திருவிளையாடல் புராணம் - சித்தர் விளையாடல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
சித்தர் விளையாடல்
சாமி, இவளுக்குக் கல்யாணம் கட்டி ஒரு மாமாங்கமாகுது... புள்ளையே இல்லே... சாமிதான் கண்துறந்து பார்த்து விபூதி போடணும்"
நீ ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதே மங்கா. நம்ம சத்திரத்து டமாரச் செவுடு இருக்கே... அதான் கோதை மகன் ரங்கன்... சாமிதான் மை தடவினாரு... நேத்து ராத்திரி திருடன் காலடி ஓசையை வைச்சே கபால்னு புடிச்சுட்டானே!"
என்ன இது இம்புட்டுக் கூட்டம்! நான் விடியக் கருக்கல்லே வந்தேன்... பொளுது போயிருச்சே.. எங்க ஊரு திரும்பிப் போறதுன்னாக் கூட அஞ்சு கல்லு நடக்கணுமே.
ஏ, கௌவா... நீ எதுக்கு வந்துருக்கே?"
"வயசாகிப் போச்சு... கண்ணு தெரியலை, காது கேக்கலை... யாரும் மதிக்கிறதில்லே. வீட்டிலே மருமவ வேலை செய்யாம சோறுபோட மாட்டேங்கா... அதான் சாமியைப் பார்த்து.."
"கெட்ட கேட்டுக்கு மூணாந்தரம் கட்டி இருக்கேல்ல... அறுவது வயசிலே தாலி கட்டினே இருவதுக்கு... அதான் கண் அவிஞ்சு போச்சு"
"போறாம்பா கௌவன்... ஏதோ அவன் ஆசை.. வழி விடுங்க. முன்னாலே போவட்டும்... சித்தரைப் பார்த்து அவன் பித்தம் தெளியுதான்னு பார்ப்போம்"
டேய் தாமு, நேத்து நீ வீரன் திடலுக்கு வரல்லியே... சித்தர்சாமி எம்புட்டு வேடிக்கை செஞ்சாரு தெரியுமா? கழுதையை குதிரையாக்கினார்; குதிரை கழுதையாச்சு; தென்னைமரம் பனை மரமாச்சு; பனைமரத்தை மறுபடி தென்னை மரமாக்கினார்.
பூ, இம்புட்டு தானா... முந்தா நாள் ஊருக்கு வெளியே பூனைகளையெல்லாம் புலியாக்கிட்டார். எல்லாரும் பயந்து போனமா.. மறுபடி மியாவ்.. மியாவ்... பூனைச் சத்தத்தைக் கேட்டப்பறம்தான் உசிரே வந்துச்சு.
அன்னக்கி ஆகாசத்துலே கம்பை நிறுத்தி, அதுக்கு மேலே ஊசியை நிறுத்தி ஊசி மேலே காலை வைச்சுக்கிட்டு ’கீர் சுத்தியிருக்கார் பாரு... பாத்த எனக்கே தலை சுத்திச்சு.
மறுபடி அந்த ஊசி முனியிலே தலையை வைத்து சுத்திக் காட்டினார். நம்ம கோவிந்தன் தோட்டத்து மலட்டு மரத்தை அவர் கையிலே இருக்கிற பிரம்பாலே தட்டினாராம்.. இப்பக்காயாக்காச்சு உலுப்புது பாரு... ஒரு அளவே இல்லாம...
அன்னக்கி வைகையிலே தண்ணியைப் பூரா வத்தடிச்சு வெறும் மணலாக்கிட்டு, மறுபடி தண்ணியை வர வைக்கல்லையா?
திக்கு வாயி சிதம்பரம் இல்லே... அவன் நாக்குலே விபூதி பூசினாராம்... அவன் இப்போ கோயில்லே பத்து பசங்களுக்கு வேதம் சொல்லிக்கொடுக்கறானாம்.
நாலு நாள் முன்னே எல்லாரும் கும்பலா கோயில் மண்டபத்துலே காத்திட்டிருக்க அவர் ’பொசுக் வீரன் திடல்லே வந்திட்டாராம்"
பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி பேச தெரிந்தவர் வாயிலெல்லாம் சித்தர்பெருமைதான்!
கால்களில் தண்டை, நூபுரம், தேகத்தில் புலித்தோல் ஆடை, கையில் யோகதண்டம், மேனியெங்கும் திருநீறு, நாகத்தால் கட்டப்பெற்ற சற்றே வளைந்த சடை, வெண்மை நிறமான ஸ்படிகக் குண்டலங்கள், மேருவைப் போன்ற உயரம், எலும்பு மாலைகள், மல்லிகை அரும்பு போன்ற பல்வரிசை, வயது பதினாறு, வலதுகையில் தங்கப் பிரம்பு, இடுப்பில் ஒட்டியாணம், நெற்றியில் யோகத்தகடு இப்படியாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஈசன் இந்த வடிவத்தில் சித்தராக மக்கள் குறை தீர்க்க, மன்னனை மகிழ்விக்க மதுரை விதிகளில் அங்கிங்கெனாதபடி தோன்றி மறைந்தார்.
ஏழைகளின் வீடுகளில் பொன்னும், தானியமுமாக நிரப்பினார். பசிப்பிணி மட்டுமின்றி உடற்பிணிகளையும் நீக்கினார். கிழவன் குமாரனானான் என்றால் அவன் மனைவி மட்டும் கிழவியாயி ருப்பாளா? அவளும் இளமையையுடைய சித்தரை நாடினாள். மனிதராகப் பிறந்தவர் ஏதேனும் ஒரு குறையில்லாமல் இருப்பதும் அபூர்வம். வசதி உள்ளவன் கூட இன்னும் கொஞ்சம் வசதி இருந்தால் தேவலையே என்று நினைக்கிறான். ஆசை யாரை விட்டது?
தேவைகளை நிறைவேற்றும் சித்தரை மக்கள் விட்டு வைப்பார்களா? அவர் பின்னாலேயே சுற்றினர்.
ஈசனின் இந்த 20-ஆம் சித்தர் விளையாட்டை மெய்யுருகிப் படிப்பவரும், கேட்பவரும் எண்ணியதை எல்லாம் அடைவர் என்பது திண்ணம்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.


கருத்துகள் இல்லை