திருவிளையாடல் புராணம் - விண்ணுலகம் சென்றுவிட்ட மலையத்துவஜனை அழைத்தல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
விண்ணுலகம் சென்றுவிட்ட மலையத்துவஜனை அழைத்தல்
ஏழுகடல்களும் நகரின் பொய்கையில் வந்தவுடன் ஈசன் மீனாக்ஷியை அழைத்து உன் விருப்பப்படி ஏழு கடல்களும் வந்து விட்டன. உன் அன்னையை அழைத்து நீராடச் சொல்" என்றார்.
தடாதகை பிராட்டியும் மகிழ்ந்து தாயிடம் விரைந்து செய்தி சொன்னாள். தாய், இப்படி மனதில் நினைத்ததை ஒன்றுக்கு ஏழாக நிறைவேற்றும் மருமகனையும், மகளையும் பெற என்ன தவம் செய்தேன்" என மகிழ்ந்து மீனாக்ஷியைக் கட்டித் தழுவினாள்.
பின் வேதியர்களை அழைத்து கடலில் நீராடும் முறைகளைக் கேட்டாள். அதற்கு அவர்கள் பெண்கள் கடலில் தனியே நீராடக் கூடாது; கணவனுடனோ, அவன் இல்லை யேல் மகனுடனோதான் நீராடவேண்டும்" எனக் கூறினர். இதைக் கேட்டு கணவனோ, மகனோ இல்லையே என பெரும் விசனமடைந்தாள் காஞ்சன மாலை! ’கணவனோ, மகனோ இல்லாதவர்கள் பசுவின் கன்றைப் பிடித்துக் கொண்டு நீராடலாம் என்றும் கூறினர். ’தன்கதி பலர் பார்க்க கன்றோடு நீராடும்படி ஆயிற்றே என வருந்தினாள் காஞ்சனமாலை.
தாயின் துயர்கண்ட மீனாக்ஷி இறைவனிடம் தாயின் பிரச்சனை யைக் கூறிக் கண்கலங்கினாள்.
உடனே ஈசன் புன்முறுவலுடன் இந்திரனை நினைக்க, இந்திரன் உடனே தன் அருகிலிருக்கும் மலையத்வஜனை புஷ்பக விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தான்.
தந்தையைக் கண்ட மீனாக்ஷியம்மை மகிழ்ந்தாள். மலையத்து வஜனோ ஆனந்தத்தில் திக்குமுக்காடினான். வேதங்களிலும், ஆகமங்களிலும் உறையும் அடித்தாமரைகளையுடையவரே! அஷ்டமூர்த்தி வடிவானவரே! உம்மை மருமகனாகவும், அம்பி கையை மகளாகவும் அடைந்ததால்லவா இந்த ஏழுகடல் நீராடும் பாக்கியம் கிடைத்தது. மரித்தவன் இந்தப் பெருமை காண, மனைவியோடு நீராட வரவழைத்தாயே! எனது முன் ஏழு பிறவிகளும், பின் ஏழு பிறவிகளும் புனருத்தாரணம் பெற்றது! தன்யனானேன்" என்று சொல்லி மனம் பூரித்தான் மலையத்வஜன். ஈசனருளால் தன் கணவனோடு கைபிடித்து ஏழுகடலாடினாள் காஞ்சனமாலை. நீராடியதும் கணவனோடு அவளும் கைலாசம் சேர்ந்தாள்.
தினமும் நீராடுகையில் இந்த இறைவனது 10-ஆம் திருவிளையாடலை நினைத்தாலே போதும். ஏழுகடலாடிய புண்ணியத்தோடு அகால மரணமும் அணுகாது.
இதைப் பக்தியுடன் படிப்பவருக்கும் கேட்பவருக்கும் எல்லாப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணியம் கிடைக்கும். பவளமும், முத்தும் அடுத்த பிறவியில் நிறையக் கிடைக்கும். குபேரனைப் போல் பெரும் சம்பத்தைப் பெறலாம்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.



கருத்துகள் இல்லை