாதம் வெறும் பால் மட்டும்.  எட்டாம் மாதம் வெறும் நீர். ஒன்பதாம் மாதம் புல்லில் உள்ள நீர்.  பத்தாம் மாதம் காற்று.  அதன்பின் மூச்சு விடுவதும் இல்லை.  இப்படி ஒரு ஆண்டாயிற்று. அப்போது சிவபெருமான் தேவியை அனுப்பி வைத்தார். தேவி மூன்று வயதுக் குழந்தையாய் காட்சி அளித்து ’என்ன வரம் வேண்டும் வித்தியா? எனக் கேட்டாள். மஞ்சள் பட்டுப் பாவாடை சட்டை, மஞ்சள் மலர்களுடன் சர்வாலங்கார பூஷிதையாய் நின்ற தேவியைக் கண்டு வித்தியாவதி அடைந்த மகிழ்ச்சி கொஞ்ச நஞ்சமல்ல.  விழுந்து வணங்கினாள்.  முனிவர்க்கும் அரிதான பேறாயிற்றே தேவியின் தரிசனம்! எத்தனை சோதனைகளைத் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறாள் வித்தியாவதி! சும்மாவா! அப்போது தான் வித்தியாவதி ’இந்த உருவத்துடனே எனக்கு மகளாகப் பிறந்து என்னைக் கட்டித் தழுவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாள்.

        அடுத்த பிறவியில் நீ பாண்டியன் மனைவியாக இருக்கையில் நீ கேட்டது கிடைக்கும்" என அருள் புரிந்து மறைந்தாள் தேவி.


     அதனால் தான் தேவி மீனாக்ஷியாய் அவதரித்து காஞ்சன மாலை மடியில் அமர்ந்து அவளைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.

      தேவி மீனாக்ஷியாய் அவதரித்து மதுரையை ஆண்டது இறைவன் திருவுள்ளம்.  அப்போது தானே, தான் சுந்தர மூர்த்தியாய் தேவியைத் திருமணம் செய்து கொண்டு வைகையை பூமிக்கழைக்க முடியும். அவரது பல லீலை களுக்கு தேவியின் பிறப்பு எவ்வளவு முக்கியம் என்பது பின்னால் படிக்கப் படிக்க விளங்கும்.அதனால் உமா தேவியை பாண்டியன் மகளாக அவதரிக்கச் செய்ததே இறைவனின் நான்காம் திருவிளையாடலாகும்.

      இந்த 4-ஆம் திருவிளையாடலை பக்தி சிரத்தையுடன் படிப்பவரும், கேட்பவரும் சந்தானப் பிராப்தி அடைவர். பாலாரிஷ்டம் நீங்கும்.  எல்லா பாக்கியங்களும் கிட்டும்.




    இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


  ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

giri facebook giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...




கருத்துகள் இல்லை