திருவிளையாடல் புராணம் - கல்லானைக்குக் கரும்பு கொடுத்தல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
கல்லானைக்குக் கரும்பு கொடுத்தல்
சித்தரின் பெருமை பாண்டியனின் செவிக்கு எட்டியது. எப்படியாவது சித்தரை அழைத்து வரச் சொல்லி சொந்தக்காரர்கள் சிலரையும், ஏவலரையும் அனுப்பினான். அவர்களும் அவரிடம் வசியப்பட்டு அவர் பின்னேயே சென்றனர். ஏவலர்களும், உறவினர்களும் திரும்பி வராதது கண்டு சாமர்த்திய மிக்க சில உறவினர்களை அனுப்பினான் பாண்டியன்.
அவர்கள் சித்தரிடம் சென்று மன்னரது அபிலாஷையை தெரிவித்தனர். சித்தர் சிரித்தபடி. மன்னரிடம் எனக்கு என்ன காரியம்?" எனக் கூறி வர மறுத்துவிட்டார். அமைச்சர்கள் பாண்டியனிடம் சென்று நடந்ததைக் கூறினர். மன்னரும் இந்தச் சித்தர் கர்வமுடையவர், அவரை நாம் விரும்பக் கூடாது" என எண்ணி பேசாதிருந்து விட்டான்.
அன்று தைமாதப் பிறப்பு. அன்று அதிகாலையில் எழுந்த பாண்டியன் பொற்றாமரையில் நீராடி, இறைவனை தரிசிக்க கோவிலுக்குள் வந்தான். கட்டியம் கூறும் ஏவலர்கள் பிரகாரத்தில் வழிமறித்தாற்போல் அமர்ந்திருக்கும் சித்தரைக் கண்டு, மன்னர் வருகிறார்.
இங்கு யாரும் இருக்கக் கூடாது. எழுந்து ஒதுங்கி இரும்" என்று எப்படி எப்படியோ கூறியும் சித்தர் அசையவில்லை. அதற்குள் தன் பரிவாரங்களோடு மன்னரும் வந்துவிட்டார்.
அரசன் சித்தர் அருகில் சென்று நீர் யார்? உமது பெயரென்ன? ஊரென்ன? உமது ஆற்றங்கள், திறமைகள் என்னென்ன?" எனக் கேட்டார்.
என் பெயர் ஆக்கினைச் சித்தன். நான் ஒரு அனாதை. பெற்றோர் இல்லை. காசிநகரில் பிச்சையெடுத்து வாழ்ந்தவன். மதுரையில் சுந்தரேசனை தரிசனம் செய்ய வந்தேன். ஏதோ எனக்குத் தெரிந்த விதத்தில் மக்களின் குறைகளைப் போக்கு கிறேன். வித்தை காட்டி மகிழ்விக்கிறேன். உனக்கு ஏதாவது காட்ட வேண்டுமா?" என்றார் சித்தர் சிரித்தபடி.
அரசர் சுற்று முற்றும் பார்த்தார். அன்று சங்கராந்தி அல்லவா? தூரத்தில் ஒரு குடியானவன் ஒரு முழுக் கரும்புடன் நின்று கொண்டிருந்தான்.
அவனை அருகில் வர சமிக்ஞை செய்தார். அவன் பணிவுடன் அருகில் வர அவனை கைக் கரும்பை வாங்கினார். இந்தக் கரும்பை இந்தப் பிரகாரத்தில் செதுக்கி இருக்கும் கல்லானைக்குத் கொடும். அது தின்று விட்டால் நான் உமக்கு அடிமையாவதோடு நீர் கேட்பதைத் தருகிறேன். தின்னா விட்டால் நீர் சித்தர் என்பதில் அர்த்தமே இல்லை" என்றார் மன்னர் சித்தரை நோக்கி.
என் வித்தையாலேயே எனக்கு வேண்டியதை நான் வரவழைத்துக் கொள்ளும்போது நீ எனக்கு தர வேண்டிய தென்ன? உமது வார்த்தைகள் எனக்கு சிரிப்பாயிருக்கின்றன" என்ற சித்தர் யானையை நோக்கி, அரசன் கைக் கரும்பைத் தின்னுவாயாக! இது சொக்கநாதரின் ஆணை" என்றார்.
என்ன ஆச்சரியம்! கல்லானை பிளிறிக் கொண்டு அரசன் கைக்கரும்பை கண் இமைக்கும் நேரத்திற்குள் முறித்து தின்று விட்டது. அத்தோடு விட்டதா? மன்னன் கழுத்திலணிந்திருந்த வெண்முத்து மாலையை தாமரைத் தண்டு என நினைத்து இழுத்து சுவைக்கத் தொடங்கியது. அருகிலிருந்தவர்கள் சப்தமிட்டவாறு அதைப் பிடுங்க முயல, சித்தர் சினம் கொண்டு யானையைத் தின்ன உத்தரவிட்டார்.
பாண்டியன் கோபமுற்று படையினரை சித்தரை தண்டிக்கப் பணித்தான். சித்தர் அடிக்க வந்தவர்களை கையை உயர்த்தி அப்படியே நில்" என அதட்ட, அவர்கள் நின்ற கோலங்கள் சிரிப்பையும், பயத்தையும் ஊட்டுவதாய் இருந்தன.
அப்போது தான் பாண்டியன் சித்தரின் பெருமையை உணர்ந் தான். அவர் பாதங்களில் விழுந்து, தன்பிழை பொறுக்குமாறு வேண்டினார்.
ஐயா, தங்களைத் தேடி நான் வரவேண்டியதிருக்க, தங்களை அழைத்து வரப் பணித்தது முதற்குற்றம். பெரிய மனது கொண்டு ஆலயத்தில் என் வழியில் நீங்கள் காத்திருக்க உங்களை இடையூறாக நினைத்தது இரண்டாவது குற்றம். உங்களை தண்டிக்க படையினரை ஏவியது மூன்றாவது குற்றம். பெரிய மனது வைத்து என்பிழை பொறுக்கவேண்டும்.
திரிபுரத்தையும், காமனையும் எரித்த முக்கண்ணரே நீர்தான் என நினைக்கிறேன்" எனப் பலவாறு போற்றித் துதித்தார்.
சித்தர் புன்முறுவலுடன் குழந்தை கடித்ததென்று திரும்பிக் கடிப்பாருண்டோ? மன்னா, உனக்கு வேண்டும் வரமென்ன?" என்றார்.
நற்குணமும், கல்வியும், அழகும், நீண்ட ஆயுளுமுள்ள சத்புத்திரன் வேண்டும்" என்று வேண்டினான் பாண்டியன்.
சித்தர் அப்படியே வரமளித்தார். யானை வாயில் கறைந்து போன முத்துமாலையை வரவழைத்து, மன்னன் கழுத்திலிட்டு தடவிக் கொடுத்தார். பிரமை பிடித்து நின்றவர்களை மீண்டும் இயங்க வைத்து விட்டு மறைந்துவிட்டார்.
பாண்டியன் வியந்து எல்லாம் ஈசன் செயலே என ஆனந்த மாயிருந்தான். சித்தர் வரமளித்தபடியே பிறந்த குழந்தைக்கு ’விக்கிரமன் எனப் பெயர் சூட்டிப் பெருமையுடன் வளர்த்து வந்தான். உரிய வயதில் மைந்தனுக்குப் பட்டம் சூட்டி, அரசுப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு இறுதியில் இறைவனடி சேர்ந்தான். கல்லா னையைக் கரும்பு தின்னச் செய்த இந்த 21-ஆம் திருவிளை யாடலைப் பக்தியுடன் படிப்பவரும், கேட்பவரும் குணம், கீர்த்தி போன்ற பதினாறு பேறுகளும் சத்புத்திரர்களையும் பெற்று, நீண்ட ஆயுளுடன், பூரண உடல் நலத்துடன் பூமியில் வாழ்வர்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



கருத்துகள் இல்லை