Recent Posts

திருவிளையாடல் புராணம் - கௌரியின் துயர் தீர்த்தல்

திருவிளையாடல் புராணம்


மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

கௌரியின் துயர் தீர்த்தல்




மதுரை நகரில் சிறந்த ஒழுக்கமும், உயர்ந்த கல்வியும் உடைய அந்தணர் ஒருவர் வசித்து வந்தார்.  அவர் பெயர் விரூபாட்சன்.  அவரது மனைவி பர்த்தாவுக்கேற்ற பதிவிரதை.  பெயர் சுவிரதை.  ஆனால் இவர்களுக்குக் குழந்தையே இல்லை! அதனால்  ஒரு குழந்தை வேண்டி சிவனைக் குறித்துக் கடும் நோன்பு நோற்றனர்.

ஆலவாய் அழகன் அருளால் அவர்களுக்கு ஒரு பெண் பிறந்தாள்.  அதற்குக் கௌரி எனப் பெயரிட்டனர்.  சிவனருளால் பிறந்த குழந்தையல்லவா? சிவபெருமான் பேரில் மிகுந்த பக்தியுடனி ருந்தாள். கௌரிக்கு ஐந்தாவது வயது. ஒருநாள் தந்தையிடம் அப்பா, துன்பங்களைத் தீர்க்கும் அறவழி எது என்று விளங்கச் சொல்லவேண்டும்" என்றாள்.

விரூபாட்சனுக்கு பெருத்த ஆச்சரியம்! ஐந்து வயதுக் குழந்தைக்கு என்ன விவேகம்! என்ன பக்தி என்ற பெருமிதத்தோடு கௌரி! ஈசனின் இடப்பாகத்தில் இருக்கும் உமா தேவியின் பீஜமந்திரம் மிகச்சிறந்தது.  ஹ்ரீம் என்பது அதன் உருவம். அந்த மந்திரத்தின்  ரிஷி தட்சிணாமூர்த்தி.  சந்தம் காயத்திரி.  தேவதை கௌரி.  ஹ்ராம், ஹ்ரீம், ஹ்ரூம், ஹ்ரைம், ஹ்ரௌம், ஹ்ர: இவை ஆறு நியாசங்கள்.  இந்த ஓரெழுத்து பீஜமந்திரத்தை ஜபம் செய்ய தொடங்குமுன்  இதயபீடத்தில் தேவியை அமர்த்தவேண்டும்.

கோடி மன்மத ரூபமாய் பத்மாசனாய் அமர்ந்திருக்கும் காமேசு வரர் மடியில் அம்பிகை, வலதுபுறம் விநாயகர், இடதுபுறம் முருகன் இருவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்து தேவி மகிழும் கோலத்தை மனதில் ஸ்தாபிக்கவேண்டும்.



ஒரு லட்சம் ஜபித்தால் சாலோக்கியம்; இரண்டு லட்சம் ஜபித்தால் சாயீப்பியம்; மூன்று லட்சம் ஜபித்தால் சாரூப்பியம்; நான்கு லட்சம் ஜபித்தால் சாயுஜ்ஜியம்; ஜபித்த பிறகு பீஜமந்திரம் சொல்லி பூஜை செய்யவேண்டும். எவ்வளவு ஜெபிக்கிறோமோ அதில் பத்தில் ஒரு பங்கு தர்ப்பணமும், தர்ப்பணத்தில் பத்தில் ஒரு பங்கு அன்ன தானமும் செய்யவேண்டும். அப்போதுதான் காரிய சித்தி ஏற்படும் எனத் தெளிவாகக் கூறினார்.  தந்தை கூறியபடியே" தேவியைத் துதித்து வந்தாள் கௌரி.  உரிய வயதில் ஒரு வாலிபனுக்கு அவளை மணமுடித்தனர்.

ஆனால் இறைவன் சோதனை...! பையன் அம்மா கிழித்த கோட்டைத் தாண்டமாட்டான்.  தாயோ தீவிர வைஷ்ணவ பக்தி.  விபூதியைக் கண்டாலே வெறுப்பவர்.  சிவபக்தையான கௌரிக்கு இந்த மாதிரி இடத்திலா மணம் அமைய வேண்டும்! கௌரியின் தந்தை சிவபக்தர் என்பதால் மாமியார் கௌரியை வெறுத்து வந்தாள்.  ஓயாத வேலைகள் கொடுத்து கொடுமைப்படுத்தினாள்.

ஒருநாள் பக்கத்து ஊரிலே ஒரு உறவினர் வீட்டுத் திருமணம்.  கௌரியைத் தனியாக வீட்டில்  விட்டு விட்டு அனைவரும் கல்யாணத்திற்குச் சென்று விட்டனர்.  அப்போது ஆலவாய் மூர்த்தி மேனியெல்லாம் கட்டுக்கட்டாய் திருநீறு பூசி, வெண்ணிறஆடை உடுத்தி, எண்பது வயதுத் தொண்டுக்கிழவராய் கௌரியின் வீட்டில் வந்து கொஞ்சம் அன்னம் கிடைக்குமா?" என்று கேட்டார்.

என் செய்வாள் பேதை! சுவாமி, தங்களுக்கு அன்னமிட எனக்கு ஆசைதான்! ஆனால் என் மாமனாரும், மாமியாரும் மளிகை சாமான்களை உள்ளே வைத்து, என்னை வெளியிலிட்டு பூட்டி விட்டு அயலூர் சென்று விட்டனர்.  வகையறியாமல் தவிக்கின்றேன்" எனக் கையை பிசைந்தாள்.

பூட்டு சரியாக பூட்ட வில்லைபோல் தெரிகிறதே! இழுத்துப் பார். திறந்தால் சாமான்களை எடுத்து சமையல் செய்து போடு.  மிக்கப்பசி" என்றார் அந்தப்  பொல்லாத கிழவர்.

கௌரி உவகையுடன் ஓடிப் பூட்டை இழுக்க அது திறந்து கொண்டது.  எல்லாம் அவன் செயலன்றோ! கௌரி மிக்க மகிழ்ச்சியுடன் விரைவில் அறுசுவை உண்டி தயார் செய்து, வாழை இலையில் அன்னம் படைத்தாள்.  சிவ வேடதாரி சாப்பிட்டு முடித்தார்.  ஆனால்  என்ன ஆச்சரியம்! அவர் இப்போது பதினாறு வயது வாலிபனாய்த் தோற்றமளித்தார்.

இந்த மாற்றம் கண்டு  கௌரிக்குத் திகில் ஒரு பக்கம்.  வியப்பு ஒரு பக்கம்.  இதற்குள் திருமணவீடு சென்றிருந்தவர் திரும்பி விட்டனர்.

’கதவைத் திறடி என மாமியாரின் கர்ஜனை.  கௌரி செய்வதறியாது நடுங்கி நின்றாள்.  பூட்டைத் திறந்து சமைத்தது ஒரு குற்றம்! சைவ சமயத்தாருக்கு, அதிலும் அன்னிய வாலிபனுக்கு யாருமில்லாத வேளையில் உணவிட்டது இன்னொரு குற்றம். இதற்குள் கதவை உடைத்துக் கொண்டு மாமியாரே வந்து விட்டாள்.  என்ன அற்புதம்! காளை வயதுச் சிவன் குழந்தையாய் மாறிக்கால் கட்டை விரலைச் சுவைத்தபடி படுத்திருந்தார்.

ஏது  இந்தக் குழந்தை?   இங்கே எப்படி வந்தது?" சந்தேகத் துடன் அதட்டினாள் மாமியார்.  என்பால்யத் தோழியின் குழந்தை; பார்த்துக் கொள் என்று விட்டுச் சென்றிருக்கிறாள்" என்று கௌரி பதிலளிக்கிறாள்.

இன்னொருத்தி குழந்தையை நீ என்ன பார்க்கிறது? குழந்தையை பெற்றவளிடம் விட்டு விட்டு வா" எனப் பிடரியைப் பிடித்து குழந்தையுடன் வெளியில் தள்ளி கதவைத் தாளிட்டுக் கொண்டாள் மாமியார்.

நேரம் இரவாகி விட்டது; இடம் நடுத்தெரு; குழந்தையின் அழகிய  முகத்தைப் பார்த்தபடி தேவியைத் தியானித்துக் கொண்டிருந்தாள் கௌரி. கையிலிருந்த குழந்தை சிவனாக உருவெடுக்க அவளை உமாதேவியாக்கி விடையில் காட்சியளித்தார்.  எல்லோருக்கும் கிடைத்த இந்த சிவதரிசனம் மாமியார்க்கு இல்லாது போயிற்று!

மற்றவர்களின் சிவனே போற்றி! நீலகண்டா போற்றி! சங்கரா போற்றி! ருத்ரனே போற்றி! பிநாக பாணி போற்றி! சம்புவே போற்றி! விரூபாட்சாபோற்றி! காரணேசா போற்றி! பசுபதி போற்றி! முக்கண்ணா போற்றி உமா  மகேஸ்வரா போற்றி! கௌரி மனோகரா போற்றி" என்ற ஓங்காரக் குரல்கள் மாமியாரைக் கதவைத்  திறந்து பார்க்க வைத்தது.  வானில் ஈசனோடு ரிஷபத்தில் சென்று கொண்டிருக்கும் கௌரியைப் பார்த்தாள்.  கௌரியைச்  செய்த  கொடுமைகளை எண்ணி அஞ்சினாள்.  திகைத்தாள்.  ‘ஹரஹர என்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.  அன்று முதல் திருந்தி எல்லோருக்கும் நல்லவளாய்  நடந்து கொண்டாள்.

கிழவனாய், வாலிபனாய், குழந்தையாய் ஈசன் மாறிய இந்த 23-ஆம் திருவிளையாடலை தினமும் பய பக்தியுடன் படிப்பவருக்கும், கேட்பவருக்கும் துயரமனைத்தும் தீரும்.  கன்னியரானால் திருமணம் கைகூடும்.  மகப்பேறு கிட்டும்.  அம்பிகை, ஈசன் இருவரது அருளும் கிடைக்கும்.  நோய் நீங்கி இளமையுடன், பூரண ஆரோக்கியத்துடன், நீண்டகாலம் வாழ்வார்கள்.


இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.


ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.




giri facebook
 giri twittergiri instagram giri pinterest giri youtube giri bloggerGiri MusicGiri Tumblr

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி...



கருத்துகள் இல்லை