திருவிளையாடல் புராணம் - கால் மாறியாடல்
திருவிளையாடல் புராணம்
மஹா சிவராத்திரியின் சிறப்புகள்
கால் மாறியாடல்
’தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் ’ என்ற பழமொழிக்கிணங்க ராஜசேகர பாண்டியன் தந்தையை விட சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தான். சிவன் ஆடும் கலையை தானும் ஆடுதல் சரியல்ல என நினைத்து நாட்டியக் கலை தவிர மற்றையக் கலைகளில் வல்லுனனாய்த் திகழ்ந்தான்.
அச்சமயம் சோழ நாட்டை ஆண்டுவந்த கரிகால் சோழனிடம் பரிசு வாங்கிய புலவர் ஒருவர் பாண்டியன் அவைக்கு வந்தார்.
வந்தவர் சும்மாயிருக்கக் கூடாதா? சோழன் அறுபத்து நான்கு கலைகளும் கற்றிருக்கிறான். உனக்கு ஒரு கலை குறைவு. இதை நான் கூறவில்லை. உன் மக்களும், சோழமன்னனும் கூறுகின்றனர்" எனக் கூறிச் சென்றார்.
உடனே ராஜசேகரன் நிருத்தம் கற்பதில் மனதைச் செலுத்தினான். பயிற்சி ஆரம்பமாகியது.
சிவராத்திரி வந்தது. அன்று பாண்டியன் வெள்ளியம்பலம் வந்து பஞ்சாட்சரத்தை ஜெபித்தவாறு நடராஜர் சந்நிதியில் நின்றான்.
நடராஜரின் நாட்டிய கோலம் அவன் சிந்தையைத் தாக்கியது.
இரண்டு காலாலும் நிற்பதற்கே இப்போது கால் கடுக்கிறது. அதோடு நானும் நாட்டியம் கற்கிறேன். ஒரே காலால் வெகு நேரம் பாவம் காட்டுவதே சோதனை. நீரோ வெகு ‘காலமாகவே இந்தக் கோலத்தில் நிற்கின்றீர். உமக்கு எவ்வளவு நோவெடுக்கும்! தயவு செய்து எனக்காக காலை மாற்றி நில்லும்" எனப் பலவாறு பலமுறை வேண்டியும் விக்கிரகத்தில் மாற்றமேதும் காணாததால், உறையினின்று கத்தியை எடுத்து சிரத்தை அறுத்துக் கொள்ள முனைந்தான். என்ன அற்புதம்!
ஈசன் கருணைக் களஞ்சியமல்லவா? அந்நேரம் வரை வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கி நின்றவர் ’சட்டென காலை மாற்றிக் கொண்டார். வலது காலை உயர்த்தி ஐயன் ஆடிய கோலம் காண முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தெண்ணாயிரத் தெட்டு ரிஷிகளும் கூடினர். பூமியில் சிரம் தோய விழுந்து வணங்கினர் சிலர். உடன் கூத்தாடினர் சிலர். பூஜை செய்வோரும், ஜெபம், துதிகள் செய்வோரும் கணக்கிலடங்கா..
திடீரென ஏற்பட்ட இந்த ஆனந்தத்தின் காரணத்தைப் புரிந்து கொண்ட அரசனின் வியப்பு சொல்லத் தரமில்லை. என் உயிரைக் காக்க நினைத்து காலைமாற்றிக் கொண்டவனே! என்ன கொடுத்தாலும் இதற்கு ஈடாகாதே! யோகசித்திகள் தருபவனே! சிற்றம்பல வாசனே! முப்பத்தாறு தத்துவங்களாகின்ற படிகளை யுடைய பெரும் மாளிகையில் உறைகின்றவனே! பிரணவத்தின் நடுவிலிருப்பவனே! ஏகாம்பரனே! துன்பம் என்றவுடன் ஓடிவந்து விழி நீர் துடைப்பவனே! இப்போதும் இனி எடுக்கப் போகும் பிறவி களிலும் உமது நினைவும், பக்தியும், பூஜையும் கை விடாமலிருக்கும் வரம் அருளவேண்டும்" என பல ஸ்துதிகள் செய்து வணங்கினான்.
பின் இந்தக் கோலத்தை என் குலத்தார் யாவரும் சேவிக்க வேண்டுமென என் மனம் ஆசைப்படுகின்றது. ஆதலால் தாங்கள் இப்படியே காட்சி அளிக்க வேண்டும்" என வேண்டிக் கேட்டுக் கொண்டான். ஆகாயத்தில் ‘ஆகட்டும் என்ற குரல் வந்தது. வெள்ளியம்பலத்தில் இறைவன் கால்மாறி நிற்கும் கோலம் எங்கும் காணக் கிடைக்காதது. அரசனும் இறைவனுக்கு குடை, சாமரம், சிம்மாசனம், முத்தாரம் முதலிய சிறப்புகளைச் செய்து, இரவும், பகலும் இறைவனை வேண்டி நின்றான்.
கால்மாறி ஆடிய பெருமான் திருவருளால் ராஜசேகரனுக்கு குலோத்துங்கன் என்ற சத்புத்திரன் பிறந்தான். தந்தைக்குப் பின் வெகு சிறப்பாய் அரசாண்டான். ஈசன் கால்மாறி ஆடிய இந்த இருபத்து 24-ஆம் திருவிளையாடலை தினமும் பக்தியுடன் படிப்ப வரும், கேட்பவரும் இம்மையிலும், மறுமையிலும் எல்லா நலன்களும் பெறுவர்.
இந்த பகுதியானது திருமதி. பொன்னம்மாள் அவர்கள் எழுதிய திருவிளையாடற் புராணம் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கபட்டுள்ளது. திருவிளையாடற்புராணம் என்ற புத்தகம், இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான அனைத்து பொருட்களும் விற்பனை செய்வதில் சிறப்பிடம் பெற்றுள்ள எங்களது கிரி டிரேடிங் ஏஜென்சி மற்றும் நிறுவனத்தின் வலைதளமான www.giri.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மூலமும் கிடைக்கிறது.
ஸநாதன தர்மத்தையும், இந்து மதத்தையும், இந்திய கலாச்சாரத்தையும் மற்றும் பாரம்பரியத்தையும் அதிக அளவில் விரிவாக அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.



கருத்துகள் இல்லை