Recent Posts

திருவிளையாடல் புராணம் - சமணர் ஏவிய யானை வதம்

திருவிளையாடல் புராணம்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

சமணர் ஏவிய யானை வதம்




விக்கிரம பாண்டியன் தந்தையின் உத்தரவுப்படி கர்ப்பக் கிரகத்தின் வடமேற்கில் சித்தருக்குக் கோவில் கட்டி வெகு சிறப்பாக தினந்தோறும் பூஜித்தான்.  சிற்றரசர்களால் வணங்கப்பட்டு, நீதிநெறியுடன் குபேரனைப் போல் அரசாட்சி செய்து வந்தான்.  

நாடு பிணியற்று சுபீட்சமாக இருந்தது.  எங்கும் மகிழ்ச்சி, திருவிழா பூஜைதான்!

காஞ்சியை அப்போது சோழன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பாண்டியன் பேரில் ஏகப்பட்ட பொறாமை.  அவனை எப்படி வெல்வது என்பதே அவன் மூளையைக் குழப்பியது.  உடனே சக்கியம், கோவர்த்தனம். கிரௌஞ்சம், திரிகூடம், அஞ்சனம், விந்தியம், ஹேமகூடம், காஞ்சி குஞ்சரம் என்ற எட்டு மலைகளிலுமுள்ள எட்டாயிரம் சமணர்களுக்கும் தனித்தனியாக கடிதம் அனுப்பினார்.  அவர்கள் காஞ்சிபுரம் வந்து மன்னன் தலையை மயில் தோகையால் தொட்டு வாழ்த்தினர்.

பாண்டிய நாட்டை ஜெயிக்க விரும்புகிறேன்.  விக்கிரம பாண்டி யனைப் போரில் வெல்லமுடியாது.  ஆபிசாரப்பிரயோகம் செய்து விக்கிரமனை வீழ்த்தவேண்டும்.  ’அவனை அழித்தால் பாதி இராஜ்ஜியம் தருகிறேன் எனவும் ஆசை காட்டினான்.

சைவர்களின் விரோதியாயிற்றே சமணர்கள்! இவ்வளவு போதாதா? கரும்பு தின்னக்கூலியும் கொடுத்தால் வேண்டா  மென்பார் உண்டோ? உடனே அவர்கள் பாலாற்றின் கரையில் கூடி பெரிய ஓம சாலையும் ஹோமகுண்டமும் அமைத்து, ஹோம குண்டத்தில் நச்சு மரங்களின் கட்டைகளைப் போட்டு, தீ வளர்த்து வேப்பெண்ணெயில் தோய்த்த உப்பாலும், நல்லெண்ணெயில் நனைத்த மிளகாயாலும், விலங்குகள், பறவைகள் இவற்றின் ஊனாலும் ஹோமம் செய்தனர்.  மேகம் இடி இடிப்பது போல் பிளிறிக் கொண்டு துதிக்கையில் ஒரு உலக்கையோடு பெருத்த யானையொன்று தோன்றியது.  அது நடந்தால் பூமி நடுங்கியது.  காதுகளை அடித்ததால் மேகங்கள் கலைந்தன.  கொம்புகளால் மலைகளைப் பிளந்தது, மதுரையையும், அதன் அரசனையும் அழிப்பாயாக" எனச் சமணர்கள் அதை ஏவினர்.

பேரொலியுடன், மிருகங்களும் நடுநடுங்க யானை தென்  திசைநோக்கி விரைந்தது. செய்தியறிந்த விக்கிரமன் ஆலயத்திற்கு ஓடி ஆண்டவனிடம் மகாமேருவை வில்லாகவும், மகாவிஷ்ணுவை அம்பாகவும், பூமியை தேராகவும், வாசுகியே நாணாகவும், வேதங்கள் நான்கும் குதிரைகளாகவும் பிரம்ம தேவனைத் தேர்ப்பாகனாகவும் கொண்டு முப்புரத்தையும் எரிக்கப் புறப்பட்ட மகாதேவா! ஆனால் எதையுமே உபயோகிக்காமல் சிரித்தே முப்புரங்களையும் பஸ்பமாக்கியவனே! அன்று மலர்ந்த ஆயிரம் தாமரை  மலர்கள் கொண்டு பூஜித்தும், உன் அருள்  கிடைக்காமல் தனது கண்மலரால் பூஜை செய்த மகாவிஷ்ணுவுக்கு சக்கராயுதத்தை அருளியவனே! மார்க்கண்டேயனுக்காகக் காலனைக் காலால் உதைத்தவனே! ஆலாலகண்டனே! அங்கயற்கண்ணி மணாளா! சுந்தரத் தாண்டவா! கங்கை அணிந்தவா! பிறைசூடி! சூரிய, சந்திர அக்கினியை விழியாகக் கொண்டவனே! நாகாபரண மூர்த்தியே! வாமபாகத்தை தேவிக்குத் தத்தம் செய்தவனே! இந்த யானை உனக்கொரு பொருட்டா! என்னையும், மதுரை  மக்களையும் உன்னையன்றி எவர் காத்திடுவார்" எனப் பலவாறு வேண்டி, தொழுது முறையிட்டான்.

மன்னா, வெளிச்சுவரின் உட்புறம் கீழ் பக்கமாக பதினாறு கால் கொண்ட அட்டாள மண்டபமொன்றை விரைவில் கட்டி முடி. நான் வில் வீரனாக வந்து அந்த மண்டபத்தின் மேலிருந்து கொண்டு யானையைக் கொல்கிறேன்" என அசரீரி கேட்கவும் மன்னன் அகமகிழ்ந்தான்.


உடனே இறைவன் ஆணைப்படி மண்டபம் கட்டினான். அதன்மேல் இரத்தினமிழைத்த பொற்பீடமொன்றும் நிறுவினான்.  என்ன விந்தை கருநிறமாய், சிவந்த பட்டுடுத்தி, பதினாறு வயதினனாய், இடுப்பில் கத்தி, இடது கையில் நாணேற்றிய வில், வலக்கையில் கூரான அம்பு, காதுகளில் சங்குக் குண்டலம், கழுத்தில் முத்தாரமுமாய் பீடத்தில் ஒருவீல் வீரன் தோன்றினான்.

யானை நெருங்கி வந்து விட்டது.  சுவாமி வலதுகாலைப் பின்னால் வைத்து, இடதுகாலை முன்வைத்து ’ஹுங் சப்தத்தோடு நரசிம்மத்தை நினைக்க விட்ட அம்பு யானையின் உயிரை ஒரு நொடியில் பறித்துவிட்டது. அந்த இடம் தான் ஆனைமலை எனப்பெயர் பெற்றது.  பிரகலாதன் தவம் செய்து சித்தி பெற்ற இடமும் இதுவே...

பாண்டியன், வீரன் உருவிலிருந்த ஈசனைப் பலவாறு துதித்து விட்டுப் ’பட் ஈசனது இரண்டு கால்களையும் ’சிக் பற்றிக் கொண்டான்.

எப்பேற்பட்ட சங்கடங்களையும் சட்டென நீக்க இங்கேயே எழுந்தருள வேண்டும்" என விண்ணப்பித்தான்.  இறைவனும் அப்படியே இருப்பதாக வாக்களித்தார்.  அது மட்டுமா? ராஜசேகரன் என்ற சிறந்த புதல்வனும் பிறக்க வரமளித்தார்.  விக்கிரமபாண்டியன் வேண்டுக்கோளுக்கிணங்க பதினாறு கால் அட்டாள மண்டபத்தில் அட்டாள வீர மூர்த்தியாய் காட்சியளிக்கும் சோமசுந்தரப் பெரு மானின் இந்த 22-ஆம் திருவிளையாடலை பக்தியுடன் படிப்ப வர்க்கும், கேட்பவர்க்கும் தீமைகள் நீங்கி நன்மைகள் கிட்டும்.  பூத, ப்ரேத, பைசாசங்களினால் தொல்லை ஏற்படாது.  சித்தப் பிரமை, காராக்கிரக வாசம் முதலிய கஷ்டங்கள் நீங்கி சுகத்தை அடைவது திண்ணம்.  எதிரிகளே இருக்க மாட்டார்கள். 



இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.




giri facebook
 giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...


கருத்துகள் இல்லை